மாதொரு பாகம் கொண்டான் – 10

MPK 10

“பதட்டப்படாம கேளுங்கோ. மகனுக்கு மணிக்கட்டு எலும்புக்க முறிவு மாதிரிக் கிடக்கு. எப்பிடியும் வார்ட்ல மறிச்சு தான் பார்ப்பினம். அதுக்கேற்ற ஆயித்தத்தோட போங்கோ.”

நித்திலனுக்குக் கேட்காதவாறு மெல்லிய குரலில் அவன் சொல்ல, அவளுக்கு பயத்தில் மயக்கம் வரும்போல வியர்த்து வந்தது.

“டொக்டர்???”

“பயப்பிட ஒண்டும் இல்லை. சின்ன வயசுதானே! பிஓபி போட ஈசியா பொருந்திடும்.”

அவன் அத்தனை நம்பிக்கையாக சொன்னாலும் அவளின் அச்சம் தீரவில்லை. அது அவனுக்குப் புரிந்தாலும் அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால்,

“சரி.. அப்ப நான் வெளிக்கிடுறன். நாளைக்கு வார்ட் விசிட்டுக்கு வரேக்க வந்து பார்க்கிறன்.” என்றவனுக்கு ஏதோ போக்கில் தலையசைத்தவள், திடீரென்று தான் செய்தது ஞாபகம் வர, “டொக்டர்!” என்று அவனை நிறுத்தினாள்.

அவன் என்னவென்று பார்க்க, எப்படி சொல்வது எனத் திணறினாலும் கேட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஆதலால்,

“இல்… இல்லை டொக்டர். கொஞ்சம் முன்னுக்குத்தான் மகனுக்கு பிரிட்டோன் சிரப் குடுத்தனான். இதுக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கேக்க இதோட வேற மருந்து குடுத்தா ஏ…ஏதேன் பிரச்சனை ஆகுமோ?” மருண்டபடி கேட்டவளை சந்தேகமாகப் பார்த்தான் அவன்.

“பிரிட்டோன் சிரப் ஏன் குடுத்தனிங்கள்? அவருக்கு இருமலோ தடிமனோ இருக்கிற மாதிரித் தெரியேலயே!”

அவன் பார்வையின் கூர்மையிலும் ஐய வெளிப்பாட்டிலும் அவளால் பொய் சொல்ல முடியவில்லை. உண்மையை சொல்லவும் துணிவில்லை.

“உங்களைத்தான் கேட்கிறன். பிரிட்டோன் சிரப் ஏன் குடுத்தனிங்க?”

“என்… என்னோட வர நிண்டவர், அதான் நித்திரை கொள்ளட்டும்… வேளைக்கு வந்திடலாம் தானே எண்டு…” கோர்வையில்லாது திக்கித்திணறி சொன்னாள்.

ஆதித்யன் அவள் சொன்ன காரணம் கேட்டுக் கொதித்துப் போய் நின்றான். அவனிடம் வரும் நோயாளிகள் யாரும் தன்னிச்சையாக பரசிடமோல் எடுத்துக் கொள்வதையே பொறுத்துக் கொள்ளமாட்டான்.

“நீங்களே என்ன நோய்க்கு என்ன மருந்தெண்டு முடிவெடுக்கிறதா இருந்தா நாங்க என்னத்துக்கு? நாங்கள் எல்லாரும் வேற தொழிலைப் பார்த்துக் கொண்டு போறம்.” என்று இம்மை மறுமை பாராது விளாசி விடுவான்.

அப்படிப்பட்டவனிடம் அவன் வீட்டுக்கு வேலைக்கு வரவேண்டும் என்பதற்காக தன் மகனுக்கு மருந்து கொடுத்தேன் என்றால் சும்மா விடுவானா?

“உண்மையா பிள்ளை உங்கட தானோ? இல்லா, உங்களுக்கு வேண்டாத ஆற்றையேன் பிள்ளையைக் கடத்திக் கொண்டு வந்து பழி வாங்கிறீங்களோ?”

