மயங்கினேன் மழைச்சிலையே – 1

 

அத்தியாயம் – 1

 

பெரிய பெரிய பெட்டிகள் தாங்கிய ட்ராலிகளை பிடித்துக் கொண்டு ஆங்காங்கே சிலர் நின்றிருக்க, ஒளி வெள்ளத்தில் இருளை பகலாக்கி கொண்டிருந்த சென்னை விமான நிலைய வாசலில் நின்றிருந்தான் ரேயான்.

 

தூரத்தில் சற்று வேக நடையுடன் வந்து கொண்டிருந்தவனை நோக்கி கையசைத்து, “அன்பு!! இங்க இருக்கேன்.” தான் நிற்கும் இடத்தை தெரியப்படுத்த, அந்த அன்புவாகப்பட்டவன் விரைந்து வந்து ரேயானை அணைத்துக் கொண்டான்.

 

“லேட் ஆகிடுச்சாடா? சீக்கிரம் தான் கிளம்பினேன் திடீர்னு ட்ராஃபிக் ப்ளாக் பண்ணுனதுல, ஸ்டக் ஆகிட்டேன். ” நண்பனிடம் தாமதமாக வந்ததற்கு விளக்கம் அளித்துக் கொண்டிருந்த அன்பு சற்று படபடப்புடன் இருந்தான்.

 

“ரிலாக்ஸ்டா அன்பு! உன் பங்ச்வாலிட்டி பற்றி எனக்கு தெரியாதா? எதுக்கு டென்சன் ஆகற? ” அன்புவைப் பற்றி அறிந்த ரேயான் அவனது தோளில் தட்டி இயல்பாக்க முயன்றான்.

 

ரேயானுக்கு இருக்கும் மிக நெருங்கிய நண்பன் அன்புமதி! நல்ல நட்பு அமைவது கூட ஒரு வரம் தான். அமெரிக்க வாழ் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ரேயானுக்கு கல்லூரியில் அன்புமதியுடன் உண்டான நட்பு தான் அந்த வரம்.

 

அன்பு திருச்சியைச் சேர்ந்தவன். நடுத்தரவர்க்க குடும்பம். தந்தை சிவநாதன் பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மேனேஜராக பணிபுரிபவர், தாய் லீலாவதி இல்லத்தரசி.

 

ஒரே பையன்! செல்லம் கொடுத்தால் கெட்டுவிடுவானென்று, “எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்க மாட்டியா? இதெல்லாம் ஏன் இவ்வளவு அழுக்கா இருக்கு? நீ மட்டும் தானே இந்த ரூம்ல இருக்க, அதைக்கூட சுத்தமா வச்சுக்க தெரியாதா?”

 

“எல்லாம் உங்கம்மா கொடுக்கற செல்லம், நீ இப்படி சுத்துற!” தந்தை சிவநாதனின் வாயிலிருந்து கடுமையுடன் வரும் கட்டளை போன்ற அதீத கட்டுப்பாட்டில் வளர்ந்த அன்பிற்கு அந்த கட்டுப்பாடுகளே இயல்பாக மாறிப் போனது.

 

வெளியே சென்றாலும் சரி, வீட்டில் என்றாலும் சரி அவன் இருக்குமிடம் வெகு சுத்தமாக சரியாக இருக்க வேண்டும். OCD! இதனால் இவனாகவே யாரிடமும் அத்தனை சுலபத்தில் ஒட்ட மாட்டான்.

 

ஆனால் இவனது இந்த குணம் ரேயானை என்றும் பாதித்ததில்லை.

திருச்சி ஐஐடியில் இன்ஜினியரிங் முடித்து சென்னையில் உள்ள ஒரு மல்டிநேஷனல் கம்பெனியில் பணியில் இருக்கிறார்கள் இருவரும்.

அன்பு வருமானத்திற்க்காக.. ரேயான் அனுபவத்திற்காக..

 

ரேயானது வசதிக்கு அவனுக்கென சொந்தமாக ஒரு வீட்டையே வாங்கி கொள்ள முடியும். ஆனால் அன்பு அங்கு தங்க மறுத்து விடுவான் என்பதால்,

 

அன்புமதிக்காக இருவரும் சென்னையிலேயே காம்பேக்ட் ஆக இருக்கும் இரண்டு படுக்கையறை கொண்ட அபார்ட்மெண்ட் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி பணிபுரிகிறார்கள். இருவருக்குமே பணியிடத்திற்கு மிகவும் கச்சிதமாக பொருந்திப் போன இடம்.

 

ரேயானின் தந்தைக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட வேறுவழியின்றி அவரது கம்பெனியை ஏற்று நடத்த அமெரிக்கா பயணப்படுகிறான். அவனை வழியனுப்பவே வந்துள்ளான் அன்புமதி.

 

என்னதான் ரேயான் வீட்டின் வாடகையை பங்கிட வேண்டாம் என்றாலும் ‘நான் கொடுத்தா தான் கூட இருப்பேன்’ என்று பிடிவாதமாக தனது பங்கு வாடகையை இதுவரை கொடுத்து வருகிறான் அன்பு.

