அவன் வலக்கைக்குள் அவள் திறன்பேசி. அதைக் கள்வன் பறித்துச்சென்றதற்காகக் கலங்குகிறாளா? ‘இல்ல…’ மனம் எண்ணமிட, அவன் பார்வை தன் தோள்பட்டைக்குச் சென்றுவிட்டு அவள் முகத்துக்குப் பாய்ந்தது.
கைப்பேசியை அவளிடம் கொடுக்க வேண்டும். அவளை அழைக்க முனைந்த நேரம், “ஏதன்… நீங்க செஃப் ஆரோன் டேல் மகன்தானே?” என்றொரு குரல் கேட்டது. கூட்டத்தில் திடீர்ப் பரபரப்பு. மறுகணமே, ஆரோன் டேலுக்குத் தகவல் சென்றுவிட்டது. போலீசுக்கும் அம்புலன்சுக்கும் செய்தி பறந்தது.
அடுத்துச் சில நிமிடங்களும் சென்றிராது, வானில் போலீஸ் மற்றும் அம்புலன்ஸ் ஹெலி சுற்ற, அம்புலன்சும் பொலீசும் போட்டி போட்டுகொண்டு வந்து சேர்ந்தன.
“வசதி வாய்ப்புள்ள மனுசரா இருக்கப்போய் கண் இமைக்கிற நேரத்தில ஓடி வாறாங்கள். சாதாரண மனுசர் எண்டா இழுத்துக்கொண்டு கிடக்க வேண்டியதுதான். இவங்கள் வர முதல் மேல போய்ச் சேர்ந்து இருந்தாலும் ஆச்சரியம் இல்ல.” நாட்டு நிலையில் பெரும் அதிருப்தியில் உள்ள இருவர் கதைத்துக்கொண்டது துர்கா செவிகளில் நுழைந்தது. அவளைத் தள்ளி ஒதுக்கிவிட்டுச் சில ஆண்கள் முன்னேறிச் சென்றார்கள். அவள் பார்வையை கண்ணீர் முழுதாகவே மறைத்திருந்தது.
அவனை நெருங்க இயலவில்லை. எங்கிருந்து அந்த இரத்தம் கசிகிறது என்று கூட அவளுக்குத் தெரியவில்லை. கள்ளன் அவன் கழுத்தை வெட்டிவிட்டானோ? ஐயோ!
‘ஃபோன் போனா போகட்டும் எண்டு விடாமல் பின்னால நீ ஓடப்போய்த்தான் எல்லாம்.’ எண்ணம் சுழன்றடிக்க, அவளுக்குத் தலை சுற்றிக்கொண்டு வந்தது.
‘ஏதனுக்கு ஒண்டுமா இருக்கக்கூடாது.’ மனம் பிதற்றியது. உடல் சோர, அப்படியே பின்னால் நகர்ந்து பாலத்தின் சுவரோரமாக அமர்ந்துவிட்டாள்.
“என்னதான் ஏற்கனவே நிறையத் தடவைகள் இலண்டன் போயிருந்தாலும் அது சொந்தகார வீடுகளுக்கு எண்டு எங்களோட போனது துர்கா. இது நீ தனிய, அதும் ஆறு மாதங்கள் அறையில தங்கிப் படிக்கிறது எண்டுறத எனக்கு யோசிக்கவே ஏலாமல் இருக்குப் பிள்ள. இஞ்சயே படி, போதும். இல்லையோ, தூரம் எண்டாலும் பரவாயில்ல சித்தி வீட்டில இருந்து போய் வா.” இவள் தாய் எவ்வளவோ கெஞ்சியிருந்தார். அதட்டிப் பார்த்தார். கோபப்பட்டும் பார்த்தார். இவள்தான் அசைந்து கொடுக்கவே இல்லை.
“ஆஆ அம்மா! ப்ளீஸ் நிப்பாட்டுங்க. எனக்கு எத்தின வயதம்மா? இருபத்தி ஒண்டு ஆகப்போகுது. நான் ஒண்ணும் சின்ன பிள்ள இல்ல. நான் போகத்தான் போறன். கண்டபடி கற்பனை பண்ணி யோசியாதீங்க சரியா? என்னைப் பாத்துக்கொள்ள எனக்குத் தெரியும்.” வீராப்பாக அல்லவோ சொல்லியிருந்தாள்.
“வெட்டுக்குத்து எண்டு லண்டன் இந்த நாள்களில சரியான மோசம் பிள்ள, வடிவா இன்னொருக்கா யோசிச்சுப்போட்டு…” என்று ஆரம்பித்துத் தன் விருப்பின்மையைச் சொன்னார் தகப்பன்.
அவள் காதுகளில் ஏறினால்தானே? புறப்பட்டு வந்துவிட்டாள். நான்கே நான்கு நாட்கள்தான் ஆகியிருக்கிறது. இன்னும் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க மூன்று நாட்கள் வேறு உண்டு. அதற்கு முதலே என்ன பிரச்சனையை இழுத்து வைத்திருக்கிறாள்? இது மட்டும் வீட்டிற்குத் தெரிந்தால்? கண்களால் வழிந்த கண்ணீரை மேல் கைகளால் மாறி மாறித் துடைத்தபடி எழுந்தாள்.