அவன் கேள்வியின் கனம் தாளாது, அவள் கண்கள் கடகடவென பொழிந்தது.

அவன் பாவமே பார்க்கவில்லை.

“நீங்க செய்த வேலைக்குப் பொலிஸ்ல தான் குடுக்கோணும். குடுக்கட்டோ?” என்ற, அவள் இன்னும் கேவினாள்.

“பெரியாக்களுக்கே டொக்டர்ட அனுமதி இல்லாம மருந்து குடுக்கக் கூடாது. நீங்க என்னடாவெண்டா நோயே இல்லாம சின்னப் பிள்ளையை நித்திரையாக்க மருந்து குடுத்திருக்கிறீங்கள் என்ன? கிட்டத்தட்ட இதுவும் ஒரு கொலை முயற்சி மாதிரித்தான். பிள்ளை வளர்க்க ஏலாட்டி எங்கேயேன் அரசாங்க இல்லம் வழிய கொண்டு போய் விட்டுட்டு உங்கட வழியைப் பார்த்துக் கொண்டு போக வேண்டியதுதானே? அதை விட்டுட்டு உங்கட சுகத்துக்கு அவனுக்கு விஷத்தைக் குடுப்பீங்களோ?” என்றவும் துடித்து விட்டாள் அவள்.

“இண்டைக்குத்தான் கடைசி. இனி உங்களுக்கு என்ர வீட்ட வேலையில்லை. ஒரு பிள்ளையின்ர ஆரோக்கியத்தைக் கெடுக்கிற பழி, பாவம் என்ர பிள்ளையளுக்கு வேண்டாம்.” என்றவன் மீண்டும் நித்திலன் இருக்குமிடம் விரைந்தான்.

சாதனாவோ மகனின் நிலை கொடுத்த குற்றவுணர்ச்சி ஒருபுறம், ஆதித்யன் பேச்சின் கனம் தாளாது மூச்சடைத்து நின்ற மனதின் வேதனை ஒருபுறம், அது எல்லாவற்றுக்கும் மேல் இங்கு இனி வேலையில்லை என்ற பட்சத்தில் அடுத்து இனி எந்த தேசம் செல்வது என்று பதில் இல்லா கேள்வி ஒருபுறம் என்று சிலையாக நின்று கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே போன ஆதித்யனோ, நித்திலனிடம் அவன் எப்படி விழுந்தான் என்று கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தான்.

கோபத்தில் கொதித்த ஆதித்யன், தான் சாதனாவிடம் சத்தமாகப் பேசிவிட்டதை உணரவில்லை. அதை நித்திலன் கேட்டிருக்கக் கூடும் என்றும் சிந்தித்திருக்கவில்லை.

ஆம்… வெளியே அவன் தாயைத் திட்டியதைத் தெளிவாகக் கேட்டிருந்தான் நித்திலன். அதனாலேயே இம்முறை அவன் கேட்பவற்றுக்கு எல்லாம் அலட்சியமின்றிப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அது பயத்தினால் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் தவறு. முதல் முறையாகத் தன்னைத் தாங்கி, தனக்காக ஒருவரைத் திட்டும் ஒரு மனிதரைக் கண்ட வியப்பில்… பரவசத்தில்… பக்தியில்… இன்னும் என்ன என்ன இல்லிலோ… அந்த மருத்துவனை இப்போது அவனுக்கு கொஞ்சமாகப் பிடிக்கவும் ஆரம்பித்துவிட்டிருந்தது.

இரண்டு வயதுப் பிள்ளை கூடத் தன் தாயை யாரும் விளையாட்டாகத் திட்டினால், அதற்குண்டான கோபத்தைப் புரியா மழலை மொழித் திட்டில் காட்டிவிடும்.

ஆனால் கோபம் வந்தால் பெரியவர்களுக்கு ஒப்பாக பேசும் நித்திலனோ, தன் தாயைத் திட்டியவன் மேலிருந்த எதிர்மறை அபிப்பிராயத்தைக் களைந்து அவனை விரும்ப ஆரம்பிக்கிறான். விந்தைதான்!