 

தற்போது ரேயான் அமெரிக்கா கிளம்பவும் இனி அன்பு மட்டும்தான் மொத்த வாடகையும் கட்டும் நிலை என்பதால் அவனது வருமானம் குறைந்து விடுமே என்ற அக்கறையில், ” ஃப்ளாட் ஷேரிங் பண்ண புரோக்கர் யார்கிட்டயாவது சொல்லி வைடா” ஐடியா கூறி இருந்தான்.

 

அன்புவைப் பற்றிய இந்த சிந்தனையில் இருந்த ரேயானுக்கு அந்த விசயம் நினைவு வந்து, “ஃப்ளாட் ஷேரிங்க்கு ஆள் யாராவது கிடைச்சாங்களா அன்பு?” எனக் கேட்டான்.

 

நண்பனின் பிரிவை எண்ணி உள்ளுக்குள் வருந்திய அன்பு,”ஆமாடா! சொல்ல மறந்துட்டேன். ஏதோ கேம் டிசைனராம். ஒரு ஆள் செட் ஆகி இருக்குனு சொன்னார். அவர் வேற அவசரமா ஊருக்கு போறாராம். அதனால அக்ரிமெண்ட் இப்பவே போட்றலாமானு மதியமே கேட்டாரு.”

 

“ஆளைப் பற்றி விசாரிச்சீங்களானு கேட்டேன், எல்லாம் நம்பிக்கையான ஆளு தான்னு சொன்னார், நானும் சரினுட்டேன். அக்ரிமெண்ட் சைன் பண்ணி வந்துடுச்சு. நாளைக்கு வந்துடுவாங்கடா.” இன்று அவன் அலுவலகத்தில் இருக்கும் போது நடந்ததை விளக்கினான் அன்புமதி.

 

அன்பு சொன்னதைக் கேட்ட பிறகு தான் ரேயானுக்கு மனம் சற்று நிம்மதியாக இருந்தது.”சரி, அன்பு பார்த்துக்க. வர்றவங்கள்ட்ட கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோடா.”அவனது OCD பற்றி கலக்கத்துடன் அறிவுரைத்தான்.

 

“பண்ணி தானே ஆகனும். வேற வழி இல்லையே! நீ என்னைப் பற்றி கவலைப்படாதே ரேயான்! அப்பாவோட ஹெல்த்தை பாரு. இனி நீதானே எல்லாம் பார்த்துக்கணும்.” நண்பனுக்கு தைரியம் கூறினான்.

 

“ஓகே அன்பு! ஃப்லைட் போர்டிங் கால் பண்ணிட்டாங்க. நான் கிளம்பறேன்.” நண்பனை இறுக அணைத்து தட்டிக் கொடுத்தபடி ரேயான் உள்ளே சென்றுவிட, புன்னகையுடன் வழியனுப்பி வைத்தான் அன்புமதி.

 

மெட்ரோ பிடித்து வீட்டிற்கு திரும்பிய அன்புவிற்கு வீடே வெறுச்சோடி இருந்தது. கல்லூரி முதல் இந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாகவே இருந்த ரேயானின் பிரவு அவனை வாட்டியது. தனக்கென சமைத்து தனியாக அமர்ந்து இரவு உணவை முடித்தான்.

 

‘புதுசா வர்ற ஆளு எப்படி இருக்க போறானோ!?’ உள்ளுக்குள் ஒரு சிறு கலக்கம் இருந்தாலும், “சரி முடிஞ்சவரை சமாளிப்போம். இல்லனா என்ன பண்றதுனு அப்புறமா யோசிக்கலாம்!” தனக்கு தானே சொல்லிக் கொண்டு படுத்துக் கொண்டான்.

 

மறுநாள், விடுமுறை என்றாலும் வழக்கம் போல அதிகாலை எழுந்தவன் தனது யோகா மற்றும் உடற்பயிற்சி அனைத்தும் முடித்து வீட்டைச் சுத்தம் செய்யத் துவங்கி விட்டான்.

 

சோபா குஷன்கள் நேராக அடுக்கப்பட்டுள்ளன. எங்கும் ஒரு தூசி கூட இல்லை. அன்புமதி கையில் ஒரு மெஷரிங் டேப்புடன் (Measuring tape) சோபாவுக்கும் டிவி-க்கும் நடுவில் இருக்கும் தூரத்தை அளந்து, திருப்தியாகக் குறித்துக் கொண்டிருந்தான்.

 

அப்போது அழைப்பு மணியோசை கேட்கவும் அன்பு நெற்றியைச் சுருக்கி, தன் கைக் கடிகாரத்தைப் பார்த்தான். சரியாக 9:01 எனக் காட்டியது. ‘9:00. மணிக்கு வர வேண்டிய ஆளா இருக்குமோ!?’ என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தான்.

 

 

error: Alert: Content selection is disabled!!