அவர்களோடு போட்டியாக, ஈடு கொடுத்துத் தன் தளிர்ப்பாதங்களை எடுத்து வைத்து குடுகுடுவென்று ஓடி வந்தாள் அச்சிறுமி. மூன்று வயதுதான் என்றார்களே, உயரத்தைப் பார்த்தால் சற்றே பெரியவள் போல் தோற்றமளித்தாள். அவள் இன்னாராக இருக்குமென்ற சந்தேகமெல்லாம் தேவையில்லை.
‘அதே கண்கள், சிரிப்பு.’ ஒரே பார்வையில் நான் இன்னார் மகளென்றாள்!
சுற்றம் மறந்து அவளில் நிலைத்துக் கிடந்த என்பார்வை, அக்குழந்தையை அங்குலம் அங்குலமாக மனதுள் சிறைப்பிடிப்பதில் முனைந்திருந்தன.
வேகமாக என்னை நெருங்கி வந்தவர்களிலிருந்து அவளை அப்படியே அள்ளியெடுத்து ஒரே ஒரு முத்தம் அழுந்தக் கொடுத்தால்? பரபரத்தன கரங்கள். கால்களோ, துணை போகேன் என்று நின்றன.
“யாழி! கொஞ்சம் நில்லுங்க செல்லம், சூர்யா அவளப் பிடிங்க, உடுப்பு மாற்ற வேணும்.” என்ற குரலில் சட்டென்று கலைந்த நான் சற்றே விலகி என்னை அந்த மரத்தின் பின்னால் மறைத்துக்கொண்டேன். இப்போது என் விழிகள் வேறு இடத்துக்குத் தாவிப் போயிருந்தன. அங்குமிங்குமாகத் தத்தளித்தன, மனத்தின் எதிரொலியாய்!
“யாழிம்மா சொன்னாக் கேட்க வேணும்.” என்றவாறே, ஒரேட்டில் வந்து இலாவகமாக மகளைத் தூக்கியிருந்தார் சூர்யா.
“அப்ப்ப்… பா! இறக்கி விடுங்கோ!”
அவளோ தகப்பனின் நெஞ்சில் கைவைத்துத் தள்ளி, தலையால் தகப்பனின் முகத்தில் முட்டி, காதுகளைப் பிடித்துப் பினைந்து, மூக்கைக் கடித்து என பிடிபட்ட பட்டாம்பூச்சியாய் படபடத்தாள்.
என் விழிகள் தன்னையும் மீறிக் கசிந்தன. கண்களை மறைத்திருந்த கண்ணாடி வழியே சரசரவென்று வழிந்த கண்ணீரைத் துடைக்க முனையாது கண்களைச் சிமிட்டிவிட்டு அவர்களையே பார்த்திருந்தேன்.
“இந்தா அம்மா வந்திட்டா, உடுப்பு மாத்தீட்டு அப்பாவும் பிள்ளையும் போவம் சரியா!”
குழந்தையின் மெத்தென்ற கன்னத்தில் அழுந்த முத்தமிட்டபடி கொஞ்சலாகச் சொன்னார். சிணுங்கினாலும் தகப்பனின் கன்னத்தில் தன் கன்னம் தேய்த்தாள் அவள்.
‘அந்தக் குரல் என் செவிவழி தவழ்ந்து என்னுள் கரைய, ‘நிறைய மாற்றம்; முக்கியமாகத் தாடி எல்லாம் மழித்துச் சட்டென்று பார்க்கையில் காவல்துறையில் பணிபுரிபவர் போன்ற தோற்றத்தில்…’ மனத்தின் முனகல் இது!
தாமதியாது விழிகளைக் கடிந்து கொண்டேன். அது பார்த்துச் சொல்வதால்தானே இந்த மனம் இப்படியெல்லாம் நினைக்கின்றது?
‘அட! நீ சொல்லப்போய்த்தானே நான் பார்க்கிறன்?’ முறுக்கிய விழிகள் தம்மை மீறி மீண்டும் கண்ணீர்த் துளிகளைக் கசியவிட்டதில் மிகுந்த எரிச்சலே உண்டானது.
‘சரி சரி பார்க்கவேணும் எண்டு தானே வந்ததும். பிறகேன் ஓரவஞ்சனை? ஆசை தீரப் பார்த்துவிட்டுப் போவமே!’
நெஞ்சமெல்லாம் கனத்துக் கசக்க நினைத்தபடி, மீண்டும், பார்வையை அவர்களில் பாயவிடுகையில் அவர்கள் அண்மித்திருந்தார்கள்.
“நல்ல செல்லம் தான் என்ன? வானுக்க வச்சே என்ன சொன்னன் யாழி? இறங்கி ஓடக்கூடாது உடுப்பு மாத்த வேணும் எண்டு சொன்னனான் எல்லா?” கடிந்து கொண்டே வந்தாள் உதயா.
“குட்டிம்மாட நீச்சல் உடுப்பத் தாங்கக்கா நான் போட்டுவிடுறன்.” என்று பின்னால் வந்தவள், “அட தீபி!” வாய்விட்டே முணுமுணுக்க, பக்கத்தால் போன ஒரு சோடி ஒரு மாதிரிபார்த்துவிட்டுப் போனார்கள். தனியே நின்று கதைத்தால்?
