கடன் அன்பை முறிக்கும் 54 – 1

அத்தியாயம் 54

 

 

தன் வாழ்வில் இப்படியான கரிய நாள்களும் வரும் என்று கருணாகரன் என்றுமே யோசித்துப் பார்த்ததில்லை.

அதுவும் தனக்குத் தோள் கொடுப்பான் என்று நம்பிய மகனே இதையெல்லாம் செய்வான் என்பது அவர் கொஞ்சமும் எதிர்பாராதது.

 

கோபத்தோடு சேர்த்து வலித்தது. ஏமாற்றம், அது பெரிதாக அவரைத் தாக்கிற்று. இத்தனை நாள் காத்துவந்த மானம், மரியாதை, கௌரவம் எல்லாம் போயிற்றே!

 

எது நடந்துவிடவே கூடாது என்று சத்தமே இல்லாமல் அத்தனையையும் செய்தாரோ அதையே ஊரையே பார்க்க வைத்து, அவரின் கண் முன்னாலேயே நடத்திக் காட்டிவிட்டானே!

 

நினைக்க நினைக்க நெஞ்சம் ஆறவே இல்லை. ஏற்கவும் முடியவில்லை. அதுவும் இனி என்ன செய்தாலும் நடந்ததை மாற்ற முடியாது என்கிற அந்த நிலை, அவர் குரல் வளையைப் போட்டு நசுக்கியது.

 

இனியும் என்ன செய்ய முடியும்? அப்படியே செய்தாலும் நிச்சயம் மகனிடம் மாட்டிக்கொள்வார்.

 

விடிந்தும் அவர் அறையை விட்டு வெளியில் வரவில்லை. தூயவன் யாழிசையோடு புறப்பட்டு வந்தது, உணவை முடித்தது, புறப்பட்டுப் போனது எல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. அவர்களின் பின்னால் குரு குடும்பமாகப் புறப்பட்டதும்.

 

அத்தனை பேர் மேலும் கோபம் வந்தது. இத்தனை காலமும் பயந்தவர்கள் போல் அவருக்கு அடங்கி இருந்துவிட்டு, மொத்தமாகக் கட்சி மாறிவிட்டார்களே.

 

அவர் மனைவியும் தேநீர் கொண்டு வந்து தருவது, வேளா வேளைக்கு உணவு தருவது என்று தன் கடமையைத் தவறாமல் செய்தார். மற்றும்படி முகம் பார்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. மகன் இருக்கிற தைரியம். இல்லாமல், மேலே இருக்கிறான், என்னவானாலும் அவனிடம் போய்க் கேள் என்று சொல்வாரா?

 

வீட்டுக்குள் இப்படி அடைந்து கிடப்பதும் மூச்சு முட்டியது. சண்முகம் வேலையாக அழைத்தார். வேறு வழியில்லாமல் போய் அந்த வேலையை முடித்துக்கொண்டு வந்தார். தூயவன் இன்னும் வந்திருக்கவில்லை என்று ஒற்றைப் பார்வையிலேயே கண்டுகொண்டார்.

 

“சாப்பிடுறீங்களா?” இவ்வளவு காலமும் ‘சாப்பிட வாங்க’ என்று உரிமையாக அழைத்த மனைவி, இப்போது பெயருக்குச் சாப்பிட வருகிறாயா என்று கேட்கிறாள். கடமையைச் செய்கிறாளாம். அவரைப் பார்வையாலேயே பொசுக்கிவிட்டு அறைக்குள் நுழைந்து, குளித்து, உடையை மாற்றிக்கொண்டு வந்து அமர்ந்தார்.

 

காலம் காலமாகக் கணவரைக் கவனித்தே பழக்கப்பட்ட தேவகியும் பக்கத்திலேயே நின்று உணவைப் போட்டுக் கொடுத்தார்.

 

உண்டுவிட்டுத் திரும்பவும் உள்ளே சென்று கட்டிலில் படுத்துக்கொண்டார் கருணாகரன். என்ன செய்தும் மனம் ஆறுவதாக இல்லை. நேசன் குடும்பத்தைக் கூண்டோடு அழித்தால் என்ன என்கிற அளவுக்கு வெறி வந்தது.

 

ஆனால், எதையும் செய்யப் பயந்தார். இதுவரை செய்தவற்றுக்கு மகன் என்ன வினையாற்றப் போகிறான் என்று தெரியாமல், அடுத்த அடியை எடுத்து வைக்க மிகவுமே யோசித்தார்.

 

அப்போதுதான் முகம் முழுவதும் கசப்பையும் வெறுப்பையும் தேக்கியபடி வெடுக்கென்று கதவைத் திறந்துகொண்டு வந்தார் தேவகி.

 

தன் சிந்தனைக்கு நடந்த இடையூறு பிடிக்காமல் புருவங்களைச் சுளித்துப் பார்த்தார் கருணாகரன்.

