அத்தியாயம் 52
இப்படி ஒரு அழகான விடியல் தூயவனின் உலகத்தில் இதுவரையில் புலர்ந்ததே இல்லை. அப்படி இருந்தது, தன் கைக்குள் இருக்கும் அவள் முகத்தில் கண் விழித்தது.
அதைவிட, உடலிலும் உள்ளத்திலும் மேக வீதியில் மிதப்பது போலொரு சுகம். அது அவள் தந்தது. அந்த நினைப்புத் தந்த தித்திப்புடன் முகத்தை மட்டும் திருப்பி அவளைப் பார்த்தான்.
அவன் இடுப்பைச் சுற்றிக் கையைப் போட்டுக்கொண்டு, அவனுடைய ஒற்றைத் தோளை ஆக்கிரமித்திருந்தாள் யாழிசை. மனைவியின் அந்த நெருக்கம், என்னவோ காலம் காலமாக அவர்கள் இப்படி அன்னியோன்யமாக வாழ்ந்தவர்கள் போன்ற நிறைவைக் கொடுக்க, அவளைத் தன் கைக்குள் வைத்துக்கொண்டே அவள் புறம் திரும்பி, அவள் கன்னத்தில் தன் உதடுகளை அழுத்தி ஒற்றி எடுத்தான்.
இலேசாகப் புருவங்களைச் சுளித்தாள் யாழிசை. அவ்வளவுதான். இன்னும் நன்றாக அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
அவன் உதட்டில் சின்ன முறுவல்.
இன்றைக்கு எதுவும் வேண்டாம் என்றுவிட்டு விடிகிற வரையில் அவளை விட்டு அவன் விலகவேயில்லை. அவள் கெஞ்சியபோதிலும் கொஞ்சி, மிஞ்சி அவளைக் கொள்ளை கொண்டிருந்தான். கடலளவு ஆசை நெஞ்சில் இருக்க, அவளைக் கைகளுக்குள் வைத்துக்கொண்டு சும்மா இரு என்றால் முடியுமா?
இப்போதும் அவனை ஈர்த்தாள் மனைவி. அவனுக்குள் எழுந்த உந்துதலை அடக்க முடியாது அவள் உதட்டில் தன் உதடுகளை அழுத்தி எடுத்தான் அவன்.
“தூயவா!” உறக்கம் கலையாத குரலில் சிணுங்கினாள்.
அவன் உதட்டில் சின்ன முறுவல். நிலவை மறைத்து நிற்கும் மேகம்போல் அவள் முகத்தை மறைத்துக் கிடந்த முடிகளை ஒற்றை விரலால் காதோரமாக ஒதுக்கினான்.
மாசு மருவற்ற அந்தப் பட்டுப் போன்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.
அவன் வருவான் என்று நம்பினாளாமே. அந்த நேரத்தில் அவன் மீது அவளுக்கு எந்த நேசமும் இல்லை. ஆனாலும் நம்பியிருக்கிறாள். தப்பித்தவறி அவனால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருந்தால் என்ன பாடு பட்டிருப்பாள்?
அதை யோசிக்கக் கூட முடியாமல் அவள் கன்னம் வருடினான்.
“தூயவா! படுக்க விடுங்க.” கணவனின் மனநிலை அறியாது உறக்கம் கெட்டதில் சிணுங்கினாள் யாழிசை.
“சரிம்மா சரிம்மா. நீ படு!” என்று அவளை இதமாக அணைத்து முதுகை வருடிக்கொடுத்தான். இரண்டு நிமிடத்திலேயே மீண்டும் ஆழ்ந்து உறங்கிப்போனாள் யாழிசை.
நேரத்தைப் பார்த்தான். காலை ஐந்து மணி தாண்டிக்கொண்டிருந்தது. குரு தோட்டத்துக்குப் போயிருப்பான். அவள் உறக்கம் கலையாமல் எழுந்து குளித்துவிட்டு வந்து, அவனும் போனான்.
