அத்தியாயம் – 3
சக்தியின் செய்கையில் எரிச்சலுற்ற அன்பு அவளை முறைத்துக் கொண்டிருக்க, அவள் கர்ம சிரத்தையுடன் கண்டிஷன்கள் என்னவென்று கேட்க தயாராக இருந்தாள்.
அவளது பாவனையில் பெருமூச்சுடன் இடவலமாக தலையசைத்த அன்பு, “கண்டிஷன் நம்பர் 1, ஹால், கிச்சன், பால்கனி எல்லாமே என்னோட கட்டுப்பாட்டுல இருக்கும் பொது இடங்கள். உனக்கு சொந்தமான இடம் உன்னோட பெட்ரூம் மட்டும்தான்.” என்றவன்,
“உன் ரூமுக்குள்ள நீ குப்பைத்தொட்டி மாதிரி வேணா வச்சுக்கோ, ஆனா ஹாலுக்குள்ள உன் கால் பட்டா கூட அது 90 டிகிரி நேரா இருக்கணும்!” என முடிக்க, யுவசக்தி அலட்சியமாக உதட்டைச் சுழித்து,”நெக்ஸ்ட்!” என்றாள்.
“கண்டிஷன் நம்பர் 2, கிச்சன் டைமிங். நான் சமைக்கும் போது நீ கிச்சனுக்குள்ள வரவேக்கூடாது. நீ சமைச்சு முடிச்சதும் நீ யூஸ் பண்ணுன பாத்திரங்களை உடனே கழுவி, உலர வைச்சு, அந்தந்த இடத்தில் வைக்கனும்.”
“மஞ்சள் தூள் டப்பாவுக்குப் பக்கத்துல மிளகாய் தூள் டப்பா தான் இருக்கணும். மாத்தி வச்சா, அன்னைக்கு உண்டான உனக்கான சமையல் டர்ன் கேன்சல் ஆகிடும்!” அன்பு கறாராகச் சொல்லவும்,
“டோன்ட் வொர்ரி ஆபிஃஸர்! எனக்கு பெருசா எதுவும் சமைக்க தெரியாது. எல்லாம் ஃபுட் டெலிவரி ஆப் தான்.” பல்லைக் காட்டி பெருமையுடன் இடைபுகுந்தாள் சக்தி.
அவளை முறைத்தவன்” அப்ப கண்டிஷன் 2.1, கண்ட நேரத்துல ஃபுட் ஆர்டர் போட்டு டெலிவரினு யாரும் காலிங் பெல் அடிக்கற சத்தம் கேட்கக் கூடாது.” எக்ஸ்ட்ராவாக ஒரு கட்டளையை சேர்த்தவன்,
தனது பட்டியலைத் தொடர, ” கண்டிஷன் நம்பர் 3, சவுண்ட் டிஸ்டபன்ஸ். நீ கிட்டார் வாசிக்கறதோ, பாட்டுப் பாடுறதோ இரவு 9 மணிக்கு மேல அலோவ்ட் கிடையாது. உன் ரூம் தவிர வெளியே ஃபோன் பேசும் போது கூட ஹெட்போன் கட்டாயம்.”
“நீ பேசற காதல் கதையோ, ஆபீஸ் நடக்கற காசிப்போ என் காதுக்கு வரக்கூடாது. மீறினா வைஃபை பாஸ்வேர்ட் மாற்றப்படும்.” புருவம் உயர்த்தி அன்பு சொல்ல,”அப்ஜக்ஷன் ஆபிஃஸர்!” அவள் கை உயர்த்தி நிறுத்தினாள்.
“எனக்கு காதோலு பண்ண ஒரு பண்ணாடையும் கிடையாது. அதோட என்னோட ஆஃபிஸ்க்கு நான் போறதே அபூர்வம். எல்லாம் லேப்டாப்ல தான் என் வேலையே!” விரைப்புடன் அவள் விளக்கம் அளிக்க, அன்பு தோள்களை குலுக்கினான்.
” கண்டிஷன் நம்பர் 4, சன்டே க்ளினீங் டே. ஸோ, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வீடு முழுக்க ஒட்டடை அடிச்சு, மாப் போடனும். ஹால் அப்றம் பால்கனியோட க்ளினீங் பொறுப்பு உன்னோடது. ”
“ஞாயித்துக்கிழமை மதியம் 12 மணி வரை தூங்குற பழக்கம் இந்த வீட்ல செல்லாது.” கண்டிப்புடன் சொன்ன அன்புவை பெரிய பெரிய மூச்சுகள் விட்டு கண்களை உருட்டி முறைத்தாள் சக்தி.
