திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 7

அத்தியாயம்-7

காலை எழுந்ததுமே மொட்டை மாடிக்கு வந்துவிட்டாள் ஜீவனிதா. பார்வை தன்பாட்டுக்கு பக்கத்துவீட்டுக்கு தாவியது.

அங்கே, அவளின் பரம விரோதி, நைக் ஸ்போர்ட்ஸ் டீ-ஷர்ட் ஜீன்ஸில் எஸ்ஸிக்ஸ் ஷூ அணிந்து காதில் ஹெட்போன் மாட்டி, ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தான். அதுவும் அவன் வீட்டு பால்கனியில்.

‘என்ன கன்றாவிடா இது? எல்லாக் கதைலையும் ஹீரோ தோட்டத்தை சுத்தித்தானே ஜாக்கிங் போவான். இவன் என்ன பால்கனில போறான்.’

அவளுக்கு எங்கே தெரியப் போகிறது, காலையில் எழுந்ததும் மாடிக்குத்தான் வருவாள் என்று அவளை அறிந்தவனாக, இரவிரவாக உறக்கமின்றித் தவித்தவன் அவளைக் கண்டுவிடும் ஆசையில் தான் தன் பால்கனியில் ஓடிக்கொண்டிருக்கிறான் என்று!

அவளைக் கண்டவனின் முகம் மலர்ந்துபோயிற்று! அது நாள்வரை வீடியோவில் மட்டுமே கண்டு ரசித்தவளை முதன் முதலாக நேரில் காண்கிறான்!

இரவு மங்கலாய் தெரிந்தவள் இப்போது பளிச்சென்று நிற்கிறாளே! ஆவலோடு பார்த்துப் புன்னகைத்தான்.

அதைக் கண்டு முகத்தை சுளித்தாள் ஜீவனி. உதட்டோரம் புன்சிரிப்பு மலர்ந்தது அவனுக்கு!

முகம் மட்டுமே கழுவியிருந்தாள். தலையை கூட வாரவில்லை. கலைந்த தலை. கை,கழுத்து, காது எதிலுமே ஒன்றுமில்லை. நெற்றியில் பொட்டுக்கூட இல்லை. ஆனாலும் நெஞ்சை அப்படியே அள்ளினாள்.

‘அலங்காரம் எதுவும் இல்லாமலே மனுசன இந்த பாடு படுத்துறாளே..’ பின் பிடரி கேசத்தை கோதியபடி சன்னமாய் சிரிப்பை சிந்தினான்.

எதையுமே நேரடியாக எதிர்கொள்ளும் அவளையே என்னவோ செய்தது அந்தப் பார்வை. இளம் மனதில் ஒருவித தடுமாற்றம். அதை உண்டாக்கியவன் மீது ஆத்திரம் தான் எழுந்தது. ‘இங்க என்னடா பார்வை வேண்டிக்கிடக்கு?’ முறைத்தாள் ஜீவனிதா.

துள்ளும் மீன் விழிகளின் முறைப்பை கண்டுகொண்டவன் ரசனையோடு அவளை நோக்கினான்.

‘எப்பவுமே வெடிக்கிறதுக்கு ரெடியாத்தான் இருப்பா போல.. கண்ணிவெடி மாதிரி..!’

அவளை சீண்டிப்பார்க்கும் ஆசை எழுந்தது. கண்களில் குறும்பு மின்ன, கொடுப்புக்குள் சிரித்தபடி, நின்ற இடத்திலேயே நின்று நன்றாக துள்ளிக் காட்டிவிட்டு ஓடத்துவங்கினான்.

சுர் என்று ஏறியது ஜீவனிக்கு. ‘அவள் எறிந்த கல்லால் துரைக்கு ஒன்றுமே ஆகேல்லையாம். சொல்லாம சொல்லிட்டுப் போறான்!’ பல்லை நறநற என்று கடித்துக்கொண்டே, அவனை தீப்பார்வை பார்த்தாள்.