“உன்னை ஆர்றா இஞ்ச வரச் சொன்னது?” இவனைக் கண்டதும் அதட்டினான் குரு.
“வராம? நீ மட்டும் எல்லாத்தையும் தனியா செய்வியா?” அணிந்திருந்த உடையைக் கழற்றி வைத்துவிட்டு, வேலைக்குப் போடுவதற்கு என்று அங்கிருந்த உடைகளை மாற்றியபடி சொன்னான்.
“இண்டைக்கு ஒரு நாளைக்காவது அந்தப் பிள்ளையோட இருக்க வேண்டியதுதானே. புது இடம், பயப்பிடுவா மச்சான். மாமாவும் இருக்கிறார்.”
“அவள் நித்திரை. எழும்புறதுக்கிடைல நான் போயிடுவன். நீ ஒரு தேத்தண்ணி ஊத்து.” அவனை அதட்டிவிட்டு மண்வெட்டியைத் தூக்கிக்கொண்டு நடந்தான் தூயவன்.
அப்போதுதான் அவன் தன் முகம் பார்ப்பதையே தவிர்க்கிறான் என்று கண்டுபிடித்தான் குரு. சட்டென்று அவன் உதட்டில் ஒரு சிரிப்பு.
“என்ன மச்சான், முகம் பாத்துக் கதைக்கிறாய் இல்ல, கண்ணெல்லாம் சிவந்திருக்கு. என்ன விசேசம்?” என்றான் அவன் முன்னால் சென்று நின்றுகொண்டு.
“இரவு நித்திரை காணாட்டி உனக்குக் கண் சிவக்காதா? இதெல்லாம் ஒரு கேள்வி எண்டு கேட்டுக்கொண்டு வந்திட்டான். போடா, போய் வேலையப் பார்றா!” என்று அவனைத் துரத்த முயன்றான்.
அவன் அசைய வேண்டுமே?
“வெக்கம்?” என்றான் மீண்டும்.
“எருமை உன்னை…” அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வந்தவனைக் கண்டு குரு அடக்கமாட்டாமல் நகைத்தான்.
அதற்குமேல் தூயவனாலும் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இடையில் ஒரு கை இருக்க, அடிக்க ஓங்கிய கையாலேயே தலையைக் கோதித் தன் வெட்கத்தைச் சமாளிக்க முயன்றான்.
குருவின் சிரிப்பு அதற்கு விடவில்லை.
“சிரிக்காத மச்சான்!” என்றான் அவனைப் பாராமல்.
“சந்தோசமா இருக்கிறியாடா?”
“நீ மச்சான்?”
“அதெல்லாம் என்ர துளசி எனக்கு ஒரு குறையும் வைக்க மாட்டாள்.”
வேறு பேசிக்கொள்ளவில்லை நண்பர்கள் இருவரும். தேவையாகவும் இருக்கவில்லை. இவ்வளவு காலமும் இருவரும் தனிக்கட்டைகள். இன்றைக்குத் திருமணமாகி, குடும்பஸ்தர்களாகி, இல்லறம் இனிதாய் நடக்கவும் ஆரம்பித்துவிட்டதில் என்னவோ தாம் தம் வாழ்வில் அடுத்த படிக்கு ஏறிவிட்டதுபோல் ஒரு உணர்வு. அவர்களை நம்பி ஆளுக்கு ஒருத்தி என்று வந்துவிட்டார்களே!
தோட்ட வீட்டிலேயே தேநீரை ஊற்றி அருந்திவிட்டு வேலையைப் பார்த்தார்கள். எட்டு மணியாகவும் குருவே தூயவனைத் துரத்திவிட்டான்.
தோட்டத்திலேயே இன்னொரு முறை குளித்து, உடையை மாற்றிக்கொண்டு வீடு வந்தான். தேவகி எழுந்துவிட்ட அரவம் தெரிந்தது. மேலே அவன் அறைக்குள் வந்தபோது யாழிசையும் எழுந்து குளித்து முடித்திருந்தாள். தன் உடைகளை அவன் அலமாரியில் எங்கு வைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
கதவு திறக்கும் சத்தத்தில் திரும்பிப் பார்த்தவள் இவனைக் கண்டதும் முகம் மலர்ந்தாள். அவன் அறைக்குள் வரவில்லை. கதவு நிலையில் கையைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்று அவளையே பார்த்தான்.
