அத்தியாயம்-9
அதிகாலை உறக்கத்தில் இருந்த நிரஞ்சனின் அறை படபடவென்று தட்டப்பட,வேகமாக வந்து திறந்தான்.
அவனை விட பதட்டத்தோடு நின்றிருந்தார் கதிரவன். அவருக்குப் பின்னால் அங்கு வேலை செய்யும் அனைவரும் நின்றிருந்தனர்.
“தம்பி இப்பதான் ஊர்ல இருந்து வந்தனான். வந்து பார்த்தா உங்கட கார் கண்ணாடி உடைஞ்சு கிடக்கு.” அவன் என்னவென்று கேட்க முதலே சொன்னார் கதிரவன்.
அதிர்ந்து போனான் நிரஞ்சன். அவனது போர்ஷே!
“யார் இந்த வேலையை செய்தது எண்டு தெரியேல்ல தம்பி. இரவு ஒருத்தரும் வீட்டுக்கு வரேல்லையாம் எண்டு ராமசாமி அண்ணா சொன்னவர். அவரையும் மீறி களவா யார் வந்திருப்பீனம்?” அவரது கேள்வியிலேயே பதிலை அறிந்துகொண்டான் அவன்.
அவனுடைய உதடுகள் சிரிப்பைச் சிந்திவிடத் துடித்தன. முன்னே நின்றவர்கள் பதட்டம் பார்த்து அடக்கிக்கொண்டான்.
“தம்பி.. இரவு முழுக்க நான் கேட் வாசல்லையேதான் இருந்தனான். எங்கேயும் போகேல்ல. ஒருத்தரும் உள்ளுக்கு வரேல்ல..” கலக்கத்தோடு சொன்னார் ராமசாமி. அவர் முகத்திலோ பெரும் பதட்டம்.
எவ்வளவு விலையான கார் அது. எந்தளவுக்கு அந்தக் காரை அவனுக்குப் பிடிக்கும் என்றும் தெரியும். ‘அதனை உடைக்கும்வரை எங்கே போனாய்?’ என்று அவன் கேட்டால் என்ன சொல்லுவார்!
அவரின் கலக்கத்தைக் கண்டவனுக்குப் பாவமாய் போயிற்று! ‘சேட்டைக்காரி.. ஒரு நிமிசத்துல இப்படி எல்லாரையும் கலங்கடிச்சிட்டாளே.’ தன்னவளைத் தனக்குள் கொஞ்சிக்கொண்டான்.
“ராமண்ணா உங்கள எனக்குத் தெரியும். யாரும் பதட்டப்படாம போய் உங்கட வேலைய பாருங்கோ. நான் என்ன எண்டு பாக்கிறன்.” அவர்களின் பயத்தைப் போக்கும் விதமாகச் சொன்னான்.
எல்லோரும் மெல்லக் கலைய கதிரவன் மட்டும் அங்கேயே நின்றார். “தம்பி, ஆள கண்டுபிடிச்சே ஆகோணும். உங்கட போலிஸ் பிரெண்டுக்கு போன போடுங்கோ. இதென்ன.. ஒருநாளும் இல்லாத கதையா.. எவ்வளவு விலையான கார் அது! அதைவிட யாருட்ட வாலாட்ட பாக்கிறாங்க!” அவரால் பொறுக்கவே முடியவில்லை.
அவன் நண்பன் தயாபரன் போலிஸ் தான். ஆனால்..
‘என்ர கோர்ட்டே அவள்தான். இதுல போலிசுக்கு போய் நான் என்ன செய்றது?’ என்றது அவன் மனம்!
“விடுங்கண்ணா! நான் பாக்கிறன். நீங்க போங்கோ.” என்று அவரை அனுப்பிவிட்டு, கீழே போய்ப் பார்த்தான்.
அவள் வந்துவிட்டாள் என்கிற சந்தோசத்தில் காரை கராஜுக்குள் விட மறந்திருந்தான். அதிலும் அன்னம்மா அவள் அவனின் வீட்டுக்கே வந்திருந்தாள் என்று சொன்னபோது தானில்லாமல் போனோமே என்று ஏங்கியே போனான். முதன் முதலாக அவளின் பாதங்கள் அவன் வீட்டில் பதிந்திருக்கிறது என்கிற நினைவே பரவசத்தைக் கொடுக்க அனைத்தையும் மறந்துபோனான்! கதிரவனும் அன்று மாலை இல்லாமல் போனது அவளுக்கு வசதியாகப் போயிற்று!