‘இரவு பாவம் பாத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்! இவன!’ ஓடிக்கொண்டிருந்தவனையே விழிகளால் தொடர்ந்து எரித்தாள்.

அவனோ திரும்பவும் அவளுக்கு நேரே வந்து நின்று கையசைக்க, ஒருகணம் திகைத்துப்போனாள்!

மறுகணம் ‘எவ்வளவு திமிர் இருந்தா என்னப்பபாத்து.. அதுவும் என்னைப்பாத்து கையசைப்பான்? குளிர்விட்டுப் போச்சு இவனுக்கு!’ புசு புசு என்று ஆத்திரம் ஏறியது.

ஆட்காட்டி விரலை முகத்துக்கு முன்னால் நீட்டி, ஆட்டி ‘கவனமா இரு!’ என்று எச்சரித்தாள் ஆத்திரத்தோடு.

வாய் துறுதுறுத்தது, நறுக்கென்று நான்கு வார்த்தை கேட்டுவிட. ஆனால், ஏதாவது அவள் திட்ட வேண்டுமானால் சத்தமாகத்தான் திட்டவேண்டும். அப்போதுதான் அங்கிருக்கும் அவனுக்கு கேட்கும். அது அவனுக்கு மட்டுமில்லை கீழேயும் கேட்கும். அவளுடைய தாயின் காதில் விழுந்ததோ, அன்று புறப்பட இருக்கும் அவர் அவளையும் இழுத்துக்கொண்டு போய்விடுவார்.

எனவே, அவள் இன்றைக்கு மட்டும் ‘நல்ல பிள்ளை’யாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்!

நிரஞ்சனுக்கோ தன்னவள் தன்னிடம் நேரடி மோதலுக்கு தயாராகிவிட்டதில் உள்ளம் துள்ளிற்று!

அவளை இன்னும் சீண்டவேண்டும். அவனை உயிர்ப்போடு வாழவைக்கும் அந்த வார்த்தைகளை, அணுஅணுவாய் அவன் ரசித்து ருசிக்கும் அந்த வார்த்தைகளை அவள் வாயால் கேட்டே ஆகவேண்டும்! மனம் உந்தியது!

கண்களில் குறும்பு வழிய வாயை தொட்டுக்காட்டி, கையை அசைத்து ‘வாய் பேச வராதா?’ என்று சைகையால் கேட்டான்.

‘என்னை பாத்தா ஊமச்சி மாதிரியா தெரியுது.’

“டேய்! உன்ன கொல்லப்போறன் இப்ப!” என்றாள் தன்னை மறந்து சத்தமாக. கண்களில் அனல் பறந்தது!

அணிந்திருந்த ஹெட்போனையும் தாண்டி அவள் குரல் அவன் செவிகளை எட்டியபோது, உள்ளம் சிலிர்த்துப்போனது. விழிமூடி ஒருகணம் அதன் இனிமையை அனுபவித்தான். அவன் உயிராய் நேசிக்கும் தாரக மந்திரம் அல்லவா!

அடுத்தகணமே, அவளிடம் இன்னும் திட்டு வாங்கிவிட மனம் விளைய விழிகளை திறந்தான்.

இடுப்பில் கைகளை வைத்து, புசுபுசு என்று மூச்சுவாங்க முறைத்துக்கொண்டிருந்தாள் அவனின் அவள்!

‘இவ வேற, மனுசனோட நிலைமை தெரியாம!’ கண்களை அவளிடமிருந்து அகற்றவே முடியவில்லை அவனால்.

கண்களில் குறும்பு மின்ன, அவளை பார்த்து, பெருவிரலை(கட்டைவிரல்) நிமிர்த்தி, மற்ற நான்கு விரல்களையும் மடித்து, “என்ன சொன்னாய்?” என்று கையை கேள்வியாக ஆட்டிக் கேட்டான்.

