ஏதனின் இலஞ்சியவள் 5 – 1

“ஹலோ!” என்றவளுக்கு, உண்மையில் அடுத்து என்ன கதைப்பது என்றே தெரியவில்லை. அந்தளவுக்கு அவன் கூர்மையான பார்வை அழுத்தமாக இவள் மீது படிந்திருந்தது.

தன்னை எதிர்பாராது சந்தித்ததும் அவளில் வந்த வியப்பையும்  அதைத் தொடர்ந்த தடுமாற்றத்தையும் துல்லியமாகக் கணக்கெடுத்துக்கொண்டான், ஏதன்.  அவன் ஒற்றைப் புருவம் உயர்ந்த வேகத்தில் தன் இடம் வந்தமர்ந்துகொண்டது. முறுவலிக்கிறானா என்று உணரும் முன்னே, அவன் உதடுகளை  சிறு முறுவல் உரசிச் சென்றிருந்தது.

“ஹல்லோ துர்க்கா!” என்ற அவன் குரலே அவளைச் சுதாரிக்க வைத்திருந்தது.

 “என்ன வேல முடிஞ்சிட்டா? எப்பிடி வேலையெல்லாம் போகுது, பிடிச்சிருக்கா? எந்தப் பிரிவில வேலை செய்யிற?” கேள்விகள் அடுத்தடுத்து வந்து விழுந்தன. 

வாயில் காவலாளி வெளியில் வந்து விறைப்பாக நின்றுகொண்டான். அவனுக்குச்  சிறு தலையசைப்பைக் கொடுத்த ஏதன், “துர்க்கா!” மீண்டும் அழைத்தான். 

“வேல…நல்லாப் போகுது சேர்.” என்றவள், அடுத்துத் தொடர முயல இடையிட்டவன், “சேர்?” ஒரு சாதியான சிரிப்போடு கேட்டவன், “கோல் மீ ஏதன்.” என்றிருந்தான்.

அதைக்கவனியாத பாவனையில் தொடர்ந்தாள், அவள். “உங்கட… உங்களுக்கு இப்ப சுகமா? உண்மையாவே சொறி! அண்டைக்கு என்னாலதான் உங்களுக்கு அப்பிடிக் காயம் பட்டது.” என்றவளைத் தொடர விடாது மீண்டும் இடையிட்டான், அவன்.

“அந்த இடத்தில ஆர் இருந்திருந்தாலும் அதைத்தான் செய்திருப்பன் துர்க்கா. உண்மையில அதில ஒடி வந்தது நீ எண்டே தெரியாது.” பொய் பொய் என்று மனம் குழறியது. அதை எங்கே அவன் பொருட்படுத்தினான். 

“உண்மையாவேதான் சொல்லுறன். ஆரோ ஒரு பெண்ணின் ஃபோன் பறிபோய்விட்டது எண்டு விளங்கிச்சு. என்னால முடிஞ்சா எண்டு சின்ன முயற்சி செய்தன், அவ்வளவுதான். அந்த இடத்தில நான் இன்னும் கவனமா இருந்திருக்க, இந்தக் காயத்தைத் தவிர்த்திருக்கலாம்.” என்று தன்  தோளைக் காட்டினான்.

“இப்ப எனக்கு நல்ல சுகம்.” என்றவன், விழிகளில் நகைப்போடு, “நீ அடிக்கடி விசாரிக்கிறதா டாட் சொல்லுறவர். தேங்க் யூ!” என்றான்.

உனக்காக ஒன்றும் நான் அப்படி நடந்துகொள்ளவில்லை என்று அவன் சொன்னது, இவளுக்குச்  சற்றே ஒருசாதியாக இருந்தது. ஆனால,  அதுதானே உண்மையாக இருக்க முடியும்? அவள் என்ன அவனுக்குப் பழக்கமானவளா? எந்த வகையில் நெருக்கம்? உறவா, நட்பா?

முறுவலித்தாள். “நீங்க என்ன சொன்னாலும் எனக்கு உண்மையாவே வேதனையா இருந்தது சேர். என்ர ஃபோன் உங்கள அந்தளவுக்கு ரத்தம் சிந்த வச்சிட்டுது .” என்றவளுக்கு, அன்றைய நினைவில் இப்போதும் உடல் நடுங்கிற்று. தொண்டை அடைத்தது. 

“நன்றி எண்டு சொல்லிட்டுப் போகேலாது சேர். ஆனாலும் வேறென்ன சொல்ல, நன்றி சேர்!” பெயரைச் சொல் என்ற பிறகும் சேர் சேர் என்பவளை முறைத்தான், ஏதன்.

