புதிய கல்வியாண்டு, பரபரப்பான தொடக்கத்தில் அந்தப் பல்கலைக்கழகமும் இணைந்திருந்தது.
ஏற்கனேவே சிட்னியில் அறையில் இருந்துதான் உயர் கல்வி கற்றாள். இப்போது பல்கலைக்கழகமும் அப்படித்தான். ஆனாலும் அங்குத் தனிமையை உணரவோ, அது கொடுக்கும் சவால்களைத் தனியாகக் கையாளவோ சந்தர்ப்பங்கள் அமையவில்லை. அதற்கு முக்கிய காரணம், ஆரம்பப் பாடசாலையில் இருந்து தொடரும் நெருக்கமான நட்புகள் ஒன்றாக இருந்ததே.
அதுவே, இலண்டனில் தனியாகத் தங்குவது என்ற முடிவுக்கு முக்கிய காரணம். தனியாகக் கழிக்கவுள்ள இந்த ஆறு மாதங்களையும் மிகவுமே எதிர்பார்க்க வைத்திருந்தது. அவளில் அவளுக்கே தெரியாத பழக்கவழக்கங்கள், பலவீனங்கள் எது எது என்று அடையாளம் காண, இந்தக் காலப்பகுதியைப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவில் இருந்தாள், அவள்.
அதுதான் இப்போ நடக்காது என்று ஆகிற்றே! ஆறு மாதங்களும் சித்தி வீட்டில். எல்லாம் அந்தக் கள்வனால் வந்தது.
‘அவன் மட்டும் கையில கிடைக்கோணும்.’ மனத்துள் கறுவினாள். கூடவே, அவள் கைப்பேசிக்காக இரத்தம் சிந்தி நின்றவன் நினைவு வந்து சுரண்டிச் சென்றது.
இந்த மனம் இருக்கிறதே! புத்தியின் அதட்டலை, ஒரு விழிச் சிமிட்டலிலோ உதடு குவித்த குறும்பான முறுவலிலோ கடந்து விடுவதில் கில்லாடி! கேட்டுகேள்வியில்லாதே சில விடயங்களைச் செய்யத் துணிந்துவிடும். சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்துகொள்ளும் திறன், போதும் போதும் என்றளவிற்கு இருந்தாலும் அதைப் பயன்படுத்தப் பெரிதும் பின்னிற்கும் இந்த மனத்தை என்ன செய்வதாம்?
மானசீகமாகத் தலையை ஆட்டிக்கொண்டாள். புத்தியின் புறுபுறுப்புச் சற்றேனும் வேலை செய்தது. வேண்டவே வேண்டாம் என்று அன்றைய நிகழ்வை விரட்ட முனைந்தாள்.
வீட்டில் இருந்து நடக்கத்தொடங்கியவள் சுற்றத்தை உள்வாங்க முயன்று வெற்றிகண்டாள். தாமதிக்க வைக்காது இரயில் வர ஏறினாள். நல்ல நெருக்கடி. இதெல்லாம் புது அனுபவமாச்சே! ‘இரசியடி’ என்று புத்தி அதட்டியது. ‘எந்த நேரமும் அதட்டி உருட்டிக்கொண்டு இருக்கிற, நான் என்ன உன்ர அடிமையோ?’ என்று, மனம் முணுமுணுக்க முயன்றாலும் இரசித்ததுதான்.
உரிய இரயில் நிலையத்தில் இறங்கி இரு தரிப்புகளுக்குப் பேருந்துப்பயணம் செய்தால் பல்கலைக்கழக வாசலில் இறக்கிவிட்டிடும்.
இறங்கிய வேகத்தில், வந்து சேர்ந்துவிட்டதைச் சித்திக்குத் தெரிவித்துவிட்டே உள்ளே நுழைந்து நடக்க ஆரம்பித்தாள்.
இவள் வந்தது போலவே எக்ஸ்சேஞ்ச் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் இருந்து வந்திருந்த அனி, ஏற்கனவே வந்து காத்திருந்து இணைந்துகொண்டாள்.
அவளுக்கு இலண்டன் வாழ்க்கை முற்றிலும் புதிது. இந்நாட்டுக்கு முதல் தடவையாக வந்துள்ளாள். இருவரும் அருகருகே அறை பார்த்திருந்தார்கள். துர்கா வரவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டாள். இப்படியே, இலண்டன் வாழ்வு பற்றிக் கதைத்தபடியே நடந்தார்கள்.
