ஆனா…ஆனா…அண்டைக்குக் கலியாணம் செய்து இங்க வந்த நேரம் எப்பிடி எல்லாம் நடந்தீங்க எண்டத மறந்திருக்க மாட்டீங்க எண்டு நினைக்கிறன். பிறகு, பத்து நாட்களுக்குப் பிறகு வந்து எங்கட வீட்டு முற்றத்தில நிண்டா எல்லாம் சரியா சூர்யா?
அதுவும் ‘விசா வந்திட்டு, நான் வெளிநாடு போகமாட்டன்‘ எண்டு குட்டியக்கா பொய் சொன்னதிலதானே அண்டைக்கு அங்க வந்தீங்க? இல்லாட்டி?
பிறகும் அம்மம்மாவுக்கு, குட்டி அக்காக்கு, தீபி, கவி எண்டு உங்கட ஆக்களுக்காக, அவேண்ட சந்தோசத்துக்காகத்தானே என்னைச் சகித்துக் கொள்ளுவம் எண்டு நினைச்சு இருக்கிறீங்க? அந்தளவுக்கு நான்…நான்…”
ஒரே மூச்சில் கொட்டிவிட்ட எனக்கு அதற்கு மேல் முடியவில்லை; தொண்டை அடைத்து வார்த்தைகள் சிக்கிக்கொண்டன.
மேலே கதைக்க விடவில்லை அவர். கதைக்க ஆரம்பித்தபோது அதிர்வோடு என்னைப் பார்த்திருந்தவர், நான் கொஞ்சமும் எதிர்பாராத வகையில் இழுத்து இறுக அணைத்திருந்தார்.
“விடுங்க!”
திமிறி வெளிவர முயன்றபடி தலையை நிமிர்த்தினால், ‘இந்த மனிசன் என்ன சிரிக்கிறாரோ!’ கோபம் தான் வந்தது.
“விடுங்க என்னை; கதைக்க வா எண்டு கூப்பிட்டோன்ன வந்தன் பாருங்க, என்னைச் சொல்ல வேணும்; நான் வேதனையில சொல்லுறதக் கேட்கச் சிரிப்பு வருதோ!” திமிறினேன்.
அவர் முகமோ என் கழுத்து வளைவில் அழுந்தச் சாய்ந்தது. தாடி ஏற்படுத்திய குறுகுறுப்பால், ஏற்கனவே அவரை அவராகவே ஏற்றிருந்த உள்ளம் தன் வசமிழக்கப் பார்த்தது.
“சூ …ர் யா …!”
உதடுகள் முணுமுணுத்த அக்கணம், மீண்டும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவர் கையில் வைத்திருந்த போட்டோதான் நினைவில் வந்து தொலைத்தது.
“சின்னப் பிள்ளையில இருந்து உன்னத் தெரியும் தானே? நீ இப்பிடியெல்லாம் படபடவென்று கதைப்ப எண்டே எனக்குத் தெரியாது தெரியுமா!” என் கழுத்து வளைவினுள் முணுமுணுத்தார்.
இது சரிவராது. அவர் முகத்தை அப்பால் விலத்திட நினைத்துக் கன்னத்தில் கை வைத்தால் அப்போதும் அந்தத் தாடி வம்பிழுக்கின்றதே! நான் விலகி எழுந்துவிட முயன்றேன்.
உடும்புப் பிடியென்றால் இதுதானா? மண்டையில நாலு தையல் போட்டும் இந்தாளின்ட அழும்பைப் பாருங்கோவன்.
“இப்பத் தெரிஞ்சிட்டுத்தானே விடுங்க!”
“முடியாது போ! நான் இன்னும் சொல்ல வந்ததைச் சொல்லவே இல்ல; விடுங்க விடுங்க எண்டால்?” என்ற வேகத்தில், “உனக்கு ஒண்டு தெரியுமா உதயா?” என்றவரின் கன்னம் என் கன்னத்தில் உரசியது.
“அய்யோ! என்ன சொல்லுறது எண்டாலும் முதல் என்னை விடுங்க!”
“ம்ம்…அதெல்லாம் முடியாது போடி! மனசில இருக்கிறது எல்லாம் சொல்லவேணுமெண்டால் நீ இப்படி இருந்தால் தான் என்னால முடியும்.”
