திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 4 – 1

அத்தியாயம்-4

 

நிரஞ்சனின் வீட்டில் பிரமாண்டமாக அமைந்திருந்த வரவேற்பறையில் அமர்ந்திருந்தான் பாலா. நிரஞ்சனின் செயலாளன், வலதுகை, இடதுகை எல்லாமே அவன்தான்.

முறையான தேர்வின் அடிப்படையில் தெரிவாகி அவனின் செயலாளனாக வந்திருந்தாலும், வேலையை தாண்டி அவர்களுக்குள் நல்லதொரு நட்பு இழைந்தோடியது.

ஐபாடில் அன்றைய வேலைகளைப் பற்றி ஆராய்ந்துகொண்டிருந்தவன் நேரமாவதை உணர்ந்து கைக்கடிகாரத்தை திருப்பிப் பார்த்தான். நேரம் எட்டு.

‘நிரஞ்சன் வரப்போறார்‘ என்று எண்ணிக்கொண்டே நிமிர,

“குட் மோர்னிங் பாலா!” என்றபடி, மிக லாவகமாகவும் வேகமாகவும் படிகளை தாண்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தான் நிரஞ்சன்.

உள்ளே வெண்ணிற முழுக்கை ஷர்ட். வெளியே கருநீல கோட் ஷூட். அதற்கு பொருத்தமாய் டை, ஷுக்கள் என்று அன்று நடக்கப்போகும் மீட்டிங்க்கு கனகச்சிதமாய் தயாராகி, கம்பீரமாக இறங்கியவனிடம், “இண்டைக்காவது நான் முதலாவதா சொல்லுவம் எண்டு பாத்தா விடமாட்டீங்களே.” என்றான் பாலா.

“பாலா?” ஒருகணம் நடை நிற்க, அவன் சொன்னது விளங்காது ஒற்றை புருவத்தை உயர்த்திவிட்டு திரும்பவும் படிகளை வேகமாக கடந்து பாலாவை நோக்கி வந்தான்.

“பின்ன என்ன? ஒவ்வொரு நாளும் நான்தான் முதல்ல குட் மோர்னிங் சொல்லோணும் எண்டு நினைப்பன். ஆனா, நீங்க எப்படியும் முந்திடுவீங்க. பிறகுதான் நான்.” என்றான் சலிப்போடு.

“இண்டைக்கு(இன்றைக்கு) அதுகூட இல்லை..” சின்னக் கேலியோடு சொன்னான் அவன்.

அசடுதான் வழிந்தான் பாலா. “ஓகே ஓகே!! குட் மோர்னிங் நிரஞ்சன்!”

தலையசைப்பால் அதை ஏற்றுவிட்டு, ஒரு கையசைவால் பாலாவை அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்துகொண்டான்.

அவன் அமர்வதற்காகவே காத்திருந்ததுபோல் வந்து அவர்கள் இருவருக்குமான காலை உணவைப் பரிமாறினார் அன்னம்மா.

 

உண்டுகொண்டே, “நல்லா படிக்கிறாளா உங்கட பேத்தி?” என்று அவரிடம் விசாரித்தான் நிரஞ்சன்.

 

பூவாக மலர்ந்து போனது அவரின் முகம். “உங்கட புண்ணியத்தில நல்லா படிக்கிறாள் தம்பி. அவளின் பள்ளிக்கூடத்திலேயே அவள்தான் கெட்டிக்காரியாம்.” பெருமையோடு சொன்னார்.

 

‘எத்தனையோ வேலைக்கு மத்தியிலும் எங்கள மறக்கேல்ல தம்பி!’

 

“அது பள்ளிக்கூடம் இல்ல அன்னம்மா. கம்பஸ்” சிரிப்போடு சொன்னான் பாலா.

