ஏதனின் இலஞ்சியவள் 1-1

வாசகர்களுக்கு இனிய வணக்கம்!

‘ஏதனின்  இலஞ்சியவள் ‘ என்னுடைய 31வது கதை. ‘அழகிய சவால் நீ’ கதை எழுதும் போதே இந்தக் கதை எழுதும் எண்ணம் என்னுள் வந்துவிட்டது.  அக்கதை நாயகியின் நண்பியான  ‘துர்கா’ இக்கதை நாயகியாகிறாள்.   செஃப் ஆரோன் டேலின் இளைய மகன் ஏதன், இக்கதை நாயகனாகிறான். 

அழகிய சவால் நீ கதை நாயகி, நாயகன்  ஒலிவியாவும் வேர்த்தும்  இங்கும் வருகிறார்கள். ஆரோனுக்கும் ஒலிவியாவுக்கும் இடைப்பட்ட உறவு பற்றி கதை பேசுகிறது. 

கனமான கருவென்று இல்லாது, நேசம் கொண்ட இரு நெஞ்சங்களின்  துடிப்பாக, இலகுவாக இரசித்து வாசிக்கும்படி எழுதியிருக்கிறேன்.  

கதை பற்றிய உங்கள் கருத்துக்களை அறிய  ஆவலோடு  காத்திருக்கிறேன் மக்களே!  

அன்புடன், 

ரோசி கஜன்

*****

அது ஒரு இளவேனிற்காலம்! தனக்கேயுரிய யௌவனத்தைக்  கடைபரப்ப ஆரம்பித்திருந்த வார இறுதியொன்றின் விடியல் பொழுது. 

காதலன் மீது காதலிக்கு இருக்கும் செல்லச் சிணுக்கம் போல், கருமேகங்களும் வெண்மேகங்களும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டிருக்க, வருணனின் தூத்தல் நிலமகளை நிறைந்த ஆசையோடு சீண்டிக்கொண்டிருந்தது.

வாகன நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு  இறங்கினாள்,  துர்க்கா. சில்லென்று வீசிய காற்று முகத்தில் மோதியது. ஆழ்ந்து உள்ளிழுத்து விட்டாள். சிதறும் மழைத்துளிகளை அண்ணாந்து பார்த்து முகத்தில் ஏந்திக்கொண்டாள்.  கால்களை மாறி மாறி முன்னும் பின்னுமாக வைத்து ஒரு ரிதத்தில் உடலை அசைத்தாள். சில தடவைகள் துள்ளினாள், வளைந்து நெளிந்து, ஓடுவதற்கு உடலை ஆயத்தம் செய்துவிட்டு, அவளுக்கு மிகவுமே பிடித்த இலண்டன் பிரிட்ஜ் பாலத்தின் நடைபாதையில் மிதமான வேகத்தில் ஓட ஆரம்பித்தாள்.

பத்து நிமிடங்கள் ஓடியிருப்பாள். அவள் அணிந்திருந்த ஜொக்கிங் காற்சட்டையின் பின்புற பொக்கட்டில்  ஓய்வில் இருந்த கைப்பேசி சிணுங்கியது.

ஓட்டம் மெதுவாகி நிற்க, எடுத்துப் பார்த்தாள். அவுஸ்திரேலியாவில் இருந்து, அவள் உயிர் நண்பி ஒலிவியா அழைத்துக்கொண்டிருந்தாள்.

அழைப்பை ஏற்றவள், சில நிமிடங்கள் கதைத்தவிட்டு ஓடுவதாகச் சொல்லி அழைப்பைத்  துண்டித்தாள். கைப்பேசியை மீண்டும் பின்புறம் வைக்கும் எண்ணத்தில் கொண்டுபோனதுதான் தெரியும்,  கையிலிருக்கும் உணவு காக்கையின் கொத்தலில் பறிபோயிருக்குமே, அந்நிலையில் நின்றாள், துர்க்கா.

என்ன நடந்தது என்று கிரகிக்கவே அவளுக்குச் சில கணங்கள் ஆகியிருந்தன. சைக்கிளில் வந்த ஒருவன் கைப்பேசியைப் பறித்துக்கொண்டு  வேகமாகச் சென்றுகொண்டிருந்தான். 

“டேய்… கள்ளன்… டேய்…”  உரத்துக் கத்திக்கொண்டு தன் முழுச் சக்தியையும் திரட்டி வேகமாகக் கலைத்துச் சென்றாள், துர்க்கா. அது எங்கே, அவனுக்கும் அவளுக்குமான தூரம் அதிகரித்ததுதான் மிச்சம். 

“என்ர அம்மாஆஆ!” வயிற்றில் வேறு கொழுவிவிட்டது. சுள்ளென்று வலித்தது. முழங்கால்களில் கைகளை ஊன்றி ஆழ்  மூச்சுக்களை எடுத்துவிட்டவள், அப்படியே நின்றபடி மெல்லத் தலையை நிமிர்த்தினாள். கலங்கிவிட்ட விழிகளை உயர்த்தி அந்தக் கள்வனைப் பார்த்தாள். 

