“அக்கா சொல்லச் சொல்ல நான் அங்கு கிடந்த கதிரையில் அமர்ந்துவிட்டேன். தலையில் அடிபட்ட இடத்தில் இவ்வளவு நேரமும் தெரியாதிருந்த வலி மிகையாகவே தெரிந்தது.
முகம் வேறு கல்லென இறுகிப் போயிற்று! மனித மனம் சிலவற்றை எவ்வளவு எளிதில் கடந்துவிடத் துணிகிறது இல்லையா? கண்களுக்கு முன்னால் நடமாடுகையில்தான் கருத்திலும் நிலைத்திருக்குமோ!
கல்யாணி! இப்போவெல்லாம் அவளை நான் வெகு தூரமாய் விலக்கி வைத்து விட்டேனோ! இவளுக்குத் தாலி கட்டும் போதே அந்த முடிவை எடுத்திருந்தாலும், அறம்புறமாகக் குற்றவுணர்வு எழும் போலிருந்தது.
“சரி விடுங்கோவன். எல்லாம் எல்லாருக்கும் தெரியும் தான். இப்ப இந்தக் கதை தேவையே இல்ல எண்டு சொல்லுறன். உங்களுக்கு இங்க நிக்க விருப்பம் இல்லையோ தயவு செய்து போயிட்டு வாங்க.”
சின்னக்காவின் குரல் உயர்ந்திருந்ததில் என் கவனமும் அங்கே இழுப்பட்டது.
“அப்பிடி எல்லாம் சொல்ல முடியாது; அதுவும் ஒரு புல்லையும் கிள்ளிப் போடாத நீ சொல்லக் கூடாது; இப்பக் கதைக்காமல் எப்பக் கதைக்கிறது?
இவளப் படுகுழியில நான் தள்ளேள்ள (தள்ளவில்லை) என்று எல்லாருக்கும் விளங்க வேணும் தானே? இண்டைக்கு இவள் சந்தோசமாக இருக்கிறாள் எண்டால் அதுக்கு நான் மட்டும் தான் காரணம்.
அதுபோல குடிச்சு அழிஞ்சு கொண்டிருந்தவனைத் திருத்தியதும் நான் தான். அந்த நன்றி இங்க யாருக்கும் இல்ல எண்டு எனக்குத் தெரியும். ஏதோ எல்லாரும் நல்லா இருந்தால் சரி. நல்லா சந்தோசமா இருங்க!”
அவர் குரல் தேய்ந்து போவதில் இருந்தே கவியும் தீபியும் அவரை இழுத்துச் செல்கிறார்கள் என்று புரிந்தது.
“என்ன ஜென்மமோ…ச்சே!” சின்னக்கா.
“ நீர் இதையெல்லாம் பெரிசா எடுக்காதேயும் உதயா. அவா இப்பிடி எண்டு உமக்குத் தெரியாதா என்ன?” என்று சின்னக்கா சொன்ன போதும் உதயாவின் குரல் கேட்கவில்லை.
“சரி வாங்க சாப்பிடுவம். பாவம் அம்மா, நடந்த விபத்தையும் மீறி எவ்வளவு சந்தோசப்பட்டார் தெரியுமா? இனி எல்லாம் சரியாகும் எண்டு இப்பத்தான் சொன்னவர். அதுக்குள்ள அவாவை அழ வச்சிட்டா!” என்று சின்னக்கா சொல்லிச் செல்வதும் காதுகளில் மோதியது.
நான் மெல்ல எழுந்து சென்று அலுமாரியைத் திறந்து அதன் அடித்தட்டிலிருந்து கல்யாணியின் புகைப்படத்தைக் கையில் எடுத்தேன்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேனோ!
“எல்லாரும் சாப்பிடலாம் வாங்க!” என்ற சின்னக்காவின் குரல் கேட்டதும் தான் நடப்புக்கு வந்தேன். அப்போதும் பார்வை மட்டும் கரங்களில் இருந்த புகைப்படத்தில் தான்.
எனக்கு அவளிடம் ஒன்று கேட்கும் ஆவல்! ஆனாலும் பட்டென்று கேட்கவும் வரவில்லை; கேட்காதிருக்கவும் முடியவில்லை.
‘உனக்கு நான் துரோகம் செய்திட்டன் எண்டு நினைக்கிறியா கல்யாணி?’ என்று, வாய்விட்டே கேட்டுவிட வேண்டும் என்னும் ஒரு அவஸ்தையும் ஆவேசமும் எழுந்தாலும் முடியவில்லையே! மனதுள் புலம்பினேன்.
இதன் பதிலை அவள் எப்படிச் சொல்வாள்? அவள் சார்பாக அவளை ஆராதித்த என் மனத்திடமே பதிலை எதிர்பார்த்து நின்றேன் நான். அது எங்கே? பதில் சொல்லத் திணறியது.
