அத்தியாயம் – 5
சக்தியின் செயலில் கோபமும் எரிச்சலும் கொண்ட அன்பு, அசுத்தமான அந்த சமையலறையில் நிற்கக்கூட பிடிக்காமல் ஹாலில் அமர்ந்து கொண்டான்.
அந்த இடம் இப்போதே சுத்தமாக வேண்டும் என்ற பதற்றம், அவனை அமைதியாக இருக்க விடவில்லை. ஹாலில் அமர்ந்து நொடிகளை எண்ணிக் கொண்டிருந்தான்.
அங்கு, அன்பு போட்ட அதட்டலிலும் திட்டிய பேச்சிலும் அதிர்ந்து நின்ற சக்திக்கு முணுக்கென கண்ணீர் வந்துவிட, “டென் செகண்ட்ஸ் ஓவர்” என்ற அறிவிப்பில் சட்டென தெளிந்தாள்.
ஏற்கனவே தலைவலி ஒருபுறம் விண்ணென்று தெறிக்க, அவசரமாக அங்கிருந்த துணியை எடுத்து அடுப்பு மற்றும் அதன் மேடை என அனைத்தையும் துடைத்து சுத்தம் செய்ய விழைந்தாள்.
அடுப்பு சூடாக இருப்பதை உணராமல் அதன் ஸ்டான்ட்ஐ வெறும் கையில் எடுக்க முயன்றதில் சூடுபட்டு “ஸ்ஸ்ஸ்ஆ! அம்மா!” என்ற அலறலோடு எடுத்த வேகத்தில் அவள் அதை கீழே போட, பதறியடித்து ஓடி வந்தான் அன்புமதி.
அவளுக்கு அடிப்பட்டு விட்டதோ என்றல்ல, எதை உடைத்தாளோ என்ற பதற்றம்!
கையில் சூடுபட்ட இடத்தை ஊதிக் கொண்டிருந்த சக்திக்கு தலைவலியை மீறி தற்போது கையில் பட்ட சூடு பெருவலியாகத் தெரிய, அவனைக் கண்டதும் கண்கள் கலங்க பாவமாக விழித்தாள்.
அடக்கப்பட்ட கோபத்துடன் கண்களை மூடி மூச்சை இழுத்து விட்டவன், “வெளியே போ இரிட்டேட்டிங் இடியட்! யூஸ்லெஸ் ஃபெலோ!” சத்தமிட்டு இரைய, அமைதியாக வெளியேறினாள் அவள்.
சில நொடிகளில் அந்த இடத்தை வேகவேகமாக அன்பு சுத்தம் செய்ய, அதுவரை சமையலறை வாசலிலேயே நின்றிருந்த சக்தி அவன் செய்ததை கவனித்திருந்தாள்.
வேலையை முடித்து அனைத்தும் சுத்தமாக இருப்பதை ஒருமுறை கண்களைச் சுழற்றி சோதித்தவன் அங்கிருந்து வெளியேறும் போது, வாசலில் நின்ற சக்தியை முறைக்கத் தவறவில்லை.
அவளைத் தாண்டிச் சென்ற அன்புவிடம், “ஸாரி ஆஃபிஸர்! நான் வேணும்னு செய்யலை. ஒரே ரூம்ல அடைஞ்சிருந்து லேப்டாப்ல வேலை பார்த்தது பயங்கர தலைவலி, அதான்.. காஃபி போடலாம்னு வந்தேன்”
” எனக்கு அதெல்லாம் தெரியாது. வீடியோ பார்த்து போடலாம்னு ட்ரை பண்ணி, இப்படி ஆகிடுச்சு.” என்றவள் இதை எல்லாம் இவனுக்கு ஏன் விளக்குகிறோம் என்ற உணர்வு வந்ததும்,”ஸாரி!” என்றதோடு கலங்கிய விழிகளை துடைத்துக் கொண்டாள்.
இடையிடையே சூடுபட்ட தனது கையை வேறு ஊதிக் கொண்டிருந்தாள். அன்புவின் பார்வை அவளது சிவந்த மென்கரத்தில் கோடாக தெரிந்த காயத்திலும், அவளது கண்ணீரிலும்பட சற்று நிதானித்தான்.
அவன் பதிலேதும் கூறாமல் தனது அறைக்குச் சென்று விட, அவன் முகத்தையே பார்த்திருந்தவள், சூடுபட்ட கையின் எரிச்சலை குறைக்க ஊதியபடி சோகமாக தனது அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள்.
தலைவலி வேறு ஒருபக்கம் படுத்தி எடுக்க, சூடுபட்ட எரிச்சல் மறுபக்கம் தாங்க முடியவில்லை. அந்தக் கையை மட்டும் நீட்டி வைத்து, தன்னைக் குறுக்கி படுத்தவள் விழியோரம் வழிந்தது கண்ணீர்.
