MPK 02
“ஹலோ! நித்திலன்ர அம்மாவா கதைக்கிறது?” என்றபடி ஆரம்பித்த தொலைபேசி உரையாடலைக் கேட்ட மாத்திரம் சாதனாவின் நெஞ்சம் திக் திக்கென அதிர ஆரம்பித்தது.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
வள்ளுவன் எழுத்தாணி தன் திறமையைக் காட்டி விட்டு எங்கு சென்று ஒளிந்து கொண்டதோ!
அந்தக் குறளின் பொருளை வாழ்நாள் லட்சியமாக ஆக்கிக்கொண்ட சாதனா தான், ‘அப்படியெந்த வாய்ப்பையும் நான் உனக்குத் தரப்போவதில்லை!’ என்ற கொள்கையோடு பிறந்த மகனை வைத்துக் கொண்டு அனுதினமும் நெருப்புக்குழிக்குள் தலையை விட்டு விட்டு எடுப்பது போல் வெந்து சாகிறாள்.
“உங்கட மகன் கிரவுண்ட்ஸ்ல தன்னோட போட்டிக்கு ஓடின ஆதவனைத் தள்ளி விழுத்தீட்டான். அந்தப் பிள்ளைக்கு தலையில ரெண்டு தையல் போடுற அளவுக்குக் காயம். அவேன்ர அப்பா இஞ்ச ஸ்கூலுக்கு வந்து பிரச்சனைப்படுறார். நீங்க இங்க வரேலுமோ இப்ப?”
ஆசிரியர் குரலில் வெறுப்புணர்வை மறைத்துக் கொண்டு பேசுகிறார் என்று தெளிவாகப் புரிந்தது அவளுக்கு.
இத்தனை நாட்களும் பக்கத்தில் இருந்த பிள்ளையின் பென்சிலை உடைத்து விட்டான், இரேசரை பிய்த்து எறிந்து விட்டான், இதற்கும் கொஞ்சம் மேலென்றால் அடித்து விட்டான், கிள்ளி விட்டான் என்றுதான் புகார்கள் வந்திருக்கிறது.
ஆனால் இன்று? நினைக்கவே பதறியது. அந்தப் பிள்ளையின் பெற்றோர் இடத்தில் இருந்து யோசித்தவள், யார் பிள்ளை, பிள்ளைக்கு இப்போது சுகம் எப்படி என்று அவள் பதறி விசாரிக்க…
வகுப்பாசிரியரோ ‘எதுவென்றாலும் பள்ளிக்கு வந்து பேசிக்கொள்ளுங்கள்’ என்று விட்டு வைத்து விட்டார்.
வேறு வழியின்றி டொக்டரின் மனைவியிடம் தன் நிலைமையை எடுத்து சொல்லி, இரண்டுமணி நேர விடுப்புக் கேட்டவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
அவரிடம் இருந்து பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்ளக் கண்ணீரை ஆயுதமாக்கவில்லை. பரிதாபமான அவள் நிலை கொடுத்த அழுத்தத்தில் அவள் நெஞ்சம் விம்மி வெடிக்காமல் இருக்கக் கண்ணீர் துணை செய்தது.
அவளைப்பற்றி நன்கு தெரிந்த ராணியம்மாவும், “எதுக்குப் பிள்ளை இப்ப இந்த அழுகை? உன்னைத் தைரியமான பிள்ளை எண்டு நான் எல்லாருக்கும் சொல்லுறனான். நீ என்னடாவெண்டா? கண்ணைத் துடைச்சுப்போட்டுப் போய் அடுத்த வேலையைப் பார், போ.” என்று மனிதியாய் அவளைத் தட்டிக் கொடுத்தவர், மருத்துவமனை ஓனரின் மனைவியாக,
“உனக்குப் பதிலா சௌமிய நிக்க விடுறேன். அவாவால கனநேரம் சமாளிக்க ஏலாது. அதால நீ ரெண்டு மணித்தியாலத்துக்குள்ள இங்க வந்திருக்கோணும்.” என்றும் சொல்லி அனுப்பினார். சௌமி அவரின் தங்கையின் மகள்.
சரியென்று அவருக்குத் தலையாட்டி விட்டுத் தன் வெகோ ஸ்கூட்டரில் பறந்தாள் அவள்.
*************************
“இந்த வீட்டில எல்லாத்துக்கும் நான் தான் சாகோணும். லைட்டு போடக் கூட ஒருத்தரும் கை வளைக்காயினம்.”
இருள் விழுங்கியிருந்த வீட்டைக் கண்டு சலித்தபடி சுவரில் இருந்த
மின் ஆளிகளில் தன் கோபத்தைக் காட்டினார் சுதா.
வெளிச்சம் வீட்டை நிரப்பியதும் மகளைக் கத்தி அழைக்கப் போனவர், விறாந்தையின் மூலையில் முகம் இறுகி தலை சிதம்பி, ஒற்றைக் கையால் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த மகளைக் கண்டு துணுக்குற்றார். அடுத்து அவர் கண்கள் தேடியது பேரனைத்தான்.
அவள் இருந்ததற்கு எதிர் மூலையில் கைகால்கள் முழுதும் இரத்தநிற தழும்புகள் சுமந்தபடி விறைத்துப் போய் அமர்ந்திருந்தான். அவன் முன்னே குச்சி குச்சியாய் சிதறிய நிலையில் கொய்யாத்தடி.
ஏழு வயது சிறுவன்… தாய் அடித்தால் எப்படிக் கத்தி அழுதிருக்க வேண்டும்? ஆனால் நித்திலன் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. இந்த வயதில் இவ்வளவு அழுத்தம் அவனுக்கு எங்கிருந்து வந்தது என்றுதான் தெரியவில்லை.
