ஏதனின் இலஞ்சியவள் 4-2

நன்றி சொல்லி நகர்ந்தவள் விழிகள் சுழன்றன. வரவேற்புப்பகுதியைச் சுற்றிலும் கண்ணாடித்தடுப்புத்தான். அதுவே, அப்பால் இருந்த உணவுக்கூடத்தைக் காட்டி நின்றது.  இரு ஓரங்களில் யன்னலோரமாக நீள்சதுரத்தில் சிறிதும் பெரிதுமாகவும்  நடுவில் பெரிதும் சிறிதுமாக வட்ட மேசைகளும் போடப்பட்டிருந்தன . ஓரங்கள் மட்டும் தடுப்பால் பிரிக்கப்பட்டு இருந்ததே, தனிமை விரும்புவோருக்கான இடம் அது என்றது. 

மேசை விரிப்புகளும் கதிரைகளுக்கான உறைகளும் சிறிதும் பெரிதுமான சாடிகளில் அடக்க ஒடுக்கமாக இருந்தபடி அவ்விடத்திற்கு மேலதிக வடிவு கொடுத்த  மலர் அலங்காரங்களும் ஆங்காங்கே சாடிகளுள் வைக்கப்பட்டிருந்த பசுஞ் செடிகளும் உருவங்களும் மென்மையாகச் செவியைத் தழுவிய வயலின் இசையும் என்று, அவ்விடம், பசியை மட்டுமா மனத்தையே மயக்கும் வகையில் எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் செலவிடலாம் என்று எண்ணத்தோன்றும் அளவில் இருந்தது.

உணவகத்தின் கோடியில் விழிகள் பதிந்தன. அதிலிருந்துதான் உணவுகள் கொண்டுவந்து பரிமாறுவார்கள் என்பது புரிந்தது. பின்னால் சமையலறை இருக்கிறது போலும்.

உணவகம் திறக்க இன்னமும் ஒரு மணித்தியாலம் இருந்தது. உள்ளே ஆயத்த வேலைகள் நடப்பது புரிந்தது. நேரத்தைப் பார்த்தாள், ஐந்து நிமிடங்கள் கரைந்திருந்தன. அவளுக்கு முன்னால் இருந்த சிறு ‘டீ போ’ மீது சில மகசின்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. 

அங்கு இருந்த ‘ஆரோனின் சமையல் நுணுக்கங்கள்’ என்ற புத்தகத்தை  எடுத்தவள் அதில் இலயிப்போடு ஆழ்ந்துவிட்டாள்.

 கால் மணிநேரக் காத்திருப்பின் பின்னர் நாற்பது வயது மதிக்கத்தக்கவன் மிடுக்கோடு அவள் முன்னால் வந்து நின்றான். பீட்டர் என்று தன்னை அறிமுகம் செய்தவனிடம் நான் துர்கா என்றபடி கைகுலுக்கினாள் இவள்.

வந்தவன் பார்வை அவளை அளவிட்டது. அவளும்தான். 

 அவன் பார்வையில் உடல்மொழியில், நிமிர்வும் நிச்சயம் அகந்தையும் இருந்தன.

“வா”  என்று அழைத்துச்சென்றான்.

மாடிப்படிகளில் ஏறினார்கள். அங்கும் விசாலமான உணவுக்கூடம் இருந்தது. ஒரு பகுதி முழுவதும் பார்(Bar) அமைப்பு.  ஆங்காங்கே விட்டுவீதியாக மேசை கதிரைகள் போடப்பட்டு இருந்தன. பாருக்கு எதிர்புறம் அலுவலக அறைகள் சிலதுகள். முதலாவதில் ‘ஆரோன் டேல்’ என்ற பெயர் பலகை இருந்தது.  இரண்டாவதாக பீற்றர் – ஸ்டாஃப் & கொமினியுகேசன் மேனேஜர் என்று இருந்த அறையைத்  திறந்தான், அவன். உள்ளே சென்று தன்னிருக்கையில் அமர்ந்தவன், முன்னால் இருந்த இருக்கையைக் கை காட்டினான்.