“இதென்னங்க அராஜகம்!? லீவு நாள்ல மனுசி நிம்மதியா தூங்கக்கூட கூடாதுனா எப்படி?!” எதிர்க்கேள்வி கேட்க, “தூங்கக்கூடாதுனு சொல்லலையே, உனக்கான வேலைய முடிச்சிட்டு போய் படுத்து உருளு! யாரு வேணாம்னா,” அசால்டாக வழி கூறினான்.
கண்களை மூடித் திறந்து பெருமூச்சுடன் அவள் நிற்க, “கண்டிஷன் நம்பர் 5 , நண்பர்கள், தோழிகள் யாரையும் எங்கிட்ட முன் அனுமதி வாங்காம வீட்டுக்கு அழைக்கக் கூடாது. குறிப்பாக ‘பாய் பிரண்ட்ஸ்’ உள்ளே வர அனுமதியில்லை.” அன்பு சொல்ல அவள் அமைதியாகப் பார்த்தாள்.
“இது தங்குற இடம், பார்ட்டி பண்ற கிளப் இல்ல! இந்த கண்டிஷன்ஸ்க்கு எல்லாம் ஓகேனா இதுல சைன் பண்ணிட்டு நீ இங்க தங்கலாம், முடியாதுனா போய்கிட்டே இரு.” அலட்சியமாகக் கூறி ஏற்கனவே தயாராக வைத்திருந்த ஒப்பந்த காகிதத்தை நீட்டினான் அன்புமதி.
சக்திக்கு தங்குவதற்கு உடனடியாக ஒரு இடம் தேவை என்கிற சூழ்நிலை. அதனால் தான் கிடைத்த இடத்திற்கு அனைத்தும் வேகமாக முடித்து இங்கே வந்தாள். அதனால் எதுவும் பேசாமல் அவன் காட்டிய அக்ரிமெண்ட்டை வாங்கினாள்.
அதை முழுதாக படித்து முடித்து சிரித்த சக்தி, “ஓகே ஆஃபிஸர்! நீங்க சொன்ன ரூல்ஸ் எல்லாம் ஏத்துக்கறேன். அதேப்போல எனக்கும் ஒரு கண்டிஷன் உண்டு.” அவள் நிறுத்த, புருவங்கள் உயர்த்தி என்னவென்று பார்த்திருந்தான் அவன்.
“இதுக்கு அப்பறம் இனிமே புதுசா இதுமாதிரி எதாவது கண்டிஷன் போட்டா, நீங்க கொடுத்த இந்த கண்டிஷன்ஸ் எல்லாம் செல்லாது, பார்த்துக்குங்க.” அதையும் அதில் குறித்துவிட்டு கையெழுத்திட்டவள் தன் அறைக்குள் சென்று மறைந்து விட்டாள்.
அவள் சொன்னதை கிரகித்து உள்வாங்கி விழித்த அன்பு, அடுத்து பேச வருவதற்குள் அவள் சென்று விட, ‘இவளை வச்சுட்டு இன்னும் என்னென்ன பார்க்க வேண்டி இருக்குமோ!’ அலுப்புடன் நினைத்துக் கொண்டு தன் பணியைத் தொடர்ந்தான்.
அறைக்குள் சென்ற யுவசக்தி கோபத்தில், “அடேய் பாதகா! நல்ல சேஃபான இடம்னு சொல்லி இப்படி இந்த செங்கொரங்கு கிட்ட கோர்த்து விட்டுட்டியேடா படுபாவி! இவனென்னடா மிலிட்டரி மாதிரி ரூல் போடுறான்!”
“இவன்கிட்ட எப்படி குப்பைக் கொட்டப் போறேனோ தெரியலையே!? மவனே! நீ மட்டும் கையில சிக்குன, உன்னை ஸ்லைஸ் பண்ணி சான்ட்விச் ஆக்கிடுவேன்டா டோமேட்டோ!” ஒருவனை வார்த்தைகளால் வறுத்தெடுத்து கொண்டிருந்தாள்.
அவளது அர்ச்சனைக்கு சொந்தக்காரன் நியூயார்க் நகரில் குளிருக்கு இதமாக ரஜாய்க்குள் நன்றாக தன்னை புதைத்துக் கொண்டு சுகமான உறக்கத்தில் இருந்தான்.

