திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 9 – 2

அப்போ கார் கண்ணாடியை உடைத்தது அவள்தான்! அவள் இல்லையோ என்று அவனைக்கூட ஒரு நிமிடம் தடுமாற வைத்துவிட்டாளே.. . இதில் அவளை நினைத்தோமே என்று கவலை வேறு!

‘எவ்வளவு திமிரா பாத்தா… போலிஸ்ல கம்ப்ளைன் குடுத்தாச்சு எண்டு சொல்லியும் அசரவே இல்ல.!’

தன்னவள் மீதான ஆசை அந்தக் கடலெனப் பெருக, அதற்குமேலும் தன்னைக் கட்டுப்படுத்த இயலாமல் சட்டென கண்ணை ச் மிட்டினான் நிரஞ்சன்.

அதை எதிர்பாராதவள், “ஹாங்!”என்று அதிர்ந்துபோய் நிற்க, அவளின் பிம்பத்தை அப்படியே உள்வாங்கிக்கொண்டு தன்னருகில் வந்து நின்ற ஆடியில் ஏறிப் பறந்திருந்தான் அவன்.

———————————–

இரண்டு நாட்களாக வெளியில் எங்கும் செல்லவில்லை ஜீவனி. வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடந்தாள். காரணம் அன்றைய நிரஞ்சனின் பார்வை.

அவள் நல்ல அழகி! துள்ளலும் துடிப்பும் நிறைந்தவள். பொய் வேஷம் போடாமல் எப்போதுமே தானாகவே இருப்பவள். அவளின் அந்தக் குணங்கள் பல வாலிபவரை அவளை அறியாமலேயே ஈர்த்திருக்கிறது. அதன் காரணமாக ஆர்வமான பார்வையை, ஆவலான வார்த்தைகளை அவர்கள் இவள் புறம் செலுத்தி இருக்கிறார்கள். அதனை இனம் கண்டு முளையியேயே கிள்ளியும் இருக்கிறாள். அப்படியானவளுக்கு இவனின் பார்வையின் பொருள் புரியாமல் போய்விடாதே!

அதை உணர்ந்ததிலிருந்து அவனிடமிருந்து விலகி நில் என்றுதான் மனம் எச்சரித்தது. அவனை தூரத்திலேயே நிறுத்தத் சொல்லி மனம் உந்தியதில் தன் சேட்டைகளை மூட்டை கட்டிவிட்டாள். ஆனாலும், மனதில் ஒருவித குழப்பம். ஒரு பெண்ணின் காதலைச் சொட்டும் கண்களை அத்தனை உயிர்ப்பாக வரைந்தவனின் பார்வை தன்னிடம் மாறியதேன்?

எதற்காக அப்படிப்பார்த்தான்? அல்லது நான்தான் பிழையாக நினைக்கிறேனா?
மனதில் குழப்பத்தோடு இருந்தவளுக்கு இப்படி வீட்டுக்குள் அடைந்து கிடப்பது முடியாத காரியமாகவே தோன்ற, நிரஞ்சன் வீட்டுப்பக்கம் அல்லாமல் மறுபக்கமாக நடந்தாள்.

“ஜீவிக்கா…” தன் சிந்தனையில் கால் போன போக்கில் நடந்தவளை கூவி அழைத்தபடி ஓடிவந்து கட்டிக்கொண்டாள் சயந்தினி.

“ஹேய் சயந்தி!” என்று இவளும் சந்தோசமாக அணைத்துக்கொண்டாள்.

“எப்படிக்கா இருக்கிறாய்? என்னைப் பாக்க வரவே இல்ல நீ பாத்தியா? நீ வருவாய் எண்டு நான் பாத்துக்கொண்டே இருந்தன்.” என்று ஆசையும் செல்லக் கோபமுமாக படபடத்தாள் அவள்.

கலகலவென்று நகைத்தாள் ஜீவனிதா. முன்னர் ஏழ்மையின் மொத்த உருவமாக தன் பின்னால் சுற்றித் திரிந்தவள் இன்று அழகிய மங்கையாக அழகான உடையில் நிற்பதை சந்தோசமாக உள்வாங்கிக்கொண்டாள்.

“நீ என்னைத் தேடி வந்திருக்கலாம் தானே? நானேதான் வரோணுமா?” சிரித்துக்கொண்டே கேட்டவளுக்கு, தன்னைப்போலவே கலகலக்கும் அவளை மிகவுமே பிடிக்கும்.