“என்ன?” என்றாள் திணறி. ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்த தூயவன், அப்போதும் பார்வையை அவளிலிருந்து அகற்றவில்லை. கொஞ்ச நேரம் சமாளித்துப் பார்த்தாள் யாழிசை. முடியாமல் போக, “தூயவா!” என்றாள் தன்னை மீறி.
மெல்லிய நகைப்புடன் உள்ளே வந்தவன் அப்படியே அவளையும் தன் கைகளுக்குள் கொண்டு வந்து நெற்றி முட்டினான்.
“இவ்வளவு காலமும் மொட்டையா இருந்த அறை இது. இண்டைக்குக் கதவைத் திறக்க இப்ப பூத்த பூ மாதிரி என்ர மனுசி நிக்கிறாள். அதான் பாத்தன்.” என்றதும் அவள் முகத்தில் மலர்ந்த முறுவல்.
“எங்க போயிட்டு வாறீங்க? தோட்டத்துக்கா?” ஏதோ ஒரு வெட்கம் வந்து அவளைச் சூந்தாலும் அதைச் சமாளித்தபடி வினவினாள்.
“இசையரசி என்னைத் தேடினவளா?”
“அது… எழும்பிக் குளிச்ச பிறகும் வெளில போகாம இருக்க ஒரு மாதிரி இருந்தது. மாமி ஏதும் நினைப்பாவோ எண்டு. ஆனா வெளில போகப் பயமாவும் இருந்தது. அதான்…”
“என்ன பயம்? அம்மாவும் துளசியும் நேரத்துக்கே எழும்பிடுவினம். எப்பவும் நீ கீழ போகலாம் சரியா?”
அப்படி அவளால் தனியாகப் போக முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. கருணாகரனும் இதே வீட்டில்தான் இருக்கிறார் என்கிற நினைப்பே அவளை இந்த அறையைத் தாண்டிக் காலை வைக்க விடாது. ஆனாலும் சரி என்று தலையை ஆட்டினாள்.
அவனுக்கும் அவள் தயக்கம் புரிந்தது. இன்னும் கொஞ்ச நாள்கள் போக எல்லாம் சரியாகும் என்று எண்ணிக்கொண்டு அவனும் தயாராகி வர, கீழே சென்றார்கள்.
அவள் நடையில் ஒரு தயக்கம். விழிகள் தானாகக் கருணாகரன் எங்காவது இருக்கிறாரா என்று பயத்துடன் அலசின.
இரண்டு படிகள் அவளுக்கு முன்னால் இறங்கிக்கொண்டிருந்த தூயவன், நின்று திரும்பி அவளைப் பார்த்தான்.
“இல்ல பயப்பிடேல்லை. அது…”
அவன் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவளுடனேயே இறங்கி வந்தான்.
“எழும்பியாச்சாம்மா? முதல் வந்து சுவாமி கும்பிடுங்கோ. பிறகு சாப்பிடலாம்.” இவர்களைக் கண்டதும் அழைத்தார் தேவகி.
யாழிசைக்குத் துளசியைப் பற்றித் தெரியும். தேவகி நேற்று நல்லமாதிரித்தான் நடந்தார். இன்று எப்படி நடப்பாரோ என்று தயங்கிக்கொண்டு இருந்தவளை அவர் அரவணைத்துக்கொண்ட விதத்தில் கொஞ்சம் இலேசாகினாள்.
சுவாமி கும்பிட்டு, காலை உணவையும் முடித்துக்கொண்டு நேசன் வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.
அதுவரையில் கருணாகரனைக் காணக் கிடைக்கவில்லை. வீட்டில்தான் இருக்கிறாரா, இல்லை வெளியே போய்விட்டாரா என்று அவளுக்குத் தெரியாது. யாரும் அவரைப் பற்றிக் கதைக்கவும் இல்லை.