ஆதித்யனுமே இந்த திடீர் பவ்யம் எதனால் என்று புரியாது வியந்தாலும் வாய் திறந்து கேட்டுக் கொள்ளவில்லை.

அவனின் இந்தக் காயத்துக்கும் அவனுக்கும் சற்றும் சம்மந்தமே இல்லாத போதும் எப்படி விழுந்தான் என்று அவன் வாயிலிருந்து கேட்டதிலிருந்து அதற்கு மறைமுகக் காரணமாகத் தானும் இருப்பது போல் ஒரு எண்ணம் அவனைக் குடைய, அவன் பால் இரக்கமும் இளக்கமும் உண்டானது.

“நிலன் இப்ப என்னோட நேசம் எண்டா வாறீங்களோ, நானே உங்களைக் கொண்டு போய் ஹொஸ்பிட்டல்ல விடுறன்.” என்றவனை அவன் ஒன்றும் சொல்லாமல் பார்க்க,

“ஹொஸ்பிட்டல்ல விட மட்டும்தான் செய்வன். மற்றம்படி வேற டொக்டர் தான் உங்களுக்குப் பார்ப்பார். பயப்பிடாம வாங்கோ.” என்றான் விளக்கி.

அதற்கு அவன் “உங்களுக்கு ஆட்டோ ஓடத் தெரியுமோ?” என்று கேட்டிருந்தான்.

“ஆட்டோவோ? ஏன் அப்பிடிக் கேட்கிறீங்கள்?” என்றான் ஆதித்யன் குழப்பமாக.

“பின்ன, ஆஸ்பத்திரிக்கு ஆட்டோலதானே போகோணும்?”

அவன் பதிலில் ஆதித்யன் சிரித்து விட்டவன்,

“அப்பிடியும் ரூல்ஸ் இருக்கோ? ஆனா நான் ஒவ்வொருநாளும் காரிலதான போய் வாறனான். என்னை ஒருத்தரும் அங்க ஒண்டும் சொல்லுறேலயே!” என்றவன்,

“என்னோட வந்தா உங்களையும் ஒண்டும் சொல்ல மாட்டினம் எண்டுதான் நினைக்கிறன்.” என்று யோசனை போல் சொன்னவனை ஆஆ என்று பார்த்தவன்,

“அப்ப இப்ப என்னைக் காரில கூட்டிக் கொண்டு போகவோ கேட்டனீங்கள்?” என்று தன் முகம் முழுதும் ஆச்சரியக்குறியைப் புள்ளி வைத்துக் கேட்டவனை தன்னையறியாது வாஞ்சையாக வருடிக் கொடுத்தன ஆதித்யனின் விழிகள்.

“ஓம்… போவமோ?” கேட்ட மறுநொடி டிங்கு டிங்கு என அவன் தலை ஆடியது.

இருவரின் பேச்சும் சாதனா காதில் விழாமல் இல்லை. அவனின் வாகனத்தில் மருத்துவமனை செல்ல அவளுக்குத் துளியும் விருப்பமில்லை.

இதில் மகனின் பேச்சும் சம்மதமும் வேறு அவளை சங்கடத்துக்கு உள்ளாக்க, அதற்கு மேலும் மௌனிக்க முடியாமல்,

“நிலன்! ஆரையும் கஷ்டப்படுத்தக் கூடாதப்பு. ஆட்டோ இப்ப வந்துடும். நாங்க அதிலேயே போவம்.”

மகனுக்கு சொல்வது போல் அவனுக்கும் தன் முடிவை சொல்ல, தன்னை மறுக்கும் சூழலை இதுவரை சந்திக்காத மேல்தட்டு மனிதனான ஆதித்யனால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை.

ஆனால், தன் கால்கள் திசை திரும்பியதும் சூம்பிப் போன சின்னவனின் முகம் அவனை அடுத்த அடியை எடுத்து வைக்க விடவில்லை.