‘ராமசாமி அண்ணாக்கு கூட தெரியாம வந்து போயிருக்கிறா எண்டா கில்லாடிதான். கேட் திறந்து வர முடியாது. சுவர் ஏறித்தான் குதிச்சிருக்கிறாள்.’ நினைக்க நினைக்க சிரிப்பு வந்தது அவனுக்கு.
சாதாரணமாக அது முடியாதுதான். ஆனால், ரதனின் வீட்டிலிருந்து முடியும். அந்த இரு வீடுமே அவர்களின் முந்தய தலைமுறையினர் அமைத்தது என்பதால் நன்றாக உள்ளுக்காக அமைந்திருந்தது. அவன் வீட்டிலிருந்து இவன் வீட்டுக்கு கேட் வழியாக வருவதனால், நேரமெடுக்கும். அதனாலேயே சிலநேரங்களில் ரதன் வராமல் இருந்துவிடுவான். அவன் வராவிட்டால் அவளின் செய்திகள் இவனுக்கு வராது. அதற்கு விடையாக நிரஞ்சனும் ரதனும் கண்டுபிடித்ததுதான் ரதன்வீட்டு மொட்டை மாடியிலிருந்து இறங்க கயிறு கட்டித் தொங்கவிட்டது.
அதிலேதான் இவள் வந்திருக்க வேண்டும்! எவ்வளவு துணிச்சல்! கொஞ்சம் கூடப் பயப்படாமல் நடுநிசியில் கயிறு மூலம் அவன் வீடு வந்து காரை உடைத்துவிட்டுப் போயிருக்கிறாளே!
நினைத்து நினைத்துச் சிரித்துக்கொண்டான்!
அதோடு சந்தோசமாயும் உணர்ந்தான். அவன் மீது போர் தொடுக்கத் தொடங்கிவிட்டாளே! அந்த சந்தோசத்தோடு தன் குடிலுக்குள் நுழைந்தவன் தான் வரைந்து வைத்த விழிகளை எடுத்துப் பார்த்தான். அவனது உயிர் மெல்ல மெல்ல அந்தக் காதல் கொஞ்சும் விழிகளுக்குள் கரையத் தொடங்கிற்று!!
அந்தக் கண்கள் மெய்யாகவே தன்னை இதே காதலுடன் பார்க்குமா? சுகமான நினைவுகளை ஆசையோடு சுமந்தவனின் விழிகள் மெல்ல மூடிக்கொள்ள அந்த விழிகளுக்குள் வந்துநின்று அவனிடம் செல்லம் கொஞ்சினாள் அவள்!
அவன் உதடுகளில் புன்சிரிப்பு மலர்ந்தது. கனவில் காணும் நிகழ்வுகள் அனைத்தும் நிஜத்தில் நடந்திடும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று தோன்றவும் விழிகளை திறந்தான். அப்போதுதான் வேறு ஒன்றும் பட்டது!
அது, அவள் எழுதிவிட்டுச் சென்ற வாசகம்!
‘உன்ன தொலைத்துக்காட்டாமல் விடமாட்டன்’
ஒருகணம் அதிர்ந்தவன் அடுத்த நொடி அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
“இங்கேயும் வந்திட்டியா ராட்சசி!”
இதற்குள் வருவதற்கு ரதன் அனுமதித்திருக்க மாட்டான் என்று தெரியும். அப்படியிருந்தும் வந்திருக்கிறாள் என்றால்.. அதுதானே அவள்! அந்த அவளிடம் தானே அவன் தன் நெஞ்சைப் பறிகொடுத்தான்!
“கள்ளி! என்னையே தொலைத்துக்கட்டுவியா நீ?!”
பென்சிலை எடுத்து பதிலுக்கு அவனும் எழுதினான்.
“ஏற்கனவே தொலைந்துவிட்டவனை மீண்டும் எங்கு தொலைப்பாய்? ஆனாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் தொலையக் காத்திருக்கிறேன். உன்னிடம் என்றால்!”
அவன் பார்க்கவேண்டும் என்பதற்காகவே எழுதி வைத்தவள், அவன் பார்த்துவிட்டானா என்று அறியக் கட்டாயம் வருவாள்! கடையிதழில் பூத்துவிட்ட கள்ளச் சிரிப்புடன் அதை மேசையிலேயே வைத்தான்.
‘அப்ப.. மேடத்துக்கு என்ர மனதில யாரோ இருக்கீனம் எண்டு தெரிந்திருக்கும். இப்ப அது யாரென்று மண்டைய உடைச்சுக்கொண்டு இருப்பா..’ மனதில் உற்சாகம் பொங்க அலுவலகம் செல்லத் தயாராகி அவன் வரவும், அவனது இன்னோர் காரை தயார் செய்துகொண்டிருந்தார் கதிரவன்.
