மந்தாரை 19
“ஆமா சகுந்தலா… பாவம் தான்! நான் பண்ணினது மகா பாவம்டி!” என்று குழந்தையைப் போல விம்மி விம்மி அழத் தொடங்கினார் கார்மேகம். இத்தனை வருடங்களாகத் தான் அணிந்திருந்த அந்த மிடுக்கும் அதிகார முகமூடியும் அடியோடு சரிந்து விழுந்தன.
“என் தங்கச்சி… என் உயிர் டி…ஆனா, கோபம், ஏமாற்றம் திமிரும் கண்ணை மறைக்க, என் தங்கச்சியையே அநியாயமா கொன்னுட்டேன். அந்தப் பாவம் தான்… அந்தப் பாவத்தோட சாபம் தான் இன்னைக்கு வரைக்கும் என்னை நிம்மதியா தூங்க விடாம வதைக்குது!” என்று தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு கதறினார்.
அவரது கண்ணீரும் கதறலும் அடங்கச் சில நிமிடங்கள் பிடித்தன. கணவரின் குற்ற உணர்ச்சியை புரிந்து கொண்ட சகுந்தலா அவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, கார்மேகம் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தார்:
“என் அத்தை வீட்டிற்கு நான் பண்ணினது மகாபாவம். இன்னைக்கு தன் பேத்தி குழலியைப் பாரிக்குத் தரேன்னு எங்க அப்பா ஒத்தக் கால்ல நிக்கிறாரு. ஆனா, அந்தப் பாரி எப்படி என் மகளை ஏத்துக்குவான் சகுந்தலா? அவன் அம்மாவை கொன்ற பொல்லாத பாவி இந்த கார்மேகம் தான்கிறது அவனுக்குத் தெரியாதா? என் மேல இருக்கிற கோபமும் வெறுப்பும் அவன் மனசுல அப்படியேதானே இருக்கும்? நான் செஞ்ச பாவத்துக்கு, என் அப்பாவி மகள் குழலி பலியாகிடக் கூடாதுடி… அவ வாழ்க்கை நரகமாயிடக் கூடாது!” என்று சகுந்தலாவின் மடியில் முகம் புதைத்துத் தேம்பித் தேம்பி அழுதார் கார்மேகம்.
பல வருடப் பகையின் பாரமும், தீராத குற்ற உணர்ச்சியும் அந்த நள்ளிரவில் கார்மேகத்தைக் கதறி அழ வைக்க, சகுந்தலா தன் கணவரின் தலையை மெல்லக் கோதிவிட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
இத்தனை வருடங்களாக கணவர் சுமந்து வந்த பாவம், ஒரு பெரும் பாறாங்கல்லாய் அவரை அழுத்தி வதைத்திருக்கிறது என்பதை அவள் உணர்ந்தாள். மெல்ல அவரது தோள்களை அணைத்து, தன் புடவைத் தலைப்பால் அவரது கண்ணீரைத் துடைத்துத் தேற்றினாள்.
“முதல்ல அழுது ஆர்ப்பாட்டம் பண்றதை நிறுத்துங்க… நடந்த விபரீதத்தை மாத்த நம்மால முடியாது. ஆனா, அதுக்காக இப்படியே அழுதுட்டே இருந்தா காலம் கடந்து போயிடும்” என்று அமைதியான குரலில் கணவனைச் சமாதானம் செய்தாள்.
கார்மேகம் இன்னும் விசும்பியபடியே தன் மனைவியைப் பார்க்க, சகுந்தலா தொடர்ந்தாள்:
“இங்க பாருங்க… தெரியாம செஞ்ச கோபத்தால ஒரு தப்பு நடந்துடுச்சு. அதை நெனச்சு நெனச்சு இப்படியே உருகிட்டு இருக்கிறதை விட, உங்க தவறை மனசார உணர்ந்து அவங்ககிட்ட மன்னிப்பு கேட்பதே போதுங்க. நீங்க நினைக்கிற மாதிரி பாரி பழிவாங்குற எண்ணம் கொண்ட பிள்ளை இல்லை. அவன் தங்கம். அவனுக்கு உங்க மேல கோபம் இருக்கலாமே தவிர, நம்ம குழலி மேல அவனுக்கு இருக்கிறது உயிர் காதல்.
