Skip to content
பேரூந்தில் ஒரு குலுக்கள். ‘என்ன ஓட்டம் ஓடுறார்கள்?’ என்ற எண்ணத்தோடு நினைவலைகளில் இருந்து மீண்டு அவளை பார்த்தேன். கண்கள் மூடி இருக்கையில் சாய்ந்திருந்தாள்.
என்னையுமறியாது எனது இடது கைவிரல்கள் வலது கைவிரல்களில் கிடந்த மோதிரங்களை வருடின.
அதில் இருக்கும் மற்றய மோதிரம் எழுத்துக்கு உதயா போட்டது தான்.
அதை உணராதே இத்தனை நாளும் இருந்துவிட்டேன். மடியில் இருந்த அவள் கரங்களை பார்த்தேன். அங்கு நான் எழுத்தில் போட்ட மோதிரம் இல்லை.
கழுத்தில் தாலியும் இல்லை. அவள் குங்குமம் எல்லாம் வைப்பதும் இல்லை.
தாலி, குங்குமம் என்றெல்லாம் இன்று எல்லாரும் திரிவதில்லை தான் . ஏன் குட்டியும் அப்படித்தான். ஸ்டிக்கர் பொட்டோடுதான் திரிவாள். ஆனாலும், புதிதாகக் கலியாணம் செய்தவர்கள் தாலி குங்குமம் என்று கொஞ்ச நாட்கள் சரி போடுவார்கள் என்றுதான் நினைக்கிறன்.
சரி போகட்டும். எழுத்து மோதிரம் எங்கே?
அவளிடம் கேட்டுவிடவேண்டும் போலிருந்தது .
அவள் நல்ல நித்திரையில் இருந்தாள். அவளின் தலை மெல்ல ஒருபக்கமாகச் சாய்ந்து என் தோளில் வந்து தங்கிக்கொண்டது.
வேறெதுவும் நினைவு வரவில்லை. மெல்ல வலது கையை எடுத்து அவள் தலைக்குப் பின்னால் போட்டு வளைத்து அணைவாகப் பிடித்துக் கொண்டு இருக்கையில் சாய்ந்த அந்தக் கணம் தான் அது நிகழ்ந்தது.
பஸ்ஸில் இருந்தவர்களில் பெரும்பான்மையினர் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். மற்றவர்களும் மெல்ல மெல்ல உறக்கத்தை அணைத்தபடிதான் இருந்தார்கள்.
பின்புறம், கடைசி இருக்கையின் ஒரு கண்ணாடிப்பக்கம் அமர்ந்திருந்த ஒரு சோடி எதையும் கவனியாது தம்முலகினுள் சஞ்சரித்துக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து தாழ்ந்த குரலில் கதையும்(பேச்சும்) விட்டு விட்டு சிணுங்கல் சிரிப்பும் கசிந்து கொண்டிருந்தன.
எல்லோரும் எங்களைப் போலவா முறைத்துக் கொண்டிருப்பார்கள்? இப்பவெல்லாம் அடிக்கடித் தோன்றும் ஆதங்கம் இக்கணத்திலும் உரசிச் சென்றது.
பரியேறும் பெருமாள் நிறைவுற்றிருந்தது.
முன்னே பார்த்ததில் ஓட்டுனரும் உதவியாளரும் தம்முள் எதையோ தாழ்ந்த குரலில் கதைத்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.
வேறென்னவாக இருக்கும்?
கொஞ்ச நேரமாகவே அந்த அந்தகாரத்தில் ஒரு போட்டி! ம்ம்ம்… விசப்பரீட்சை நடந்து கொண்டிருப்பதையும் அவதானித்தேன் தான்.
அது, இன்னொரு தனியார் பேரூந்துக்கும் இவர்களுக்கும் இடையில் நடந்துகொண்டிருந்தது.
ஒருவர் ஒருவரை முந்துவதும் அதன்பின் அடுத்தவரை முந்தவிடாது உச்சுக் காட்டுவதுமாக இருட்டில் கபடியாடிக்கொண்டு முன்னேறினார்கள், இரு பேரூந்து ஓட்டுனர்களும்.
எழுந்து போய் நாலு அறை கொடுத்தால் என்ன என்றும் இருந்தது தான். கொடுத்துவிட்டு…பச்!
“இங்க பாருங்க தம்பி, உங்களை நம்பித்தான் இத்தனை பேரும் வாறம், கொஞ்சம் மெதுவாய்ப் போ அப்பு!”
முன்னால் அமர்ந்திருந்த வயதான அம்மா ஒருவர் சொன்னதும் கேட்டது.
“பயப்டாமல் தூங்கன! கவனமா யாழ்ப்பாணத்தில கொண்டு போய் விடுறது எங்கட பொறுப்பு!”
