மந்தாரைச் செடி ஓரத்தில் 20 – 2

புயல் வேகத்தில் வந்த பாரி தன் காரைப் பரங்கிப்பேட்டை எல்லைக்குள் கொண்டு வந்து நிறுத்திவிட்டு, துப்பாக்கியை இடுப்பில் செருகிக்கொண்டு சவுக்குத் தோப்பை நோக்கித் தனியாக ஓடி வருகிறான்.

பாபுவின் மற்ற இரண்டு நண்பர்களும் போதையில் அந்த இடத்திலேயே மட்டையாகிக் கிடக்க, குழலியின் மேல் வெறி கொண்டு அலைந்த பாபு அவள் இருக்கும் அந்தப் பாழடைந்த மறைவிடத்தின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

கை கால்கள் கட்டப்பட்டுத் தவித்துக் கொண்டிருந்த குழலி, அவனைக் கண்டதும் பயத்திலும் அதிர்ச்சியிலும் பின்னோக்கி நகர முயன்றாள்.

பாபு அவளை உற்றுப் பார்த்து வக்கிரமாகச் சிரித்தான். “என்னடி கார்குழலி… ரொம்பத்தான் துள்ளுன இல்ல? இன்னைக்கு நீ என் கைலதான் மாட்டியிருக்க. ரொம்ப வருஷமா உன் மேல எனக்கு ஒரு கண்ணுடி. இன்னைக்கு உன்னை அணுஅணுவா அனுபவிக்கப் போறேன்!” என்று கொக்கரித்தவன், பாய்ந்து அவள் மேல் விழுந்தான்.

அவளது ஆடைகளைக் கிழித்து, அவளைக் கெடுக்க அவன் அசுரத்தனமாக முயற்சி செய்ய… குழலி தன் முகத்தைத் திருப்பி, தன் முழு பலத்தையும் திரட்டி அவனிடமிருந்து தப்பிக்கப் போராடினாள்.

அதே விநாடி!

சவுக்குத் தோப்பை அதிரச் செய்துகொண்டு உள்ளே நுழைந்த பாரி, அந்தப் பாழடைந்த கதவை ஒற்றை மிதியில் உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்தான். தன் கண்முன்னே தன் காதலி சிதைக்கப்படுவதைக் கண்ட அவனது போலீஸ் ரத்தம் கொதித்தது.

சிங்கமாய் உறுமியபடி பாபுவின் சட்டையைப் பற்றித் தூக்கியவன், அவனது தாடையில் இடிபோல ஒரு குத்து விட்டான். பாபு காற்றில் பறந்து போய் சுவரில் மோதி விழுந்தான். அவனால் எழுந்திருக்கக் கூட முடியவில்லை.

தன் மனதிற்கு இனியவன், தன் மாமன் பாரி தன்னை வந்து காப்பாற்றிவிட்டான் என்பதை உணர்ந்த குழலியின் கண்களிலிருந்து விம்மி விம்மி அழுகை முட்டியது.

ஆனால், பாரிக்கு அங்கே நிற்க நேரமில்லை. ஆடை கிழிந்த நிலையில் அழுதுகொண்டிருக்கும் தன் காதலியின் கோலத்தைக் கண்டதும் அவனுக்கு நெஞ்சு துடித்தது, கோபத்தில் உடம்பு நடுங்கியது. வேகவேகமாகத் தன் காக்கிச் சட்டையைக் கழற்றியவன், அதைக் குழலியின் மேல் போர்த்தித் தன் உடலோடு அணைத்துக் கொண்டான்.

அவளது கட்டுகளை அவிழ்த்து, அவளைத் தோளோடு அணைத்து மெதுவாகத் தன் காருக்குக் கூட்டிவந்து உட்கார வைத்தான்.கார் சதுர்வேதமங்கலத்தை நோக்கிப் பறந்தது. வழிநெடுகிலும் குழலி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பயமும் அவமானமும் அவளை மௌனத்தில் ஆழ்த்தியிருந்தது.