அவங்களுக்கு விவரம் தெரியாத சின்ன வயசுலயே, ‘இருவருக்கும் தான் திருமணம்’னு அவங்க ரெண்டு பேர் மனசுலயும் ஆசையையும் காதலையும் நாமதான் வளர்த்து விட்டோம்.
இன்னைக்கு அது அவங்க மனசுக்குள்ள வெறும் செடியா இல்லைங்க… ஆழமாய் வேரூன்றிப் போன மரமா நிக்குது! “அப்படி ஆசையா வளர்த்த மரத்தை இப்ப போய்ப் பாதில வெட்டிட்டு, வேறொரு புது மரத்தை நட்டா அது இதுக்கு ஈடாகுமா சொல்லுங்க?” என்று சகுந்தலா தர்க்க ரீதியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் தன் கணவரிடம் கேட்டாள்.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கார்மேகத்தின் நெஞ்சைத் தொட்டது. உண்மைதான், குழலியும் பாரியும் ஒருவரையொருவர் உயிருக்குயிராக நேசிக்கிறார்கள். தன் குற்ற உணர்ச்சிக்காக, காதலிக்கும் அந்த இரு உள்ளங்களின் வாழ்க்கையையும் பிரிப்பது இன்னொரு மகா பாவமாகிவிடும் என்பதை அவர் மெல்ல உணரத் தொடங்கினார்.
சகுந்தலா தன் கணவரின் கைகளைப் பற்றிக்கொண்டு, “எங்க மாமனார் (தம்புசாமி) சொல்றதுதான் சரிங்க. குழலியைப் பாரிக்குக் கட்டிக் கொடுப்போம். பாரிக்கும் நம்ம குடும்பத்துக்கும் இடையில் இருக்கும் அந்தப் பழைய காயத்துக்கு மருந்தா இந்தத் திருமணம் அமையட்டும். உங்களை ஒரு நாளும் பாரி கைவிட மாட்டான், நம்ம குழலியை அவன் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பான். நீங்க பயப்படாம சம்மதிங்க” என்றாள் உறுதியான குரலில்.
கார்மேகத்தின் கண்கள் இன்னும் கலங்கியிருந்தாலும், சகுந்தலாவின் வார்த்தைகள் அவரது குழம்பிய மனதிற்குள் ஒரு தெளிவைத் தந்தன.
மறுநாள் அதிகாலை, வழக்கம்போல் எழுந்த கார்மேகம் தன் மனக்குடைச்சல்களை மறந்து, வயல் வேலைகளைப் பார்ப்பதற்காக அரப்புக்காட்டுப் பகுதிக்குச் சென்றார். வரப்பில் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, சற்றே தள்ளி மாந்தோப்புப் பக்கமிருந்து சில குரல்கள் கேட்டன.
அங்கே கள்ளத்தனமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தது வேறு யாருமல்ல; மாணிக்கமும், அவனது பேரனும்தான். அவர்கள் பேசுவது என்னவென்று கார்மேகத்தின் காதுகளில் விழுந்த அடுத்த விநாடி, அவரது கால்கள் அப்படியே தரையோடு தறைத்து நின்றன.
மாணிக்கம் தன் பேரனின் தலையில் தட்டி வஞ்சமோடு பேசிக்கொண்டிருந்தான்:
“அடேய் அறிவு கெட்ட பய மவனே! நான் சொல்லுவதை நல்லா கேட்டுக்க..ஒரு வழியா இத்தனை வருஷத்துல ரெண்டு குடும்பத்தையும் நான் போட்ட திட்டத்துல சுத்தமா பிரிச்சுப் போட்டுட்டேன். அன்னைக்கு என் சித்தப்பா… அந்த கார்மேகத்தோட அத்தை கனகுவை எப்படியாவது வளைச்சுப் போட்டு கல்யாணம் பண்ணிக்க சொல்லி எனக்கு எவ்வளவோ சொல்லிக் கொடுத்தான். ஆனா எனக்கு அவ மேல ஆசை இல்லை, அதனால விட்டுட்டேன். அப்புறம் என் பையனுக்கு காஞ்சனாவை கட்டலாம்னு இருந்தேன், அதுக்குள்ள அதுவும் கெட்டுப் போயிடுச்சு.