உதவிக்கு நிற்கும் பெடியன்தான் சொன்னான்.
செடில் பார்வையோடு திரும்பிப் பார்த்துச் சிரித்தான் சாரதி.
‘என்னில், என்ர ஓட்டத்தில் போய் உனக்குச் சந்தேகமா?’ என்றது, அவன் பாவனை.
“தம்பி! யானைக்கும் அடிசறுக்கும்; பார்த்து மெதுவாப் போவன; இப்ப…ஒரு அரை மணி பிந்திப் போனா குடியா முழுகீரும்? பார், தினம் தினம் எத்தின நடக்குது?”
இன்னொரு வயது வந்த ஐயா தன் மனத்தின் சஞ்சலத்தை மறைக்காது வெளியிட்டார், நீளமான கொட்டாவியுடன்.
“இந்தப் பழசுகளுக்குத்தான் உயிர்ப்பயம்!”
அந்தப் பெடியன் கேலியாகச் சொன்னது தெளிவாகவே கேட்டது.
“தம்பி, இங்க உங்களை நம்பி எத்தனையோ புதுசுகளும் இருக்கு, மறந்திராதீங்க! இந்த வாய் மட்டும் இல்லையோ! பச்!
நாளாந்தம் எத்தனை எத்தனை விபத்துக்கள், ஒவ்வொரு தரமும் பறிபோற உயிர்கள் எவ்வளவு? இருந்தும் திருந்திற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் தான் இருக்கீனம்.
மற்றவர்களை விடுங்க, உங்கட உங்கட உயிர்களிலும் ஆசையில்லாதவயா நீங்க எல்லாரும்?
அந்தளவுக்கு வீரம்! இவேண்ட கெட்டித்தனத்தை இதில எல்லாம் காட்டி பெரிசா வாகை சூடப் பார்க்கீனம்; காட்ட வேண்டியதுகளில கோட்டை விட்டுப்போட்டு இருங்கோ!” என்று ஆரம்பித்து, என்னவோ வாய்க்குள் முணுமுணுத்தார் அந்தப் பெரியவர் .
சாரதியும் உதவியாளனும் திரும்பவில்லை.
அவர்களை முந்திக்கொண்டு சென்றது அந்த மற்றைய பேரூந்து.
“அறுவான்கள்! இன்றைக்கு ஒரு முடிவோடதான் இருக்கிறான்கள் போல! நீ பின்னால போ ராசா!” என்று சாரதியிடம் சொன்னபடி இருக்கையில் சாய்ந்தார் அந்தப் பெண்மணி.
அப்போதும் அவர்கள் திரும்பவில்லை. எப்படியும் முந்திச் செல்ல வேண்டும் என்ற முனைப்போடு ஓடுவது தெரிந்தது. நாம் சொல்லிக் கேட்டுவிட்டாலும்!
என் பார்வை என் கைவளைக்குள் அமைதியாக உறங்கும் உதயாவின் முகத்தில்.
மனதில் சஞ்சலத்தோடு இருந்ததாலோ என்னவோ உறக்கம் என்னருகில் வரவே வரவில்லை. ஆனால், உதயாவோ நல்ல உறக்கத்திலிருந்தாள். அப்படி இருக்கப் போய்த்தானே என் தோளில் அழுந்தச் சாய்ந்திருந்தாள். உறக்கத்தில் இன்னமும் சிறு பெண் போலிருந்தாள். என் வயதோடு பார்க்கையில் சின்னவளும் தானே?
அம்மா, அக்காக்கள், தங்கைகள் என்று பொறுப்புள்ளவனாக இருந்த போதும் என் கைவளைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் உதயாவைப் பார்த்தபோது, அந்தக் கணத்தில் மேலும் பொறுப்பு அதிகரித்தவனாக உணர்ந்தேன்.
காலா காலமாகச் சுமக்கக்கூடிய இதமான சுமையாகத் தெரிந்தாள் அவள்.
அத்தனை அருகில் அவள் முகத்தை இதுவரை பார்த்ததில்லையா? அமைதியோடு உறங்குபவளை அந்த அரையிருட்டில் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போன்றதொரு தாகம் என்னுள்ளத்தில்!
அப்போதுதான், கண்ணிமைப்பொழுதில் என்போமே, அப்படித்தான் இதுவும் நிகழ்ந்து முடிந்திருந்தது.
என்ன ஏதென்று உணரும் முன்னர் நான் குப்புறக் கீழே விழுந்திருந்தேன்; அப்படியே உதயாவும்; அவளைப் பிடித்திருந்த என் பிடி மட்டும் விடுபடவில்லை.
error: Alert: Content selection is disabled!!