 

அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை தேவகி. அவர் நெஞ்செல்லாம் கற்பூரத்தை விழுங்கியது போல் எரிந்துகொண்டிருந்தது. “உங்கட கூட்டாளிகள் வந்திருக்கினம். உங்களப் பாக்கோணுமாம்!” என்றார் வெறுப்போடு.

 

அவரின் கூட்டாளிகளா? அது யார்? புருவங்களைச் சுருக்கினார் கருணாகரன்.

 

“வேற ஆரு? அகிலனும் விமலும்தான். அவேதானே இப்ப உங்கட கூட்டாளிகள். போங்கோ, போய் இன்னும் ஆரக் கடத்தலாம், வேற என்ன செய்யலாம் எண்டு பாருங்கோ. முடிஞ்சா எங்கட பிள்ளையின்ர வாழ்க்கையை நாசமாக்கினானே அருள், அவனையும் வெளில எடுத்து உதவிக்கு வச்சுக்கொள்ளுங்கோ!” என்றுவிட்டு வந்ததுபோலவே அவர் விருட்டென்று வெளியேறிவிடவும் கருணாகரன் முகத்தில் திகைப்பு. படக்கென்று எழுந்து அமர்ந்தார்.

 

எந்தக் காரணத்தைக் கொண்டும் தன்னைத் தேடி வரக் கூடாது என்று எச்சரித்ததையும் மீறி வந்திருக்கிறார்கள். இல்லை, வர வைத்திருக்கிறான். சட்டென்று எல்லாம் பிடிபட்டுவிட, கழற்றிப் போட்டிருந்த சேர்ட்டை எடுத்து அணிந்துகொண்டு விறாந்தைக்கு வந்தவர், திரும்பவும் திகைத்து நின்றுவிட்டார்.

 

அந்தளவில் அகிலன் கை கால் இரண்டிலும் கட்டுடன் இருக்க, விமல் நிலையும் மகா மோசமாகத்தான் இருந்தது. இருவர் முகத்தையும் பார்க்க முடியவில்லை. கன்றி, கறுத்து, நீலம் பாய்ந்து என்று அவர்களைப் பார்க்கவே அவருக்குள் குளிர் பிறந்தது.

 

ஆனால், இருத்திவைத்துப் பேசும் நேரம் இதுவன்று! “உங்களை ஆரு இஞ்ச எல்லாம் வரச் சொன்னது? வெளில போங்கோ!” என்று விரட்டினார்.

 

எப்படியாயினும் தூயவன் வர முதல் அவர்களை அப்புறப்படுத்த நினைத்தார். ஆனால், அவரை நிற்க வைத்துக் கேள்வி கேட்க என்றே வந்த சுவர்ணா விடுவாளா?

 

“நாங்க ஏன் வெளில போகோணும் பெரியப்பா? ஊருக்கே பெரிய மனுசன் வேசம் போட்டுக்கொண்டு பாத்தது முழுக்கக் கேவலமான வேலை. அம்மா பெத்த பிள்ளைகள் எங்களுக்குத் தெரியாம அம்மாட்ட சொத்தை வாங்கி இருக்கிறீங்க, அதே மாதிரி பஸ் வாங்கித் தாறன் எண்டு என்னட்ட சொத்தை வாங்கி இருக்கிறீங்க. இது எதையும் சொல்லாம பஸ் வாங்கி தாறன் எண்டு சொல்லி இவரை யாழிசையக் கடத்தச் சொல்லி இருக்கிறீங்க என்ன? என்ன மனுசன் நீங்க?” என்று சீறினாள்.

 

“ஏய் என்ன கதைக்கிற? சொந்தப் பிள்ளை மாதிரி உன்ன…” என்றவரின் பேச்சு சட்டென்று நின்று போனது. காரணம் யாழிசையோடு வீட்டுக்குள் வந்துகொண்டிருந்தான் தூயவன்.

 

பேச்சு நிற்க மகனையே பார்த்தார் கருணாகரன். தான் மொத்தமாக மாட்டிக்கொண்டது புரிந்துபோனது. அதைவிட தன்னை மொத்தமாக அவன் சுற்றிவளைத்துவிட்டான் என்பது சந்தேகத்துக்கே இடம் இல்லாமல் தெளிவாயிற்று.

 

அங்கிருந்த எல்லோர் பார்வையும் அவனில். அத்தனை பேர் விழிகளிலும் பெரும் அச்சம். அவனோ மிகச் சாதாரணமாகத்தான் இருந்தான்.

 

“நீ மேல போ.” என்று முதல் வேலையாக யாழிசையை அங்கிருந்து அகற்ற முயன்றான்.

 

ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று தெரிந்துவிட்டதில் கலக்கத்துடன் கணவன் முகம் பார்த்தாள் யாழிசை.

 

“போ!” திரும்பவும் சொன்னான். சத்தம் பெரிதாக வெளியே வராதபோதும் அந்த ஒற்றை வார்த்தைக்கு அவன் கொடுத்த அழுத்தம் அவளை மேலே போக வைத்தது.