‘எவ்வளவு வளர்ந்திட்டாள்?’ உதயாவின் கையிலிருத்தவற்றை வாங்கிக் கொண்டு, “அவளை இறக்கி விடுங்க மாமா” என்றவளை, இவர்களோடு இல்லாமல் தனியாகக் கண்டால் சட்டென்று அடையாளம் கண்டுகொள்ள முடியாதளவு வளர்ந்திருந்தாள்.
பின்னால் ஒன்றாக எதையோ கதைத்துச் சிரித்தபடி வருபவர்கள் கவி, அவள் கணவன், பாருங்கள் சொல்லவே மறந்து போனேன், கவியின் திருமணம் கடந்த வாரம் தான் நடந்து முடிந்திருந்ததாம்; அதற்காகத்தான் எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறார்கள்.
“சித்தீட்ட போய் உடுப்பை மாத்துங்க!” என்று, மகளை இறக்கி விட்டு விட்டு சுற்றிப் பார்த்தபடி வந்தவர்கள்,
“இந்த மரத்தடியில இருப்பமா? இன்னும் கொஞ்சநேரத்தில சனம் நிறைய வர இடமிருக்காது.” என்று கதைத்துக்கொண்டே நான் நின்ற மரத்தடி நோக்கி வர, நான் மறுபுறமாகச் சற்றே விலகி வந்து நிலத்தில் அமர்ந்து கொண்டேன்.
காதுகள் மாத்திரம் அவர்களருகில் தான். கரமோ பக்கத்தில் கைப்பையை வைத்துவிட்டு அதனுள் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்து விரித்தது.
அதன் பின்னர் சிறிதுநேரம் அவர்களின் புறம் திரும்பத் துடித்த விழிகளைக் கட்டுப்படுத்திக் கையிலிருந்த புத்தகத்தை வாசிக்கத் தூண்டினேன். அது எங்கே? காதுகள் அவர்களின் கலாட்டாவில் இலயித்துக் கிடந்தால் எப்படி?
மனத்தின் தள்ளாட்டம் வேறு! என்னை நான் ஆண்டுகொண்டிருக்கிறேன் என்பது பொய்யோ என்றவகையில் அல்லவா இந்த மனம் கண்டபக்கமும் ஓடித்திரிகின்றது. மிகுந்த சோர்வாக இருந்தது. முயன்றாலும் நிமிர்வாக அமர முடியாது போலிருந்தது.
‘ச்சே! வராமல் இருந்திருக்கலாமோ!’ புத்தியில் இப்போதுதான் இந்த எண்ணம் உதித்தது.
அடிக்கடி இது ஒரு வாடிக்கையாகீற்று! எல்லாம் முடிந்து போயிற்று, கடந்து போயிற்று என்று நன்றாகத் தெரிந்த பின்னரும் ‘அப்படிச் செய்திருக்கலாமோ? செய்யாதிருக்கலாமோ?’ என்று அதையும் இதையும் புலம்புவது!
எல்லாவற்றையும் விட்டாலும், நேற்று இரவோடு இரவாக எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக கிளிநொச்சியிலிருந்து ஓடி வரும் பொழுது எங்கே போயிற்று இந்தப் புத்தி? தூங்கிக் கொண்டிருந்திருக்கும் போலும். என்னில் எனக்கு அவ்வளவு கோபம் வந்து தொலைத்தது.
“இதில குடையை வைக்கலாம்.” சூர்யாவின் குரல்! எல்லாம் மறந்து அங்கே கவனத்தை இழுத்தது.
மெல்லத் திரும்பிவிட்டேன். அது பார்த்தால் அவர்களை முழுதாகத் தெரியவில்லை. மரம் மறைத்தது.
‘அது கூட சதி செய்கின்றதோ!’ கோபச்சிவப்பில் என் முகம் கனகனத்தது. பாருங்கள், இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து வந்தமர்ந்தவள் நான் தானே? பிறகு, சதிசெய்வதாக மரத்தைக் குற்றம் சாற்றுகிறேன். இதுவே எனக்குப் பழக்கமாயிற்று! என்னை நானே கொட்டிக்கொண்டேன்.
மீண்டும் கவனமெல்லாம் அவர்களில். நிழல் குடையைப் பொருத்துகின்றார்கள் போலும். கதைப்பதிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
பெருமூச்சோடு திரும்பி மெல்லிய தாலாட்டோடு அசைந்தாடும் கடலையே பார்த்திருந்தேன்.
சிறிதுநேரத்தின் பின்னர், இளையவர்களும் பெரியவர்களுமாக கடலை நோக்கிச் செல்கையில் தான் குட்டிக்கு ஆணொன்றும் பெண்ணொன்றுமாக இரு பிள்ளைகள் என்றும் புரிந்துகொண்டேன்.
‘எங்க அவே ரெண்டு பேரும்?’ கொஞ்சம் முன்னால் தள்ளி அமர்ந்துகொண்டு சற்றே தலையைத் திருப்பிப் பார்க்க, மகளின் தலைமுடியை அப்படியே ஒன்றாகக் கூட்டி உச்சியில் பந்தாக பாண்ட் போட்டுக் கொண்டிருந்தாள் உதயா.
சிறுமிக்கு அது பிடிக்கவில்லை போலும்; தலையை ஆட்டியபடி துள்ளினாள்; பார்வையோ கடற்கரை நோக்கிச் செல்லும் தன் சொந்தங்களில்! விட்டால் ஓடிவிடுவாள் போல் அந்தரப்பட்டபடிதான் நின்றாள்.