அவள் முகத்தில் கோபச் சிவப்பு மிக வேகமாய் ஏறியது. ‘இரவு சோககீதம் வாசிச்சிட்டு இப்ப என்ன ஆட்டம் போடுறான்..’
“போடா டேய்!” சட்டென்று வாயில் ஒன்றும் வராமல் அவள் தடுமாற, தன்காதை தொட்டுக்காட்டி, கையை அப்படியும் இப்படியும் அசைத்து, ‘ஒன்றுமே கேட்கவில்லை’ என்பதாக உதட்டைப் பிதுக்கினான்.

“செவிட்டுச் சாம்பிராணி! வேணுமெண்டே நடிக்கிறியா? நீ செத்தடா இண்டைக்கு!” என்றபடி, வேகமாக அங்கும் இங்கும் பார்வையை அவள் சுழற்ற, “என்ன தேடுறாய்?” என்று பின்னாலிருந்து கேட்டான் ரதன்.

“அவன்ட மண்டைய உடைக்கோணும். அதான் ஏதாவது அம்பிடுதா(அகப்படுதா) எண்டு பாக்கிறன்..” நிரஞ்சனைக் காட்டிச் சொன்னாள்.

“ஹாய் அண்ணா..” என்று கையசைத்தான் ரதன்.

அசைத்த ரதனின் கையில் படார் என்று ஒன்று போட்டாள். “எனக்கு எரிச்சல கிளப்பிக்கொண்டு நிக்கிறான் அவன். அவனுக்கு நீ ஹாய் சொல்றாய்!”

“அப்ப இண்டைக்கே யாழ்ப்பாணத்துக்கு திரும்பிப்போற ப்ளான்ல இருக்கிற எண்டு சொல்லு..” நக்கலாகச் சொன்னான் ரதன்.

“என்னடா உளர்ற?” நிரஞ்சனில் இருந்த எரிச்சலில் அவனிடம் சினந்தாள்.

“நீ கத்தினது பெரியம்மாண்ட காதிலையும் விழுந்திட்டுது, கத்தாத எண்டு சொல்ல வந்தா நான் உளர்றனா?” என்றான் அவன் கோபத்தோடு.

“ஐயோ..! அந்த மனுசிண்ட காதில வேற விழுந்திட்டுதா. கடவுளே.. உயிரவாங்கப்போகுது மனுசி!” தலையில் கைவைத்துக்கொண்டு மதில் சுவரிலேயே அமர்ந்துவிட்டாள் ஜீவனிதா.

“எல்லாத்துக்கும் அவன்தான்டா காரணம்..” என்று நிரஞ்சனை காட்டி அவள் பல்லை கடிக்க, “கத்தினது நீ. இதுல அவர் என்ன செஞ்சவர்?” என்று கேட்டான் ரதன்.

“அவன்தான்டா நீ என்ன ஊமச்சியா எண்டு கேட்டு எனக்கு எரிச்சல கிளப்பினவன்.”

“நிரஞ்சன் அண்ணாவ பற்றி எனக்குத் தெரியும். அவர் அப்படி நடக்கிற ஆள் இல்ல. நீ வேணுமெண்டு அவர வம்புக்கு இழுத்திருப்ப. அவரோட சண்ட பிடிக்கிறதுக்காகவே இங்க வந்தவள் தானே நீ!” என்று குத்திக் காட்டினான் அவன்.

முதல் நாளிரவு தாயிடம் அவள் போட்டுக்கொடுத்த கோபமும் கைகொடுத்தது அவனுக்கு.

“ஐயோ இல்லையடா.. இண்டைக்கு நான் ஒண்டுமே செய்யேல்ல. அவன்தான் வம்புக்கு வந்தவன்.”

ரதனோ நம்ப மறுத்தான்.

“நம்புடா தம்பி. உண்மையாத்தான் சொல்லுறன்..” கிட்டத்தட்ட கெஞ்சினாள் அவனின் தமக்கை!

“நிரஞ்சன் அண்ணாவை எனக்கு சின்ன வயசில இருந்தே தெரியும்!”