“அச்சோ அக்கா கோவிக்காத. அம்மம்மா சொன்னதும் ஓடி வரோணும் எண்டுதான் ஆசையா இருந்தது. ஆனா எனக்கு இப்ப எக்ஸாம் நடக்குதக்கா. அண்ணாட்ட இந்த முறை நல்ல மார்க்ஸ் எடுத்துக் காட்டுறன் எண்டு சொல்லி இருக்கிறன். அப்படி எடுத்துக் காட்டினா கம்பியூட்டர் கிளாசுக்கு சேர்த்து விடுவன் எண்டு சொன்னவர். அதான்.. ஒரே படிப்ஸ்..” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள் அவள்.

“அது யாரடியப்பா எனக்குத் தெரியாம உனக்கொரு அண்ணன்?” கேலியாகக் கேட்டாள் இவள்.

“எல்லாம் எங்கட நிரஞ்சன் அண்ணாதான். வேற யாரு என்னையெல்லாம் ஒரு ஆள் எண்டு மதிச்சு அண்ணா எண்டு கூப்பிட விடுவீனம்?” என்று அவள் சொல்லவும், ‘கடவுளே.. இங்கயும் அவனா!’ என்றுதான் இருந்தது அவளுக்கு.

“அத விடுக்கா. நீ வா வீட்ட.” உரிமையோடு கையைப் பிடித்து அழைத்துச் சென்றாள் சயந்தினி. இவளை நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டதில் அவள் நடையிலும் பேச்சிலும் அத்தனை துள்ளல்.

இவளுக்கும் சந்தோசமே! ஆனாலும் நிரஞ்சன் மண்டைக்குள் நின்று குடைந்தான்!

“வயதில மூத்த ஆண்களை அண்ணா என்றுதானே கூப்பிடுறது. இதுல சொல்லிக்காட்ட என்ன இருக்கு?” உண்மையிலேயே அவளுக்கு விளங்கவில்லை, இவள் இத்தனை பெருமையாக சொல்லுமளவுக்கு அதில் என்ன இருக்கிறது?

“அதெல்லாம் உன்னை மாதிரி ஆட்களுக்கு. என்னை மாதிரி ஆட்களுக்கு இல்ல.” என்றாள் அவள்.

‘அதென்ன உன்னை மாதிரி என்னை மாதிரி என்று கேட்க வாயெடுத்தவள், அவள் அழைத்துச் சென்ற கல்வீட்டைக் கண்டு ஆச்சரியப்பட்டாள். சந்தோசமாகவும் இருந்தது.

முன்னர் இருந்த ஓலைக்குடிசையையும், மழை நாட்களில் அவர்களின் கஷ்டத்தையும் அவள் நன்கே அறிவாள்!

அந்த வீட்டின் முன்னால் நின்ற ஸ்கூட்டியை கண்டதும், “ஹேய்! உன்னோடதா இது?” என்றவள் அதன் மேலே ஏறி அமர்ந்தாள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் அவள் வீட்டு வில்லி வாங்கித்தர மறுத்த ஒன்று அது!

“நல்லாருக்குத்தானே?!” ஆவலும் ஆசையாக அவள் கேட்க,

“சூப்பரா இருக்கு! என்ன சயந்தி புது வீடு.. புது ஸ்கூட்டி கலக்கிற போ!” என்றாள் சிரித்தபடி.

அவளின் வாழ்க்கை முற்றாக மாறிவிட்டதைக் கண்டு இன்னுமே சந்தோஷமாயிருந்தது.

“போக்கா!” என்று அழகாகச் சந்தோஷப்பட்டாள் அவள். “எல்லாம் அண்ணாவால வந்தது!”

‘மறுபடியும் அவனா? இந்தக் கொசுத்தொல்லை தா..ங்க முடியேல்லையே!’

மறக்க நினைப்பவனை திரும்பத் திரும்ப நினைவூட்டவும், “என்னடி, எதுக்கெடுத்தாலும் அண்ணா அண்ணா எண்டு சொல்லுறாய்? அந்தாள் அப்படி என்ன செய்தவர்?” என்று சற்றே சினம் தெறிக்கக் கேட்டாள்.

பின்னே, அங்கே அவளின் தம்பி அண்ணா அண்ணா என்று உயிரை விடுகிறான் என்று பார்த்தால் இங்கே இவளும்!

“போக்கா. உனக்கு ஒண்டும் தெரியேல்ல. அண்ணா பீஸ் கட்டாட்டி நான் எப்படி படிக்கிறது? முதல் எங்க இருக்கிறது சொல்லு? முந்தி எங்கட வீடு உனக்கு தெரியும் தானே. இது அண்ணா கட்டித்தந்த வீடு. நான் படிக்கிற மேசை, இருக்கிற கதிரை(நாற்காலி) ஏன் போடுற உடுப்பில இருந்து எல்லாம் அண்ணா தந்தது.” என்று அவள் சொல்லவும், அதிர்ச்சியோடு பார்த்தாள் ஜீவனி.