இருவரும் ஊருக்குள் வந்து சேர்ந்தபோது இரவு 11 மணி ஆகியிருந்தது. பாரியின் கார் நேராகத் தனது வீட்டு வாசலில் வந்து நின்றது.

அங்கே கவலையோடு வாசலையே பார்த்துக் காத்திருந்த சகுந்தலா, கார்மேகம், தம்புசாமி மற்றும் சொந்தங்கள் ஆகியோருக்குக் காரைப் பார்த்ததும் தான் மூச்சே வந்தது.

கார் கதவைத் திறந்து குழலி மெதுவாக இறங்கினாள். அவளது முகத்தில் நகக்கீறல்களும், அவள் மேல் பாரியின் காக்கிச் சட்டை போர்த்தப்பட்டிருப்பதையும் பார்த்ததும் சகுந்தலாவின் தாய் மனம் துடித்தது.

“குழலி…!” என்று கத்தியபடி ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டு சகுந்தலா கதறி அழுதாள். இவ்வளவு நேரமாகப் பாறை போல மௌனமாக இருந்த குழலி, தன் தாயின் மார்பில் முகம் புதைத்து ஓவென்று அழுது தீர்த்தாள்.

மகளின் முகத்தில் இருந்த காயங்களையும், கலைந்திருந்த கோலத்தையும் பார்த்த சகுந்தலாவுக்கு ஏதோ விபரீதம் நடந்துவிட்டது போலத் தோன்றியது. “ஐயோ! என் பொண்ணுக்கு என்னாச்சு? அந்தப் பாவிங்க என் மகளை என்ன பண்ணாங்க?” என்று கதறினாள்.

பாரி உடனே குறுக்கிட்டு, “அத்தை! முதல்ல அமைதியா இருங்க. அவளுக்கு ஒன்னும் ஆகல… நான் கரெக்டான நேரத்துக்குப் போய் அவளைக் காப்பாத்திட்டேன். இப்போ அவளுக்கு ஓய்வுதான் முக்கியம். முதல்ல அவளை வீட்டுக்குள்ள கூட்டிட்டுப் போங்க,” என்று தனது வீட்டை நோக்கிக் காண்பித்தான்.

அப்பொழுது குழலி மெல்லிய, ஆனால் உறுதியான குரலில் சொன்னாள்:

“அம்மா… நம்ம வீட்டுக்குப் போகலாம்.”

தன் மாமன் பாரியின் வீட்டுக்குள்ளே செல்லாமல், “நம்ம வீட்டுக்குப் போகலாம்” என்று குழலி சொன்ன அந்த வார்த்தையைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் திகைத்தனர். குறிப்பாக, அவளிடமிருந்து இப்படி ஒரு மறுப்பைத் துளிகூட எதிர்பார்க்காத பாரி அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான்.

குழலி…” என்று பாரிவேந்தன் அதிர்ச்சியோடு அவளைக் கூப்பிட, அவள் அவனது முகத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்காமல், “அம்மா, நம்ம வீட்டுக்குப் போகலாம்…” என்று மீண்டும் உறுதியாகச் சொன்னாள்.

அவளது இந்தத் திடீர் விலகலும் மறுப்பும் பாரிவேந்தனின் நெஞ்சைச் சுட்டது. ‘அவளைக் காப்பாற்ற இந்த நள்ளிரவில் உயிரைக் கொடுத்து ஓடி வந்திருக்கிறேன்… ஆனால், இவள் என்னைப் பார்க்கக் கூட மறுத்துவிட்டு இப்படித் திமிராகப் பேசுகிறாளே!’ என்று பாரியின் உள்ளுக்குள் கோபமும் ஆத்திரமும் பொங்கி வர, அவன் தன் பற்களைக் கடித்தபடி கைகளை இறுக்கிக் மூடிக்கொண்டான்.

