ஏதனின் இலஞ்சியவள் 2-1

பல்கலைக்கழகம் தொடங்கும் அன்றிலிருந்துதான் அங்கே அருகில் அவள் எடுத்திருக்கும் அறை கிடைக்கும் என்றிருக்க, சிறிய தாயார் வீட்டில்தான் தங்கியிருக்கிறாள், துர்க்கா. கார் கூடச் சிறிய தாயாரினதுதான். அவள் அம்மம்மா தாத்தாவும் அங்குதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இலண்டன் வாசம்தான். ஆனாலும் மிகவுமே கட்டுப்பாடான மனிதர்கள். இன்று நடந்தது மட்டும் தெரிய வந்தால் அவள் சரி. முகச்சுளிப்போடு மணித்தியாலக்கணக்கில் அறிவுரை கிடைக்கும். அந்த ஒன்றுக்காகத்தான் அவள் தனியாக இருக்க நினைத்தாள். இல்லையோ, தூரமெல்லாம் ஒரு காரணமா? அதுவும் தங்கைகள், தம்பிகள் என்று நால்வர் இங்கிருக்கையில் தனியாகச் சென்றிருக்க நினைப்பாளா?  

காரை நிறுத்திவிட்டு வீட்டினுள் நுழைந்தவளை, வேலைக்குச் செல்ல ஆயத்தமாகி நின்ற சிறிய தாயார் எதிர்கொண்டார்.

“என்ன அதுக்குள்ள வந்திட்டியாம்மா? நேரமாகும் எண்டு நினைச்சன்.” என்றவர், “பிள்ளைக்குப் பிடிக்குமே எண்டு அப்பம் சுட்டு வச்சிட்டுப் போவம் எண்டு வெளிக்கிட்டன், தான் சுட சுட சுட்டுக் குடுக்கிறன் எண்டிட்டா அம்மா. சாப்பிடம்மா. மத்தியானத்துக்கு உனக்குப் பிடிச்ச ஆட்டிறைச்சிப் பிரியாணி சமைச்சு வச்சிருக்கிறன். வடிவாச் சாப்பிடோணும் என்ன. பின்னேரம் சந்திப்பம்.” அவசரம் அவசரமாகச் சொல்லிக்கொண்டே வெளியேறினார், அவர்.

சித்தியின் பிள்ளைகள் பாடசாலை சென்றிருந்தார்கள். சித்தப்பா, அதிகாலையிலேயே வேலைக்குச் சென்றுவிடுவார். மெதுவாக, அம்மம்மா தாத்தா பார்வையில் படாது மாடியேறினாள்.

ஒருபோதும் இல்லாதவாறு மனம் அலைபாய்ந்தபடி இருந்தது. பதற்றமாகத் தத்தளித்து நின்றது. ஏதனுக்கு என்ன நடந்தது என்ற விபரம் அறிந்தால் பரவாயில்லாது இருக்குமோ? எப்படி அறிந்துகொள்வது? கைப்பேசி கூட இல்லையே! யன்னலோரம் வந்து நின்றவள் பார்வை, கருத்தின்றிச் சுற்றத்தில் அலைந்து திரிந்தது.

அப்போதுதான் மேக் புக்கில் வாட்ஸ் அப் உண்டே என்பது நினைவில் வந்தது. ஆரோனுக்கு அழைத்துப் பார்த்தால் என்ன?   மேக் புக்கைத் திறந்தாள். 

‘அவ்வளவு ரெத்தமாக இருந்ததே! சீரியசாக இருப்பாரோ?’ பதறிய மனம் ஆரோனுக்கு அழைக்கவோ, மெசேஜ் பண்ணவோ துணியவில்லை.

பேசாமல் அம்மா அப்பாக்கு எடுத்துச் சொல்லீருவமா? நிறைந்த விழிகளைத் துடைத்தபடி எண்ணியவளுக்கு, அதுவும் சரியாகப்படவில்லை. அடுத்துக் கிடைக்கும் விமானத்தில் அவுஸ்ரேலியா போகத்தான் சரியாக இருக்கும்.

தலையை அழுந்தப் பற்றியபடி அமர்ந்திருந்தவளைக்  கீழேயிருந்து வந்த குரல் கலைத்தது.

“பத்து நிமிசம் அம்மம்மா, குளிச்சிட்டு வந்திருரன்.” என்றபடி,நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டே குளியலறைக்குள் புகுந்துகொண்டவள், அடுத்த இருபதாவது நிமிடம் கீழே  இறங்கி வந்தாள். 

“வந்து சாப்பிடன. ஆடி அசைஞ்சு வந்திட்டு, ஆறிப்போய்ட்டு எண்டு சாட்டுச் சொல்லிச் சாப்பிடாமல் வைக்கிறேல்ல சொல்லிப்போட்டன்.” என்ற அம்மம்மாவின் வாயை அடைக்கும் பொருட்டேனும் அவள் காலையுணவை உண்ண வேண்டுமே. தட்டொன்றில் ஒரு அப்பத்தோடு அமர்ந்தவள், மொறுமொறுவென்று இருந்த கரையைப் பிய்த்து நடுவில் திரண்டிருந்த தேங்காய்ப்பாலில் பிரட்டி எடுத்து வாய்க்குள் வைக்கவும் அழைப்பு மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. 

