அத்தியாயம் – 2
முற்றிலும் பனி விலகாத அற்புதமான காலைப்பொழுது! கண்ணுக்கெட்டிய தூரமெங்கும் பசுமை. காதை இனிமையாய் நிறைத்த கடலோசை! கடலன்னையின் அணைப்பில் பச்சைப் பசேலென்று பார்க்குமிடமெல்லாம் செழித்து நின்றது அந்த நகரம்!
நீண்ட முகில் கூட்டங்களோடு சங்கமித்திருந்தது நீலக்கடல். கடல்காற்று வந்து எழுப்பிவிட்டதில் உற்சாகமாய் இன்னிசை பாடிப் பறந்து திரிந்தன பறவைகள். அவைகளின் கூச்சலில் மெல்ல மெல்ல துயில் கலைந்துகொண்டிருந்தான் கதிரவன். பொன்னென ஒளி வீசிய மணல் பரப்பும், எழில் கொஞ்சிய கடற்கரையும், அதைக் கொஞ்சும் அலைகளும், கடலுக்குள் நீண்டிருந்த தென்னை மரங்களும், அவைகளைக் காவல் காக்கும் கருங்கற்களும் என்று காணக் காணத் தெவிட்டாத இயற்கை கொட்டிக் கிடந்தது அங்கே!
அந்த நகரம் காலி! இலங்கையின் தென்மாகாணத்தின் தலைநகரம்!
அதன் சிறப்பை இன்னும் மெருகூட்டும் முகமாக இன்றுவரை கம்பீரமாக எழுந்து நிற்கிறது காலிக்கோட்டை! அதேபோல இலங்கையின் சிறப்புமிக்க காலித் துறைமுகத்தையும் தன்னகத்தே கொண்டது!
இத்தனை சிறப்பு வாய்ந்த காலியில், கோட்டையிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது அந்த வெண்பளிங்கு வில்லா!!
அங்கே வசிப்பதோ ஒரேயொருவன்!
அவன் தன் மாடியறையில் ஆழ்ந்த துயிலிலிருந்தான். அவனது காலைத்தூக்கமும் மெல்ல மெல்லக் கலையலாயிற்று! அதற்கு காரணம் ஒரு மங்கையின் குரல்!
“டேய்..! உன்னக் கொல்லப்போறன் இப்ப…!” என்ற குரல் துள்ளலோடு காதில் வந்து கணீரென பாய்ந்ததில், சிலிர்த்துப்போனது அவன் தேகம்.
விழிகள் மூடியே இருந்தபோதும் கவர்ச்சியாய் புன்னகைத்தான். அந்தக் குரலே அவனுக்குள் ஒருவித மயக்க அலைகளை எழுப்பிவிட தலையணையை இறுக்கமாய் அணைத்தபடி புரண்டான். மலர்ந்திருந்த முகத்திலிருந்த புன்னகை மட்டும் மறையவே இல்லை!
அடுத்ததாக என்ன நடக்கும் என்பதை அறிந்தவனின் இதழ்கள் குறுஞ்சிரிப்பில் இன்னுமே விரிந்தது. அதை நேரிலும் கண்டுவிடும் ஆர்வம் கொண்டு சட்டென விழிகளைத் திறந்தான்.
அவன் எதிர்பார்த்தது போலவே, இடைவரை மஜெந்தா வண்ணத்திலும், அதற்கு கீழே மாம்பழ வண்ணத்தில் குடையென விரிந்து தரையை தொட்டுக்கொண்டு நின்ற சோளியில் நெஞ்சைக் கொய்யும் அழகோடு ஒரு கல்யாண மண்டபத்தில் நின்றிருந்தாள் அந்தப்பெண். தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பெரிய விழிகளைச் சுழற்றினாள்.
தன் இதயராணியின் விழிகளில் கொப்பளித்த கள்ளத்தனத்தில் என்றும்போல் அன்றும் கரைந்து காணாமல் போனான் அவன்!
அவளோ, யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, தரையைத் தொட்டு நின்ற சோளியை இரு கைகளாலும் மெல்ல பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து பலகாரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தாள்.
அதன் அருகே சென்றதும் மீண்டும் ஒருமுறை தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்த ரசகுல்லாவில் ஒன்றை படக்கென்று எடுத்து மின்னலென தன் வாய்க்குள் அடைந்துகொண்டாள்.
அதே வேகத்தில் திரும்பி, ‘எனக்கு எதுவுமே தெரியாதுப்பா..’ என்பதுபோல் நின்றுகொண்டாள். சிவப்பு உதட்டுச் சாயத்தில் பளபளத்த செர்ரிப்பழ இதழ்கள் மட்டும் மெதுவாக அசைந்தது.
