குருதான் அவரைக் கவனித்துக்கொள்வது. அது கூடப் பாசத்தில் இல்லை. வேறு யாருக்கும் அவர் தேவைகளைப் பார்க்க விருப்பமில்லை. நானும் அப்படி இருந்துவிடக் கூடாது என்பதாலேயே கவனிக்கிறான் என்று உணர்ந்தபோது, அந்தக் கவனிப்புக் கூடத் தண்டனையாகிப் போயிற்று. அதில் நேரா நேரத்துக்குத் தானே தனக்கானவற்றைப் பார்க்க ஆரம்பித்தார்.
அன்று வீட்டுக்கே வந்து கருணாகரனை வெளியில் அழைத்துப் போனார் சண்முகம்.
அது குறைந்தது 25 பரப்புக் கொண்ட வயல்காணி. அதன் வயல் வரப்பினூடு இரண்டு வெள்ளை வேட்டிகளும் நடந்துகொண்டிருந்தார்கள்.
“நடந்தது எல்லாத்தையும் விட்டுப்போட்டு எப்பவும் மாதிரி வேலையப் பார் கருணாகரா.” இப்போதெல்லாம் இதைக் கவனிக்க அவர் வருவதில்லை என்பதை அறிந்திருந்த சண்முகம் எடுத்துச் சொன்னார்.
“நீ ஒண்டும் அவன்ர வாழ்க்கையக் கெடுக்க நினைக்கேல்லையே. அவனுக்கு நல்லது எண்டு நீ நினைச்சதச் செய்ய நினைச்சிருக்கிறாய். அவ்வளவுதான். விடு.”
அதற்கும் ஒன்றும் சொல்லாமல் பச்சைப் பசேல் என்று மின்னும் வயலைப் பார்வையிட்டார் கருணாகரன்.
“கருணாகரா, என்னைப் பார்!” என்று பிடிவாதமாக அவர் கரத்தைப் பற்றித் திருப்பித் தன்னைப் பார்க்க வைத்துவிட்டு, “உன்ர மகன்தான் கூப்பிட்டு ‘அப்பாவைக் கொஞ்சம் கவனிங்க. வீட்டுக்கையே அடஞ்சு கிடக்கிறாராம்’ எண்டு சொன்னவன். கோவக்காரனா இருந்தாலும் பாசக்காரன். உன்ன அப்பிடியே விடேல்ல பாத்தியா?” என்றதும் அப்படியே நின்றுவிட்டார் கருணாகரன்.
அவரால் அவரைச் சமாளித்துக்கொள்ளவே முடியவில்லை. இத்தனைக்குப் பிறகுமா? தொண்டை அடைத்துக்கொண்டு வந்தது. சட்டென்று சண்முகத்துக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டவருக்குக் கொஞ்ச நேரம் தேவைப்பட்டது தன்னைச் சமாளித்துக்கொள்ள.
“நீயும் கோவத்தப் பிடிச்சுத் தொங்காத கருணாகரா. மார்க்கண்டேயர யோசிச்சுப் பார். மகளைப் பிரிச்சு வச்சு என்ன கண்டவர்? அதே பிழைய நீயும் செய்யாத. ஒருக்கா போய் அவனைத் தோட்டத்தில பார். எல்லாம் சரியாகும்.”
சண்முகத்துக்குமே அவர் விட்ட வார்த்தைகள் தெரியாதே. அதில் யாழிசையைக் கடத்திய காரணத்தினால் மட்டுமே தூயவன் வெளியே வந்திருக்கிறான் என்றெண்ணிச் சொன்னார்.
அவன் முகத்தை இனியும் தன்னால் நிமிர்ந்து பார்க்க முடியுமா என்று யோசித்தார் கருணாகரன்.
*****
நாள்கள் உருள ஆரம்பித்திருந்தன. எல்லோரும் இயல்பான வாழ்க்கைக்குள் திரும்பிவிட்டதுபோல் காட்டிக்கொண்டாலும் அந்த வீட்டில் அவன் இல்லை என்கிற விடயம் எல்லோர் மனத்திலும் ஒரு அழுத்தத்தைக் கொடுத்தபடிதான் இருந்தது.
வந்துவிடு என்று கூப்பிட முடியாமல் நின்றனர்.
தூயவனின் தோட்ட வீட்டில் அளவான வசதிதான். குறை என்றும் எதுவுமில்லை. இன்னுமே பாயில்தான் படுக்கை. வாங்கிப்போட்ட மெத்தை சீண்டுவார் இல்லாமல் கிடந்தது. நிம்மதியான நிறைவான வாழ்க்கைக்கு வசதி வாய்ப்புகள் எதுவும் அதிமுக்கியம் இல்லை என்று அவர்கள் வாழும் வாழ்விலேயே தெரிந்தது.
அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யத்தைப் பார்க்கையில் நேசனின் நெஞ்சமும் கண்களும் நிறைந்துபோகும். அவன் பட்ட பாடுகள் அத்தனையும் இதைப் பார்க்கத்தானே.
ஆனாலும் வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லமாட்டான். சும்மாவே ஆடும் தூயவன் அதை வேறு சொல்லிவிட்டால் அடங்கவே மாட்டானே.
நேசன் இப்போதெல்லாம் வாரத்தில் குறைந்தது மூன்று நாள்களாவது தன் மொத்தக் குடும்பத்தோடும் தூயவன் வீட்டுக்கு வந்துவிடுவான். குருவும் துளசி மிதிலனோடு வருவதால் பேச்சும் சிரிப்புமாகப் பொழுதுகள் நகரும்.
“இதுக்குப் பேசாம நீங்க எங்களோடயே வந்து இருக்கலாம்.” வேண்டுமென்றே கேலி பேசுவான் தூயவன்.
“தேவை எண்டு வந்தா அதையும் செய்வன். எனக்கு என்ர தங்கச்சின்ர வாழ்க்கை முக்கியம். அதால இப்பிடித்தான் அடிக்கடி வந்து உன்னை செக் பண்ணுவன். அப்பதான் கொஞ்சமாவது நீ அடங்கி இருப்பாய்.” என்று நேசனும் விட்டுக்கொடுக்க மாட்டான்.
இருவரும் எப்போதும் பிடுங்குப்பட்டாலும் ஆழமான நேசம் ஒன்று அடி நிலத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஊற்றுபோல் சத்தமே இல்லாமல் அவர்களுக்குள் ஓட ஆரம்பித்தது.
அன்று துளசியை வைத்தியரிடம் காட்ட வேண்டும் என்பதில் மிதிலனைக் கொண்டு வந்து இவர்களிடம் விட்டுவிட்டுப் போனான் குரு.
அவனுக்கு மாமன் இருந்தாலே போதும். இதில் அவனுடைய இசையும் இருந்தால் வேறு யாருமே வேண்டாம்.
“இசை! ஸ்கூட்டில போவமா?” என்று ஓடி வந்தான். அவனால் இன்னுமே இசையையும் ஸ்கூட்டியையும் பிரிக்க முடியவில்லை.
“ஏன், மாமான்ர பைக்ல வரமாட்டீங்களோ?” அவனைத் தூக்கிப் போட்டுப் பிடித்தபடி கேட்டான் தூயவன்.
“குரு மாமான்ரயும் தூயவன் மாமான்ரயும் பைக் உவேக்!” என்றான் அவன்.
“டேய் கள்ளா!” என்று சிரித்தாலும் கொஞ்ச நாள்களாக மனத்தில் உருத்திக்கொண்டிருந்த விடயம் இன்று தூயவனின் முழுமையான கவனத்துக்கு வந்தது.
அதன் பிறகு மாமாவையும் மருமகனையும் பிடிக்க முடியவில்லை. டிராக்டரில் சந்தைக்குப் போய்த் தேங்காய் மூட்டைகளை இறக்கி, சின்னவனுக்குப் பிடித்த ஐஸ்கிறீம் சாப்பிட்டு, அப்படியே வந்து தோட்டத்தில் இருந்த மோட்டாரில் இருவரும் குளித்துவிட்டு வந்தபோது, யாழிசை சமையலை முடித்திருந்தாள்.
பெரிதாகவோ விதம் விதமாகவோ சமைக்கத் தெரியாதபோதும் கோகிலா, நளினி, சில நேரங்களில் தேவகியிடம் கேட்டுக்கூட ஓரளவுக்கு நல்ல மாதிரியே சமைத்துவிடுவாள்.
மூவருமாகச் சாப்பிட்டு முடித்தனர். யாழிசை சின்னவனைப் படுக்க வைக்க எண்ணி, அவனோடு தானும் பாயில் சரிந்து கதை சொல்ல ஆரம்பித்தாள்.
மிச்ச வேலைகளைக் கவனிக்கப் புறப்பட்ட தூயவனின் பார்வை, யாழிசையை விட்டு அசைவேனா என்று நின்றது. சின்ன வயதில் சுரபியைப் பார்த்துக்கொண்ட அனுபவம் இருந்ததில் மிதிலனை அத்தனை அழகாகக் கையாண்டாள்.
கணவனின் பார்வை தன் மீது இருக்கவும் என்ன என்று கண்களாலேயே வினவினாள். சின்னவனிடம் பார்வை ஒரு முறை சென்று வர, வேகமாக இதழ்களைக் குவித்து முத்தமிட்டான் தூயவன்.
