அத்தியாயம் 11
கடையை விட்டு வெளியே வந்ததும், “நகையும் ஏதாவது வாங்குவமா?” என்று கேட்டான்.
சற்று யோசித்துவிட்டு, “இப்ப வேண்டாம். கொஞ்ச நாள்.. ஒரு மூன்று மாதம் கழிச்சு வாங்கி போடுங்க..” என்றாள் அவள்.
அவள் பொறுப்பாக சொன்ன அழகில், “ஏன்?” என்று கேட்டான் அவளை ரசிக்கும் புன்னகையோடு.
“அது.. குட்டி பாப்பா. நகையெல்லாம் இப்பவே ஒத்துக்கொள்ளுமோ இல்லையோ யாருக்கு தெரியும்? பிறகு வாங்கி குடுங்க.” என்றாள் மீண்டும்.
சரி என்றுவிட்டு அவன் காரை நோக்கி நடக்க,
“உங்கட வேலை முடிஞ்சதும் புத்திய காட்டுறீங்க பாத்தீங்களா..?” என்றாள் அவள் இடுப்பில் கைகளை வைத்து முறைத்தபடி.
விளங்காமல் அவன் திரும்பி பார்க்க, “வீட்டுல வேலையா இருந்தவள கூட்டிக்கொண்டு வந்திட்டு சாப்பாடும் வாங்கித் தராம போற ப்ளான் போல. சரியான கஞ்சப் பிசுனாரி.” என்றாள் முறைத்துக்கொண்டு.
சட்டென சிரித்துவிட்டான் நிரஞ்சன். ‘என் ராட்சசிக்கு வயிறு கடிக்குது போல..’
“இப்ப என்ன? உனக்கு சாப்பாடு வேணும். அவ்வளவு தானே. வா!” என்று கேட்டு, தரமான ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்றான்.
அங்கும் பலரின் பார்வை அவன் மீது விழுவதைக் கண்டதும், அவள் விழிகளும் அவனிடம் தான் ஓடியது.
எங்கே அமரலாம் என்று விழிகளால் அலசிக்கொண்டே, கரம் பற்றாத போதும் அவளை சற்றே முன் விட்டு பாதுகாப்பாக அவளின் அருகில் நெருங்கி நடந்தவனின் செயல் மனதை கவர்ந்தது.
மூன்று ஆண்கள், சாப்பிட்டுவிட்டார்கள் போலும் எதையோ கதைத்துச் சிரித்தபடி ஒன்றாக நேரெதிரே வந்துகொண்டிருந்தனர்.
சட்டென்று அவளின் கரத்தை பற்றி நிறுத்தி, ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழியை விட்டான் நிரஞ்சன்.
அதிர்ந்துபோய் அவனை திரும்பிப் பார்த்தாள் ஜீவனிதா. அவனோ, அவளின் கரத்தை பற்றி இருக்கிறோம் என்கிற எண்ணமே இல்லாது, என்னவோ அது இயல்பானதுபோல் எப்போதும் நடப்பதுபோல் வெகு இயல்பாக பற்றியிருந்தான். இவளுக்குத்தான் அவன் கரத்தின் கதகதப்பு தேகம் முழுவதும் பாய்ந்து சிலிர்த்தது.
அவர்கள் இவர்களை கடந்ததும், “வா..” என்றுவிட்டு நடந்தாலும் அவளின் கையை விடவில்லை.
உட்புறமாக இருந்த இருவர் அமரக்கூடிய மேசைக்கு சென்ற பிறகே விட்டான். அவள் அமர்வதற்கு வசதியாக நாற்காலியை இழுத்துவிட்டு, அவள் அமர்ந்ததும் எதிரில் அமர்ந்துகொண்டவனை ஊன்றிக் கவனித்தாள். வேண்டுமென்றே செய்துவிட்டு தெரியாததுபோல் நாடகமாடுகிறானா என்று.
அப்படியான பொய்மைத்தன்மை அவனிடம் தென்படாததில் அவள் மனம் இலகுவாகிற்று!
*****
செல்லை எடுத்து மேசையில் வைத்துவிட்டு பார்வையை அவன் திருப்ப, உடனேயே வந்தான் ஒரு சர்வர்.
‘பார்ரா! கண்ணாலேயே வேல வாங்குறான்.’ அவளுக்குள்ளிருந்த குறும்பி சொன்னாள்.