“கார வெளிய கொண்டுவாங்க.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, போனை எடுத்து அன்று தான் செய்யவேண்டிய வேலைகளை மீண்டுமொருமுறை பார்த்துக்கொண்டு வெளியே நடந்தான்.
“குட் மோர்னிங் அண்ணா..!” உற்சாகமாய் கேட்ட குரலில், நிமிர்ந்து பார்க்க ரதன் வந்துகொண்டிருந்தான். கூடவே அவளும்!
ஆனந்தமாய் அதிர்ந்தவனால் அவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை. முதன் முதலில் மிக மிக அருகில் காண்கிறான்! காந்தமாய் தன்னை அவளிடம் இழுக்கிறவளை தன்னை மறந்து பாத்திருந்தான் அவன்.
அவளோ வெட்டும் பார்வையோடு அலட்சியமாக முகத்தைத் திருப்பினாள்.
‘செய்றதை எல்லாம் செய்துபோட்டு சிலுப்புறத்தை பார்!’ ஆசைதான் அதிகமானது அவனுக்குள்!
“என்ன அண்ணா, இன்னும் ஆபிஸ் போகாம இங்க நிக்கிறீங்க?” அவனைப்பற்றி அறிந்த ரதன் கேட்டான்.
“அது… என்ர கார் கண்ணாடிய நேற்றிரவு யாரோ கள்ளி.. ளன். வந்து உடைச்சிட்டான்..” என்றவனின் விழிகள், அடம்பிடிக்கும் குழந்தையாய் அவளிடம் ஓடியது.
அசரவே இல்லை ஜீவனி! வாய்க்குள் சுவிங்கத்தை மென்றுகொண்டே அலட்சியமாக நின்றிருந்தாள்.
“ஐயோ.. என்னண்ணா சொல்றீங்க? உங்கட போர்ஷேயா?” மயக்கமே வரும்போலிருந்தது ரதனுக்கு.
“ம்ம்.. யார் செய்த வேலை எண்டு தெரியேல்ல. போலிஸ்ல கம்ப்ளைன் குடுத்திருக்கிறன். ரெண்டு நாளைக்குள்ள கண்டு பிடிக்கிறாங்களாம். பாப்பம்.” அவளை நோட்டம் விட்டுக்கொண்டே சொன்னான்.
அப்போதும் அசையவில்லை அவள்!
‘உண்மையிலேயே இவள் செய்யேல்லையோ..’ சிந்தனை ஓட அவளை அளவிட்டான்.
அந்தக் கண்களில் எந்தவித கலக்கமுமில்லை. தன்னை கண்டுபிடித்துவிடுவானோ என்கிற மிரட்சி மருந்துக்குமில்லை.
‘இவள் இல்லை என்றால் வேற யார்.. இதுவரை இல்லாமல்..’ யோசித்தான் நிரஞ்சன். அதைவிட அவளின் விளையாட்டுக்குணம் அறிந்திருந்தும் இந்தளவு தூரத்துக்கு அவளை நினைத்துவிட்டோமே என்று கொஞ்சம் கவலையாகக் கூடப் போயிற்று!
“அக்கா அந்தக்கார் என்ன விலை எண்டு உனக்குத் தெரியுமா ..?” என்று ரதன் கேட்க,
நிரஞ்சனை மேலும் கீழுமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “என்ன விலையா இருந்தா எங்களுக்கு என்ன? நீ வா!” என்று அவன் கையைப் பற்றி இழுத்தாள் அவள்.
“இது யார் ரதன்?” அப்போதுதான் அவளைக் கண்டவன் போன்று வேண்டுமென்றே கேட்டான் நிரஞ்சன்.
ஆனானப்பட்ட அவளே ஒருகணம் அதிர்ந்துதான் போனாள். அவளைத் தெரியாதாமா அவனுக்கு? இதில் ‘இது’ வாமே! டேய்!!
“இவள தெரியாதா அண்ணா? இவதான் என்ர அக்கா!” அந்த ‘என்ர’ வை சொல்லும்போது இரண்டு கையாளும் நெஞ்சில் அடித்துக்கொண்டு சொன்னான் ரதன்.
“ஓ.. உன்ர அக்காவா? நான் இதுவரைக்கும் பாத்ததே இல்ல.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “ஹாய்! நான் நிரஞ்சன்..” என்றபடி அவளிடம் கையை நீட்டினான்.
கொதித்துவிட்டது அவளுக்கு. பட்டென்று அவன் கையிலேயே ஒன்று போட்டாள்.