இப்ப நீ எப்படியாவது அந்த கார்மேகத்தோட பொண்ணு குழலியை வளைச்சுப் போடுற வழியைப் பாரு. அந்த தம்புசாமி கிழவன் சின்ன ஆளு கிடையாது. என்னதான் இருந்தாலும் தன் தங்கச்சி வீட்டுல (பாரிக்கு) தான் பேத்தியைக் கொடுக்குறதுக்கு ஒத்தக் கால்ல நிப்பான். ஆனா, இந்த கார்மேகம் இருக்கானே… அவன் ஒரு சரியான முட்டாள் பய! “இத்தனை வருஷமும் நான் சொன்ன பொய்களை எல்லாம் உண்மைன்னு நம்பிகிட்டு இருக்கான். அவன் அப்படி நம்பி நம்பி தான், எழில்வேந்தனையும் அவனையும் நான் பிரிச்சு வச்சேன்!”
“பாவம், கார்மேகத்தோட மூத்த மவன் கபிலனும் நான் சொல்றபடிதான் கேட்டுட்டு ஆடிக்கிட்டு இருக்கான். நான் உன் அப்பனைக் கெட்டவன், அவனைப் போய்க் குத்துடான்னு சொன்னாக்கூட, கபிலன் கண்டிப்பா கேட்டுட்டுப் போய்க் குத்திடுவான். அந்த அளவுக்கு அவனையும் என் கைக்குள்ள வச்சிருக்கேன். மேலும் பஞ்சாயத்து எலெக்ஷனில் கார்மேகம் தோற்று போன கதையை சொல்லி சிரித்தான்.
வயல் வரப்பில் மறைந்து நின்று இதையெல்லாம் கேட்ட கார்மேகத்திற்கு உடம்பெல்லாம் நடுங்கியது. கோபமும் அதிர்ச்சியும் அவரது தொண்டையை அடைத்தன.
இத்தனை வருடங்களாகத் தான் நல்லவன் என்று நம்பிப் பழகிய மாணிக்கம்தான் தன் குடும்பத்தின் மிகப்பெரிய சதிகாரன் என்பதும், தன் மாமன் வீட்டினரோடு தன்னைத் திட்டமிட்டுப் பிரித்தது இவன்தான் என்பதும், இப்போது தன் சொந்த மகன் கபிலனையும், அழிக்கத் துடிப்பதும் அவனுக்கு அப்பட்டமாகப் புரிந்தது.
வயல் வரப்பில் கேட்ட அந்தப் பயங்கரமான உண்மைகளும் சதிகளும் கார்மேகத்தின் நெஞ்சை உலுக்கிப் போட்டிருந்தன. அதிர்ச்சியிலிருந்து ஒருவாறாகத் தன்னைச் சுதாரித்துக் கொண்டவர், சத்தமே இல்லாமல் வந்த வழியே பின்வாங்கினார். அவருக்கு இப்போது எல்லாமே தெளிவாகப் புரிந்தது. தான் இத்தனை வருடங்கள் யாருக்காகத் தன் சொந்த மாமன் வீட்டை எதிர்த்தாரோ, அவன் ஒரு கொடிய விஷப்பாம்பு!
நேராகத் தன் அத்தை வீட்டு வாசலுக்கு ஓடினார்.
இன்னும் கொஞ்ச நேரம் நின்று கார்மேகம் காதில் வாங்கி இருந்தால் அடுத்து நடக்கப்போகும் விபரீதத்தை கொஞ்சம் தடுத்து இருக்கலாம் என்ன செய்ய விதி யாரை விட்டது..
தாத்தா இப்போது நான் என்ன செய்யணும் என்று மாணிக்கத்திடம் கேட்டான்.
அதுக்கு மாணிக்கம் இப்ப நீ என்ன பண்ற… “அந்தப் பொண்ணு குழலி காலேஜ் போயிட்டு வரும்போது எப்படியாவது ஆள் வச்சுத் தூக்கிட்டுப் போய், ரெண்டு நாள் வெளியில யாருக்கும் தெரியாம வச்சிரு. ஆனா, அவளை ஒன்னும் பண்ணிடாத. மிச்சப்படியை வச்சு நான் தம்புசாமியையும் கார்மேகத்தையும் மிரட்டிப் பஞ்சாயத்து பண்ணி, குழலியை உனக்கே கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்!”
தன் பேரனுக்கு இப்படி ஒரு கொடூரமான சதித் திட்டத்தைத் சொல்லிக் கொடுத்தான் மாணிக்கம்.
