அத்தியாயம் 30
காலத்தின் வேகத்தில் எந்தப் பாகுபாடுமில்லை. அது யாருக்காகவும் காத்திருக்கவும் இல்லை, எதற்காகவும் தன் வேகத்தை நிறுத்தவும் இல்லை. யாமினி எப்படியோ வவுனியாவில் தன் இருப்பைப் பழக்கப்படுத்திக்கொண்டாள்.
ஆனால் என்ன, அலுவலகத்திலோ, தான் வசிக்கும் இடத்திலோ யாரோடும் அவளால் ஆத்மார்த்தமாகப் பழக முடியவில்லை. மனம் விட்டுச் சிரிக்க, கவலைகள் அற்றுப் பேச முடியவில்லை. நெஞ்சோரமாய் ஒரு கல்லை யாரோ நிரந்தரமாக வைத்துவிட்டது போலவே ஒரு பாரம்.
நாளாக நாளாக அஜந்தா வீட்டுக்கு அடிக்கடி போவதைக் கூட நிறுத்திக்கொண்டாள். என்னவோ இந்த உலகத்தைத் தனியாகவே எதிர்கொள்ளப் பழக வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்திருந்தது. அதற்கு அவள் தன்னைத் தயார் படுத்தும் அந்த முயற்சியே ஒருவித வெறுமையை அவளுள் பரப்ப ஆரம்பித்தது.
ஏன் வாழ்கிறோம், எதிர்காலத் திட்டம் என்ன, அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று எதைப் பற்றியும் யோசிக்க முடியவில்லை. அப்படியே யோசித்தாலும் நிரோஜனோடு சேர்ந்து போட்ட திட்டங்களும், கண்ட கனவுகளும், எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த அழகிய வாழ்க்கையும் கண் முன்னே வந்து நின்று கண்ணீரைச் சொரிய வைத்தன.
இப்படி இருக்கையில்தான் மாதங்கிக்குப் பெண் குழந்தை பிறந்தாள். ஆதிரை என்று பெயர் சூட்டினார்கள். அப்படி அவளின் துடக்குக் கழிவுக்கான ஏற்பாடுகள் நடக்க ஆரம்பித்ததும் பெயர் சூட்டு விழாவின்போது, சித்தியாக அவள் நகை போட வேண்டும் என்று, அதுவும் குறைந்தது ஒரு செயின், ஒரு சோடிக் காப்பு என்று நாகேஸ்வரி சொன்னபோது அதிர்ந்துபோனாள்.
நகை விற்கும் விலைக்கு இதெல்லாம் அவளால் முடியுமா என்ன? இத்தனை மாதத்தில் இருந்த சேமிப்பை வைத்துத்தான் கொழும்பில் அடகு வைத்த நகைகளை மீட்டுக்கொண்டு வந்தாள். இப்போது இப்படிச் சொன்னால்?
இங்கே வவுனியாவில் வீட்டு வாடகை, அதற்கான முன் பணம் என்று அது ஒரு தொகை போயிருந்தது. ஆனந்தன் அவற்றைத் தர முன்வந்தான்தான். அப்படி அவனிடம் வாங்க அவளுக்கே விருப்பமில்லை என்பது ஒரு காரணமென்றால், மாதங்கி சும்மா விடுவாளா என்கிற பயம் அடுத்தது.
அது எதுவும் அவள் அன்னைக்குப் புரிவதாக இல்லை.
“கவிரனுக்கு அப்பா செய்த மாதிரி ஆதிக்குட்டிக்கும் செய்யோணும்தானேம்மா. பிறகு அத்தான் வீட்டு ஆக்கள் என்ன நினைப்பினம் சொல்லு?”
அவளுக்கு என்னவோ மாதங்கியின் வார்த்தைகளை அன்னையின் குரலில் கேட்பது போலவே இருந்தது
“அப்பா செய்றது வேற அம்மா. அதையே ஏன் நான் செய்யோணும்?”
“என்னம்மா இப்பிடிக் கதைக்கிறாய்? அப்பா இல்லை எண்டு அப்பிடியே விடேலுமா சொல்லு?” என்று திருப்பிக் கேட்டார் அவர்.
அவரின் நியாயம் அவளுக்குப் புரியவில்லை.
“அவ்வளவு காசு என்னட்ட இல்லை அம்மா.”
“என்ன பிள்ளை கதைக்கிறாய்? உழைக்கிற காச என்ன செய்றாய்? இஞ்சயும் உனக்குக் கொழும்பில கிடச்சளவு சம்பளம் வருது எண்டு சொன்னியே.”