“கள்ளி..!” செல்லமாய் அவன் இதழ்கள் சொல்லிக்கொண்டன!
மீண்டும் ரசகுல்லாவை நோக்கி ஆசையோடு பாய்ந்தது அவளின் பார்வை. மீண்டும் விழிகளை சுழற்றினாள். யாரும் கவனிக்கவில்லை என்றதும் திரும்பி நின்று இன்னொன்றை எடுக்க அவள் கையை நீட்டியவேளையில், “இவளை பிடிங்க பெரியம்மா..!” என்றது ஒரு ஆணின் இளங்குரல்!
அதிர்ந்து துள்ளித் திரும்பினாள் அவள்.
எதிரில் நின்றவன் அவளுக்கு தெரிந்தவன் போலும், “நீயாடா!” என்றாள் ஆசுவாசமாக!
விழிகளிலோ கண்களை கூசவைக்கும் மின்னல் சிரிப்பு!
“என்னடி இதெல்லாம்?” என்றவனுக்கு, உதட்டைச் சுழித்து கண்ணைச் சிமிட்டிவிட்டு கலீரென்று நகைத்தாள்.
அங்கே மேசையில் இருந்த இன்னோர் ரசகுல்லாவை சைகையில் காட்டி, ‘அதையும் அமுக்கவா..’ என்று கண்ணசைவால் கேட்டாள்.
“உன்ன…! பெரியம்மாட்ட போட்டுக்குடுத்தாத் தான் நீ அடங்குவாய்!” என்றது ஆண் குரல்.
“போடா..! நீயும் உன்ர பெரிய கொம்மாவும்!” என்றாள் அலட்சியமாய்.
உதட்டைச் சுழித்து அவள் சொன்ன அழகில், வெண்பற்கள் பளீரிட முறுவலித்தான் அவளையே ஆசையோடு பார்த்துக்கொண்டிருந்த இவன்!
அவளோ தன் எதிரில் நின்றவனை சட்டையே செய்யாது, மீண்டும் அங்குமிங்கும் பார்வையை சுழற்றிப் பார்த்துவிட்டு, படக்கென்று இன்னொரு ரசகுல்லாவை தன் வாய்க்குள் திணித்துவிட்டுத் திரும்பினாள்.
அப்போதுதான், அவன் தன்னை மிக லாவகமாக போனில் வீடியோ எடுத்துக்கொண்டு இருந்ததை கவனித்தாள் போலும்! ஒருகணம் வசமாக மாட்டிக்கொண்டோமே என்று முழித்தாள். அடுத்தகணமே எதிரில் நின்றவனை முறைத்தாள்.
ஆட்காட்டி விரலை நீட்டி, “டேய்! உன்ன கொல்லப்போறன் இப்ப!” என்றாள் மிரட்டும் தொனியில். அதை சொல்லிவிட்டு, கோபத்துக்குப் பதிலாக கிளுக்கிச் சிரித்தவள் குரலிலோ உயிர்ப்பும் குறும்பும் வழிந்தோடியது!
இங்கே, அவளிடம் தன்னையே தொலைத்தவனோ தன்னை மறந்து அவளில் லயித்திருந்தான்,
அந்த பால்வண்ண முகத்தை, அதில் அழகுற மின்னிய விழிகளை, அதில் வழிந்த குறும்பை இன்னுமின்னும் ரசிக்கத் துடித்த மனதை அடக்க முடியாது, கட்டிலின் அருகில் கிடந்த ரிமோட்டை எட்டியெடுத்து அந்த வீடியோவை அப்படியே நிறுத்தினான்.
இப்போது, அவனது அறைச் சுவரின் மேல் பாதி முழுவதையும் பிடித்திருந்த அந்த திரையில் அவளின் முகம் மட்டுமே! கவர்ச்சி மிகுந்த நயனங்கள் அவனை அருகில் அழைக்க, அவளின் முன்னால் சென்று, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றான்.
அவன் நிரஞ்சன் பிரகலாதன்!
அசாத்தியமான உயரத்தோடு, கட்டுக் குலையாத கம்பீரத்தோடு நின்ற அவன் காலியின் தொழில் துறை சாம்ராஜ்யத்தின் முடிசூடா மன்னன்! குடும்பத் தொழில்களாக பல இருந்தாலும் அத்தனையையும் தனியாக நின்று கட்டியாளும் கெட்டிக்காரன்!
