‘சூர்யாவுக்கு என்னவோ நடந்திட்டுத்தான்… ஐயோ!’
துக்கத்தில் நெஞ்சில் பெரு வலி உணர்ந்தேன்.
“சூர்…யா…” பெருங்குரலில் அழைத்தபடி எதிர்பட்டவர்களை ஒதுக்கிக் கொண்டு முன்னேற, “உதயா!” ஓடிவந்து பிடித்துக் கொண்டார் அவர்.
ஒரு கணம் அதிர்ந்து நின்றேன். தலையில் நெற்றியை மறைத்து சற்றே பெரிதாகத்தான் கட்டுப் போட்டிருந்தார். வலக்கையில் முழங்கைக்கு மேலே கட்டு.
சூ…ர்…யா!” கேவலோடு அவர் நெஞ்சில் மோதிய என் மூச்சுச் சிக்கித் தடுமாறும் வகையில் இறுக அணைத்திருந்தார் அவர்.
“விசரி…எவ்வளவு பயந்து போனன் தெரியுமா? உள்காயம் எதுவோ என்று துடிச்சுப் போய்ட்டன். கொஞ்ச நேரம் இப்படிப் பைத்தியமா அலைய விட்டிட்டியே!” அரற்றியவர் அணைப்பு இறுகியது.
“கொஞ்சம் தள்ளுங்க!” யாரோ சிங்களத்தில் சொல்லிக் கேட்கவும் தான் தளர்ந்து என் முகம் பார்த்தபடியே வெளியே அழைத்து வந்தார்.
அங்கு, அந்த வராண்டாவில் சற்றே தள்ளி வந்து ஓரமாக அமர்ந்து என்னையும் அமரச் சொல்ல அமைதியாக அமர்ந்து விட்டேன் .
அவருக்கு ஒன்றும் இல்லை, சுகமாக இருக்கிறார்; தலையில் கட்டுப் போட்டிருந்தாலும் இப்படித் தெளிவாக நிற்பதால் சிறு காயமாக இருக்கும் என்றாலும் எவ்வளவு ரெத்தம்?
கண்ணீரோடு பார்த்தேன்.
“அதென்ன அவ்வளவு இரத்தம்? நா…நான் நல்லாப் பயந்திட்டன்; உங்களுக்கு என்னவோ…” சொல்ல முடியாது அவர் தோளில் சாய்ந்துகொண்ட போது, சில மணித்தியாலங்களின் முன்வரை இருவரும் வேண்டாத பெண்டாட்டி, புருசன் பாவனையில் இருந்தோம் என்பதை மறந்தே போனோம் என்பதுதான் உண்மை.
“கவி எங்க வெளிக்கிடுறீங்க? இப்ப தானே வந்தீங்க? உங்களுக்கும் சேர்த்தே சாப்பாடு செய்திருக்கிறன்; சாப்பிட்டிட்டே போகலாம், உன்ர கொம்மாட்டச் சொல்லு!”
சமையலறையில் இருந்தபடி அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.
“கவி வா போவம்; வீட்டில பகல் சமைச்சது நமக்குக் கிடக்கு; தீபி நீயும் வாவன், இனி நீ இங்க என்னத்துக்கு? வீட்டில வந்திருந்து ஒழுங்காப் படிக்கிற வழியைப் பார்!” என்ற பெரியக்கா குரலில் என்றும் போல எரிச்சல்.
“அதுக்குள்ள வெளிக்கிட்டாச்சா? இப்பதானே வந்தீங்க? சாப்பிட்டிட்டே போகலாம், இருங்க சித்தி. தீபி இங்கயே இருக்கட்டும் சித்தி!” உதயா.
“சரி என்னவாவது செய்யுங்க! உன்னப் பார்க்கத்தான் நான் வந்தனான்; பார்த்திட்டன்; போயிட்டு வாறன். ” என்று சொல்லிக்கொண்டே வெளியில் இறங்கிவிட்டார் போலும்.
“அம்மா! சும்மா பெரிய லெவல் காட்டாமல் உள்ள வாங்க.” தீபியும் கவியும் தாயை உள்ளே இழுத்தார்கள் போல.
“பச்! போட்டன் என்றால் தெரியும். பேசாமல் விடுங்கடி. சாப்பாட்டுக்கும் தேத்தண்ணிக்கும் வழியில்லாமல் இங்க யாரும் இருக்கேல்ல. எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்தாச்சு எல்லா? அதென்ன என்னோட மட்டும் முகத்தை நீட்டுறது? அந்தளவுக்குத் தாழ்ந்து போனனா நான்?” வழமைபோலவே பெரியக்கா பிரச்சினையை ஆரம்பித்துவிட்டார் .
“அப்படியெல்லாம் எதுவும் இல்ல சித்தி, உள்ளுக்கு வாங்க!”