ஏதனுக்கு முதலுதவி செய்து இரத்தப்போக்கு நிறுத்தப்பட்டிருந்தது. சற்றே ஆழமான வெட்டுத்தான். தையல் போட வேண்டும் என்று கைத்தாங்கலாக அம்புலன்சில் ஏற்றினார்கள்.
துர்கா பார்வை அங்குதான் இருந்தது. கடைசி நொடி மெல்லத் தலையைத் திருப்பினான்,ஏதன். பார்வை சுழன்றது. துர்கா நின்ற அநாதரவான நிலை அவனை மிகவுமே தாக்கியது. அக்கணம் எதுவுமே அவனால் செய்ய இயலவில்லை. படுத்துக்கொள்ளப் போகிறாயா என்ற மருத்துவரிடம் இல்லை என்றவன் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டான். அம்புலன்ஸ் கூவிக்கொண்டு விரைந்தது.
அவன் நினைவு பின்னோக்கி ஓடிற்று. மனத்தில் வேர்த், ஒலிவியா திருமணத்தில் பட்டாம் பூச்சியாகச் சுற்றித் திரிந்தவள் சிறகடித்துத் திரிந்தாள். தோள்பட்டையின் சுரீர் என்ற வலியும் எரிவும் கூட சற்றே மட்டுப் பட்டிட்டோ!
அன்று, அந்தத் திருமண நாளில், அங்கு எத்தனையோ விதமான அழகிய இளம் பெண்கள் இருந்தாலும் இவள் மட்டும் ஏதனை மிகவுமே ஈர்த்தாள். நிச்சயம் அழகால் என்று சொல்ல மாட்டான்.
அவள் நடையில் துள்ளலும் நளினமும் போட்டிபோட்டுக் கலந்து கிடந்தன. கதை பேச்சுச் சிரிப்பு என்று சொல்லவே வேண்டாம். வா, ஓடி வா சேர்ந்து மகிழலாம் என்று பார்ப்போரை எல்லாம் அழைக்கும் விதமாகத்தான் அங்கு சுற்றித் திரிந்தாள். வயது வேறுபாடின்றி அவளை இரசனையாகப் பார்க்க வைத்தாள். சில வார்த்தைகளேனும் அவளோடு கதைத்துவிடும் ஆவலைத் துண்டியும் இருந்தாள். அந்தத் துடியாட்டமே அவனை மிகவும் கவர்ந்தது. அவன் நினைவில் அவளை நிறுத்தியும் வைத்திருக்கிறது.
அவனுக்கும் அவளோடு கதையளக்க ஆசையாக இருந்தது. அன்று அந்தத் திருமணத்தில் காட்டிக்கொள்ளவே இல்லை. தீர்க்கமான பார்வையால் தொடர்ந்தாலும் அவன் இயல்பில் இறுக்கமாகவே பார்த்திருந்தான்.
அதை, அவள், மண்டைக்கனம் என்றாள். கர்வம் பிடித்தவன் என்று பற்களுள் இட்டு அரைத்துத் துப்பியிருந்தாள். இதெல்லாம் இவனுக்கு எங்கே தெரியப்போகிறது.
“சாதிச்ச மனுசன் எங்கட செஃப் ஆரோன் டேல். உலகத்தில மூலை முடுக்கு எல்லாம் அவரைத் தெரிஞ்ச சனம் இருக்கு. அவருக்கு இல்லாத லெவல் இந்த மரத்துக்கு. மூஞ்சியும் ஆளும். விடாமப் பாக்கிற கண்ணில விரலால குத்தி விட்டிரோனும் போலக் கிடக்கு!” என்று, இவள் ஒலிவியாவிடம் சொன்னதை அவன்தான் கேட்கவில்லையே!
இந்த இடைப்பட்ட மாதங்களில் இருவருமே ஒருவர் மற்றவர் நினைவுகளில் ஆழ்ந்து இருக்கவில்லை. இலண்டன் என்றதும்தான் துர்கா நினைவில் இவன் வந்து போனான். அதுவும்கூட செஃப் ஆரோன் டேலிடம் பகுதி நேர வேலைக்காகக் கேட்டபோதுதான். அவன் மேனேஜ்மேண்ட் சைட் என்று அந்த நேரம் ஒலிவியா சொன்னது நினைவில் இருந்ததில் அவனைச் சந்திப்பாள் என்று எண்ணியும் இருக்கவில்லை.
அவனுக்கோ, கள்வனைத் துரத்திக்கொண்டு ஓடிய யாரோ ஒருத்தியாகத்தான் துர்கா முதலில் கருத்தில்பட்டாள். அருகே வந்து அவளைக் கடந்த நேரம்தான் அது அந்தப் ‘பட்டாம் பூச்சி’ என்று விளங்கியது. அவனையும் அறியாதே அந்த ஃபோனை வாங்கிவிட வேண்டுமென்று மனம் ஊந்தச் செயற்பட்டிருந்தான்.