வீட்டுச் செலவுக்கு என்று ஒரு தொகை, அவரின் கைச் செலவு, மருத்துவச் செலவுகள், வவுனியாவில் அவளின் வாடகை, உணவு, அவளுக்கான செலவுகள் என்று எத்தனை இருக்கிறது.
அப்படியிருக்க இப்படிக் கேட்டால்? தவிர்க்கவே முடியாமல் நிரோஜனின் வார்த்தைகள் நெஞ்சில் முட்டிமோதிவிட நிலைகுலைந்துபோனாள் யாமினி.
கடைசியில் அவள் பாவிக்காமல் வைத்திருந்த பழைய நகை, இருந்த பணம் எல்லாவற்றையும் போட்டு, அவர்கள் சொன்ன அளவில் இல்லாதபோதும் மெல்லிய செயின், ஒற்றைக் காப்பு என்று வாங்கிப் போட்டாள்.
ஆனந்தன் ஏன் என்று கடிந்துகொண்டான் என்றால் மாதங்கி முகம் திருப்பினாள். அவளுக்கு அவை போதவில்லை. யாமினிக்கு மனம் குமுறிற்று. வாயை விட்டுவிடுவோமோ என்று பயந்து அன்றே வவுனியாவுக்குப் புறப்பட்டுவிட்டாள்.
நிரோஜன் சொன்னது போன்று ஆனந்தனின் முன்னே இதையெல்லாம் உடைத்துப் பேச வேண்டுமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் பிறகு? அங்கே அவளால் போக முடியுமா? அதன் பிறகு அன்னையும் தமக்கையும் என்ன முகம் காட்டுவார்கள் என்று தெரியாது. தப்பித்தவறி தமக்கை குடும்பத்திற்குள் அதனால் ஒரு பிரச்சனை வந்து, பிளவு என்கிற அளவுக்குப் போய்விட்டாள்?
அவள் ஒருத்தி உயிராக நேசித்தவனைப் பிரிந்து வந்து படுகிற பாடுகள் போதாதா என்ன?
இந்தப் பக்கம் காவியாவின் திருமணம் நெருங்கிக்கொண்டிருந்தது. அவளும் அன்னையும் யாமினியுடன் இன்னுமே தொடர்பில் இருக்கிறார்கள் என்று அவர்கள் பேச்சிலிருந்து புரிந்துகொண்டான் நிரோஜன்.
என்ன பேசிக்கொண்டார்கள், எப்படி இருக்கிறாள், இப்போது என்ன செய்கிறாள் என்று அறிந்துகொள்ள நினைப்பான். கேட்கத் தைரியமில்லை.
அதைவிட மூச்சு முட்டுகிறது, இதற்குமேல் என்னால் முடியாது, எனக்கு எனக்கான வெளி வேண்டுமென்று கேட்டுப் பிரிவைச் சொன்னவன் அவன். ஆனால் இப்போது, எந்த வாழ்க்கையை எந்தத் தளைகளும் இல்லாமல் வாழ ஆசைப்பட்டானோ அந்த வாழ்க்கை ரசிக்கவில்லை.
இந்த இடைப்பட்ட நாள்களில் பல பார்ட்டிகள், டூர்கள், கொண்டாட்டங்கள் என்று போய்வந்துவிட்டார்கள். அவனால் அவனை மீட்டுக்கொள்ளவே முடியவில்லை. யாரையெல்லாம் தன் உயிர் நண்பர்கள் என்று நினைத்தானோ அவர்களிடமிருந்துமே சத்தமில்லாமல் இடைவெளி பேண ஆரம்பித்திருந்தான்.
அந்தளவில் அவன் செலவழிக்கும் வரை விலையைப் பற்றி யோசிக்காமல், சந்தைக்கு எந்தப் பொருள் புதிதாய் வந்திருக்கிறதோ, அதை வாங்கி ரசித்து ருசித்தவர்கள் இன்று தமக்குக் கட்டுபடியாவதைப் பார்த்து பார்த்து வாங்கினார்கள். பட்ஜெட் போட்டுச் செலவு செய்தார்கள். அத்தனையிலும் கவனம். எதையும் அவன் வெளிக்காட்டிக்கொள்ளாதபோதும் பணத்திற்காக அவர்கள் வாக்குவாதப்படுவதைக் காண்கையில் அவள் எதற்குத் தலைப்பாடாக அடித்துக்கொண்டாள் என்று புரிந்தது.
கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்கிறான். என்ன செய்ய? சில நேரங்களில் பட்டுத்தான் தெளிய வேண்டியிருக்கிறது. அந்த விரக்தியோடு ஒன்றுமே சொல்லாமல் மொத்தமாய் அவனே பணத்தைச் செலுத்திவிட்டு வந்துவிடுவான்.
செல்லரித்த மரமாய் வெளிப்பார்வைக்கு அவன் எப்போதும்போல் தெரிந்தாலும் உள்ளே வெறும் கூடாகிக்கொண்டிருந்தான்.
உள்ளம் நிறையவும் உள்ளே நிறையவும் உயிராய் இருந்தவள் வேண்டுமே வேண்டுமென்று உள்ளுணர்வு கூக்குரலிட ஆரம்பித்திருந்தது. எதுவும் இருக்கும் வரை புரியாது என்பது உண்மைதானே.
சம்பள உயர்வு கிடைத்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு வேலை விடயமாகச் சிங்கப்பூர் சென்று வந்திருந்தான். அவள் சொன்னதுபோல் காவியாவுக்குத் தன் பங்குக்கு என்று நகைகள் வாங்கினான்.
இது எதுவுமே மகிழ்ச்சியைத் தர மறுத்தன. ஒவ்வொரு நல்லதும் நடக்கையில் முதன் முதலாக அவளிடமே சொல்ல ஆசைப்பட்டான். அப்படிச் சொல்ல வழியற்று நின்றபோதுதான் தான் எதை இழந்து நிற்கிறோம் என்றே உணர்ந்தான்.
மனம் இப்போதெல்லாம் தனிமையை மாத்திரமே விரும்பிற்று. காதோரமாக எஸ்பிபியை இசைக்க விட்டுவிட்டு, அவளோடான நினைவுகளில் மூழ்கிக் கிடப்பதில் சுகம் காண ஆரம்பித்திருந்தான்.
இது அர்த்தமற்ற ஒன்று, நீ சொன்ன பிரிவை ஏற்றுக்கொண்டு அவளும் உன்னை விட்டுப் போய்விட்டாள், வெளியே வா என்றுதான் தினமும் காலையில் அவனே அவனுக்குச் சொல்லிக்கொள்கிறான்.
ஆனால், நீரில்லாமல் மீனில்லை என்பதுபோல், அவள் நினைவுகள் இல்லாமல் அவன் இல்லை என்றாயிற்று.
கொழும்பிலேயே வேறு நிறுவனம் ஒன்றில் மகேஷிற்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்திருந்தது. அங்கேயே தங்குவதற்கும் இடம் கிடைத்துவிட்டதில் இன்னும் இரண்டு நாள்களில் மொத்தமாகப் புறப்படுகிறான் என்று, அன்றும் அவர்களின் அலுவலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதற்குள் நுழைகையிலேயே அன்று திவாகர் அஜந்தாவிற்கு பார்ட்டி ஏற்பாடு செய்ததும், பலவந்தமாக அவள் தன்னை இழுத்துப்போய் உணவு தந்ததும் நினைவில் வந்துவிட, அப்படியே அமர்ந்துவிட்டான் நிரோஜன்.
அப்படியான பொழுதுகளில் எல்லாம் அவள் தன்னை அன்னையாகப் பாவித்து அவனைச் சிறுவனாக்கி அதட்டி உருட்டுவாள். அவன் உச்சி மயிரைப் பிடித்து வைத்துக்கொண்டு அவள் கோபப்படுவதை பார்க்கையில் அந்தக் கோபத்தைக் காட்டிலும் அவள் காட்டும் பாவங்கள்தான் அவனைக் கவரும். இன்னும் ஏதாவது செய்து அவளைக் கோபப்படுத்திப் பார்க்கலாமா என்றிருக்கும்.
ஆனால் இன்று… பேசாமல் எழுந்துபோய் உணவைப் போட்டுக்கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தான்.
“டேய் என்னடா?” என்று ஓடி வந்தான் மித்ரன்.
“என்ன என்ன?”
“இப்பவே என்னத்துக்கு சாப்பிடுறாய். பார்ட்டி இருக்கு.”
“பசிக்குது மச்சான்.” என்றான் வேறு பேசாமல்
‘என்னடா இது?’ என்பதுபோல் மித்ரன் நவீனைப் பார்த்தான். அவனை விட்டுவிட்டு வா என்று சைகை செய்தான் நவீன்.
“என்னடா இது? இருந்த ஹாப்பி மூட் போயிடும் போல இருக்கு.” என்று சளித்தான் மித்ரன்.
“அவன் இப்ப எல்லாம் அப்பிடித்தானே. விடு!” என்று சமாளித்தான் நவீன்.