சொன்ன அந்தக் குரல் என் திமிறலை அப்படியே அடக்கிப் போட்டது. அப்படியே அவருள் தளர்ந்து சாய்ந்து விட்டேன். கண்களால் கண்ணீர் வடிந்தது.
முழுமையான நேசத்தில் உருகி நிற்பவர்களால் தான், இந்தளவுக்கு உரிமையோடெல்லாம் கதைக்க முடியுமென்பதை மீண்டும் என்னால் துல்லியமாகவே உணர முடிந்தது.
அப்போ என்னுணர்வு ஒன்றுமே பொய்யில்லை!
‘ஆனால்…’ வம்புக்கு வந்த இந்த ஆனால்… ‘கொஞ்ச முதலும் அந்தப் படத்தை அப்படிப் பார்த்துக்கொண்டு நின்றாரே!’ இந்த எண்ணத்தை மீண்டும் மீண்டும் கசியவிட்டது.
‘அவரும் மனிசன் தானே? ஆழப் பதிந்துவிட்ட நினைவுகளை அவ்வளவு எளிதில் தூக்கிப் போட்டுப் புதைப்பதெப்படி?’ என்றது மனத்துக்குத் தெரிந்தாலும் இப்படி எண்ணியதை என்னவென்று சொல்வது?
என் மனதினோட்டம் பாராது அவர் பாட்டில் சொல்லிக்கொண்டே போனார்.
“அன்றைக்கு வேண்டா வெறுப்போடதான் உன்ர விரலில மோதிரம் போட்டன். ஒருத்தியை, அவள்ட நினைப்ப மனசுக்குள்ள வச்சி வாழ்ந்துகொண்டு இருக்கிறவன இன்னொருத்திக்குப் புருசனா இரு எண்டால்?”
இப்படி அவர் சொன்னபோது என்னையுமறியாது நகர முயன்றேன். அதற்குச் சிறிதும் விடாது இறுக அணைத்துப் பிடித்திருந்தன அவரின் கரங்கள். முறைப்போடுதான் அவரைப் பார்த்தேன்.
“அதுதான் ஊருக்கே தெரியுமே!” சொன்ன என் குரல் நடுங்கியது.
“உதயா! அப்ப இருந்த மனநிலையச் சொன்னாத்தானே உனக்கு என்னைப் புரிஞ்சு கொள்ள ஏலும்.” என்றவர், “கொஞ்சம் அமைதியாக இருந்து கேளன்!” என்றார், கெஞ்சலாக. அதேவேகத்தில் கதைக்கவும் ஆரம்பித்திருந்தார்.
“அப்பவும், ‘அதெல்லாம் கலியாணம் முடிய, நாள் போகப் போகச் சரியாகும்‘ என்று அம்மா ஆட்கள் சொன்னதையும் நம்பினன் போல!
ஆனால், கலியாணம் வரைக்கும் அதுக்கான எந்த மாற்றமும் எனக்குள்ள வரேல்ல உதயா.”
மூச்சு விடாது சொன்னவர் நிதானித்தார். அவர் பார்வை இப்போது வானில்!
“அங்க, கலியாண மேடையில தாலியக் கையில எடுத்த கணம், மனசில ஒருத்திய வச்சுக்கொண்டு உன்ர கழுத்தில தாலி கட்டுறது பெரும் அசிங்கமாக இருந்திச்சு!” என்று சொல்லிக்கொண்டே என்னைப் பார்த்த போது, என் விழிகளால் வழிந்து சிதறின கண்ணீர்த்துளிகள். மனம் விம்மியது. அந்தக் கணம் அப்படி எண்ணியிருக்கிறார் என்றால்?
‘என்றாலும்‘ என்பதில் முக்கியமானதாக, நான் அவருக்கு ஒரு பொருட்டல்ல என்று வைத்த குற்றச்சாட்டு வலுவிழந்து போனது. அவர் கண்களிலும் கசிவு.
“சத்தியமாச் சொல்லுறன் உதயா, தாலியைக் கையில வச்சிருந்த அந்தக் கணம் நான் பட்ட பாடு இருக்கே…அதை வாய்விட்டுச் சொல்ல ஏலாது.” என்றவர் குரல் எக்கச்சக்கமாக நடுங்கியது.