அப்போதும் அவன் நம்ப மறுக்கவும், ஜாக்கிங் செய்கிறேன் என்கிற பெயரில் அங்கேயே சுற்றிக்கொண்டிருந்த நிரஞ்சனைத்தான் கண்களால் பொசுக்கினாள் ஜீவனி.

‘என்ர தம்பியே என்ர கதைய நம்பாத அளவுக்கு செய்த உன்ன விடமாட்டன்டா!’ என்று கறுவிக்கொண்டாள்.

அவளை நன்றாக ஏற்றிவிட்டோம் என்கிற உற்சாகத்தோடு, ரதனுக்கு கை காட்டுகிறேன் என்கிற பெயரில் ஜீவனிக்கு கைசசைத்துவிட்டு உள்ளே சென்றான் நிரஞ்சன்.

கீழே சென்றவளை சூலாயுதம் ஏந்தாத குறையாக நின்ற அன்னையே வரவேற்றார். அவர் எடுத்த பாடத்தில் செவிப்பறை கிழிந்தே போயிற்று!

‘எல்லாம் அவனால் வந்தது!’ பல்லைக்கடித்தபடி பொறுத்தாள். இந்த நேரத்தில் வாயை திறந்தால் கையோடு இழுத்துக்கொண்டு போனாலும் போய்விடுவாரே!

அவளே பெரிய வில்லி! அவளுக்கே வில்லியல்லவா அவர்!

அவர் சென்றதும்தான் அப்பாடா என்றிருந்தது ஆனாலும் அதுவரை இருந்த ‘காலிக்கு வந்துவிட்டோம்’ என்கிற சந்தோஷமும் துள்ளலும் தாயின் திட்டில் மொத்தமாக வடிந்துவிட, ஆத்திரம்தான் வந்தது! அதுவும் பக்கத்துவீட்டுக்காரன்மேல்!

படக்கென்று தன் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள்.

எவ்வளவு உற்சாகமாக இருந்தாள். எல்லாத்தையும் கெடுத்துவிட்டானே! அவனுக்கு ஏதாவது செய்தால் மட்டுமே அவளது ஆத்திரம் அடங்கும்!!

செல்வராணி எவ்வளவோ சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை. அடம் பிடித்துக்கொண்டு படுத்தே கிடந்தாள்.

கடைசியில், “அக்கா வா! நிரஞ்சன் அண்ணா வீட்ட போயிட்டு வருவம். இப்ப அவர் நிக்கமாட்டார். உனக்கு அந்த வீட்டை பாக்க விருப்பம் எல்லா..” என்று ரதன் சொன்னதும் விலுக்கென்று எழுந்து அமர்ந்தாள்.

“வா போவம்!” என்னவோ சண்டைக்கு போகிறவள் போன்று வாசலுக்கு விரைந்து செருப்பை மாட்டியவளை எல்லோருமே வித்தியாசமாகப் பார்த்தனர்.

அவள் அறையை விட்டு வந்ததே போதுமென்று அழைத்துச் சென்றான் ரதன்.

நிரஞ்சன் வீட்டு கேட் அருகில் காவலுக்கு நின்ற ராமசாமி ரதனைக் கண்டு புன்னகைத்தார். “வாப்பு! வாவா.. என்ன நேற்று இந்தப்பக்கம் காணேல்ல?” என்று வாஞ்சையோடு விசாரித்தார்.

ஒருகாலத்தில் துவண்டுபோயிருந்த தங்களின் ‘தம்பி’க்கு அருமருந்தாக இருந்தவன் என்பதில் அந்த வீட்டு வேலையாட்கள் அனைவருக்குமே ரதன் மீது பிரத்யேகமான பிரியம் உண்டு!

“அக்கா வந்திருக்கிறாள். அதுதான் அங்கிள் வரேல்ல. இவளை தெரியும் தானே? முந்தி சின்னவயசில் வந்தவள்.” என்று அறிமுகம் செய்து வைத்தான் அவன்.