தூயவன் பைக்கை கொண்டு வந்து அவளருகில் நிறுத்தினான். இதுவரையில் அவனோடு வாகனத்தில் பயணித்திருக்கிறாளே தவிர பைக் பயணம் செய்ததில்லை.
அவன் என் கணவன் என்கிற உரிமையோடு முதல் பயணம். உள்ளே உள்ளம் தித்திக்க பின்னால் ஏறி அமர்ந்துகொண்டாள்.
போகிற வழியில் கோயிலுக்குப் போனார்கள். அதே கோயிலில் வைத்துத்தான் இருவருக்கும் முதல்நாள் திருமணம் நடந்தது. அதை எண்ணி இருவர் முகத்திலும் முறுவல்.
ஏற்கனவே கோயிலில் நின்றிருந்தவர்கள் குறுகுறு என்று பார்த்தது கூட யாழிசையைப் பாதிக்கவில்லை. கணவனோடு அன்னையின் சன்னிதானத்தில் நின்று மனதார வழிபட்டது மனதுக்கு மிகுந்த நிறைவைத் தந்தது.
அங்கே நேசன் வீட்டில் நல்ல வரவேற்பு. இத்தனை நாள்களும் அது அவள் வீடும். அங்கே அவளும் ஒருத்தி. அதே அவளை இன்று என்னவோ வரவே வராத ஒரு விருந்தினர் வந்ததுபோல் வரவேற்கவும் யாழிசைக்கே சற்று வித்தியாசமாக இருந்தது. சிரிப்பும் வந்தது.
அவர்களோடு மிக நன்றாகப் பழகும் அயலட்டை மனிதர்களும் வந்தார்கள்.
“அப்ப தூயவனை விரும்பினதாலதான் நேசன் பேசின கலியாணம் வேணாம் எண்டு அனுராதபுரத்திலேயே இருந்திருக்கிறாய் என்னம்மா?” அங்கே இருந்த ஒரு வயதான அம்மா கேட்டார்.
அதை யாரும் மறுக்கப் போகவில்லை. அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள். சாதியும் வேறு, பொருளாதார நிலையிலும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கையில் இரு வீடும் சம்மதிக்காது என்றுதான் அவள் அப்படி நடந்திருக்கிறாள் என்பதுபோல் கதை மாறியிருந்தது.
முதல் நாள் இரவு முழுக்க நேசனுக்கும் கோகிலாவுக்கும் ஒழுங்கான உறக்கமே இல்லை. என்ன நடக்கிறதோ, கருணாகரன் ஏதும் பிரச்சனைகளைக் கிளப்பினாரோ என்று அதுவே யோசனையாக இருந்தது.
ஆனால் இப்போது, மலர்ந்து பூரித்த முகத்துடன் வந்த யாழிசையைக் கண்டபோது, அவர்கள் இருவருக்கும் நெஞ்சம் நிறைந்தே போயிற்று. தன் பெண்ணையே புதிதாகப் பார்ப்பதுபோல் பார்த்தார் கோகிலா.
யாழிசையை நேசித்துத் தூயவன் மணம் முடித்திருந்தாலும் தம் வீட்டில் பொருந்திப் போவானா, இல்லை, விலகி நிற்பானா என்கிற கேள்வி மொத்த வீட்டுக்கும் இருந்தது.
ஆனால், அவன் எந்த வித்தியாசமும் காட்டவில்லை. கொஞ்ச நேரத்தில் குருவும் குடும்பமாக வந்து இறங்கிவிட அந்த இடம் கலகலப்பாகிற்று.
அதுவும் அங்கிருந்த ஸ்கூட்டியைக் கண்டதும் யாழிசையைப் பிடித்துக்கொண்டான் மிதிலன். அவன் ஆசைக்கு ஒரு வட்டமில்லை நான்கைந்து வட்டங்கள் போய்வந்தாள் யாழிசை.