அவளின் விருப்பத்தையும் கேட்டுக்கொண்டு பேரரிடம் திரும்பி அவன் ஆர்டர் கொடுக்க, பக்கவாட்டுத் தோற்றத்தில் பத்து வருடங்களுக்கு முதல் அவள் அவனுக்கு உண்டாக்கிய காயம் தழும்பாக மாறியிருப்பதைக் கண்டதும் சிரிப்புத்தான் வந்தது.
உணவு வந்ததும் அவளின் தட்டை அவள் புறமாக நகர்த்தி வைத்து, “சாப்பிடு..” என்றான் கனிவோடு.
அவளருகில் ஒரு கிளாசை நகர்த்தி, தண்ணீரை அவன் வார்க்கப் போகவும், அடாவடியான அவளுக்கே மனம் தாங்கவில்லை.
“நான் என்ன சின்னபிள்ளையா? விடுங்க.. நானே எடுக்கிறன்.” என்று அவனை தடுத்துவிட்டு, தனக்கும் அவனுக்குமாக இரு கிளாஸ்களில் நீரை வார்த்து ஒன்றை அவன் புறமாக நகர்த்தி வைத்துவிட்டு, “சாப்பிடுங்க..” என்றாள் அவள் இப்போது.
பளீரென முகம் மலர, “நீயும் சாப்பிடு..” என்றுவிட்டு, அணிந்திருந்த டி-ஷர்ட்டின் கையை சற்று உயர்த்தி விட்டபடி உண்ணத் தொடங்கவும் அவனிடமிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை அவளால்.
அந்தளவுக்கு அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளை ஈர்த்தது. அலட்டல் இல்லாத கம்பீரமான தோற்றம் அவனை அழகான ஆணாக காட்டியது.
பெரும் சிரமப்பட்டு பார்வையை அகற்றி அவள் உணவில் கவனம் செலுத்த, “பிறகு.. சொல்லு.” என்று மெல்ல ஆரம்பித்தான் நிரஞ்சன்.
“என்ன சொல்ல?”
“லைஃப் எப்படி போகுது?” மொட்டையாக அவன் கேட்கவும் அவளது துடுக்குத்தனம் தலை தூக்கியது.
“அதெல்லாம் நல்லாத்தான் போகுது.”
“அப்ப என்னில இருந்த கோபம் போயிட்டுதா?” விழிகள் சிரிப்பில் பளிச்சிடக் கேட்டான் நிரஞ்சன்.
வெட்டும் பார்வையோடு நிமிர்ந்தவள், அவன் விழிகளில் தெரிந்த வசீகரத்தில் மீண்டும் தடுமாறிப்போனாள்.
கண்ணோரங்கள் சிரிப்பில் சுருங்க, இதழ் கடையோரம் குமிழியிட்ட குறுஞ்சிரிப்புடன் அவளையே பார்த்தவனின் பார்வை அவள் உயிர்வரை தீண்டியது.
மனமோ குழம்பிப் போனது.
இதென்ன.. இன்றைக்கு எல்லாமே புதுசா இருக்கே.. அவன் செய்றது எல்லாமே பிடிக்குது.. அவன் கண்ண பாக்க முடியேல்ல.. மனதை என்னவோ செய்யுதே..என்று ஓடிய அவளின் சிந்தனையை, “சொல்லு, கோபம் போயிட்டுதா?” என்று மீண்டும் கேட்டவனின் கேள்வி தடுத்து நிறுத்தியது.
வழமையான அவளது விளையாட்டுத்தனமும் மீண்டுவிட, அதற்குமேல் அதைப்பற்றி அவள் யோசிக்கவில்லை.
அப்படி எந்த விசயத்தையும் அதன் ஆழம்வரை சென்று யோசிப்பது அவளின் இயல்பும் அல்ல என்பதால், “இல்லை!” என்றாள் இப்போது வேண்டுமென்றே.
“இன்னுமா இல்ல? அதுதான் என்ர கால உடைச்சாச்சு. கார் கண்ணாடியையும் உடைச்சாச்சு.. இன்னும் என்ன?”
ஒருநொடி திகைத்து பார்த்துவிட்டு, அடுத்த நொடியே, “இதென்ன கட்டுக்கதை? அதெல்லாம் நான் செய்யேல்ல!” என்றாள் தலையை சிலுப்பி.
