திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 1- 2

“ஏனம்மா? நான் என்ன யாரும் இல்லாத ஊருக்கா போறன்?அங்க சித்தி இருக்கிறா, சித்தப்பா இருக்கிறார். போதாக்குறைக்கு ரதனும் இருக்கிறான். எந்தக் குழப்படியும் செய்யாம நல்ல பிள்ளையா இருந்திட்டு வருவன். விடுங்கம்மா. என்னை சித்தி பாத்துக்கொள்ளுவா.” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

 

அப்போதும் அசையாமல், “மாட்டேன்!“ என்று மறுத்தார் புஷ்பராணி.

அவள் மீண்டும் என்னவோ சொல்ல வரவும், “நீ என்ன சொன்னாலும் சரிதான். நான் விடமாட்டன் ஜீவி. போய்ப் பாக்கிற வேலையை பார்!” என்றார் அதட்டலாக.

 

தன் கெஞ்சலும் எடுபடவில்லை என்றதும், சினம் பொங்கியது அவளுக்கு.

“ஒரு குடும்பப் பொம்புளைக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது! எல்லாம் அப்பா குடுக்கிற இடம். அப்பா வரட்டும்! உங்கள மாட்டி விடுறனா இல்லையா பாருங்கோ. நீங்களெல்லாம் ஒரு அம்மா. போயும் போயும் உங்களுக்கு மகளா வந்து பிறந்தன் பாருங்கோ.. என்ன சொல்லோணும்! ஆனா, நீங்க சம்மதிக்கிற வரைக்கும் இந்த வீட்டுல ஒரு பருக்க சோறு சாப்பிடமாட்டன் நான்!” என்று அறிவித்தாள்.

 

“நல்ல விஷயம்! நான் இண்டைக்கு கோழிக்கறியும் வச்சு, நிறைய வெங்காயத்துக்கு பெரிய றால் போட்டு ஒரு பிரட்டுப் பிரட்டுவம் எண்டு இருக்கிறன். நீ சாப்பிடாததுதான் நல்லது. இல்லாட்டி உனக்குப் போட்டுக் காட்டாது.” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிடவும், அவர் சொல்லிய விதத்திலேயே இவளுக்கு நாக்கில் உமிழ்நீர் சுரந்தது.

 

‘அடியே ஜீவி, அவசரப்பட்டு வாய விட்டுட்டியோ.. கோழிக்கறி போச்சே…! அதோட றால் பிரட்டலும் போச்சே..! ம்ம்.. என்ன செய்யலாம்.. அப்பா வரட்டும். இந்த அம்மாவுக்கு ஒரு வழி செய்வம்.’ என்று கருவியவள் தூக்கிக்கொண்டு போய் வாசல் படியில் பொத்தென்று அமர்ந்துகொண்டாள்.

——————–

 

அவள் அமர்ந்திருந்த விதத்திலேயே இன்று பெரிய நாடகமொன்றை அரங்கேற்றப் போகிறாள் என்பதை அறிந்துகொண்டார் அன்னை!

 

அதோடு, மகள் கெஞ்சியபோதே அவர் மனம் இரங்கிவிட்டது. அதுவுமல்லாது ஜீவனி சொன்னதுபோல் வீட்டுக்குள்ளேயே இருந்து அவள் சோர்ந்துபோவதும் அவர் அறிந்ததுதான்.

 

‘பெண் பிள்ளைகளை பயமில்லாமல் வெளியில் விடும் நிலையிலா இன்றைய காலம் இருக்கிறது?’ என்றெண்ணி பெருமூச்செறிந்தவர், வீட்டுத் தொலைபேசியை எடுத்துக்கொண்டு அவளுக்குக் கேளாத தூரம் சென்று தன் தங்கைக்கு அழைத்தார்.

ஜீவனி விரைவில் அங்கு வருவாள் என்றும், அவளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு வைத்தார்.