அவனை எப்படியாவது தங்கள் வீட்டு மருமகனாக்கிவிடத் துடித்து, எத்தனையோ பெண்வீட்டார் வலைவீச, அவனோ ஒருத்தியின் வேல்விழிகள் வீசிய வலையில் தானாகவே சிக்கிக்கொண்டிருந்தான் சந்தோசமாய்.
அந்த வேல்விழிகளோடு தன் விழிகளைக் கலந்தவனின் நெஞ்சிலோ காதலின் ஊற்று!
கருத்தடர்ந்த நீண்ட புருவங்களின் கீழே இமைகள் விசிறியாய் மேலும் கீழும் விரிந்து நிற்க, மைதீட்டிய நீண்ட விழிகள் அவன் மனதை மயக்கிற்று!
அந்த விழிகளின் மீது இதழொற்றத் துடித்த இதழ்களை அழுத்தமாக மூடிக்கொண்டான்.
பளபளத்த பட்டுக்கன்னத்தை தடவத் துடித்த கரங்களை பின்னால் இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.
அழகுற அமைந்த ரோஜா வண்ண சின்னச் செப்பு இதழ்கள்! அவள் தீட்டிய லிப்ஸ்டிக்கில் பளபளத்தது. பட்டென்று அதிலிருந்து பார்வையை விலக்கிக்கொண்டான்.
நெஞ்சுக்குள் ஆசைகள் ஆயிரம் எழுந்தாலும் திரையில் தெரிந்தவளின் தேகத்தை, திரையிலேனும் அவன் விரல் நுனிகூட இதுவரை தீண்டியதில்லை.
தன்னவளாய் அவன்தான் அவளை வரித்துக்கொண்டான். அவள் அவனவளாய் வந்தபிறகே அவனின் மூச்சுக்காற்று கூட அவளை தீண்டும்!! தீண்டவேண்டும்!
அதுதான், அவளுக்கும் அவள்மேல் அவன்கொண்ட நேசத்துக்கும் கிடைக்கும் மரியாதை!
நேசிப்பவளை மரியாதையோடு பூஜிக்கும் அவனுக்குள் அவள் வந்த விதமோ மிக விசித்திரமானது!
காதல் என்பதே விசித்திரத்திலும் விசித்திரம் தானே! அவன் விழிகள் அவள் விழிகளோடு கலந்துகிடந்தாலும், மனமோ அவள் தனக்குள் வந்த நாட்களைத் தேடி ஓடியது.
அவளை அவன் பார்த்ததேயில்லை என்று சொல்வதற்கில்லை. சின்னவயதில், சரியாக சொல்லப்போனால் அவனுடைய பதினெட்டாவது வயதில் பன்னிரெண்டு வயதே நிரம்பிய சேட்டைகள் நிறைந்த பெண்ணாய், காலிக்கு விடுமுறைக்கு வந்தவளை பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவளை பார்த்தால் ஒருவித சினம்தான் வரும்.
ஒழுங்காக வாரப்படாத கூந்தலும், சீராக அணியப்படாத ஆடையும், செருப்பேயில்லாத கால்களுமாக அவளின் நாட்கள் முழுவதும் கழிவது காலி கோட்டையை சுற்றியிருக்கும் தெருக்களிலும் கடற்கரையிலும் தான்.
மேல் தட்டு நாகரீகத்திலேயே பிறந்து வளர்ந்தவனுக்கு, அந்தப் பதினெட்டு வயதில் வேற்றுக்கிரகவாசி போலத்தான் தெரிந்தாள்.
சிலநேரங்களில் அவளை, ‘என்ன ஜென்மம்டா இது..’ என்பதாகக் கூட பார்த்திருக்கிறான்.
அதுவும் தெருவில் திரியும் நாயையும் பூனையையும் துரத்திப் பிடித்துக்கொண்டு அதுகளுக்கு அவள் செய்யும் கொடுமைகளை பார்க்கும்போது முகத்தை சுழித்திருக்கிறான்.
ஒரு மாதம் கழித்து அவள் ஊருக்குச் சென்ற பிறகுதான் அந்த ஊருக்கே சுதந்திரக் காற்று வீசியது! விமோட்சனம் கிடைத்தது! அதுதான் உண்மை! அந்தளவு சேட்டைகள்! யார் வீட்டுக் கண்ணாடியாவது உடையும், சைக்கிள் டயர் வெட்டப்படும். கேட் உடைந்திருக்கும். ரோஜாக் கன்றுகள் களவு போயிருக்கும். இப்படி அவள் செய்த அநியாயங்கள் பல!