“மாமா… மாமா…” என்று தவிப்போடு கூப்பிட்டுக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தவர், அங்கே அமர்ந்திருந்த தன் மாமா சக்கரையின் கால்களில் சட்டென்று விழுந்து கதறி அழத் தொடங்கினார்.
திடீரெனக் கார்மேகம் இப்படி வந்து காலில் விழுந்து அழுவதைக் கண்டு சக்கரையும், கனகுவும் பதறிப் போனார்கள்.
“நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் மாமா! மகா பாவி மாமா நான்! அந்த மாணிக்கத்தோட நயவஞ்சக பேச்சை உண்மைன்னு நம்பிதான் இத்தனை காலமும் ஆடிக்கிட்டு இருந்தேன்…” என்று கதறிய கார்மேகம், கடந்த காலத் துரோகங்கள் அனைத்தையும் ஒன்னுவிடாமல் கொட்டித் தீர்த்தார்.
தான் எழில்வேந்தனை எதிரியாக நினைத்து விலக்கியதும், மாணிக்கத்தின் பேச்சை நம்பிப் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்றதும், ஆனால் மாணிக்கம் தன்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஊர் முழுக்க மற்ற ஆளுக்கு ஓட்டுப் போடச் சொல்லித் துரோகம் செய்ததையும் சொல்லி விம்மி விம்மி அழுதார்.
கேட்ட சக்கரைக்கும் கனகவிற்கும் பேரதிர்ச்சியாக இருந்தது.
ஆனாலும், இத்தனை வருடப் பகைக்குப் பிறகு தன் தங்கை மகன் கார்மேகம் மனம் திருந்தித் தன் வீட்டிற்கு வந்து நின்றதை நினைத்து சக்கரையின் மனதில் ஒரு பக்கம் சந்தோஷமும் கண்ணீரும் முட்டிக்கொண்டு வந்தது. அழுதுகொண்டிருந்த மருமகனைத் தோள்களைப் பற்றித் தூக்கி நிறுத்தினார்.
“ஐயா… மேகா! அழாதப்பா… அழாத. உன் கண்ணுல தண்ணி வந்தா என் நெஞ்சுல ரத்தம் வருதுடா. என் தங்கை பெத்த புள்ளை நீ… எனக்கு நீயும் என் புள்ளை மாதிரிதானே? போதும்… நடந்தது எல்லாம் நடந்து போச்சு. இத்தனை வருஷம் அந்தப் பாவி மாணிக்கம் நம்மள வச்சு விளையாடி இருக்கான். இனிமே நடக்க வேண்டியதை நாம தைரியமாப் பார்க்கலாம், எழுந்து நில்லுப்பா,” என்று சக்கரை அவனுக்கு ஆறுதல் கூறினார்.
ஆனால், கார்மேகத்தின் நெஞ்சுக்கூடு இன்னும் குற்ற உணர்ச்சியால் வெடித்துக் சிதறக் காத்திருந்தது.
“இல்லை மாமா… நான் இன்னும் பெரிய துரோகி! என் தங்கச்சி காஞ்சனாவை என் கையாலேயே கொன்னுட்டேன் மாமா! அன்னைக்குக் கோபத்துல நான் அடிச்ச அடியிலதான் அவ படிக்கட்டுல விழுந்து செத்துப்போனா. அந்தப் பாவம்… அந்தப் பொல்லாத குற்ற உணர்ச்சிதான் இத்தனை வருஷமா என்னை நிம்மதியா தூங்க விடாம, சாக விடாம தினம் தினம் அடிச்சுக் கொல்லுது மாமா!” என்று அலறினார்.
அங்கிருந்த சுவரில் மாலை அணிவித்து மாட்டப்பட்டிருந்த தன் தங்கை காஞ்சனாவின் புகைப்படத்தை நோக்கி ஓடினார் கார்மேகம். அந்தப் படத்தின் முன்னே மண்டியிட்டு, தன் தலையைத் தரையில் முட்டி, “என்னை மன்னிச்சிடு காஞ்சனா… உன்னைக் கொன்ன இந்த அண்ணனை மன்னிச்சிடு தாயி!” என்று கத்தி கதறி அழுதார்.
அவரது அலறல் சத்தம் அந்த வீட்டின் சுவர்களில் மோதி எதிரொலித்தது. சக்கரையும் கனகாவும் கார்மேகத்தின் இந்த நிலையைப் பார்த்து, கண்ணீர் மல்க பேச்சற்று நின்றனர்.!
செடி வளரும்….