‘கடைசியில் …’ பெருமூச்செறிந்தான். காற்சட்டைப் பைக்குள் அவள் கைப்பேசி, ஏதோ நோட்டிபிகேஷன் வந்திருக்குமாக்கும், தன்னிருப்பை உணர்த்தியது. அவள் கூடவே வரும் உணர்வு!
இவன், பருவ வயதின் எதிர்ப்பாலின ஈர்ப்புக்குத் தடை சொல்லவில்லை. இந்த இருபத்தியெட்டு வயதினுள் இரு காதல்கலைக் கடந்து வந்திருந்தான். இரண்டுமே அருமையான அனுபவம் தந்தது என்றுதான் சொல்லுவான்.
முதல் காதல், பதின்ம வயதின் இறுதியில் இவனோடு கைகோர்த்திருந்தது. சிறு பொறியாக இருந்த சலனத்துக்கு அழகிய ஆடையணிவிக்க முயன்றதில் பிரிந்துவிட்டிருந்தது.
‘சலனம்’ என்பது இயல்பானது , எப்போதுவரையென்றால், அதற்கு முக்கியம் கொடுக்காதவரை, தட்டிக்கொட்டி ஆராய எண்ணாத வரை, அழகிய வர்ணம் பூசிப்பார்த்துப் பூரிக்க நினைக்காதவரை! இலாவகமாக, நாசுக்காக, புத்திசாலித்தனமாக கையாளப்பட வேண்டிய உணர்வு அது. சலனத்தின் வசம் அகப்படும் மனத்தைச் செல்லத் தட்டலும் அதட்டலும் போட்டுக் கண்டிப்போடு அடக்கிவிட்டுக் கடந்து செல்ல வேண்டியதொன்று. அது இவன் வாழ்வில் எதிர்மறையாகச் செயற்பட்டிருந்தது.
இவன் தோள்வளைக்குள் சாய்ந்தபடியே இவன் நண்பனை இரசித்தாள், இவன் காதலி. ஆரம்பத்தில் இலகுவாக எடுத்துச் சேர்ந்து சிரித்தான். பின்னரோ, நண்பனின் பழக்கவழக்கம் தொடங்கி பரம்பரை வரை அலசிய போது மனத்தில் முறுக்கிக்கொண்டான். அப்போதும் முகத்திற்கு நேரே கேட்க முனையவில்லை. சந்தேகம் பொல்லாததாச்சே! அது பார்த்தால், “உனக்கும் எனக்கும் சரிவராது எண்டு நினைக்கிறன் ஏதன். எனக்கு அவனைப் பிடிச்சிருக்கு. அவனுக்கும்தான்.” என்றுசொல்லி, கைலாகு கொடுத்து விடைபெற்றுக்கொண்டபோது, இருபத்தியொரு வயதில் இறுகி நின்றான் ஏதன். அடுத்தடுத்த வருடங்கள் காதலும் அது கொடுக்க முனைந்த உறவுமே கசந்து திரிந்தான்.
அடுத்த காதல் ஒரு விபத்தில் பூத்தது. சில வருடப் பயணமே போதுமென்றும் வாடிவிட்டது. முதல் காதலில் சந்தேகம் பொல்லாதது என்றவன் சந்தேகத்தில் கேட்ட ஒரு கேள்வியே கைலாகு கூட கொடுத்துக்கொள்ளாது உதறிச் செல்ல வழி செய்திருந்தது. இந்தச் சில வருடங்கள் அவன் மனத்தில் காதலுக்கான இடம் வெற்றிடமாக உள்ளது, அதை நிரப்புவதில் அதிக கவனம் தேவை என்ற புரிதலோடு. அவ்விடத்தை இப்போது துர்கா அருட்டினாள். அந்த உணர்வு, இதுவரை இல்லாதவகையில் மிகவுமே புதிதாக இருந்தது. அதை, ஏதன் துளி துளியாக இரசித்தான்.
அவள் கலக்கம் அவனை வெகுவாகவே பாதித்தது. இந்தளவுக்கு அவன் எதிர்பார்க்கவும் இல்லை. ஓரளவுக்கு என்றாலும் தெரிந்த பெண்ணாச்சே! அதுதான் மனம் இப்படியெல்லாம் உணர்கிறதாக்கும் என்று எண்ணிப்பார்க்க முயன்றான்.
‘எனக்கு ஒண்ணும் இல்ல பெண்ணே!’ என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.
அவன் அப்படியும் இப்படியும் அசைய, என்னவென்று விசாரித்தார் மருத்துவர். ஒன்றுமில்லை என்றவன் கண்களை மூடிக்கொண்டான். அதேநேரம், பார்வையில் இருந்து அம்புலன்ஸ் மறைந்திருக்க கார் நிறுத்தியிருந்த இடம் நோக்கித் திரும்பி நடந்த துர்காவினுள், காலை இவ்விடம் வந்த போதிருந்த மகிழ்வில் ஒரு சதவீதம் கூட இல்லை.