“ஓ..! சரி விடு. யார் என்று போலிஸ் கண்டுபிடிக்கட்டும். நீ சொல்லு, எப்படி போகுது உன்ர லவ்?” என்று கேட்டான்.
“என்ர லவ்வா? என்ன என்ர லவ்?” புருவங்கள் சுருங்கக் கேட்டாள்.
“நீ யாரையோ விரும்புறாயாம் எண்டு கேள்விப்பட்டன்.” இலகுவாக உண்டுகொண்டே நூல்விட்டான் நிரஞ்சன்.
“யார்..? நான்..! ஒருத்தன விரும்புறன்! அந்த ரேஞ்சுக்கு எவன் இருக்கிறான் இங்க?”
வாய்க்கு எடுத்துச் சென்ற உணவு இடையிலேயே நிற்க அவளைப் பார்த்தவனின் நிலைதான் பரிதாபமாகிப் போனது. அந்த ‘எவனில்’ அவனும் அல்லவோ அடக்கம்!!
ஆனாலும், அவள் யாரையும் விரும்பவில்லை என்பதை அவள் வாயாலேயே அறிந்துகொண்டான். அவனின் அடுத்த நகர்வுகளுக்கு அது தேவையாயிற்றே!
உணவை முடித்துக்கொண்டு கிளம்பினர். வீட்டுக்கு என்று அவள் நினைத்திருக்க ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல் முன் நிறுத்தினான் நிரஞ்சன்.
அவள் கேள்வியாக ஏறிட, “இங்கதான் இருக்கினம். போற வழிதானே. வா பாத்திட்டு போவம்..” என்றபடி அவன் இறங்க, குட்டிக்குழந்தையை பார்க்கும் ஆசையில் அவளும் கூட இறங்கினாள்.
டொக்டரின் அறையிலிருந்து நந்தினிக்கான மருந்துச் சீட்டை பெற்றுக்கொண்டு வந்த பாலா, உள்ளே வந்தவர்களை தூரத்திலேயே கண்டுவிட்டு வேகமாக வந்து சந்தோசமாக வரவேற்றான்.
யார் என்று தெரியாதபோதும், ஜீவனியின் புறம் வரவேற்பாக பாலா புன்னகைக்க, அவளும் புன்னகைத்தாள்.
“நந்தினிக்கு இப்ப எப்படி இருக்கு?” நிரஞ்சன் விசாரித்தான்
“இப்ப கொஞ்சம் பரவாயில்ல..” அவர்களை நந்தினியின் அறைநோக்கி அழைத்துச் சென்றபடி பதிலளித்தான் பாலா.
மனதிலோ யார் இந்தப் பெண்? என்று ஓடியது.
அங்கே அறைக்குள் மிகவும் சோர்ந்துபோய் படுத்திருந்தாள் நந்தினி. அத்தனை சோர்வையும் மீறி முகத்தில் ஓர் பொலிவு! ஒரு சந்தோசம். நான் அம்மாவாகிவிட்டேன் என்கிற பரவசத்தில் இருந்தாள்.
அவளுக்கு அருகிலேயே குட்டித் தொட்டிலில் ரோஜா வண்ண விரிப்பின் மேலே உயிர் ரோஜாவாகவே படுத்திருந்தாள் குழந்தை.
இவர்களை கண்டதும், “அண்ணா.. வாங்கண்ணா..” என்றபடி நந்தினி எழுந்தமர முயல, பாலா வேகமாக மனைவியருகில் சென்று அவள் கட்டிலில் அமர்வதற்கு உதவினான்.
இவர்களுக்கும் அமர்வதற்கு நாற்காலிகளை இழுத்துப்போட்டான். அதில் அமர்ந்துகொண்டு கொண்டுவந்த பையை ஜீவனியிடம் நீட்டி, “குடு!” என்றான் நிரஞ்சன் மெல்லிய குரலில்.
‘வாங்கினது அவன். நான் ஏன் குடுக்க’ என்பதாக அவள் பார்க்க, “குடு!” என்றான் மீண்டும் அழுத்தி. அந்த அழுத்தம் அவன் சொன்னதை கேட்க வைத்தது.