“என்ன சொல்ற சயந்தி?”

“தோட்ட வேலைக்கும், அடிமைகள் மாதிரி கூலி வேலைக்கும் போய்க்கொண்டிருந்த நாங்க எல்லாம் படிக்கிறோமே.. யாரால? அண்ணா இல்லாட்டி வீட்டுக் கஷ்டம் அது இது எண்டு ஏதாவது ஒரு பாக்ட்ரில நான் இப்ப வேலை செய்துகொண்டு இருந்திருப்பன். கஷ்டத்தாலதான் படிக்காம வேலைக்குப் போறோம் எண்டு தன்ர சொந்தக் காசுல படிப்பிக்கிறார். நாங்க கஷ்டம் எண்டு கூலி வேலைக்குப் போனா எங்கட பிள்ளைகளும் அதே கஷ்டத்தால அதே வேலைக்குத்தான் போகுமாம். ஒரு தலைமுறை எப்படியாவது கஷ்டப்பட்டுப் டிச்சு முன்னுக்கு வந்திட்டா அடுத்த தலைமுறை இன்னொரு படி முன்னுக்கு வந்திடுமாம். அப்படிச் சொல்லித்தான் எங்களை படிப்பிக்கிறார். உனக்குத் தெரியாது, இங்க இருக்கிற எங்க எல்லாருக்கும் அண்ணா தெய்வம்.” என்றவள் விழிகள் உணர்ச்சி மேலீட்டால் கலங்கிப் போனது.

பேச்சற்றுப்போனாள் ஜீவனிதா.

அதைவிட, அவன் சொன்ன கூற்று எத்தனை சத்தியமானது. கஷ்டம் கஷ்டம் என்று அந்தக் கஷ்டத்துக்கான தற்காலிகத் தீர்வைத் தேடினால் காலம் முழுக்க கஷ்டமும் இருக்கும், முன்னேற்றம் என்பது வரவே வராது. இதையெல்லாம் யோசித்து செய்திருக்கிறான்!

“கம்பஸ் போனதுக்கு அண்ணா தந்த பரிசுதான் ஸ்கூட்டி. இந்த ஃபோனை பார். இதுவும் அண்ணாதான் வாங்கித் தந்தவர். எனக்கு மட்டுமில்ல, இங்க கம்பஸ்ல படிக்கிற எங்கட ஊர் பிள்ளைகள் எல்லாரிட்டையும் இருக்கு. அப்பத்தான் எங்களுக்கு பின்னால வாராவையும் ஆர்வமா படிப்பீனமாம். அண்ணான்ற ஐடியாவை பாத்தியா? நாங்க நல்ல வாழ்க்கை வாழ்ந்ததும் ஆச்சு. எல்லாரையும் படிக்க வச்சதும் ஆச்சு. அதே நேரம் அவர் எங்களுக்கு உதவி செய்த மாதிரி இல்லாம கஷ்டப்பட்டு படிச்சதுக்கு கிடைச்ச பரிசு மாதிரியும் ஆச்சு.” நிரஞ்சனை பற்றிச் சொல்கையில் அத்தனை பரவசம் அவள் முகத்தில்.

ஜீவனிக்கும் சந்தோசமாக இருந்தது. தன் கூடப்பிறக்காத தங்கை போன்றவள் வாழ்க்கை ஒளிர்கிறதே!

ஆனாலும் இயல்பான குறும்புத்தனம் தலைதூக்க, “விட்டா உன்ர அண்ணாவுக்கு கோயில் கட்டிக் கும்புடுவாய் போல. நீ படிப்பில கெட்டிக்காரி. அதுக்குப் பரிசா இதெல்லாம் கிடைச்சிருக்கு. அப்படி நினை! சும்மா ஓவரா அவரைத் தூக்கிப்பிடிக்காத.” என்றபடி ஸ்கூட்டியில் இருந்து இறங்கினாள்.