1200 அவுஸ்ரேலிய டொலர், புத்தம்புது ஐ ஃபோன். அவள் கன்னங்களில் கண்ணீர் கசிந்தது.  நான்கு நாட்களுக்கு முதல்தான் அவுஸ்திரேலியாவில் இருந்து இலண்டன் வந்திருந்தாள். மியூசலில் ஆறு மாதங்களுக்கு இங்கிருக்கும் பல்கலைக்கழகமொன்றில் சட்டக் கல்வியைத் தொடர இருக்கிறாள்.

திரும்பிப் பார்த்த கள்வனோ, கலைத்து  வந்தவள் நின்றது கண்டதும் வாய்விட்டே சிரித்தான். ஓடிய வேகத்தில் பிடித்திழுத்து விழுத்தி விளாசி விடுவாள் என்று ஒரு கணமேனும் பயந்தான்தானே? தலையைக் குலுக்கிக்கொண்டவன், கையில் இருந்த கைப்பேசியை ஜக்கெட் பொக்கெட்டில் வைத்தான். ஆழமாக ஆறுதல் மூச்சு எடுத்துவிட்டு, வலு நிதானமாகவே சைக்கிளை மிதிக்க ஆரம்பித்துமிருந்தான். அப்போதுதான் அது நடந்தது. 

துர்கா சட்டென்று நிமிர்ந்தாள். மறுநொடி, ஓட்டம் வேகமெடுத்தது. 

கள்வன் சென்ற சைக்கிளைக் கடந்து சென்ற காரொன்று திடுமென்று அவனை மறித்தாற்போல் நின்றிருந்தது. கண்ணிமைக்கும் நேரம்தான், இதை எதிர்பாராதவன் காரில் மோதி நிற்கவும் காரிலிருந்து இறங்கியவன் சைக்கிள்காரனை வளைத்துக்  கீழே வீழ்த்தவும் சரியாக இருந்தது.

 “யூ பிளடி ***” முணுமுணுத்தவன் கரம் அந்தக் கள்வன் பிடரியில் ஒரு தட்டும் போட்டிருந்தது. நிமிர்ந்தவன் கையில் துர்க்காவின் கைப்பேசி.

உடற்பயிற்சியில் இறுகிய உடல், நல்ல உயரம், கால்களை அகட்டி அவன் நின்ற நிலை, சிறுத்தையின் சீற்றம் கக்கும் விழிகள் என, ஒன்றொன்றாகக் கணிப்பெடுத்த அந்தக் கள்வன் வெலவெலத்துப் போனான்.

கள்வனால் தப்ப இயலவில்லை. அப்படி நினைத்தால் எப்படி? சில வருடங்களாக இந்த வேலை செய்யும் அனுபவம் இருக்குதே!  முதன் முதல் இந்த இவனால் காவல் நிலையம்  வரை போகப்போகிறானோ? அப்படித்தான் அந்த அவன் சொன்னான். காவல்துறைக்கு அழைத்துக்கொண்டுமிருந்தான். 

கள்வன் பார்வை வந்த வழியில் ஓடியது. அந்த அவள் நெருங்கிக்கொண்டிருக்க, பின்னால் வந்த காரொன்று என்னவோ ஏதோவென்று நிறுத்துவதற்கு சிக்கினல் போட்டு வேகம் குறைத்தது. 

வேறு வழியே இல்லை. “சொறி சேர்… சொறி!” வலு பணிவாகச் சொல்லிக்கொண்டே நிமிர்ந்து எழுந்தான், கள்வன். கண்ணிமைக்கும் நேரம்தான், என்ன செய்கிறான் என்று அந்த காரோட்டி சுதாரிக்கும் முன்னே ஒரே தாவல். பாலத்தின் கட்டுச் சுவரைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தான், கள்வன்.  

 அழகிய தேம்ஸ் நதி கீழே பரந்து கிடந்தது. அதை  நோக்கிச் சென்றுகொண்டிருந்தவனை எட்டிப் பார்த்த போதுதான் கார்க் காரனின் வலது மேல் தோள்பட்டையில் எரிவு தெரிந்தது. அந்தக் கள்ளன் குதிக்க முன் வலக்கரத்தை இவன் நோக்கி வீசியது  நினைவுக்கு வந்தது. இவன் இயல்பாக ஒதுங்க முயன்றும் இருந்தான். 

கழுத்துக்கு வைத்த குறி தோள்பட்டையில் ஆழமாகவே தடம் பதித்திருந்தது. பார்த்திருக்க அவன் அணிந்திருந்த வெளிர் நீல நிற சேர்ட் இரத்தச் சிவப்பாகிக்கொண்டிருந்தது.

மூச்சு வாங்க ஓடி வந்த துர்க்கா, ஏதனை அண்மிக்க முதலே கணிசமானவர்கள் கூடிவிட்டார்கள். உயரப்பிடித்த திறன்பேசிகளோடு நின்றவர்களை, ஒரு உறுமலில் கைகளைக் கீழே இறக்க வைத்த ஏதன், அவன் இரத்தம் பார்த்து உச்சபட்ச அதிர்வில் விழிகள் கலங்க நின்ற துர்க்காவைப் பார்த்தான். 

 

 

error: Alert: Content selection is disabled!!