பின் தோட்டத்திலிருந்து உள்ளே நுழைந்த தாத்தா, “நீ சாப்பிடம்மா நான் பாக்கிறன்.” வாசல் நோக்கிச் சென்றார்.

கதவை ஒருக்களித்துத் திறந்த தாத்தா தலையை வெளியே விட்டபடி மெதுவாகக் கதைத்தார். பின், பின்னால் திரும்பி இவளைப் பார்த்தார்.

“துர்கா இஞ்ச ஒருக்கா வாம்மா, ஆரோ வெள்ளைக்காரன், உன்னைத்தான் கேக்கிறார்.” என்றார் தணிந்த குரலில்.

“வெள்ளைக்காரனா?” வாய்க்குள் வைத்த அப்பத்தை விழுங்கிக்கொண்டே எழுந்தோடினாள், இவள். அப்பம்  சுட்டுக்கொண்டிருந்த அம்மம்மா, அடுப்பைத் தணித்துவிட்டு வேகமாக வந்தார்.

“ஆர், பெடி தரவளியோ? என்ன ஏதெண்டு நீங்களே கேக்கிறதுக்கு என்ன எண்டுறன்? இங்கிலீஸ் தெரியாதாப்பா உங்களுக்கு?” கணவரைக் கடிந்துகொண்டு வந்தவர் துர்க்காவுக்குப் பின்னால் நின்று எட்டிப் பார்த்தார்.

துர்க்காவோ, “செஃப்!” என்று அதிர்வும் ஆச்சரியமுமாகச் சொல்லிக்கொண்டு வெளியே இறங்கியவள், ஆரோன் கரங்களை இறுகப்பற்றிக்கொண்டாள்.

“ஏதன் இப்ப எப்பிடி இருக்கிறார் செஃப்? எவ்வளவு ரெத்தம்!  என்ன நடந்தது? காயம் பெரிசா?  இப்ப நல்லா இருக்கிறார்தானே?” தவிப்பும் தழுதழுப்புமாகக் கேட்டவள் விழிகள் தன்பாட்டில் பனித்துவிட்டன. 

“ஓ டுக்கா! ஹி இஸ் ஓல்ரைட் நவ்” என்றார் ஆரோன்.  தோள்பட்டையில் காயம் என்றும் மூன்று தையலோடு மருந்திட்டுள்ளதையும் சொன்னவர், அவள் கைப்பேசியை பாக்கெட்டில் இருந்து எடுத்து நீட்டினார். 

“ பிள்ள பிரச்சின ஏதுமா? ஆர் இவர், தெரிஞ்சவரோ?” அம்மம்மாதான் இடையிட்டிருந்தார்.

“ஆரோ? உண்மையாவே ஆர் எண்டு தெரியேல்லையா?” என்றவள், “நீங்க உள்ள வாங்கோ செஃப்.” என்றாள்.

“இல்ல டுக்கா இன்னொரு நேரம் வாறன், நிறைய வேலைகள் இருக்கு.” என்று அவர் புறப்பட முனைய, “ஹோம் குக்கிங்  செஃப் ஆரோன் டேல்!” அம்மம்மா வியப்போடு கூவினார். அப்போதுதான் தாத்தாவுக்கும் அடையாளம் தெரிந்திட்டு. 

இருவரும் சேர்ந்தே அவரை உள்ளே அழைத்து வந்து அமர்த்திவிட்டார்கள்.

ஆரோன் உள்ளே நுழைகையில், நடந்ததை வீட்டில் இன்னமும் சொல்லவில்லை என்று சின்னக்குரலில் சொல்லிவிட்டாள், துர்க்கா. 

தாத்தா இடைக்கிடை ஹோம் குக்கிங் பார்த்துள்ளதைப்  பகிர்ந்துகொண்டார். தம் பேத்திக்குச் சமையலில் உள்ள ஆர்வம் பற்றிச் சொல்லி, ஆரோனிடம் பகுதி நேரமாக வேலை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் சொன்னார்.

குடுகுடுவென்று சென்ற அம்மம்மா, சில்வர் தட்டு ஒன்றில்  சுட சுட அப்பம் எடுத்து வந்து கொடுத்தார். “ஓ அப்பம்!” என்ற ஆரோன், முதலில் வேண்டாம் என்றார். அம்மம்மா முகம் சுருங்கிப் போயிற்று. அந்த மூதாட்டியின் அன்புக்காக வாங்கி வாயில் வைத்தவர் அப்பத்தின் சுவையை விழிகள் மூடி இரசித்து ருசித்தார். வெகுவாகப் பாராட்டிக்கொண்டே சாப்பிட்டார். இந்தியா, இலங்கை என்று சென்ற நேரம் சாப்பிட்டுள்ளதாகச் சொன்னார். ஆனாலும் இதன் சுவை தனியாக இருக்கிறதே என்று சொல்லி, அம்மம்மாவையே வெட்கம் கொள்ள வைத்தவர், செய்முறையையும் கேட்டுக்கொண்டார்.

 

error: Alert: Content selection is disabled!!