மந்தாரைச் செடி ஓரத்தில் – 22

மந்தாரை 22

கிராமத்து வழக்கப்படி இரு வீடுகளின் வாசலிலும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மங்களகரமான பந்தக்கால் (முகூர்த்தக்கால்) ஊன்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இரு தரப்பிலும் ஏழு நாட்களுக்கு நலங்கு வைபோகம் விமரிசையாக நடந்தது. தினமும் ஒரு நிறத்தில் உடைகள் உடுத்தி, கிராமத்து மாமன்மார்கள், அத்தைகள் என அனைவரும் கூடி குழலிக்கும் பாரிக்கும் நலங்கு வைத்தனர். மஞ்சள் பூசி, பன்னீர் தெளித்து, மங்களப் பாடல்கள் பாடி அந்த ஏழு நாட்களும் சதுர்வேதமங்கலம் கிராமமே திருவிழா போலக் களைகட்டியது.

ஒவ்வொரு நாளும் நலங்கு முடிந்து, நள்ளிரவில் பாரியும் குழலியும் மொட்டை மாடியில் சந்தித்துப் பேசிக் கொள்ளும் அந்தத் தருணங்கள் அவர்களின் காதலை மேலும் ஆழப்படுத்தின.

ஏழு நாள் மங்களச் சடங்குகளும் இனிதே முடிந்து, இதோ திருமணத்திற்கான பொண்ணழைக்கும் நாளும் வந்துவிட்டது.பரிசம் போட்டு, எல்லாச் சடங்குகளும் முடிந்த பின், குழலியை முறைப்படி பக்கத்துத் தெருவில் இருக்கும் அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அதுவரை திருமணக் கோலத்திலும், சடங்குகளின் பிஸியிலும் சிரித்த முகமாக இருந்த குழலியின் நெஞ்சம், வீட்டை விட்டுப் புறப்படும் நேரம் நெருங்க நெருங்கக் கனக்கத் தொடங்கியது.

“நேரமாச்சுமா, கிளம்பலாமா?” என்று பெரியவர்கள் கூப்பிட, அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை குழலிக்கு ஒரேடியாக முட்டிக்கொண்டு வந்தது.

தான் பிறந்து, வளர்ந்து, ஓடிப் பிடித்தாடிய தன் சொந்த வீடு… இனி தான் இங்கே விருந்தாளிதான் என்ற நிஜம் சுட, சட்டென்று தன் பெற்றோரைக் கட்டிக்கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

“அம்மா… என்னை விட்டுட்டு உங்களால இருக்க முடியுமாமா?” என்று தாயின் தோள்களில் முகம் புதைத்துக் கதறிய மகளைப் பார்த்து, அவளது அம்மாவிற்கு கண்கள் குளம் போலப் பெருகினாள். மகளின் தலையைக் கோதி, “அழாதடி என் கண்ணு… பக்கத்துத் தெருதானே… எப்ப வேணாலும் ஓடி வரலாம்” என்று சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், அவராலேயே அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அடுத்ததாகத் தன் அப்பாவின் நெஞ்சில் சாய்ந்து குழலி விம்மியபோது, அந்தத் தைரியமான மனிதரின் கண்கள் கலங்கி, உதடுகள் நடுங்கின. மகளின் கைகளைப் பற்றிக்கொண்டு, “என் செல்ல மகள் எங்க போனாலும் மகாராணியா வாழணும்” என்று தழுதழுத்த குரலில் ஆசீர்வதித்தார்.

பக்கத்துத் தெருதான் என்றாலும், ஒரு பெண்ணைப் பெற்றவர்களுக்கு அவளைப் பிரித்து அனுப்பும் அந்தப் பிரியாவிடைத் தருணம் அத்தனை பாரமானது. சுற்றியிருந்த உறவினர்கள் அனைவரின் கண்களையும் அந்தக் காட்சி குளமாக்கியது.