“வாம்மா..!” என்றபடி அவளைக் கூர்ந்தவரின் பார்வை தன் நினைவடுக்குகளில் அவளைத் தேடுவதை உணர்த்த, “உங்களை ஒருக்கா சைக்கிளால இடிச்சிருக்கிறன் அங்கிள்.” என்றாள் அவள் சிரிப்புடன்.

“அவரை மட்டுமா? இந்த ஊருக்க நீ நிறையப்பேர இடிச்சிருக்கிறாய்.” என்றான் சின்னவன் கிண்டலாக.

“டேய்!” என்று அவள் முறைக்க,

“ஓமோம்!” என்று நினைவந்து அவரும் பெரிதாகச் சிரித்தார். பின்னே ஒருமாதம் கையை பத்துக்கட்டியவர் மறப்பாரா?

அவளுக்கோ கூச்சமாய் போயிற்று!

“இப்பயாவது சைக்கிள் ஒழுங்கா ஓடுவியா? இல்ல..” என்று கேட்டுவிட்டு மீண்டும் அவர் சிரிக்க, “அங்கிள்!” என்று சிணுங்கினாள் அவள்.

“சரிசரி! உள்ள போங்கோ. அன்னம்மா நிக்கிறா. ஏதாவது வாங்கிச் சாப்பிடுங்கோ.” என்று அனுப்பிவைத்தார் அவர்.

இதுதான் அந்த வீட்டின் பண்பு! அவரவர் அவரவர் வேலைகளை பார்த்தாலும் அவர்களும் அந்த வீட்டினரே! அப்படித்தான் உணர வைத்திருந்தான் நிரஞ்சன்!

அவரின் காது கேளாத தூரம் சென்றதும், “என்னடா, என்னவோ தன்ர வீடு மாதிரி உள்ளுக்குப்போய் சாப்பிடுங்கோ எண்டு சொல்லி அனுப்புறார். அந்த வில்லன் வந்து கத்தமாட்டானா? அவன் பொல்லாதவனாச்சே!” என்றாள் இவள்.

“லூசாடி அக்கா நீ! அவரின்ர வீட்டுலையே நிண்டுகொண்டு அவரைப்பற்றி மோசமா கதைக்கிறாய்! அதுவும் அவன் இவன் எண்டு.” கோபமாக அதட்டினான் அவன்.

அவர்கள் வீட்டில் வைத்துக் கதைப்பது வேறு இங்கு கதைப்பது வேறல்லவா!

அவளோ அலட்சியமாய் கையை விசுக்கினாள்! “அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு அவனுக்கு நான் பயப்பட!”

“அக்கா!!” என்று பல்கலைக் கடித்தான் சின்னவன். “ஒருக்கா சொன்னா கேக்கமாட்டியா நீ?”

“டேய்!!” என்று அவனுக்கு மேலால் அதட்டினாள் அவள். “அவனை சொன்னா உனக்கு என்னடா? நீ எனக்கு தம்பியா இல்ல அவனுக்கு தம்பியா? எப்ப பாத்தாலும் அவனுக்கே சப்போர்ட் பண்ற?” என்றாள் குரலை உயர்த்தி.

ஏன்டா வாயை திறந்தோம் என்றாகிவிட்டது அவனுக்கு! பின்னே, அவளின் குணம் தெரிந்தும் அதட்டியது அவனது தவறல்லவா!

“ஐயோ அக்கா கத்தாத! யாருக்காவது கேக்கப்போகுது!” என்று அவன் விழிகளை சுழற்ற, அவனோடு சேர்ந்து அலட்சியமாக சுழற்றியவளின் விழிகள் என்ன முயன்றும் முடியாமல் ரசனையில் மலர்ந்து போயிற்று!

தம்பி மேலிருந்த கோபம் கூட ஓடியே போனது!

error: Alert: Content selection is disabled!!