சிறு அறைதான். நேர்த்தியாக இருந்தது. சுற்றிச் சுழன்ற பார்வையோடு  அமர்ந்துகொண்டாள். 

அவனோ, தன் கணனியைப் பார்த்தான்.

“துர்க்கா…ம்ம்… லோ ஸ்டுடென்ட். அடுத்த ஆறு மாசங்களுக்கு இங்கதான். ” என்றபடி அவளை பார்த்தவன் வசதியாகக் கதிரையில் அமர்ந்துகொண்டான்.

“இப்படியான ஐந்து நட்சத்திர உணவகங்களில பணியாற்றிய முன் அனுபவம் பற்றிச் சுருக்கமாகச்  சொல்லேன்.” என்றவன் பார்வையில் நக்கல் இருந்தது. உண்மையில் அதுவெல்லாம் துர்கா கருத்தில் பதியவில்லை.  ஆரோன், உலகில் கிட்டதட்ட எண்பது ரெஸ்டோரண்டுகளின் உரிமையாளர். அங்கு  வேலை செய்யப்போகிறாள் என்பதே ஆச்சரியம் கலந்த மகிழ்வாக  அவளுள் வியாபித்திருந்தது. 

அதுவே அவள் சுபாவப்படி, “வாட், எஸ்பீரியன்ஸ்?” என்று கேட்க வைத்திருந்தது. “இஞ்ச…செஃப்  ஆரோன் டேல் ரெஸ்டோரண்டில வேலை செய்யோணும் எண்டது என்ர பக்கெட் லிஸ்ட்டில முதன்மையா உள்ள ஒண்டு!” என்று, சிரித்தபடி சொல்லவும் வைத்திருந்தது. 

அதன்மூலம் அவன் முகத்தில் கடினத்தைக் கொண்டு வந்திருந்தாள்.

“சிரிக்க, இந்தளவுக்கு வியக்க இதில என்ன இருக்கு துர்கா? அதோட பக்கெட் லிஸ்டில் இருக்கோ!” என்றவன் எரிச்சலை மறைக்கவெல்லாம் இல்லை.

“நான் இஞ்ச  வேலைக்கு எண்டு வந்து பத்து வருசங்களுக்கு மேல ஆயிற்று. இப்பவரை எந்த வேலைக்கும் முறையான பயிற்சியும் அனுபவமும் இல்லாமல் ஆட்கள நாங்கள் எடுத்ததில்லை. அப்பிடி எடுக்கிற ஒவ்வொருவருக்குமே ஆகக்குறைந்தது மூண்டு நாள்கள்  எங்கட  உணவக நடைமுறைகளத் தெரிஞ்சுகொள்ள முறையான பயிற்சி குடுப்பம்.” கூர்மையான பார்வையோடு சொன்னவனுக்கு என்ன பதில் சொல்வது? 

துர்கா முகம் சுண்டிப்போயிற்று. சரிதான் போடா என்று எழுந்து சென்றுவிடுவோமா என்றுகூட எண்ணிவிட்டாள்.

“நீ எந்தவிதமான தகுதியும் இல்லாமல் ரெகமெண்டேசனில வந்திருக்கிற. இஞ்ச நடக்கிற எந்த விசயத்துக்கும் நான்தான் பொறுப்பு. அதனாலதான் உன்னை இவ்வளவு இருத்திவச்சுக் கதைக்கிறன்.” என்றவன் பார்வை மீண்டும் கணனிக்குச் சென்றிருந்தது. அதோடு ஒரு நக்கல் சிரிப்பு வேறு சிரித்தான்.