அதேநேரம், ‘அவளை மட்டுமே நினைத்துருகிக் கிடக்க நீ ஒன்றும் தனியாள் இல்லை சூர்யா‘ சற்றே தாமதித்தாலும் திடமாக அழுந்தச் சொன்னது.
“அது எனக்குத் தெரியாதா என்ன?”
என்னையும் மீறி உதடுகள் முணுமுணுக்க விழிகளை இறுக மூடிக்கொண்டேன். அதனுள், மென்புன்னகையோடு வந்து நின்றாள் அவள்…உதயா…என் மனைவி!
உள்ளத்தில் மின்னலென ஒரு மாற்றம்! இத்தனை நேரமாக அலைக்கழிந்த உள்ளமும் உணர்வும் மெல்ல மெல்ல தரித்து நிற்க ஆரம்பித்ததை என்னால் துல்லியமாகவே உணர முடிந்தது. அந்தத் தரிப்பிடம் மொத்தமாய் அவளாய்…உதயாவாய் இருந்ததைக் கண்டபோது…பட்டென்று விழிகளைத் திறந்தேன்.
‘எத்தனைக்குத்தான் கடந்த காலத்தில் தொங்கிக் கொண்டிருப்ப? உன் முன்னே நடமாடும் நிகழ்காலத்தைக் கொஞ்சம் பார்! அதேநேரம், கடந்து சென்ற, நீ வாழ்ந்து கடந்து வந்த எதையும் அத்தனை சுலபத்தில் மறக்கவோ ஒதுக்கவோ முடியாதுதான். அதை மொத்தமாகக் காலத்தின் கையில் விட்டுவிடு!’
இத்தனை நேரமாக வளைந்து நின்ற உள்ளம் நிமிர்ந்து நின்று சமரசம் செய்துகொள்ள முனைந்தது.
நீண்ட பெருமூச்செறிந்தேன். அப்போதுதான் என்னருகில் யாரோ நிற்பதை உணரவும் முடிந்தது. சட்டென்று திரும்பினால் அவள் தான் நிற்கின்றாள்.
அவளையும் என் கையிலிருக்கும் படத்தையும் பார்த்த என் செவிகளில், “கல்யாணிட படங்கள் இன்னும் உங்கட அறைக்குள்ள இருக்கா எண்டு பார்க்க வெளிக்கிட்டவே கவி, தீபி…” என்று, அன்று குட்டி சொன்னதுதான் நினைவில் வந்தது.
‘இவள் இதை எப்பிடி எடுத்துக் கொள்வாள்? நான் சொல்வதைப் புரிந்து கொள்வாளா?’
என் பார்வையில் ஒரு இறைஞ்சல் வந்துவிட்டிருந்தது, நானா என்ற வியப்போடு.
அவளோ நிதானமாக என்னைப் பார்த்தாள் .
“உங்களச் சாப்பிட வரட்டாம்; எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கீனம், அதுதான் கூப்பிட வந்தன், வாங்க.” என்றபடி திரும்பியவளை அவசரம் அவசரமாக எட்டிக் கரம் பற்றி நிறுத்தினேன். ஒரு கையில் அவள் கரம் மறு கையிலோ கல்யாணியின் புகைப்படம்.
மீண்டும் அவள் பார்வை என்னையும் அந்தப் புகைப்படத்தையும் மாறி மாறிப் பார்த்தது.
“அது வந்து உதயா…நான்…என்ன சொல்ல வாறன் எண்டால்…”
“இப்ப ஒண்டும் சொல்ல வேணாம், சாப்பிட வாங்க!” என்றவள், அந்தப் புகைப்படத்தை வாங்கி, சில கணங்கள் அமைதியாகப் பார்த்திருந்தாள்.
அவள் மனத்திலும் அதே அமைதி இருக்குமா?
அவள் முகத்தில் ஏதேனும் உணர்வுகள் பிடிபடுமா என்று என்னையும் மீறி ஆராய்ந்தேன்.
“உதயா நீ நினைக்கிற மாதிரி ஒண்டும் இல்ல… ”
அவள் மனதுள் கொஞ்சமும் கலங்கிவிடக் கூடாதே என்ற பதற்றம் என்னுள்.
“இப்ப நான் எதையும் நினைக்கேல்ல சூர்யா!”
நான் பார்த்திருக்க என் அலுமாரியைத் திறந்து மற்றைய படங்களில் மீது அதை வைத்துவிட்டுத் திரும்பி நேருக்கு நேராகப் பார்த்தாள்.
“வாங்க சாப்பிடலாம்; மத்தியானமும் இங்க யாரும் சாப்பிடேல்லையாம், நமக்கு என்னவோ ஏதோ எண்டு எல்லாரும் பதறிக் கொண்டு இருந்திருக்கீனம். சின்னக்கா ஆட்கள் வீட்ட போகவும் வேணும் …” என்றபடி முன்னேறியவள், நான் அப்பவும் அசையாது நிற்க, “பச்! வாங்க!” என் கரம் பற்றி இழுத்துக்கொண்டு நடந்தாள்.