 

“என்னவோ ஒண்டு! எனக்கு தெரிஞ்சதெல்லாம் என்ர பேத்தியும் உங்களை மாதிரி பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கிறாள். அதுக்கு காரணம் எங்கட தம்பிதான்!” என்று பெருமையோடு சொன்னவர் பாசத்தோடு நிரஞ்சனுக்கு பரிமாறினார்.

 

“போதும் அன்னம்மா..” என்று அவரை தடுத்துவிட்டு,

“இண்டைக்கு மீட்டிங்க்ல சொல்லவேண்டியது எல்லாம் ரெடியா?” என்று பாலாவிடம் கேட்டான்.

 

“ரெடி நிரஞ்சன். கார்ல போகேக்க ஒருக்கா செக் பண்ணிடுங்க.”

 

“ம்ம்.. ஆபீசுக்கு போகமுதல் ஹாபருக்கு போய், நேற்று வந்த கப்பலை செக் பண்ணிட்டு போவம். பிறகு நீங்க ஒருக்கா ஃபாக்டரிக்கு போயிட்டு வாங்க. மீட்டிங் முடிஞ்சதும் புதுசா நாங்க போடுற டின் ஃபிஷ் நான் டேஸ்ட் பாக்கிறமாதிரி எல்லாம் ரெடியா இருக்கோணும் பாலா. லண்டனுக்கு ஏத்துற சாமான் எல்லாம் ரெடியா எண்டு பாக்கோணும். இண்டைக்கு ராம்பிரசாத் வாரதா சொன்னாரே.. வாறாரா எண்டு இன்னொருக்கா கேட்டு கன்போர்ம் பண்ணுங்கோ..” என்று அடுத்தடுத்து கட்டளைகளை பிறப்பித்தவனை உள்ளூர வியப்போடு பார்த்தான் பாலா.

 

‘இவருக்கு நான் தேவையே இல்ல. எல்லாத்தையும் அவரே நினைவு வச்சிருக்கிறார்.’

 

அதைச்செய் இதைச்செய் என்று கட்டளையாக சொல்லாமல், நான் முதலாளி நீ தொழிலாளி என்று பிரிக்காமல், தன்னையும் இணைத்து சொல்லி, வேலைகளை வாங்கும் அவனின் சாதுர்யத்தை என்றும்போல் இன்றும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அவனால்.

 

‘ஒவ்வொரு நாளும் இந்தாள் வீட்டுக்கு வாறதே நடு இரவிலதான். அப்படியிருந்தும், எப்படித்தான் அடுத்தநாள் காலையில் அதே உற்சாகத்தோடு இருக்க முடியுதோ? ஒரே சொந்தமாய் இருந்த பாட்டி இறந்தபோது கூட இறுகிப்போய் நின்றாரே தவிர, எந்த வேலையும் இடையில் நிற்கவும் இல்லை. துயரில் துவளவும் இல்லை. இதில் பாட்டி என்றால் உயிர்’ என்று எண்ணியபடி உண்டான் பாலா.

 

உணவை முடித்துக்கொண்டு புறப்பட்டனர் இருவரும்.

கார் அவனது கேட்டைத் தாண்டியபோது, அவர்களைக் கடந்தது ஒரு பச்சை நிற ஆட்டோ.

 

சட்டென நிரஞ்சனின் நெஞ்சில் ஒரு துடிப்பு. அவனுடைய உயிரே அவனைக் கடந்ததுபோல.. அந்த இடத்தைவிட்டு அவனால் நகரவே முடியாதது போல.. தன்னவளின் முகம் நெஞ்சில் உயிரோவியமாய் மின்னி மறைய, நெஞ்சிலோ உயிரைக் குடையும் வலி!

 

என்னவோ சொல்லிக்கொண்டிருந்த பாலாவிடம், “ஃபைவ் மினிட்ஸ் பாலா!” என்றுவிட்டு கண்களை மூடிக்கொண்டு சீட்டில் சாய்ந்துகொண்டான்.

 

அவளில்லாத நாட்களை என்ன.. நொடிகளை கூட இனிமேலும் கடக்க முடியாது என்று கதறியது நெஞ்சு.