தன்னால் காயப்பட்டு நிற்பவனின் அந்த சின்ன ஆசையை நிறைவேற்றி வைத்தால் மட்டுமே தன்னால் நிம்மதி கொள்ள முடியும். இல்லையேல் இந்த ஏமாற்ற முகமே எங்கும் தோன்றி இம்சிக்கும் என்று விளங்க,

“நீங்க வாங்கோ, நாங்கள் போவம். அம்மா பின்னால ஆட்டோல வரட்டும்.” என்று விட்டு அவனை மெல்லப் பிடித்து இறக்கி விட, அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் நித்திலனிடம் ஒரு உவகையைக் கொடுப்பதாய்…

“இல்லை டொக்டர். உங்களுக்கு ஏன் கஷ்டம்? நீங்க இவ்வளவு தூரம் வந்து உதவினதே பெரிய விஷயம்.” என்ற சாதனாவைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை அவன்.

“எனக்கு இத செஞ்சா மட்டும்தான் எல்லாம் சரிப்படும். உங்களுக்கு ஆட்டோல தனியா வரக் கஷ்டம் எண்டா சொல்லுங்கோ, ஜீப்ல நாலு பேரோட வர ஏற்பாடு செய்றன்!” என்றதும் மனம் தளர்ந்தவளாக அவர்கள் வழியில் நின்று விலகினாள் அவள்.

அவன்தான் அப்படியென்றால் நித்திலனும் தாயையே மறந்தவனாக, புது உணர்வு கொடுத்த உற்சாகத்தோடு ஆதித்யனின் கைப்பற்றி நடந்து செல்ல, பார்த்திருந்த சாதனாக்கு மனது பிசைந்தது.

தான் வேதனையில் இருக்க தனக்கென்று இருக்கும் ஒற்றை உறவு, அதைத் துளியளவேனும் மதிக்காது, புதிதாய் முளைத்த மோகத்தில் அவன் பின்னால் செல்கிறதே என்றெல்லாம் யோசித்து யோசித்து மனதை சிதைத்தாள்.

ஆதித்யனுக்குக் கூட அவள் மனம் படும் பாடெல்லாம் தெரியாது அல்லவா? அதனால் அவனும் இதுவரை தன் மகள்களுடனும் அவர்களது சில தோழி தோழர்களுடனும் எப்படி இலகுவாக பேசுவானோ, அப்படிப் பேசியபடியே தன் வீடு வரை வந்தவன், காரின் முன் கதவைத் திறந்து அவனைத் தூக்கி ஏற்றி விட, அவன் தூக்கிய அந்த நொடி நித்திலனின் மனக் கிடங்குக்குள் சிதறி சீறிப்பாய்ந்த உணர்வலைகளுக்கு பெயர் வைக்கத் தெரிந்த புலவர்கள் இருந்தால் அவர்களுக்குப் பத்தாயிரம் அடியில் பொற்சிலை வைக்கச் சொல்லலாம்.

அவன் என்னவோ அவனுக்கு சரியாக அமர வராதோ என்றுதான் தூக்கி அமர்த்தினான். ஆனால் பிறந்து நினைவு தெரிந்ததிலிருந்து யாராலும் தூக்கிக் கொஞ்சி அறியப்படாத நித்திலனுக்கு அது பெரும் பரவசத்தைக் கொடுத்திருந்தது. காரில் செல்லப் போகிறோம் என்ற அவனின் முந்தைய பிரமிப்பைக் கூட இதன் முன் ஒன்றுமேயில்லாமல் ஆகிப் போனது.

ஒரு அடி என்றாலும் முதன் முதலாக தன்னைத் தரையில் இருந்து உயரத் தூக்கிய அவனின் பால் மொத்தமும் சாய்ந்துதான் நித்திலன்.

இப்போது ஆதித்யன் காரில் செல்வோமா, இல்லை என் தோளில் சுமந்து செல்லவா என்று ஒரு வார்த்தை கேட்டால் போதும். கார்க் கதவை அறைந்து சுற்றிவிட்டு அவன் கழுத்தை இறுகக் கட்டிக்கொள்ளும் நிலையில் இருந்தான் அவன்.

தொடரும்…

error: Alert: Content selection is disabled!!