 

மறந்தும் அதை மகளிடம் சொல்லவில்லை. தகப்பனிடம் என்ன நாடகமாடுகிறாள் என்று பார்க்க ஆவலோடு காத்திருந்தார்.

 

சற்று நேரத்தில் அவரும் வந்துவிட, “அப்பா! இந்த அம்மா இருக்கிறாதானே..” என்றபடி அவரிடம் விரைந்தாள் ஜீவனிதா.

 

அப்போதே அவருக்குப் புரிந்துவிட்டது தாய்க்கும் மகளுக்கும் ஏதோ பெரும்போர் நடந்திருக்கிறது என்று.

 

கேட்டைத் திறந்துகொண்டே, “உன்ர அம்மாவுக்கு என்னவாம்?” என்று அவர் கேட்டதுதான் தாமதம், அவர் உள்ளே வந்து தன் மோட்டார் வண்டியை நிறுத்துவதற்குள் அனைத்தையும் சொல்லி, கண்ணைக் கசக்கி, மூக்கை உறிஞ்சி, “அம்மா எனக்கு இனி சாப்பாடு போடமாட்டாவாம். பட்டினி கிடக்கட்டுமாம்..” என்பதில் கொண்டுவந்து முடித்தாள்.

மறந்தும் தான் எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடப்போவதாகச் சொன்னதை சொல்லவில்லை. அதெல்லாம் எடிட்டிங்கில் வெட்டிங்!

 

என்ன நடந்திருக்கும் என்று அறியாதவரா அவர்? ஆனாலும், “என்னது? என்ர பிள்ளைக்கு சாப்பாடு போடமாட்டன் எண்டு சொன்னவளோ அம்மா? வா கேப்பம்?” என்றபடி மகளோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

 

எதிர்ப்பட்ட மனைவியிடம், “நீ என்ன பிள்ளைக்கு சாப்பாடு போடமாட்டேன் என்றாயாம்?“ என்று கேட்டார்.

 

தாயைத் தகப்பன் கேள்வி கேட்டுவிட்டதில் அன்னையை சவாலாக நோக்கினாள் மகள். ‘யாருட்ட? அப்பா இருக்கிற வரைக்கும் என்னை அசைக்கேலாதாக்கும்!’ என்கிற மிரட்டல் இருந்தது அந்தப் பார்வையில்.

 

“பின்ன? சாப்பாடு வேண்டாம் என்றவளை நான் என்ன செய்றது? அதுதான் பட்டினி கிடக்கச் சொன்னனான்.” என்றார் அவர்.

 

“பாத்திங்களா அப்பா? ஒரு அம்மா கதைக்கிற கதையா இது? மகள் வேண்டாம் எண்டு சொன்னா கெஞ்சிக் கூத்தாடி பெத்த பிள்ளைக்கு தீத்தி(ஊட்டி) விடுறது தானே ஒரு அம்மாக்கு அழகு. இவ என்னடா என்றா பட்டினி கிடக்கட்டுமாம். எங்க இருந்துதான் இவவ பிடிச்சீங்களோ தெரியாது!” என்று தகப்பனிடம் தாயை போட்டுக் கொடுத்தாள்.

 

“ப்ச்! விடம்மா. இனி அதக் கதைச்சு என்ன பிரயோசனம்? எல்லாம் எண்ட தலைவிதி.” என்று அவளுக்கு மேலால் சலித்துக்கொண்டார் அவர்.

புஸ்பராணி முறைக்கவும் மகள் அறியாமல் கண்ணால் சிரித்தார் அவரிடம்!

 

“அதைவிட்டுட்டு நீ சொல்லு. இப்ப என்ன வேணும் பிள்ளைக்கு?” என்று கேட்டார் அவளின் தலையை வருடிக்கொடுத்தபடி.