“உனக்கு சொன்னா விளங்காதக்கா. நீ அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா, தம்பி எண்டு முழு குடும்பத்தோட பாசத்துக்க சந்தோசமா வளந்தவள். பாதுகாக்க பாத்துப் பாத்து செய்ய ஆக்கள் இருக்கீனம். படிப்பில இருந்து உடுப்புவரை, கௌரவமான வாழ்க்கை எல்லாமே நீ கேக்காமையே உனக்குக் கிடைச்சிருக்கு. அதால உனக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்ல. ஆனா எனக்கு? அப்பா யார் எண்டே தெரியாம பிறந்து வளந்தவள் நான். அம்மாவும் இல்ல. ஏதாவது ஒரு ஆபத்து எண்டா ‘என்ன?’ என்று முன்னுக்கு வந்து கேக்க ஒரு ஆம்பிளை இல்ல. நான் எல்லாம் தைரியமா வெளில நடமாடுறன் எண்டா அதுக்கு காரணம் அண்ணா. அவரின்ர தங்கச்சி என்ற ஒற்றைச் சொல்லுதான் என்னை இன்னுமே கௌவுரவமா வாழ வச்சிருக்கு. யாருக்குமே சீண்டிப்பாக்க பயம். அவர் ஆசைப்பட்ட மாதிரி நான் படிச்சு முடிச்சு நல்ல உத்தியோகத்துக்கு வந்து காட்டுவன்!” வேதனையோடு சொல்ல ஆரம்பித்தவள் கடைசியில் சபதம் எடுத்தாள் என்றுதான் சொல்லவேண்டும். அத்தனை உறுதி அந்தக் குரலில்.

ஒரு இளம் மனதில் இத்தனை தூரத்துக்கு உறுதியை தூண்டுபவன் மனம் எத்தகையதாக இருக்கவேண்டும்?! அவனை எண்ணி வியந்தாள்.

அவன் மீது மதிப்பும் மரியாதையும் வந்திருந்தது.

“கட்டாயம் நீ ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும். அதுசரி, எங்க எங்களோட இருந்த கௌரி? இன்னும் அவளோட சண்டை பிடிக்கிறியா?” என்று விசாரித்தாள் கேலியாக.

சட்டென கோபம் மூண்டது சயந்திக்கு.

“அவளைப் பற்றி மட்டும் கதைக்காத என்னோட. கம்பஸ்லயும் அவளுக்கும் எனக்கும்தான் போட்டி..” என்று ஆரம்பித்த அவர்களின் அரட்டை பொழுது சாயும் வரையிலும் தொடர்ந்தது.

எதேர்ச்சையாக எட்டிப் பார்த்தவள் பொழுது இருண்டுகொண்டு வருவதைக் கண்டதும் அரண்டுபோனாள்.

“அச்சோ! இண்டைக்கு சித்திட்ட பேச்சுத்தான் விழப்போகுது!” என்று விழுந்தடித்துக்கொண்டு எழுந்தாள்.

“வாக்கா! ஸ்கூட்டில நான் கொண்டுபோய் விடுறன்.” என்று தானும் எழுந்தவளை, “இல்லையில்லை நீ படி! பிறகு உன்ர கொண்ணா கவலைப் படுவார்!” என்றாள் சீண்டலாக.

“உனக்கு அண்ணாவைப் பற்றி ஒன்றும் தெரியாது!” என்று அவள் மீண்டும் ஆரம்பிக்கவும், கையெடுத்துக் கும்பிட்டாள் ஜீவனி.

“அம்மா தாயே! ஆளை விடு! உங்க அண்ணா நல்லவர்! வல்லவர்! நாளும் தெரிஞ்சவர்! போதுமா?”

“அக்கா!!” என்று சிணுங்கிச் சிரித்தவளிடம் சிரித்துக்கொண்டே விடைபெற்று நடந்தாள் ஜீவனிதா.

வேண்டுமென்றே அவளிடம் வம்பு வளர்த்தாலும், உண்மையிலேயே அவனைப் பற்றிய நல்ல அபிப்பிராயம்தான் அவளுக்கும் உருவாகி இருந்தது.

பிறகு ஏன் என்னட்ட மட்டும் அவன் அப்படி? இத்தனை நல்ல முகங்கள் கொண்டவனின் ஒரு பக்கத்தைக் கூட அவள் கண்டதில்லையே! அவளிடம் அவன் காட்டியதில்லையே! கோபம் கூட வந்தது. அவளோடும் அவன் நல்லவனாகப் பழகி இருக்க இந்த சண்டை சச்சரவு எல்லாம் வந்திருக்காதே!

‘நல்லவன்’ என்று எல்லோராலும் பாராட்டப் படுகிறவனால் ஏன் அவளோடு மட்டும் நல்லமாதிரி பழகமுடியவில்லை? மனதில் மெல்லிய வருத்தம் கூட உண்டாயிற்று!

error: Alert: Content selection is disabled!!