தன்மையாகச் சொல்லும் உதயாவை உள்ளே அழைக்க வாய் உண்ணியது. இவள் ஏன் இந்தளவுக்குப் பணிஞ்சு போக வேணுமாம்.
தங்கையை அனுப்பிய கையோடு புறப்பட்டிருந்த சின்னக்கா குடும்பம் நேற்றிரவே வந்துவிட்டார்கள். பஸ் விபத்து விபரம் கேட்டுப் பதைபதைத்துப் போய்விட்டார்கள், எல்லோரும்.
காலையிலேயே வந்து சேரவேண்டிய நாங்கள் கொஞ்சம் முதல் அந்திக்கருக்கலில் வந்திறங்க, பெரியக்கா, சின்னக்கா எல்லாருமே இங்குதுதான் நின்றார்கள்.
“எல்லாரும் இப்ப ஒன்றாகியாச்சு! நான் மட்டும் பொல்லாதவள் அப்பிடித்தானே?” என்ற, பெரியக்காவின் சீறல் குரலில் என் கவனமும் அங்கு சென்றது.
“யாரு சித்தி அப்பிடியெல்லாம் சொன்னது? நீங்களா ஏன் அப்பிடி நினைக்கிறீங்க?”
“நல்லாய்க் கேட்டாய் போ! இதை யாரும் வாய்விட்டுச் சொல்லவா வேணும்? இந்த வீட்டு வாசல்படி மிதியாதை எண்டு சொன்ன பிறகும் அவள் குட்டி வெளிநாடு போறாள் என்று கூட நான் இங்க வர இல்லை; ஏனென்றா நம்மட மரியாதையை நாம தான் காப்பாத்திக்கொள்ள வேணும். அப்படியிருந்தும் இப்ப ஏன் வந்தன்? உன்னப் பார்க்கத்தான் வந்தனான்; பார்த்திட்டன், போயிட்டு வாறன்; சந்தோசமா இரு!”
‘இதைச் சந்தோசமாகத்தான் சொல்கிறாரா?’ என்னுள் பலத்த சந்தேகம்.
நான் அறையினுள் இருந்து வெளியே வரவில்லை. அவர் சொல்வது போலவே அவர் முகத்தைப் பார்க்கவும் பிடிக்கவில்லை.
போய்விட்டார் போல என்று நினைக்கத் திரும்பவும் அவர் குரல் தான் உரத்து ஒலித்தது.
“இப்ப இந்த நிமிசம் இந்தவீட்டில நீ சந்தோசமாத் தானே இருக்கிற உதயா?”
அவர் கேட்டத்துக்கு இவள் என்ன சொல்லப் போகிறாள்?
நாங்கள் இருவரும் மனம் விட்டெல்லாம் கதைத்துக்கொள்ளவில்லை என்றாலும் அவள் மனத்தை நான் புரிந்துகொண்டதுபோலவே என் மனத்தையும் அவள் உணர்ந்திருப்பாள் என்ற நம்பிக்கை என்னுள்.
இருந்தாலும் அவள் சொல்வதைக் கேட்கும் ஆவல்! என் செவிகள் கூர்மையாயின.
அவளோ எதுவும் சொல்லவில்லை. பெரியக்கா அதற்குக் காத்திருக்கவும் இல்லை; தானே தொடர்ந்தார்.
“நான் என்னவோ திட்டம் போட்டு உன்னப் பாழும் கிணற்றுக்குள்ளத் தள்ளிவிட்டுட்டன் எண்டு எல்லாரும் என்ன குதி குதிச்சவை? ஏன், உன்ர மனசிலும் அந்த எண்ணம் தான் இருந்திருக்கும். மேல போன தன்ர காதலிய நினைச்சுக்கொண்டிருந்த சூர்யாவுக்கும் நான் பொல்லாதவளாகத்தானே தெரிஞ்சன்…” என்று சொல்லிக்கொண்டே போக,
“இங்க பாருங்க பெரியக்கா, இப்ப என்னத்துக்கு இதையெல்லாம் கதைக்கிறீங்க? நீங்க உங்கட வீட்ட போறது எண்டால் போயிட்டு வாங்க!” சின்னக்கா சினந்தபடி வந்தார்.
“அதுகளே இப்பத்தான் பெரிய கண்டத்தில இருந்து தப்பி வந்து நிக்குதுகள். பழசுகளை எல்லாம் கதைச்சு …” கோபமாகச் சொன்னார்.
“இங்க பார், நான் உன்னோட கதைக்கேல்ல; உதயாவோட கதைக்க இங்க யாரிட்டையும் கேட்டுக் கொண்டிருக்கவும் தேவையில்லை. அதோட நான் சொல்லுறது ஒண்டும் பொய்யில்லையே! கல்யாணியைப் பற்றி உதயாவுக்குத் தெரியாதா என்ன? இப்படிப் பதறுற!”