அங்கே பெண்கள் சமையலை தடல்புடலாக ஆரம்பித்திருக்க, “உன்ர அப்பா பிறகு ஒரு பிரச்சினைக்கும் வரேல்லையா?” என்று விசாரித்தான் நேசன்.
அது கோகிலா அம்மாவின் காதில் விழுந்துவிடவும், “தம்பி, என்ன பழக்கம் இது, இன்னும் அவரை ஒருமைல கதைக்கிறது? மரியாதை குடுத்துக் கதைக்கோணும்.” என்று அதட்டினார்.
தூயவன் அடக்கப்பட்ட சிரிப்புடன் நேசனைப் பார்த்தான். நேசனுக்கும் தன் தவறு புரிந்தாலும் அவன் சிரிப்பு சீண்டிவிட்டது.
“என்னடா?” என்றான் சத்தம் வராமல்.
“மரியாதை மரி…யாதை முக்கியம். மாமி சொன்னது கேக்கேல்லையா?” உண்மையில் மிகவும் மரியாதை பார்க்கிறவன்தான் தூயவன். ஆனால், நேசனிடம் அது தோன்றவில்லை. வேண்டுமென்றே அவனைச் சீண்டினான்.
“அதெல்லாம் தரேலாது போடா!” என்றுவிட்டுப் போன நேசன் உதட்டிலும் சின்ன முறுவல் ஒன்று உதிக்கவா என்று நிண்டது.
“மாமி! உங்கட மகன் என்னைப் போடா எண்டு சொல்லுறார். என்ன எண்டு கேளுங்க.” என்று அவன் போட்டுக் கொடுத்துவிடவும் நேசன் இவனை முறைக்க, நேசனை கோகிலா முறைத்தார்.
குசினிக்கு வந்தவளை நளினி பிடித்துக்கொண்டாள். அவள் பார்வை இவளைக் குறுகுறு என்று ஆராய்ந்தது.
“அண்ணி, ஏன் இப்பிடிப் பாக்கிறீங்க?” அவள் பார்வையைச் சந்திக்கக் கூச்சப்பட்ட இசையின் முகம் இலேசாகச் சிவந்தது.
நளினிக்கே பார்க்கத் தெவிட்டவில்லை. “இஞ்ச பார்றா! இசை வெக்கம் எல்லாம் படுறாள்.” என்றாள் சிரிப்புடன்.
“ஐயோ அண்ணி!” என்று ஓடப்போனவளை பிடித்து நிறுத்தி, “எப்பவும் இப்பிடியே இரு.” என்றாள் அன்பான குரலில்.
யாழிசைக்கும் உள்ளம் நெகிழ்ந்தது. “தேங்க்ஸ் அண்ணி. நீங்க ஹெல்ப் பண்ணுவீங்க எண்டு அண்டைக்கு நான் நினைக்கவே இல்ல.” என்று அன்றைய அவள் செய்கையால் உண்டான வியப்பு இன்றும் குரலில் தொக்கி நிற்கச் சொன்னாள்.
“நானே நான் உனக்கு உதவி செய்வன் எண்டு நினைக்கேல்ல இசை. ஆனா உண்மையாவே தூயவன் நல்ல பிள்ளை. அதே மாதிரி சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வாழ்க்கைல வந்துதான் போகும். அப்பிடியான நேரங்களில நிதானமா இரு. என்ன எண்டாலும் அவரோட மனம் விட்டுக் கதை. மனதுக்குப் பிடிச்சவரையே கட்டினது பெரிய விசயமே இல்ல. அவரோட சந்தோசமான ஒரு வாழ்க்கையைக் கடைசி வரைக்கும் வாழ்ந்து காட்டோணும். அதுதான் முக்கியம். அதுக்குக் கொஞ்சம் பொறுமையா, நிதானமா நடக்கோணும் என்ன?” என்றதும் நெகிழ்வுடன் தலையாட்டிக் கேட்டுக்கொண்டாள்.