 

“நான் காலிக்கு போகோணும் அப்பா. சித்திய பார்த்து எத்தனை வருசமாச்சு? ரதன் மட்டும் தானே இங்க வந்துட்டு போறவன். எனக்கு காலிக்கோட்டையை பாக்க ஆசையா இருக்கு. கடற்கரையில விளையாடோணும். அங்க குளிக்கோணும். என்ர செல்ல அப்பாதானே.. சரியெண்டு சொல்லுங்கோ.. எனக்கு இங்க சும்மா இருந்து விசர்(பைத்தியம்) பிடிக்கும் போல இருக்கு.” என்று தகப்பனின் தாடையைப் பற்றி செல்லம் கொஞ்சிக்கொண்டே கெஞ்சினாள்.

 

மனைவியை பார்த்தார் அவர். அவர் கண்ணைக் காட்டவும், “சரி போவம். அப்பாவும் அம்மாவும் பிள்ளையை கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டு வாறம். கொஞ்ச நாளைக்கு அங்க இருந்திட்டு வா.” என்றவர்,

“எப்ப போறது எண்டு சொல்லு, அப்பா ட்ரெயினுக்கு டிக்கெட் புக் பண்றன்.” என்றார்.

“ஹே…! அப்பா எண்டா அப்பாதான்..” என்று துள்ளியவள், அன்னையிடம் திரும்பி வெற்றிப் பார்வை பார்த்தாள்.

 

“காலிக்கு அடுத்த ட்ரெயின் எப்ப இருக்கோ அதிலேயே போறமாதிரி டிக்கெட் புக் பண்ணுங்கோ அப்பா. நான் பெட்டி அடுக்கப் போறேன்..” என்றவள் துள்ளிக்கொண்டு தன்னுடைய அறைக்கு ஓடவும், மகளின் சந்தோசத்தைப் பார்த்து ரசித்தனர் பெற்றவர்கள்.

 

அறைக்குள் போனவள் உடனேயே ரதனுக்கு அழைத்தாள். அவள் வருவதைச் சொல்லவும் அவனோ நம்பவே இல்லை.

 

அவனுக்குத்தான் அவனது பெரியன்னையைப் பற்றி நன்றாகத் தெரியுமே.

கடைசியில், “உன்ர கண்முன்னால் வந்து நிக்கிறன். அப்ப பாருடா..” என்றுவிட்டு செல்லை அணைத்தவளுக்கு, சந்தோசம் அடங்குவதாய் இல்லை!

 

பின்னே, எத்தனை வருடப் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது இன்று! அதைவிட… என்று நினைக்கும்போதே பல்லை நறநறவென்று கடித்தாள்.

கையோ தன் பாட்டுக்கு அவளின் முழங்கையை தொட்டுப் பார்த்தது. அவளை ஒருவன் தள்ளிவிட்டதில் உண்டான காயம் அந்த இடத்தில் தழும்பாக மாறியிருந்தது. அவனுக்குத் திரும்பவும் மண்டையை உடைத்தால் தான் அவளுடைய பழிவெறி அடங்கும்.

 

ஜீவனியிடமே விளையாட்டுக் காட்டிவிட்டானே! அவனைச் சும்மா விடுறதா?

 

இருடா.. வாறன்! வந்து இருக்குடா உனக்கு’

 

‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே..!

அவன் மண்டையை உடைக்க!

அதிலே ரத்தத்தை பார்க்க!

சிங்கமொன்று… சீ! சிங்கியொன்று புறப்பட்டதே..!’அவள் இதழ்கள் தன்பாட்டுக்கு பாட்டிசைத்தது!

 

ஒரு வழியாக ஜீவனிதா தன் காலிப் பயணத்தை நல்லபடியாகவே ஆரம்பித்து வைத்தாள்.

 

அவளுக்கு தெரியவில்லை தன் உயிரைத் தேடிப் போகிறோம் என்று!

காலியில் ஒரு பரந்து விரிந்த மாளிகையும், அங்கிருக்கும் ஒரு ஜீவனும் எத்தனையோ நாட்களாக அவளின் வரவுக்காகக் காத்திருப்பதை அறியாமல் புறப்பட்டாள் ஜீவனி !

 

 

error: Alert: Content selection is disabled!!