குழலியைத் தோளோடு அணைத்தபடி சகுந்தலாவும், கார்மேகமும் அவளைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு பக்கத்துத் தெருவிற்குச் சென்றனர்.

வீட்டிற்குள் நுழைந்ததும், மஞ்சு ஓடிப் போய் அடுப்பில் வெந்நீர் வைத்தாள். வெந்நீர் தயாரானதும் மென்மையான துணியால் குழலியின் முகத்தில் இருந்த நகக்கீறல்களையும், உடம்பில் இருந்த காயங்களையும் துடைத்துவிட்டு, அவளுக்குத் தைலமும் மருந்தும் தடவிவிட்டாள்.

சிறிது நேரம் கழித்து குழலிக்குச் சூடாகப் பால் கொடுத்து அவளைத் தேற்றிய பின், “அங்கே என்னதான் நடந்துச்சு குழலி? நீ எப்படி அவங்ககிட்ட மாட்டுன?” என்று சகுந்தலா கண்ணீரோடு கேட்க, குழலி மெதுவாக அன்று மாலை நடந்த சம்பவங்களை விவரிக்கத் தொடங்கினாள்.

கல்லூரி முடியும் நேரம். குழலி வீட்டிற்குக் கிளம்பும் முன், கல்லூரியின் ஓய்வறைக்கு சென்றாள்.அவளுக்குப் பின்னால் வந்த ஒரு கல்லூரிப் பெண், “அக்கா, என் போன்ல சார்ஜ் தீர்ந்துடுச்சுக்கா… ரொம்ப அவசரமா ஒரு இடத்துக்குக் கூப்பிடணும். உங்க போனை ஒரு நிமிஷம் தர்றீங்களா?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.

கல்லூரிப் பெண் என்பதால், ஏதோ அவசர உதவி என்று நினைத்துக் குழலியும் தன் மொபைல் போனை அவளிடம் கொடுத்தாள்.

அந்தப் பெண் போனை வாங்கி யாரிடமோ பேசுவது போலப் பாசாங்கு செய்து கொண்டே, குழலியிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்தாள். “அக்கா, நீங்க ரெஸ்ட் ரூம் போயிட்டு வாங்க… நான் பேசிட்டுத் தர்றேன்,” என்று அவள் சொல்ல, குழலியும் “சரி” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.

குழலி உள்ளே போன அந்தச் சில நொடிகளைப் பயன்படுத்திய அந்தப் பெண், திட்டமிட்டபடி குழலியின் போனைச் சுவிட்ச் ஆஃப் செய்து, அங்கிருந்த வெயிட்டிங் ஹால் சோபாவின் ஓரத்தில் யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டாள்.

குழலி வெளியே வந்ததும், அந்தப் பெண் பதற்றமில்லாமல், “தேங்க்ஸுக்கா… பேசிட்டேன். போனை உங்கள் பேக் உள்ள வச்சிருக்கேன்,” என்று பொய் சொன்னாள்.

பின்னர் இருவரும் ஒன்றாகக் கல்லூரிக்கு வெளியே வந்தனர். அப்போது வாசலில் ஒரு ஷேர் ஆட்டோ நின்று கொண்டிருந்தது. “அக்கா, நானும் பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போறேன். நீங்களும் வாங்க, ஒன்னாவே போகலாம்,” என்று அந்தப் பெண் அழைக்க, குழலியும் அவளை நம்பி ஆட்டோவில் ஏறினாள். ஆட்டோவில் அவர்கள் இருவர் மட்டும்தான் இருந்தனர்.

ஆட்டோ கல்லூரி எல்லையைக் கடந்து சில நிமிடங்கள் சென்றிருக்கும். சாலையின் திருப்பத்தில் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அதில் ஒருவனைப் பார்த்த குழலிக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவன் வேறு யாருமல்ல; தங்கள் ஊரைச் சேர்ந்த மாணிக்கத்தின் பேரன் பாபு!