“தலைவலி தாங்க முடியலம்மா! உங்க மடியில படுக்கனும் போல இருக்கு!” வாய்விட்டு ஏக்கமாகச் சொன்னவளின் நாசியை காஃபியின் மணம் நிறைத்தது.
அதில் அவள் பட்டென்று கண் விழிக்க, வாசலில் கையில் காஃபி கப்புடன் நின்றிருந்த அன்பு, “எழுந்து வா! உங்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றழைத்தபடிச் சென்றான்.
தவறு செய்த குற்ற உணர்வோடும், தலைவலி மற்றும் காயத்தின் வேதனையோடும் சோர்வாக எழுந்து வந்தவளிடம் ஒரு கோப்பையை கொடுத்து விட்டு ஸோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான் அன்பு.
அவளுக்குமே அந்தநேரம் அந்த காஃபி அத்தனை தேவையாக இருக்க, கண்கள் மூடி அதன் நறுமணத்தை முகர்ந்து, ஒரு சொட்டு விடாமல் பருகினாள்.
தலைவலி சற்று மட்டுப்பட்டது போலிருக்க அதில் தெளிந்த சக்தி, அந்த கோப்பையை கழுவிவைக்க எண்ணி வேகமாக சமையலறை வாசல்வரை வந்து அப்படியே ப்ரேக் போட்டு நின்றாள்.
‘அவன்தான் இன்று முழுவதும் கிட்சனுக்குள் வரக்கூடாது என்றிருக்கிறானே’ அதனால் அவள் யோசனையுடன் நின்று, ஸோஃபாவில் அமர்ந்திருந்தவனை திரும்பிப் பார்த்தாள்.
“காஃபி போட்டுக் கொடுத்ததே பெரிய விஷயம். கழுவி எல்லாம் வைக்க முடியாது. நீ குடிச்சதை நீதான் க்ளீன் பண்ணனும்.” இறுக்கமான முகத்துடன் கறாரான குரலில் கூறினான் அவன்.
அவன் சொன்னதும் வேகமாக உள்ளே சென்று அதைக் கழுவி துடைத்து வைத்துவிட்டு வெளியே வந்தவள், “ஸாரி நான் தெரியாம.. தேங்க்ஸ் ஆபிஃஸர்!” தனது தவறிற்கு மன்னிப்பு கேட்டு, காஃபிக்கு நன்றி கூறி இலகுவான புன்னகையுடன் ஒரு சல்யூட் வைத்தாள்.
“தோ பாரு! நான் கொஞ்சம் இல்ல ரொம்பவே சுத்தம் பார்க்கிறவன், உன்னை ரூமுக்குள்ளயே இருனு சொல்லலை, காமன் பிளேஸை யூஸ் பண்ணும் போது சுத்தமா வச்சிருக்கணும் அன்னிக்கு அதை மீன் பண்ணி தான் சொன்னேன்.”
“இனிமே இந்த மாதிரி எந்த ஏடாகூடமும் செய்யாம இருக்கறதுனா இங்க இரு, இல்லனா கிளம்பிப் போயிட்டே இரு. ஏதோ பாவமேனு நினைச்சு இன்னிக்கு காஃபி போட்டு கொடுத்தேன். நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்.” கண்டிப்புடன் சொல்ல,
அவள் ஏதோ சொல்ல தடுமாறுவது போல கீழ்க்கண்ணால் பார்த்தபடி நிற்கவும், “என்ன!!?” புருவங்கள் உயர்த்தி அவன் வினவிட, “நான் கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்கள்னா சொல்றேன்.” சக்தி பீடிகையுடன் கூற, அவளை கூர்மையாக பார்த்தபடி நின்றான் அவன்.
மௌனம் சம்மதம் என்பதாக எடுத்துக் கொண்டு, “இல்ல, உங்க காஃபி செம்மயா இருந்துச்சு. அதனால.. தினமும் நீங்க எனக்கு பாவம் பார்த்தா, சக்தி ஹேப்பி ஆஃபிஸர்!” ஈயென்று இளித்தவள் அறைக்குள் ஓடியே விட்டாள்.
அவள் சொன்னது ஒருநொடி புரியாமல் விழித்து, அவள் சொன்ன விசயம் புரிந்ததும் அவளை முறைத்தபடி, ‘முடியல’ எனும்விதமாக தலையசைத்து காலை உணவை சமைக்க கிட்சனுக்குள் சென்றவனின் முகம் இறுக்கம் தொலைத்து இயல்பானது ஏனோ? தெரியவில்லை!.

