கடன் அன்பை முறிக்கும் 54 – 2

அதைக் கேட்டு அகிலன் கொஞ்சம் மிரண்டுதான் போனான். அவனுக்குத் தெரிந்து கடந்த வாரம் முழுவதும் கருணாகரனின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதில் ஓடிக்கொண்டிருந்தான் தூயவன்.

 

இதில், அத்தனை பேரின் கண்களையும் சுற்றிவிட்டு, யாருக்கும் தெரியாமல் திருமண ஏற்பாட்டையும் செய்திருக்கிறான். அது போதாது என்று இன்னொரு பக்கம் இவர்களையும் திட்டம் போட்டு அடித்திருக்கிறான் என்றால், அவன் திட்டமிடலும் காரியம் சாதிக்கும் திறனும் எத்தனை ஆழமானதாக இருக்க வேண்டும். எவ்வளவு பெரிய மூளைக்காரன் அவன்? எவ்வளவு பொல்லாதவனாக இருப்பான்? நினைக்கவே அவன் நெஞ்சு நடுங்கிற்று.

 

“இனி என்ன செய்றது?” விமலிடம் கேட்டான்.

 

“நேராப் போய்க் கதைக்கிறதுதான் சரி.”

 

“கதைச்சா மட்டும்?” நம்பிக்கை இல்லாமல் கேட்டான் அகிலன்.

 

“சொல்லாதவரைக்கும் தூயவன் அண்ணா எங்களை விடமாட்டார்.” தூயவனைப் பற்றிச் சொந்த அனுபவத்தில் அறிந்திருந்த விமல் உறுதியாகச் சொன்னான்.

 

அகிலன் பயத்துடன் பார்த்தான்.

 

“உங்களுக்கு அவரைச் சொந்தக்காரனாத்தானே தெரியும். எதிராளியாப் பாக்கேல்லையே. நான் பாத்திருக்கிறன். அது அவரின்ர பொல்லாத முகம். எங்கட வாயில இருந்து உண்மைய வரவழைக்கிற வரைக்கும் விடமாட்டார். என்னால இனியும் அடி வாங்கேலாது. நான் போகப்போறன்.” என்றதும் எல்லோருமாகப் புறப்பட்டு வந்திருந்தார்கள்.

 

ஆனால் இப்போது தூயவனைக் கண்டதும் பயத்தில் எச்சில் விழுங்கினார்கள்.

 

அவர்களாக எதையும் சொல்வதாக இல்லை என்றதும், “என்ன சுவர்ணா?” என்றான் தூயவன் தானே.

 

“நீங்க இப்பிடிச் செய்திருக்கக் கூடாது அண்ணா. அவர் செய்தது பிழைதான். அதுக்காக இவருக்கு ஒண்டு நடந்திருந்தா?” கோபமும் குமுறலுமாக வினவினாள் அவள்.

 

“நான் என்ன செய்தனான்?”

 

“ஒண்டுமே தெரியாத ஆள் மாதிரிக் கதைக்காதீங்க அண்ணா. இசையைக் கடத்தினத்துக்காக இவே ரெண்டு பேரையும் இப்பிடி அடிச்சுப் போட்டது நீங்கதான். எனக்குத் தெரியும்.”

 

“சரி, அதப் பிறகு பாப்பம். இவே ஏன் இசையைக் கடத்தினவே அதக் கேக்கேல்லையா நீ? இல்ல, ஒரு பொம்பிளைப் பிள்ளைக்குச் செய்ற வேலையா இது? உனக்கும் ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்கிறா எல்லா?” என்றதும் கணவன் மனைவி இருவர் முகமும் கன்றிப் போயிற்று.

 

ஆனாலும் கணவனைக் காப்பாற்ற வேண்டுமே.

 

“பெரியப்பாதான் சொல்லி இருக்கிறார்.”

 

“சுவர்ணா!” என்று அதட்டினார் கருணாகரன். “என்ன விசர்க் கதை கதைக்கிறாய்? ஆளாளுக்கு என்னைப் பாத்தா எப்பிடி இருக்கு? எனக்கு முன்னால நிண்டு கதைக்கிறதுக்கே ஒரு தகுதி வேணும். இதுல நீங்க பாத்த கேவலமான வேலைக்கு என்னை இழுப்பீங்களா?” என்றதும் அகிலனும் விமலும் திகைத்துப் போயினர்.

 

அதுவும் விமல் கொதித்துவிட்டான்.