 

திடுக்கிட்டுப்போய் நிமிர்ந்தமர்ந்தான் நிரஞ்சன்.

 

“என்ன நிரஞ்சன்? ஏதாவது பிரச்சனையா?” அவசரமாகக் கேட்டான் பாலா. அவன் முகத்திலோ கலவரம்.

 

ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு, தன் முகத்தை வெளியே திருப்பிக்கொண்டான். கண்களிலோ என்றுமில்லாத வெறுமை!

 

எதிர்காலம் உண்டா இல்லையா என்று தெரியாமல் தான் கொண்ட நேசம் தரும் வலியை முதன் முதலாக அன்றுதான் உணரத்தொடங்கினான் நிரஞ்சன்.

 

அவனது காதல் அவள் மீதுதான்! அதன் எதிரொலியை தேடச்சொல்லி அவன் மனம் கேட்டதில்லை. தான் கொண்ட காதலிலே நிறைவோடுதான் அவன் நாட்கள் பயணித்தது. ஆனால் இன்று.. எதிரொலி வேண்டுமென்று அடம் பிடித்தது மனது. அவளை உடனேயே தன்னவளாக்கிட உள்ளம் துடித்ததில் தவித்துப்போனான் நிரஞ்சன்.

 

அவனால் முடியாததல்ல அது! அவன்தான் அதற்குத் தயாராயில்லை.

 

“நிரஞ்சன்.. உடம்புக்கு ஏதாவது செய்யுதா? ஏன் திடீரென்று ஒருமாதிரி ஆகீட்டிங்க..” உண்மையான அக்கறையோடு திரும்பவும் கேட்டான் பாலா.

 

அந்த அக்கறை மனதைத் தொட, திரும்பியவனிடம், “காரை ஹாஸ்ப்பிட்டலுக்கு விடவா தம்பி? ஒருக்கா பாத்துக்கொண்டு போவம்.” என்றார் ட்ரைவர் கதிரவன். அவர் முகத்திலும் பதட்டம். தன் மேல் அக்கறை கொண்டவர்களின் பாசம் அவன் இதயத்தை தொட்டது.

 

அம்மம்மா சொன்னதுபோல அவனுடைய எந்தவொரு பாதிப்பும் அவனை நம்பியிருக்கும் அத்தனை பேரையும் பாதிக்கும்.

 

“என் இறப்பில் கூட நீ கலங்கக் கூடாது ராஜா!” அவரின் கடித வரிகள் கண் முன்னால் வந்துபோனது.

 

இவர்களை எல்லாம் எவ்வளவு தூரத்துக்கு அறிந்து வைத்திருந்தால் அந்த வரிகளை எழுதியிருப்பார். அந்த உண்மை உறைக்க, தன் தவிப்பை தனக்குள்ளேயே அடக்கி, முகத்தை மலர்வாக மாற்றி, “ஒண்டுமில்ல பாலா. கொஞ்சம் அயர்வா இருந்தது. அதுவும் இப்ப ஓகே..” என்றான் தெளிவான குரலில் புன்னகைத்து.

 

“அப்பாடி! இப்பதான் நிம்மதியாக இருக்கு. என்ர கண்ணே உங்களுக்கு பட்டிட்டுதோ எண்டு பயந்திட்டன்!” என்றவனின் வெள்ளைப் பேச்சில் மெய்யாகவே புன்னகைத்தான் நிரஞ்சன்.

உள்ளம் மட்டும் உள்ளுக்குள் துடித்துக்கொண்டே இருந்தது.

 

அந்தப் பச்சை ஆட்டோ சென்று நின்றது ரதனின் வீட்டுக்கு முன்னால். ஆட்டோவில் இருந்து இறங்கியதுமே கூடவந்த தாய் தந்தையரை மறந்து, “சித்தி…! நான் வந்துட்டேன்…!” என்று கத்திக்கொண்டே ஓடிப்போனாள் ஜீவனிதா.