வந்ததும் வராததுமாகக் கள்ளனிடம் அகப்பட்ட கதையைச் சொன்னாள், துர்க்கா. அதிர்வோடு கேட்ட அனி, ஆரோன் மகன் கதைக்குள் வந்ததைத்தான் நம்பவில்லை.
“கதை விடாதே!” என்றாள். நம்பினால் நம்பு இல்லையோ விடு என்ற துர்க்கா, ஆரோன் ரெஸ்டோரண்ட் வேலை பற்றி வாய் திறந்தாள்.
சனிக்கிழமை முழுநாள், ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வார நாள்களில் இரு தடவைகள் பகுதி நேர வேலை என்றவள், கணிசமான அளவுச் சம்பளம் பற்றியும் சொல்ல முறைப்போடு நின்றுவிட்டாள், அனி.
“பகிடிதானே விடுற? அங்க எல்லாம் அனுபவமும் முறையான பயிற்சியும் இல்லாமல் வேலை எடுக்க ஏலுமா துர்கா? எப்பிடிப்பட்ட வேலைகள் செய்வ? நானும் வரலாம் எண்டு யோசிக்கிறன்.” என்றாள்.
“நான் ஏன் பகிடி விட? என்ர ஃப்ரெண்ட் ஒலிவியாவத் தெரியும்தானே? அவளுக்கும் அவள் கணவனுக்கும் செஃப் ஆரோன் மிகவும் தெரிந்தவர். ஒலிவியாதான் இந்த வேலையை எடுத்துத் தந்தவள். மற்றும் படி, நீ சொன்னபோல அதுக்குள்ள போறது வலு சிரமம்தான்.” என்றவள் முகம் கலகலப்பைச் சற்றே தொலைத்திருந்தது.
முதல் நாள் மனம் நிறைந்த குதூகலத்தோடு அந்த ரெஸ்டோரண்டினுள் உள்ளிட்டிருந்த கணத்திலிருந்து நடந்தவை நினைவில் புரண்டோடின.
அந்த உணவகக் கட்டிடம் பழைய கால அரண்மனை போலிருந்தது. துர்கா வெளியில் நின்று அண்ணாந்து பார்த்தாள்.
‘Restaurant Aron Del’ என்பது நல்ல தடித்த எழுத்தில் இருந்தது. அந்த ஒவ்வொரு எழுத்தும் இரவின் கருமையை விரட்டும் வகையில் ஒளிரும் என்று விளங்கியது. அதன் கீழே Fine Dining என்றிருந்தது.
மனத்துள் அதுவரை இருந்த ஆர்வமும் மகிழ்வும் தன்னால் ஒதுங்கிக்கொள்ள, அவ்விடத்தில் பதற்றம் முன்னிலை வகித்தது.
இதுவரை இப்படியானதொரு இடத்தில் எந்தவிதமான வேலையையும் செய்ததில்லையே! சாப்பிடக் கூட விரல்விட்டு எண்ணும் அளவுக்குத்தான் சென்றிருக்கிறாள். அப்படியிருக்க, ‘எப்பிடி வேலை செய்யப்போறன்!’ கலக்கமாக இருந்தது.
கண்டிப்பும் கோபமும் கொண்டவராக உலகத்திற்கு அறியப்பட்ட ஆரோன், அவள்மட்டில் அன்பானவர், கரிசனைமிக்கவர். முக்கியமாக ஒலிவியா, வேர்த் என்றால் அவருக்குத் தனி. அப்போ, ஒலிவியாவின் நெருங்கிய நண்பியும் தனிதானே?
‘பின்ன? அதில உனக்கு என்னடி சந்தேகம்?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். அப்படி இருக்கப்போய்த்தானே கேட்டதும் வேலைக்கு வரச் சொன்னவர். ‘என்ன அன்பா வீட்டுக்கு வந்து அப்பம் சாப்பிட்டுட்டுப் போனவர்.’ தனக்குத்தானே சொல்லித் தைரியம் கொடுத்தவள் பதற்றத்தை ஒதுக்கி நிமிர்வாவே உள்ளே நுழைந்தாள்.
வாயிலோரமாக உட்பக்கம் அமர்ந்திருந்த காவலர் எழுந்து வந்து விசாரித்தார். சொன்னாள். வரவேற்பைக் கை காட்டினார்.
வரவேற்பில் பணிபுரியும் பெண், மாலை வணக்கமும் இன்முகமுமாக எதிர்கொண்டாள். பீட்டருக்கு அழைத்து இவள் வந்திருப்பதைச் சொன்னவள், இவளைக் காத்திருக்கச் சொல்லி அங்கே ஒரு மூலையில் போடப்பட்டிருந்த இருக்கைகளைக் காட்டினாள்.