இவள் முகம் கன்றியது.  இழுத்துப்பிடித்த பொறுமையோடு அமர்ந்திருந்தவளை மீண்டும் பார்த்தவன், “இதில உனக்குக்  குசினியில வேலை செய்ய விருப்பம் எண்டு சொல்லி இருக்கிற!” வியப்பில் புருவங்கள் உயர முறுவலித்தான். அந்த முறுவலில் நக்கல் மட்டுமே! 

 முகத்தில் குத்து ஒன்று கொடுத்துவிட்டு எழுந்து சென்றுவிட வேண்டும் போலிருந்தது, அவளுக்கு.

‘நீ நல்ல சமையல் ஆர்வம் உள்ளவளாகவே இருக்கட்டும். ஹோம் குக்கிங் செலக்சனில் கடைசிவரை வந்திருக்கலாம்.  அதுவெல்லாம் இங்குக்  குசினியில் வேலை செய்வதற்கான  தகுதியாகாது, மிஸ் துர்கா. ம்ம்ம் எதுக்கும் முதல் சேவிஸ்ல இருந்து பார். மூன்று நாள்கள் பயிற்சி இருக்கு. இண்டே தொடங்கு.”  என்றபடி யாருக்கோ அழைத்தான்.

அடுத்த நொடி, நெடியவன் ஒருவன் வந்தான். இவள் வயதுதான் இருக்கும். கோட் சூட் அணிந்திருந்தான்.

“மாட்டின், இவள் மிஸ் துர்கா.” என்று அறிமுகம் செய்து வைத்தவன், “உங்கள் பிரிவில்தான் பகுதி நேரமாக வேலை செய்யவுள்ளாள் . எல்லாம் சொல்லிக்குடு! மூண்டு  நாள்கள்

பயிற்சி.” என்றவன், செல்லும்படி தலையசைப்பில் விடைகொடுத்தான்.

உன் வேலை  தேவையில்லை என்று முறுக்கிக்கொண்டு சொல்ல விழைந்தது, மனம். துப்பத் தயாரான வார்த்தைகள் தொண்டைவரை வந்து புத்தியின் இறுகிய பிடிக்குள் நெரிந்து  நின்றன. அப்படிச் சொல்வது, கேட்டதும் வேலைக்கு வா என்ற ஆரோனை அவமதிப்பதாக இராதா? பேசாமல் இரு! அவள் புத்தி குட்டி அமர்த்திவிட்டிருந்தது.

சுழன்றடித்த நினைவுகளை ஒதுக்கிவிட்டுத் தோழியைப் பார்த்தாள்.

“இப்ப ரெண்டு நாள் ட்ரெயினிங் முடிச்சு இருக்கிறன் இந்தா பார்.” என்று, கோட் சூட் போட்ட தன் சுயமியை நண்பியிடம்  காட்டிக்கொண்டே விரிவுரை நடக்க இருந்த வகுப்புக்குள் நுழைந்தாள். 

அன்று வீடு திரும்பும் போது ஆரோனுக்கு டெஸ்க்ட்  செய்து  ஏதன் நலன் விசாரித்தாள் . வீடு வந்து விட்டான் என்று ஆரோன் பதில் அனுப்பி இருந்தார். ‘கவலைப்படத் தேவையில்ல துர்கா, அவன் ஓகே’ என்றும் வந்திருக்க, அதன் பின்னர் கேட்கும் அளவுக்குத் துணிவு வரவில்லை.

வேலை எப்படி என்று கேட்பார் என்று நினைக்க அவரிடம் அமைதி.

இப்படியே இரு கிழமைகள் கடந்திருக்க, அன்று இரவு பத்து மணிக்கு வேலை முடிந்து வேகவேகமாக வெளியில் வந்தாள், துர்கா. ஏதன் நேரே முன்னால் வந்துகொண்டிருந்தான். இவள் நடை தானாக நின்றுவிட்டிருந்தது. அவன் பார்வை இவளில்தான். உதடுகளில் சிறு முறுவலும் நெற்றியுயர்த்திய நலவிசாரிப்புமாக அண்மித்தான், அவன்! 

error: Alert: Content selection is disabled!!