 

அவளைப்போன்று ஓடி வராவிட்டாலும், அவளின் வரவுக்காகவே வாசலில் காத்திருந்தவர் முகமெல்லாம் மலர, “வாடா செல்லம்! வாவா..!” என்றபடி விரைந்து வந்து, அவளை அணைத்து உச்சி முகர்ந்தார். புஷ்பராணியின் தங்கை செல்வராணி!

 

அவரோடு வந்த சிவகுமாரிடம், “சித்தப்பா… நான் வந்துட்டேன் வந்துட்டேன் வந்துட்டேன்..!” என்று துள்ளிக் குதித்தாள் ஜீவனிதா.

 

தமக்கை வந்ததில் சந்தோஷப்பட்டாலும், “இவ பெரிய மினிஸ்டர்! வந்திட்டாளாம்! மூஞ்சி புத்தகத்தில இந்த முகரக்கட்டைய போட்டு ஒரு ஸ்டேட்டஸ் போட்டுவிடட்டா?” என்று வெறுப்பேற்றினான் ரதன்.

 

அடுத்த கணமே ‘நங்’ என்று ஒரு குட்டு விழுந்தது அவன் தலையில்.

 

“ஐயோ அம்மா!” என்று அவன் வலியில் துடிக்க, “அடக்கி வாசி! இல்ல உன்ன கொன்டே போடுவன் படவா!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் அவள்.

 

அங்கே ஒரு ஜீவன் அந்த வார்த்தைகளை தன் உயிர் நாதமாய் நினைத்து வாழ்வதை அறியாமல் வெகு சாதாரணமாய் சொல்லிவிட்டுச் சென்றாள் அவள்.

 

வீட்டுக்குள் சென்றதுமே, “வாடா, கடலுக்கு போயிட்டு வருவம்.” என்று அவனை அழைத்தாள்.

 

ஒருமுறை அங்கு சென்று கால்களை நனைத்துவிட்டு வரவேண்டும்போல் உடலும் மனமும் பரபரத்தது அவளுக்கு!

“மாட்டன், போ!” அவள் குட்டிய கோபத்தில் அவன் சொல்ல,

“இரவிரவா நித்திரை கொள்ளாம வந்திட்டு, வந்ததும் வராம எங்க ஊர் சுத்த நிக்கிறாய்? குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுட்டு போய்ப் படு!” என்று அதட்டினார் அன்னை.

 

தாயை முறைத்துவிட்டு தகப்பனிடம் திரும்பி, “அப்பா! மரியாதையா அடுத்த ட்ரெயின்லையே அம்மாவ கூட்டிக்கொண்டு போங்கோ. இல்ல.. என்ன இங்கயும் நிம்மதியா இருக்க விடமாட்டா.” என்றாள் முறைப்பாடு.

அதன் பிறகும் அன்னை என்ன சொல்லியும் காதில் விழுத்தவில்லை ஜீவனி. அன்று மாலை கடற்கரைக்கு போவதற்கு ரதன் சம்மதித்தபிறகே உறங்கச் சென்றாள்.

 

நிரஞ்சன் அவனுடைய ஆபீஸிலேயே நான்காவது மாடியில் அமைந்திருந்த மீட்டிங் ஹாலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மீட்டிங்கை நல்லபடியாக முடித்துக்கொண்டு எல்லோரிடமும் விடைபெற்று வெளியேறினான்.

 

லிஃப்ட்டுக்குள் நுழைந்து தரை தளத்துக்கு அழுத்தினான். அதன் கதவுகள் மூடிக்கொண்டதுமே, கோர்ட்டை கழற்றி கையில் போட்டுக்கொண்டான். டையை தளர்த்திவிட்டான். என்னவோ மலையை புரட்டியதுபோல் மனதில் களைப்பு!

அவனுடைய தொழில்களில் முக்கியமானது ‘டின் ஃபிஷ்’ உற்பத்தி.

error: Alert: Content selection is disabled!!