 

“சீ! நீயெல்லாம் ஒரு மானுசனா? சும்மா இருந்தவனைக் கூப்பிட்டு அண்ணாவை வெளில எடுத்து விடுறன், அவளை நீயே கலியாணமும் கட்டலாம் எண்டு சொன்னது நீ! அப்பவும் ஏலாது எண்டு சொன்னவனை விடாம, உன்ர அண்ணான்ர வாழ்க்கை ஜெயிலுக்கையே போகும், நீயும் இப்பிடியே கலியாணம் கட்டாம மொட்டையா இருக்கப் போறியா எண்டு கதைச்சு கதைச்சு மனதை மாத்திச் செய்ய வச்சது நீ. இப்ப என்ன, உன்ர மகனுக்கு முன்னால நல்லவன் மாதிரி நடிக்கப் பாக்கிறியா?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே பளார் என்று அவன் கன்னத்தில் ஒன்று போட்டான் தூயவன்.

 

“மரியாதை மரியாதை முக்கியம்.”

 

“என்ன மரியாதை? எங்கட வாழ்க்கையே நாசம் செய்துபோட்டு இல்லை எண்டுவார், கேட்டுக்கொண்டு நிக்கோணுமா?”

 

“அதானே? எங்களுக்கு அடிக்கிறீங்க. இதுக்கெல்லாம் காரணம் உங்கட அப்பா. என்னை ஏமாத்தி, என்ர மனுசிய ஏமாத்தி, மாமிய ஏமாத்தி எண்டு வெக்கமா இல்லையா? இந்த வயதிலையும் கேவலமான வேல பாத்தது அவர். உங்கட மனுசிய தூக்கச் சொன்னது அவர். அவருக்கு என்ன தண்டனை குடுக்கப் போறீங்க?” அகிலனுக்கு வாங்கிய அடிகள் வலியையும் வன்மத்தையும் கொடுத்தது என்றால் இத்தனைக்கும் காரணமாக இருந்துவிட்டு இல்லை என்று மறுத்த மனிதரின் பச்சைப் பொய்யில் உள்ளம் கொதித்தது.

 

தூயவனின் முகம் இறுகிப்போனது. திரும்பித் தந்தையைப் பார்த்தான். “அவே கேக்கிற கேள்விகளுக்குப் பதிலச் சொல்லுங்க.”

 

“என்ன தம்பி? அப்பாவையே கேள்வி கேப்பியா நீ? கண்டவனும் வந்து என்ன என்னவோ எல்லாம் சொல்லுவான். அதுக்கெல்லாம் நான் பதில் சொல்லோணுமா? சுவர்ணாட்ட சொத்தை வாங்கினது பஸ் வாங்கிறதுக்காக. மாதவி… அவவாத்தான் தந்தவா. மற்றும்படி இவங்கள் ரெண்டு பேரும் சொல்லுற கதைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை…” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே சண்முகம் விழுந்தடித்துக்கொண்டு ஓடி வந்தார்.

 

“கருணாகரா!” என்றுகொண்டு வந்தவர் அங்கே நின்றிருந்தவர்களையும், அவர்கள் இருந்த நிலையையும் கண்டு சட்டென்று நின்றார்.

 

அங்கே தூயவனும் இருக்க அவரால் அவரைச் சமாளிக்கவே முடியவில்லை.

 

“என்ன மனுசனடா நீ? என்ர மகன் உனக்குத் தம்பி எல்லா. அவனைப் போய் போலீசில பிடிச்சுக் குடுத்திருக்கிறியே!” என்று சீறிக்கொண்டு வந்தார்.

 

“என்ன அண்ணா?” இது என்ன அடுத்த பிரச்சனை என்கிற பதற்றத்துடன் வினவினார் கருணாகரன்.

 

“என்னத்த சொல்லச் சொல்லுறாய்? ஆரின்றயோ பைக்கை களவெடுத்து ஒளிச்சு வச்சவனாம் எண்டு போலீஸ் வந்து பிடிச்சுக்கொண்டு போகுது கருணா. யூ டியூப் காரர் எல்லாம் வந்து வீடியோ எடுத்திட்டாங்கள். அவனுக்குக் கலியாணம் பேசி இருக்கடா. இந்த விசயம் பொம்பிளை வீட்டுக்குத் தெரிஞ்சா என்னாகும் சொல்லு? ஏதாவது செய் கருணா.” கருணாகரனின் செல்வாக்கைப் பயன்படுத்தி மகனை வெளியில் எடுக்க நினைத்தார் சண்முகம்.

 

“இதே வேலையைத்தானே இசைக்குச் செய்தனீங்க. அப்ப எங்க போனது இந்த அறிவு?” என்று கேட்டான் தூயவன்.

 

“தூயவா, தேவை இல்லாம கதைக்காத! கருணா முதல் அவனை வெளில எடுக்க ஏதாவது செய்!” சண்முகத்துக்கு எதையும் கதைத்துக்கொண்டிருக்க நேரமில்லை. எப்படியாவது மகனை வெளியில் எடுத்துவிட துடித்தார்.