மறுநாள் காலையில் மணமகனாகப் பாரிவேந்தன் பட்டு வேட்டி சட்டை உடுத்தி, கம்பீரமாக மணமேடையில் வந்து அமர…நாவல் பழ நிறத்தில் தங்க பார்டர் பட்டுச் சேலையில், தேவதை போல மணவறைக்கு வந்தாள் கார்குழலி. கெட்டிமேளச் சத்தம் விண்ணைப் பிளக்க, பெரியோர்களின் அட்சதை தூவ, கார்குழலியின் கழுத்தில் பாரிவேந்தன் மூன்று முடிச்சுகளைப் போட்டுத் தன் சொந்தமாக்கிக் கொண்டான்.

மற்ற சடங்குகள் முடிந்தது…பொண்ணு மாப்பிள்ளையை பெண் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.மூன்று நாட்கள் அங்கு விருந்து முடிந்து நல்ல நேரத்தில் தங்கள் வீட்டிற்கு போக வேந்தன் குழலி தயாரானார்கள்.

தட்டு நிறையச் சீர்வரிசைப் பொருட்களோடு, தங்க நகைகளையும், வெள்ளிப் பாத்திரங்களையும் மகளுக்குப் பரிசாக கார்மேகமும் சகுந்தலாவும் கொடுக்க பாரியோ அதை வாங்க மறுத்துவிட்டான்.

பாரி என்று கார்மேகம் பார்க்க என் மனைவிக்கு தேவையானது என்னால் வாங்கி தர முடியும் மாமா. அவளுக்காக ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கிறேன் என்றான்.

தங்கை மகனை நினைத்து பூரித்தவர் எங்கள் மன திருப்திக்காக என்க… சரிங்க மாமா ஆனால் இது என் மனைவிக்கு வேண்டாம். உங்கள் பேரபிள்ளைகளுக்கு சேரட்டும் என்றான்.

இத்தனை வருடப் பகைகள் மறந்து, இன்று தன் மகள் தன் அத்தை வீட்டுக்கே மருமகளாகப் போவதைக் கண்ட கார்மேகம் கண்களில் ஆனந்தக் கண்ணீரும், அதே சமயம் பெற்ற மகளைப் பிரிந்து அனுப்பும் தாயின் துயரக் கண்ணீரும் முட்டிக்கொண்டு வந்தது. சகுந்தலா தன் மகளைக் கட்டியணைத்துக் கதறி அழுதாள். கார்மேகமும் தன் மகளின் தலையைக் கோதி, அவளது கண்களைத் துடைத்துத் தேற்றினார்.

“அழாதீங்க அத்தை… அவ உங்களை விட்டு ரொம்பத் தூரமாப் போகல. பக்கத்துத் தெருவுலதானே இருக்கா? எப்ப வேணாலும் வந்து பார்த்துக்கலாம்,” என்று பாரிவேந்தன் அவர்களுக்கு ஆறுதல் கூறினான்.

இறுதியாக, கார்மேகமும் சகுந்தலாவும் ஆனந்தக் கண்ணீருடன் தன் ஆசை மகளை வாழ்த்தி, அலங்கரிக்கப்பட்ட காரில் ஏற்றி, பக்கத்துத் தெருவில் இருக்கும் தனது அத்தை வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைத்தனர்.

அன்று இரவு பாரி மற்றும் குழலி இருவருக்குமான சாந்தி முகூர்த்தத்திற்கான ஏற்பாடுகள் வீட்டில் மிக விமரிசையாகச் செய்யப்பட்டிருந்தன. பால், பழங்கள், மல்லிகைப் பூச்சரங்கள் என அந்த அறையே மணத்துக் கொண்டிருந்தது.

தனது புதிய வாழ்க்கையின் தொடக்கப் படபடப்போடு குழலி மெதுவாக அந்த அறைக்குள் நுழைந்தாள். கதவு மூடும் சத்தம் கேட்டதும் அவளது இதயம் இன்னும் வேகமாக அடித்துக்கொண்டது. அங்கே அவளுக்காகக் காத்திருந்த பாரி, மெல்ல அவளருகே வந்து, அவளது ஒட்டுமொத்தப் பயமும் கரையும்படி அவளை இறுக்கமாக, அன்போடு அணைத்துக் கொண்டான்.

ஆனால், அவன் அவளை அந்த அறைக்குள்ளேயே வைத்திருக்கவில்லை. அவளது கையைப் பற்றிக்கொண்டு, அந்த அறைக்குள்ளேயே இருந்த மற்றொரு கதவைத் திறந்தான்.