அதையும் அவள் கருத்தில் எடுக்கவில்லை, அவளையுமறியாதே கைப்பேசியில் மணி பார்த்தவள், “போயிட்டு வாறன் சேர்.” என்றவள் உடல்மொழியில் அவசரம் வந்திருந்தது. அடுத்த இரயிலுக்குச் சிறிது நேரமே இருக்க, அதைவிட்டால் மேலும் அரை மணித்தியாலம் காத்து நிற்க வேண்டும். முதல், அவள்  சித்தி இருக்கிறாரே, பத்துத் தடவைகள் அழைத்துக் கேட்பார். வரவா, வருவியா என்பதற்குப் பதில் சொல்வது யாராம்?

“ஒரு அரை மணித்தியாலம் நிற்க ஏலுமா துர்க்கா?  உன்ர  வீட்டைக் கடந்துதான் நான் போகோணும், என்னோட நீ வரலாம்.” என்றான் ஏதன். 

“அச்சோ! இல்ல இல்ல இல்ல… தேவையில்ல சேர். நான் ட்ரெயின்லயே போறன்.” அவனைக் கடந்து செல்ல முயன்றாள்.

“துர்க்கா, உள்ள வா, என்னோட போகலாம்.” பலகால நட்பின் உரிமையோடு சொல்லிவிட்டு உணவகத்தினுள் நுழைந்தவனைச் செய்வதறியாது பார்த்து நின்றாள், அவள். 

அந்தக் குரலை மீறிச் செல்ல எவ்வளவு நேரமாகும்? ஆனால், அதைச் செய்ய மனம் துணியேன் என்றது. பெரும் தர்மசங்கடமான நிலைக்குள் தள்ளப்பட்டாள்.  அவள் பின்னால் வருகிறாளா என்று பாராதே உள்ளே சென்று மறைந்தவனைப் பார்த்திருந்தவள், பின்னால் வருவேன் என்று அவ்வளவு நிச்சயமா என்று மனத்துள் சிலுப்பிக்கொண்டாலும் அவன் முகம் முறித்துச் செல்லவும் ஒரு மாதிரியாக இருந்தது.

செஃப் ஆரோன் நினைவில் வந்தார். ‘அந்த மனிதருக்குக்  கொடுக்கும் மரியாதை இது.’ மனத்துள் முணுமுணுத்துக்கொண்டு  மீண்டும் உணவகத்தினுள்  நுழைந்தாள்.

அங்கே ஒரு புறமாக அடைப்புக்குறியின் பாதி வடிவிலான வெண்ணிற மென்னிருக்கையும் அதே வடிவில் கண்ணாடியிலான ‘டீ போ’வும்  இரு மருங்கிலும் முட்டை வடிவில் தனி தனி மென்னிருக்கைகளும் போடப்பட்டிருந்தன. துர்கா வந்த அன்று அதில் காத்திருந்தாள், அதன்பின், இப்போது சென்று அமர்ந்தாள். 

சுற்றத்தில் கவனம் பதியாது வாட்ஸ் அப்பை திறந்து அதில் கவனம் பதித்திருந்தவள் சற்றே தூரத்திலிருந்து செவிகளில் மோதிய ஏதன் குரலில் சட்டென்று நிமிர்ந்தாள். 

அரை மணிநேரம் என்றவன் அந்தளவுக்கு அவளைக் காத்திருக்க வைக்கவில்லை. கைப்பேசியில் மணியைப் பார்த்தாள்.  பதினெட்டு   நிமிடங்கள் அவனுக்காக உட்கார்ந்து இருக்கிறாள்.

அந்த உணவகத்தின் மொத்தச்  சுமையையும் தன் ஒருவன் தோள்களில் தாங்கும் பானையில் நடந்துகொள்ளும் பீட்டரும் அவனோடு சேர்ந்து வந்தான்.

துர்க்காவைக் கண்டதும் பீட்டர் நெற்றி சுருக்கினான். அதுவும் வலு ஆறுதலாக அவள் அமர்ந்திருந்தாளே.  இடக்கை மணிக்கட்டைத் தூக்கி நேரம் பார்த்தபடி நெருங்கியவன், “உன்ர  வேலை நேரம் முடிஞ்சிட்டே துர்க்கா, இன்னும் இஞ்ச இருந்து என்ன செய்யிற?” என்றவன் குரலில் அதட்டல் ஒட்டியிருந்தது.

அவளைப்  பார்த்துக்கொண்டு வந்த ஏதன் பார்வை சரேலென்று பீட்டர் மீது படிந்தது. நெற்றி சுருங்கியிருக்க விழிகள் கூட இடுங்கிவிட்டு இயல்பாகின.

error: Alert: Content selection is disabled!!