அவள் அதரங்கள் தானாய்ப் புன்னகையில் விரிந்தன.
‘எனக்கு?’ சத்தமே இல்லாமல் வாயசைத்தான்.
சின்னதாய் ஒரு நாணம் வந்து தடுத்தாலும் அவளும் உதடு குவித்து அவனுக்கும் ஒரு முத்தத்தைக் கொடுத்தாள்.
அவனுக்கு அது போதவில்லை. “மாமா போயிட்டு வரப்போறன். எங்கட மித்துக்குட்டி நித்திரை கொண்டு எழும்போணும் என்ன?” என்று அவர்களின் அருகில் அமர்ந்து சின்னவனின் நெற்றியில் உதடு பதித்தவன், அப்படியே அவன் கண்களைப் பொத்தியபடி யாழிசையின் இதழ்களில் அழுத்தி முத்தமிட்டு விலகினான்.
யாழிசையின் முகம் மலர்ந்து விகசித்தது. நேசம் பொங்க அவனைப் பார்த்தாள். “வேல ஒண்டும் இல்லை தானே. நீயும் படுத்து எழும்பு.” அவள் கன்னத்தில் தட்டிச் சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
இவ்வளவு காலமும் வேலைகளில் பாதிக்கு மேல் கருணாகரன் பார்த்துக்கொள்வார். தென்னந்தோப்பு, தேங்காய் மண்டி, கூடவே தேங்காய் விற்பனை, எண்ணெய் ஆலை என்று அவற்றைத்தான் தூயவன் முதன்மையாகக் கவனித்துக்கொண்டான்.
ஆனால் இப்போது, கருணாகரன் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றிலிருந்தும் விலகுவது தெரிந்தது. யாராவது எதையாவது கேட்டுக்கொண்டு வந்தாலும் இத்தனை காலமும் தானே முடிவெடுத்துச் செயல்பட்டவர் இப்போதெல்லாம் தூயவனிடம் கேளுங்கள் என்று சொல்லிவிடுவதும் இவன் காதுக்கு வர ஆரம்பித்திருந்தது.
உள்ளே ஒரு வலி பரவாமல் இல்லை. ஆனாலும் பொறுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் கையை விட விட இவன் பற்றிக்கொள்ள ஆரம்பித்தான்.
வைத்தியரிடம் போய்விட்டுக் குருவும் துளசியும் வந்தபோது, “குரு அப்பா!” என்று ஓடிச் சென்று தாவினான் மிதிலன்.
ஒரு கணம் அப்படியே நின்றுவிட்டான் குரு. அவனுக்குத் தொண்டை அடைத்துக் கண்கள் கலங்கிக்கொண்டு வந்தன.
“அப்பா! தூக்குங்க!” எப்போதும் தன்னைக் கண்டதும் அள்ளிக்கொள்ளும் குரு, இன்று நாள் முழுக்கப் பார்க்காமல் இருந்தும் அசையக்கூட மறந்து நின்றதில் அவன் காலைப் பிடித்து ஆட்டினான் மிதிலன்.
சட்டென்று மகனைத் தூக்கிக்கொண்ட குருவுக்குப் பேச்சே வரவில்லை.
“என்னப்பு?” என்றான் கமறிய குரலில்.
“நான் இண்டைக்கு தேங்கா விக்கப் போனனான் அப்பா.” என்று டிராக்டரில் மாமனோடு பயணம் செய்ததை அவன் சொல்ல சொல்ல, கண்ணில் திரண்டுவிட்ட நீருடன் குருவின் பார்வை முழுக்க முழுக்கத் தூயவனில்தான்.
‘அவனக் கவனி!’ என்று மிதிலனைக் கண்ணால் காட்டினான் தூயவன்.
தன் கண்களைத் துடைத்துக்கொண்டு மகன் முகமெங்கும் முத்தமிட்டான் அந்தத் தகப்பன்.
துளசியும் வெடித்துக்கொண்டு வந்த அழுகையை வாயைப் பொத்தி அடக்கவும் அவளை அணைத்துப் பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள் யாழிசை.
கதை சொல்லி முடித்த மிதிலன் தானாகவே இறங்கி விளையாடப் போனான். ஒன்றுமே சொல்லாமல் வந்த குரு, எலும்புகள் எல்லாம் நொறுங்கிவிடுமோ எனுமளவுக்கு நண்பனை இறுக்கி அணைத்துக்கொண்டான். தூயவனும் ஒன்றும் சொல்லாமல் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தான். இருவரும் வேறு பேசிக்கொள்ளவில்லை. பேசும் அவசியம் இருக்கவும் இல்லை.