இருவரையும் பார்த்த சுதா, தான் எதையுமே பார்க்காதது போல் அடுப்படிக்கு நகர, அவரின் செயல் ஏற்கனவே வேதனையில் இருந்த சாதனாவை இன்னும் வேதனைப்படுத்தியது.
உறவுகள் இருந்தும் இல்லை என்ற நிலை. இதற்கு எதற்கு இவர்களோடு இருக்கவேண்டும் நான்? தனியாக ஒரு குடிசை போதாதா?
‘தனியான குடிசை உனக்கு மட்டுமல்ல, உன்னைத் தவறாக அணுக முயல்பவருக்கும் கூட நல்ல வசதி தான்.’
மனசாட்சியின் குரலுக்கு அடங்கியவள்,
மனது கேளாமல் தாயிடம் கேட்டேவிட்டாள்.
“ஏன் அம்மா, இவனும் உங்களுக்குப் பேரன் தானே? இப்பிடி காயப்பட்டுப் போய் இருக்கிறான், என்னண்டு கேட்டு அவனிட்ட கதைச்சா என்ன?”
“ஏன், நான் கதைக்கப் போக, உன்ர பெடியன் மட்டு மரியாதை இல்லாம எனக்குக் கை நீட்டவோ? இதுல இப்ப புதுப்பழக்கம், ஆரேன் எதேன் கதைச்சா, காறி மூஞ்சைல துப்புது.” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கினார்.
‘இது எப்ப?’ என்று அயர்ந்து போனவள், கோபமாக மகனிடம் திரும்பி, “அம்மம்மா சொல்லுறது உண்மையே? ஆருக்குத் துப்பினனீ?” அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாவது போல் அவள் அதட்டிக் கேட்க,
அவனோ துளியும் பயம் என்பதே இன்றி,
“நான் யதுவை விளையாடக் கூப்பிட்டனான். அவனும் விளையாட வந்தவன். ஆனா துளசி அத்தேன்ர தங்கச்சி, நான் ஊத்தைப் பெடியன், என்னோட விளையாடக் கூடாதாம் எண்டு சொல்லித் துப்பிக் காட்ட, அவனும் என்னைப் பார்த்துத் துப்பிட்டு போட்டான். அதான் நான் ரெண்டு பேருக்கு மேலயும் துப்பினான்.”
‘இந்தா… அடிக்கப் போறியோ, அடி!’ என்ற தோரணையில் சொன்னான்.
சாதனா மகனின் திமிரில் கடுமையாய் முறைத்து விட்டு அதே முறைப்புடன் தாயைத் திரும்பிப் பார்த்தாள்.
“இப்ப விளங்குதோ, ஆருல முதல் பிழை எண்டு? சின்ன பிள்ளையளுக்கு முன்னால பெரியவை பெரியவை மாதிரி நடக்கோணும்.” என்றவள்,
“அதுக்கெண்டு நீ செஞ்சது சரி எண்டு சொல்ல வரேல நான். இந்தப் பழக்கம் இதோட நிண்டுடோனும். இல்லையெண்டு வை, நாக்கை இழுத்து வச்சு சூடு வைப்பன் உனக்கு!” என்று மகனையும் கடுமையாக எச்சரித்தாள்.
“ஓம்.. ஓம்.. உன்ர வெருட்டைக் கேட்டுத் திருந்திற பிள்ளை தான், உன்ர பிள்ளை. உன்னட்ட அடிவாங்கி அடிவாங்கி அவனுக்கு மரத்துப் போச்சுது. நல்ல போர்டிங்கா கொண்டு போய் சேர்த்து விட்டாத்தான் சரி வருவான்.”
சுதாவின் சொற்கள் மதியம் பள்ளியில் நடந்தவைகளை நினைவுக்குக் கொண்டு வந்த சாதனா,
“இனி அதுதான் செய்யோணும் போல.” என்றாள் பெருமூச்சும், பெருங்கவலையும் சேர.
“நான் ஒரு போர்டிங்குக்கும் போமாட்டேன்.” என்றான் தாயையும் அம்மம்மாவையும் முறைத்து.
“அப்ப, இஞ்ச இருந்து எல்லார்ட உயிரையும் எடுக்கப் போறியோ? உன்னால அக்கம் பக்கத்துல ஒருதரோடயும் ஒற்றுமை இல்லை. நீ நிக்கிற இடத்துல சின்னனுகளை நிக்க விட யோசிக்குதுகள். பெரியவைக்கும் உன்னைக் கண்ணுல காட்டக் கூடாது. பிள்ளையள் எண்டா குழப்படி இருக்கத் தான் செய்யிறது. அதுக்கெண்டு இந்த வயசுல இப்பிடி ஒரு கேடுகெட்ட தனத்தோட ஒருத்தனையும் நான் காணேல. இவனை இப்பிடியே விட்டியெண்டா, இன்னும் ரெண்டு வருஷத்துல பொட்டலம் கை மாத்த வெளிக்கிட்டுடுவான். பிறகு பொலிஸுக்கும் கோர்ட்டுக்கும் தான் அலைவ நீ”
“அம்மா! என்ன கதை அம்மா கதைக்கிறீங்க? அதுவும் அவனை வச்சுக்கொண்டு? இவனைப் பற்றி வெளில ஆர் என்ன கதைச்சாலும் நீங்க இப்பிடிக் கதைக்கலாமோ?” அதட்டல் பாதியும் ஆதங்கம் பாதியுமாகக் கேட்டாள்.