அந்தக் கதவு நேராகப் பின்புறத் தோட்டத்திற்குச் செல்லும் வழியைக் காட்டியது. நிலவொளியில் நனைந்து கொண்டிருந்த அந்தத் தோட்டத்தின் நடுவே, அழகாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தனி அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான்.

தோட்டத்து அறைக்குள் நுழைந்ததும் குழலிக்குச் சட்டென்று தன் சிறுவயது ஞாபகம் நெஞ்சில் நிழலாடியது. அவள் முதன்முதலில் பெரியவளான அந்தப் பருவ வயதில், இதே தோட்டத்தில் வைத்துத்தான் பாரி அவளிடம் ஒரு ரகசியத்தைச் சொல்லியிருந்தான்:

“குழலி, நம்ம கல்யாண வாழ்க்கை இந்தத் தோட்டத்துல, இந்த இடத்துல இருந்துதான் தொடங்கணும், தொடங்கும்!” என்று அன்று அவன் காதலோடு சொன்ன வார்த்தைகள் இன்று அப்படியே நிஜமாகி நிற்பதைக் கண்டு அவளது கண்கள் பனித்தன. தன் சிறுவயதுக் கனவை அவன் இன்னும் மறக்காமல் அப்படியே நிறைவேற்றியதை நினைத்து அவளது நெஞ்சம் பெருமிதத்தால் நிறைந்தது.

பிரம்புகளால் வேயப்பட்ட அந்தத் தனி அறையின் ஜன்னல் வழியே, நிலவின் மெல்லிய வெளிச்சம் உள்ளே வந்து விழுந்தது. சுற்றிலும் படர்ந்திருந்த மல்லிகைப் பூக்களின் வாசம், காற்றில் கலந்திருந்த குளிர்ந்த தென்றலோடு சேர்ந்து அந்த இரவை இன்னும் அழகாக்கியது.

பாரி அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டான். இத்தனை வருடக் காதலும், சிறுவயதுக் கனவும் நனவாகும் இந்தத் தருணத்தில், குழலியின் உடல் லேசாக நடுங்கியது. அவளது நெஞ்சின் படபடப்பை உணர்ந்தவன், மெதுவாக அவளது முகத்தை நிமிர்த்தினான். வெட்கத்தினால் சிவந்திருந்த அவளது கன்னங்களை இரு கைகளாலும் ஏந்தி, நெற்றியில் ஆழமாகத் தன் முதல் முத்தத்தைப் பதித்தான். அந்தப் பரிசம் அவளது ஒட்டுமொத்தப் பயத்தையும் மெல்லக் கரைத்தது.

“இனி நீ வெறும் குழலி இல்லை… என் குழலி…” என்று பாரி காதலோடு முணுமுணுக்க, குழலி வார்த்தைகள் ஏதுமின்றி அவனது நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள்.

அவளது பட்டுப் புடவையின் சுருக்கங்களும், தலைமுடி வாசம் தந்த மயக்கமும் அவர்களை இன்னும் நெருக்கமாக்கியது. பாரி அவளது இதழ்களில் தன் காதலை அழுத்தமாகப் பதிய வைக்க, இருவரின் மூச்சுக்காற்றும் அந்த அறையின் அமைதியைக் கலைத்தது.

இயற்கையின் மடியில், அந்தப் பிரம்பு அறையின் நிலவொளியில், இரு உடல்களும் ஒரு உயிராக இணையும் கூடல் அத்தனை ரம்மியமாக நிகழ்ந்தது. இத்தனை காலக் காத்திருப்பின் தவிப்புகள் அனைத்தும் அந்த ஒற்றை இரவின் தழுவல்களில் உருகிப் போயின. புதியதொரு வாழ்க்கையின் தொடக்கமாக, அவர்களது காதல் அந்த இரவை முழுமையாகத் தமதாக்கிக் கொண்டது.

திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது.காலை நேரம், பாரிவேந்தன் அவசரமாகப் போலீஸ் யூனிஃபார்ம் அணிந்து கொண்டு கண்ணாடியின் முன்னால் நின்று மீசையை முறுக்கிக் கொண்டிருந்தான். அப்போது கார்குழலி அவனுக்குக் காபி கப்புடன் உள்ளே நுழைந்தாள்.