 

“அவர் இல்ல ஆர் சொன்னாலும் எதுவும் மாறாது பெரியப்பா. இசையைக் கடத்தச் சொன்னது ஆரு எண்டு தெரியிற வரைக்கும் விடமாட்டன். இண்டைக்கு கடைசி மகன். இனி உங்கட வீட்டில இருக்கிற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்டு நடக்கும்.” என்றதும் அரண்டு போனார் சண்முகம்.

 

“என்ன கருணா இதெல்லாம்? உனக்காகத்தான் எல்லாம் செய்தனான். இதுக்கு நீதான் பொறுப்பு. அவனை விடச் சொல்லு!”

 

“அண்ணா, அமைதியா இருங்க. என்ன எண்டு பாக்கலாம்…” என்ற கருணாகரனின் பேச்சை வெட்டிக்கொண்டு வந்தது தூயவனின் குரல்.

 

“எதுவும் பாக்கேலாது. பாக்க விடவும் மாட்டன். அப்பிடியே அவன் வெளில வந்தா அவனுக்குப் பதிலா அவரின்ர வீட்டில இருந்து இன்னொருத்தன் போவான்.” என்றதும் கொதித்துப் போனார் கருணாகரன்.

 

அவன் பேச்சு அவரின் நான் என்கிற அகங்காரத்தை நன்றாகச் சீண்டி விட்டிருந்தது.

 

“அந்தளவுக்கு நீ என்ன பெரிய இவனா? நான் பாத காட்டி வளந்த நீ, எனக்கே பாடம் படிப்பிப்பியா? இப்ப… இந்த நிமிசம் அவனை வெளில எடுத்துக் காட்டவா? சொல்லு, எடுத்துக் காட்டவா?” அவனிடமே சவால் விட்டார்.

 

“அவரால ஒண்டும் கிழிக்கேலாது பெரியப்பா. கிழிக்க விடவும் மாட்டன். இனி அவர் பல்லுப் பிடுங்கின பாம்புதான்.” அப்போதும் கருணாகரனிடம் பேசாமல் சண்முகத்தை எச்சரித்தான் தூயவன்.

 

இத்தனை நாள் அழுத்தத்தோடு அவனுடைய அந்தத் தொடர் அவமதிப்பும் சேர தன்னிலை இழந்துபோனார் கருணாகரன். “ஆரடா பல்லுப் பிடுங்கின பாம்பு? நானா? நானா? நான் நினச்சா என்ன எல்லாம் செய்வன் தெரியுமா உனக்கு?” என்று உறுமிக்கொண்டு வந்தார் அவர்.

 

“உங்கட மூத்த மருமகனைத் தூக்கவா பெரியப்பா?”

 

“டேய்! என்னைப் பாத்து கதையடா!”

 

“சொல்லுங்க பெரியப்பா. தூக்கவா? குரு அங்க அதுக்கு ரெடியாத்தான் நிக்கிறான். தூக்…கவா?” உறுமினான்.

 

“எவ்வளவு திமிர் உனக்கு. பெத்த அப்பன் முகம் பாத்துக் கதைக்கேலாது. அந்தளவுக்குக் கேடுகெட்டுப் போனேனா நான்? உன்னை எல்லாம்…” தன்னை மறந்து அவர் கையை ஓங்கிக்கொண்டு வரவும், அவ்வளவு நேரமாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடுங்கிக்கொண்டு நின்ற தேவகி, ஓடி வந்து அப்பா மகன் நடுவில் புகுந்து, கணவரை பிடித்துத் தள்ளிவிட்டார்.

 

“ஆத்திரத்தில அறிவிழந்து என்ன செய்றீங்க? அந்தளவுக்கு ஆணவ வெறி பிடிச்சுப்போய் நிக்கிறீங்களா? சீ! இப்பிடி ஒரு கேவலமான ஒருத்தனோடயா இத்தின காலமும் வாழ்ந்தன் எண்டு இருக்கு. உண்மையச் சொல்லத் தைரியம் இல்ல. இதுல கைய ஓங்குவீங்களா? திருப்பி அவன் ஓங்கினா என்ன செய்வீங்க?”

 

“ஓங்குவானா? எங்க ஓங்கச் சொல்லு பாப்பம். அவ்வளவு பெரிய ஆம்பிளையா அவன்? இப்ப சொல்லுறன். எல்லாத்தையும் செய்தது நான்தான். இல்லாம, உன்ர மகன் வெக்கமே இல்லாம கண்ட சாதிக்காரிக்குப் பின்னால திரிவான். பாத்துக்கொண்டு நிக்கச் சொல்லுறியா?” என்று கேட்டு முடிக்க முதலே அங்கிருந்த பெரிய எல்ஈடி டிவி நிலத்தில் விழுந்து சிதறியிருந்தது.

 

 

error: Alert: Content selection is disabled!!