“அட, நம்ம ஊரு பாபு!” என்று குழலி நினைத்துக் கொண்டிருக்கும்போதே, பாபு ஆட்டோவை மறித்து, “ஏய் குழலி! நீயா… நானும் பஸ் ஸ்டாண்டுக்குத்தான் போறேன். ஆட்டோல இடம் இருக்கா? நானும் வரட்டுமா?” என்று மிகவும் இயல்பாகக் கேட்டான்.

தெரிந்தவன்தானே என்று நினைத்த குழலி, “வாங்க… ஏறுங்க,” என்று சொன்னாள்.

ஆனால், பாபுவும் அந்த ஆட்டோவில் இருந்த பெண்ணும் ஏற்கனவே திட்டமிட்டுத்தான் இந்தச் சதியைச் செய்திருக்கிறார்கள் என்பதை அறியாத குழலி, அடுத்த நொடி சுதாரிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்தது.

ஆட்டோவில் ஏறிய பாபு, தன் பாக்கெட்டில் இருந்த குளோரோஃபார்ம் தடவிய கர்ச்சீப்பை எடுத்து, திடீரெனக் குழலியின் வாயிலும் மூக்கிலும் வைத்துப் பலமாக அமுக்கினான்.
குழலி திமிறிக் கத்த முயல்வதற்குள், அந்த மயக்க மருந்தின் வீரியம் அவளது உடலைச் செயலிழக்கச் செய்ய, அவள் மெல்ல மயங்கிச் சரிந்தாள்.

“அப்புறம் நான் கண் விழிச்சுப் பார்க்கும்போது, அந்தச் சவுக்குத் தோப்புக்குள்ள கைகால் கட்டப்பட்ட நிலையில கிடந்தேன்மா… நல்லவேளை மாமா கரெக்ட் டைம்க்கு வந்து என்னைக் காப்பாத்தினாரு. இல்லன்னா…” என்று குழலி அழத் தொடங்க, சகுந்தலா அவளைக் கட்டியணைத்துக் கொண்டு கதறினாள்.

சதுர்வேதமங்கலம் கிராமமே அன்றைய விடியலில் பரபரப்பாகக் காணப்பட்டது. இது ஒரு பொம்பளைப் பிள்ளை சம்பந்தப்பட்ட மானப் பிரச்சினை என்பதால், வழக்கம்போலப் பெரியவர்கள் யாரும் ஆரம்பத்திலேயே அவசரப்பட்டு போலீசுக்கோ, ஸ்டேஷனுக்கோ போக விரும்பவில்லை. ஊர்க் கட்டுப்பாடே முதன்மையானது என்று முடிவு செய்து, மறுநாள் காலையிலேயே ஊரின் மையத்திலிருந்த அரசமரத்தடியில் அவசரமாகப் பஞ்சாயத்தைக் கூட்டினர்.

வழக்கிற்குத் தலைமை தாங்கி அமர்ந்திருந்தார் தம்புசாமி. அவருக்குத் துணையாகச் சக்கரையும், அக்கம் பக்கத்து நாட்டாமைக்காரர்களும் வீற்றிருந்தனர்.

சபையின் நடுவே கார்மேகம் தான் நேற்று அதிகாலையில் நேரில் கேட்ட மாணிக்கத்தின் வஞ்சகப் பேச்சுகளையும், அவனது சதித் திட்டங்களையும் ஒன்னுவிடாமல் ஊர் ஜனங்கள் முன்னிலையில் உடைத்தார். அதைத் தொடர்ந்து பாபு ஆட்டோவோடு சதி செய்து குழலியைக் கடத்திச் சென்ற வழியும், பாரிவேந்தன் அவளை மீட்டுக் கொண்டு வந்ததும் ஊரார் முன்னிலையில் அப்பட்டமாக அம்பலமானது.

செடி வளரும்…

error: Alert: Content selection is disabled!!