33

மணமக்களிடம் சொல்லிக்கொண்டு வந்தவர்கள் புறப்பட ஆயத்தமாகினர். அதற்குமுதல், “அம்மாச்சி! என்னோட ஒருக்கா வாங்கோம்மா! பலகாரப் பை தர மறந்துபோனன்.” என்று அஜந்தாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போனார் மல்லிகா.

திவாகர் அங்கேயே காத்திருக்க, யாமினி மண்டபத்திற்கு வெளியே நடந்தாள். கண நேரமும் பார்வையை அகற்றவே மாட்டேன் என்பதுபோல் அவளையே வட்டமடித்தவனின் விழிகள் அவளை ஒருவழியாக்கியிருந்தன. அங்கிருந்து ஓடிவிட மாட்டோமா என்கிற நிலைக்கு வந்திருந்தாள். ஆனால், அவள் அப்படித் தனியாகப் போனதே நிரோஜனுக்கு வசதியாகிப்போயிற்று.

அவன் அவளைத் தேடி நழுவ, பேச்சுக் கொடுத்தபடி திவாகரை அங்கேயே பிடித்துவைத்துக்கொண்டனர் அவன் நண்பர்கள்.

தன் பின்னே நடப்பவற்றைக் கவனிக்காத திவாகரும் அஜந்தா வரும்வரையில் இவர்களோடு பேசிக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அவர்கள் புறப்பட்டுவிட்டார்களா என்று அறிய அவன் அன்னை அழைத்தார். அவன் அவரோடு பேசுவதற்குச் சற்றுத் தள்ளிப் போக, “ஏன் மச்சான், நாங்க பாக்கிறது மாமா வேலைதானே?” என்று நவீனின் கைச் சட்டையைச் சுரண்டியபடி கேட்டான் மித்ரன்.

“இதுல உனக்கு சந்தேகம் வேற?” என்றான் அவன்.

“நாளைக்கு எனக்கும் மாமா வேலை பாப்பீங்களாடா?” நவீனின் தோளை முகத்தால் உரசி வெக்கப்பட்டபடி கேட்டான் மித்ரன்.

“அவன் எனக்குப் பூ வச்சுப் பிள்ளையத் தந்தது காணும். நீ தள்ளு!” என்று அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் நவீன்.

இங்கே அவள் பின்னால் விரைந்த நிரோஜன், “யமி!” என்றான் அவசரமாய்.

அந்த அழைப்பில் பெட்டி ஒன்றுக்குள் போட்டு ஆணியறைந்து, மண்ணுக்குள் புதைத்துவிட்டதாக அவள் எண்ணியிருந்த உணர்வுகள் எல்லாம் பீறிட்டுக்கொண்டு கிளம்பவா என்றன. ஒரு கணம் அப்படியே நின்று தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் புறம் திரும்பினாள்.

“தேங்க்ஸ்!” என்றான் அவள் முன்னே வந்து நின்று.

அவள் ஏன் என்று கேட்கவில்லை. இலேசாகப் புருவங்களைச் சுருக்கி, விழிகளில் கேள்வியைக் குவித்தாள்.

error: Alert: Content selection is disabled!!