 

அவள் தன் அறைக்குள் சென்று மறையும் வரையில் நின்று பார்த்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்துகொண்டான்.

 

அகிலன் விமலன் இருவருக்கும் உடல் மொத்தமும் வெளிப்படையாக நடுங்கிற்று.

 

அன்று அவனிடம் மாட்டிக்கொண்ட நிமிடத்திலிருந்து அவர்களின் மொத்த நிம்மதியும் பறிபோயிருந்தது. இத்தனை நாள்களும் அவன் தம்மை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டான் என்று நிம்மதியாக இருக்க முடியவில்லை. பின் பக்கத்தால் யாராவது தோளில் தொட்டாலே பதறித் திரும்பும் நிலையில் வைத்திருந்தான். எந்த நிமிடத்தில் எதைச் செய்வானோ என்று பயந்து செத்துக்கொண்டிருந்தார்கள்.

 

அப்படி இருக்கையில்தான் நேற்று இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்த அகிலனை யார் என்றே தெரியாத மாஸ்க் அணிந்த கரடு முரடான மனிதர்கள் போட்டு அடித்து முறித்திருந்தார்கள். ஒரு வார்த்தை பேசவில்லை. ஏன் என்று காரணம் சொல்லவில்லை. அவன் வாயைத் துணியால் கட்டி, சத்தம் போட விடாமல் செய்துவிட்டு, கச்சிதமாகக் காரியத்தை முடித்துவிட்டு, அவனை நடு வீதியிலே போட்டுவிட்டுப் போயிருந்தார்கள்.

 

கையின் மூட்டுப் பிசகி, காலிலும் காயம். எழுந்துகொள்ளவே முடியாமல் கிடந்தவன் அந்த வழியால் வந்த ஆட்டோவில் வைத்தியசாலை சென்று, மருத்துவம் பார்த்து, அதன் பிறகே சுவர்ணாவுக்கு அழைத்துச் சொன்னான்.

 

பதறியடித்து ஓடி வந்த சுவர்ணா, கணவனின் நிலையைக் கண்டு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு நின்றுவிட்டாள். இனியும் தன்னால் மறைக்க முடியாது என்று தெரிந்து நடந்ததைச் சொன்னான் அகிலன்.

 

சுவர்ணாவினால் நம்பவே முடியவில்லை. யாழிசையைத் தூக்கியது தன் கணவனா? இத்தனைக்கும் காரணம் கருணாகரன் என்று தெரிந்ததும் தன்னிடம் சொத்து வாங்கியதை அவளும் சொன்னாள்.

 

கொதித்துப் போனான் அகிலன். விமலை அருளின் தம்பி என்கிற அளவில் தெரியும். பெரிதாகப் பழக்கமில்லை. நீ யாழிசையைத் தூக்கி அவனிடம் கொடுத்தால் போதும், மிகுதி வேலையை அவன் பார்ப்பான், உனக்கு மினி பஸ் வாங்கித் தருகிறேன் என்று கருணாகரன் சொன்னதைக் கேட்டு அத்தனையையும் அவன் செய்ய, இந்தப் பக்கம் மனைவியிடம் சொத்தை வாங்கியிருக்கிறார்.

 

அவன் காரியத்தை முடித்தாலும் அவருக்கு நட்டமில்லை. முடிக்காமல் விட்டாலும் நட்டமில்லை. கடைசியில் ‘ஏன் என்னிடம் மறைத்தாய்’ என்று வைத்தியசாலையில் வைத்தே கணவன் மனைவிக்குள் பெரும் சண்டை. தாதிப்பெண் வந்து அதட்டிய பிறகே அடங்கினர்.

 

கொஞ்சம் கொஞ்சமாகக் கோபம் அடங்கி, நிதானம் வர வரச் சினம் பெருகியது சுவர்ணாவுக்கு. “அவரின்ர அப்பா பாத்த வேலைக்கு அண்ணா உங்களுக்கு அடிப்பாரா?” என்று கொதித்தாள்.

 

“இதுக்கெல்லாம் காரணம் தூயவன் எண்டு தெரிஞ்சாலும் சொல்ல எங்களிட்ட ஆதாரம் இல்ல சுவர்ணா.” என்று சொல்லும்போதே, யாழிசையே உண்மையைச் சொன்னால் கூட அவள் பொய் சொல்கிறாள் என்று கதையை மாற்றத் தான் எண்ணியிருந்தது நினைவுக்கு வந்துபோனது.

 

தனக்கே இந்த நிலை என்றால் விமலுக்கு என்னவானது என்று அறிய நினைத்து விமலுக்கு அழைத்து விசாரித்தான். இவனைப் பார்க்க வந்த அவன் நிலை, இவனை விட மோசமாக இருந்தது. அவனுக்கு இவனுக்கு முதல் நாள் அடி விழுந்திருந்தது.

 

error: Alert: Content selection is disabled!!