அவளைக் கண்ணாடியின் வழியே பார்த்த பாரி, சட்டென்று திரும்பி அவளது கையில் இருந்த காபி கப்பை வாங்கி மேஜை மேல் வைத்து விட்டு அடுத்த நொடி, அவளை இழுத்துத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.

“யோவ் மாமா! என்ன இது… விடிஞ்சதுல இருந்து இதே வேலையாப் போச்சு உங்களுக்கு? போலீஸ் யூனிஃபார்ம் போட்டுக்கிட்டு பண்ற சேட்டையா இது? யாராச்சும் பார்க்கப் போறாங்க, விடுங்க!” என்று குழலி வெட்கமும் கோபமும் கலந்த குரலில் தடுத்தாள்.

“பார்த்தா பார்த்துட்டுப் போறாங்கடி! என் பொண்டாட்டியை நான் கொஞ்சுறதுக்கு எவன்கிட்ட லைசென்ஸ் வாங்கணும்?” என்று கரகரத்த குரலில் சொன்னவன், அவளது நெற்றியிலும் கன்னத்திலும் தன் முறுக்கு மீசை குத்தும்படி ஆழமாக முத்தமிட்டான்.

“ஆவ்….. மீசை குத்துது மாமா! போங்க… ஸ்டேஷனுக்கு நேரமாச்சுல்ல, கிளம்புங்க முதல்ல,” என்று அவனைத் தள்ளிவிட்டாள் குழலி.

“சரிடி என் செல்லமே… இன்னைக்கு சீக்கிரம் கேஸை முடிச்சுட்டு ஓடி வந்துடுறேன்,” என்று அவளது மூக்கை ஆசையோடு ஆட்டிவிட்டு, தன் தொப்பியை எடுத்து மாட்டிக்கொண்டு கம்பீரமாக அறையை விட்டு வெளியே வந்தான்.

ஹாலில் தம்புசாமியும், பாட்டி கனகாவும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது குழலி தன் முகத்தில் வழிந்த வெட்கத்தைத் துடைத்துக் கொண்டே பின்னாடியே வர, பாரிவேந்தன் கம்பீரமாக யூனிஃபார்மோடு வெளியே வருவதைப் பார்த்தனர்.

இருவரின் முகத்திலும் இருந்த அந்த அலாதியான சந்தோஷத்தையும், காதலையும் பார்த்த தாத்தா தம்புசாமிக்கும் பாட்டி கனகாவுக்கும் நெஞ்சு நிறைந்துபோனது.

“பாரி… ஸ்டேஷனுக்குக் கிளம்பியாச்சாப்பா? பார்த்துப் பத்திரமாப் போயிட்டு வா,” என்றார் தம்புசாமி முகமெல்லாம் புன்னகையோடு.

“சரிங்க தாத்தா, போயிட்டு வர்றேன்!” என்று இருவரிடமும் சொல்லிக்கொண்டு பாரி ஜீப்பை நோக்கி நடந்தான்.

அவன் போவதையே பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்த கனகு, தன் பேத்தி குழலியின் கையைப் பற்றிக்கொண்டார்.

“இத்தனை வருஷமா இந்த ரெண்டு குடும்பமும் பகைல வெந்து கிடந்தது. ஆனா, இன்னைக்கு என் பேரன் முகத்துலயும் பேத்தி முகத்துலயும் இருக்குற இந்தச் சந்தோஷத்தைப் பார்க்கும்போது என் மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா? என் உசிரே போனாலும் கவலையில்லைப்பா,” என்று ஆனந்தக் கண்ணீரோடு சொன்னார்.

“என்னடி கனகு… எடுத்ததுமே இப்படிப் பேசுற? நம்ம பேரன்-பேத்தி இன்னும் நூறு வருஷம் இதே சந்தோஷத்தோட வாழப் போறாங்க. அவங்க பெத்த புள்ளையையும் நம்ம மடிமேல போட்டு வளர்க்கணும், புரியுதா?” என்று தம்புசாமி பாசத்தோடு அதட்டினார்.

செடி வளரும்…

error: Alert: Content selection is disabled!!