போட்ட வேகத்திலேயே, “டேய் என்னைத் தெரியாது உனக்கு? சொல்லு! என்னைத் தெரியாது?” என்று கேட்டுக்கொண்டே ஆத்திரத்தோடு அவனை நெருங்க, ஒரு வினாடி அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டான் ரதன்.
என்ன இது அக்காவா இப்படி? அதுவும் நிரஞ்சன் அண்ணாவிடம். உடனேயே அவளைப் பிடித்து இழுத்தான்.
“விடுடா என்ன! இண்டைக்கு இவன ரெண்டுல ஒண்டு பாக்காம விடமாட்டன்! ஆகத்தான் ஆடுறான்.” என்றவளை விடாமல் வீடு நோக்கி இழுத்துக்கொண்டு நடந்தான்.
“அக்கா, என்ன செய்றாய் நீ? இந்த ஊருக்குள்ள அவர் எவ்வளவு பெரிய ஆள். அவரைப் போய் டேய் போட்டு.. அதுவும் ரோட்டுல நின்று.. என்னக்கா நீ!” என்று ஆத்திரப்பட்டான்.
“அவனா பெரியாள்? அப்படி நடிக்கிறான்.” அவன் பின்னால் இழுபட்டுக்கொண்டே குமுறினாள் ஜீவனி.
“விடுடா கைய! அவனுக்கு ரெண்டு குடுத்தாத்தான் சரியா வருவான். என்ன தெரியாதாம்! அவன..!” என்று திரும்பி இவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தாள் அவள்.
“ரதன்!” என்று சத்தமாக அழைத்தான் நிரஞ்சன்.
இருவருமே திரும்பிப் பார்க்க, “உன்ர அக்கா..வுக்கு.. ஏதும்..” என்று இழுத்து அதற்குமேல் ஒன்றும் சொல்லாது கொடுப்புக்குள் சிரித்தபடி ஆட்காட்டி விரலை நெற்றியின் பக்கவாட்டுக்கு கொண்டுபோய் வட்டமாக சுற்றிப் பைத்தியமா என்று சைகையால் கேட்டான் நிரஞ்சன்.
அவ்வளவுதான்!
“டேய்!!!!!” என்றபடி, ரதனிடமிருந்து தன் கையை உதறி உருவிக்கொண்டு நிரஞ்சனின் கழுத்தை நெரிக்க வந்தாள் ஜீவனிதா.
“என்ன பாத்தா பைத்தியம் மாதிரியா தெரியுது உனக்கு? நீதான் பைத்தியம். நீதான் லூசு. நீதான் விசரன்.” கோபம் கொப்பளிக்கும் விழிகளால் அவனை பொசுக்கிக்கொண்டே ஆத்திரத்தில் வெடித்தவளின் அழகில் நெஞ்சம் மயங்கிக் கிறங்க விழிகளால் அவளைச் சிறை செய்தான் நிரஞ்சன்.
மனம் குழம்பிவிட, சட்டென அப்படியே நின்றாள் ஜீவனிதா. அவனது பார்வையில் தெரிந்த மாற்றத்தில் அவளின் விழிகளில் ஆராய்ச்சி! இந்தக் கண்கள் சொல்லும் மொழியை அவள் எங்கோ படித்திருக்கிறாள்! என்ன மொழி அது? என்ன சொல்ல வருகிறது அவளிடம்? அவளின் இளம் மனதுக்குள் என்னவோ பிரண்டது. ஏதோ செய்தது. அவனிடமிருந்து விழிகளை அகற்ற முடியவில்லை.
புருவங்களை சுருக்கி அவன் விழிகள் கடத்திய காதலைக் கண்டுபிடிக்க முனைந்தாள்.
அவளின் நிலை கண்டுதான் தன்னுணர்வு பெற்றான் நிரஞ்சன்.
சட்டென பார்வையை மாற்றி, ஒற்றைப் புருவத்தைக் கேலியாக உயர்த்தினான். விழிகளில் குறும்பு! இதழ்கடையோராம் சீண்டலாகச் சின்னப் புன்னகை பூத்தது!
அந்தப் புன்னகை ஒன்று போதுமே அவளைச் சிலிர்த்தெழ வைக்க!
“என்னை லூசு கீசு என்று சொன்னாய் என்று வை.. இனி கார்ல கைவைக்க மாட்டன். நேரடியா நீதான் மச்சான் சட்னி!” என்று ஆட்காட்டி விரலை நீட்டி அவள் எச்சரித்தபோது, அதிர்ந்துபோய் அசையாமல் நின்றுவிட்டான் நிரஞ்சன்.