நந்தினியிடம் ஜீவனி பையை கொடுக்க, பிறந்த வீட்டு நினைவில் சட்டென கண்கலங்கினாள் நந்தினி. “இதெல்லாம் எதுக்கண்ணா? நீங்க வந்ததே சந்தோசம்.” தழுதழுத்த குரலில் சொன்னாள்.
“அண்ணா எண்டு சொல்லீட்டு இதென்ன பேச்சு!” பாசத்தோடு அதட்டிவிட்டு, அவளை வீட்டு நினைவிலிருந்து வெளியே கொண்டுவர எண்ணி, “பிரித்துப்பார் நந்து நல்லாருக்கா எண்டு? செலக்க்ஷன் எல்லாம் இவள்தான்.” என்றான் தன்னருகில் அமர்ந்திருந்த ஜீவனியை காட்டி.
அவன் பேச்சில் என்னவோ காலம் காலமாக ஒன்றாக வாழ்ந்தவர்களுக்கு இடையே இருக்கும் சொந்தம் தெரிந்தது! கணவனும் மனைவியும் வேகமாகப் பார்வையைப் பரிமாறிக்கொண்டனர்.
அதைக் கவனித்த ஜீவிக்கோ கூச்சமாகப் போனதில், “செலக்க்ஷன் மட்டும் தான் நான்! காசு கொடுத்தது இவர்தான்.” என்றாள் அவசரமாக.
“அது எல்லா வீட்டுலையும் நடக்கிறதுதானே..” குறும்புடன் மொழிந்தபடி, இரண்டு கிளாஸ்களில் பழரசத்தை நிரப்பி அவர்களிடம் நீட்டினான்.
நன்றி சொல்லி பெற்றுக்கொண்டவளிடம், “நிரஞ்சன் சொன்னாரா தெரியேல்ல.. நான் அவரின் பிஏ. பெயர் பாலா. நீங்க?” என்றான் ஜீவனியிடம்.
அவனுக்கு அவள் யார் என்று தெரிந்தே ஆகவேண்டி இருந்தது. மனதில் ஓர் ஊகமும் கூட! நிரஞ்சன் சொல்லமாட்டான் என்று தெரிந்து நேரடியாகத் தானே களத்தில் இறங்கினான்.
“நான் ஜீவனிதா. இவரின்ட வீட்டுக்கு பக்கத்து வீடுதான் என்ர சித்தி வீடு.” என்று அவள் சொன்னதுமே பளீரென முகம் மலர மனைவியை திரும்பிப் பார்த்துவிட்டு,
“நீங்கதானா அது? நீங்களும் காலிதானா?” என்று விசாரித்தான்.
“இல்ல. யாழ்பாணம்.. சித்தி வீட்டுக்கு சும்மா வந்தனான்.” என்று பதில் சொன்னாலும், ‘அதென்ன நீங்கதானா அது?’என்று
உள்ளுக்குள் குழம்பினாள்.
அதே குழப்பத்தோடு நிரஞ்சனை திரும்பிப் பார்க்க, அவன் என்னவோ பாலாவுக்கு கண்ணால் எச்சரிப்பது தெரிந்தது.
“அப்ப இனி இங்க தானா? நீங்க போறதா இருந்தாலும் நிரஞ்சன் வி..” என்றவனை,
“குட்டிக்கு பெயர் வச்சாச்சா?” என்று கேட்டு இடைமறித்தான் நிரஞ்சன்.
அவன் கேட்ட கேள்வியில் அவனே மாட்டிக்கொண்டான்!
“ஓ… வச்சாச்சே..! ஜீவிதா. நல்லாருக்கா நிரஞ்சன்?” என்று குறும்போடு அவனிடம் கேட்டுவிட்டு,
“இந்தப் பெயர நிரஞ்சன் தான் சொன்னவர். யார நினச்சு சொன்னாரோ தெரியாது. ஆனா, அவரின் மனதுக்கு பிடிச்ச அந்த ஆள் லக்கிதான்.” என்றான் பாலா.
‘இதையேன் இவர் என்னட்ட சொல்றார்?’ கேள்வியை விழிகளில் தேக்கி நிரஞ்சனைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
‘கடவுளே.. இவள் பாக்கிற பார்வையே சரியில்லையே.. சும்மாவே சாமி ஆடுவாள் இதுல இவன் வேற..’
பாலாவை அடக்கியே ஆகோணும்! மனம் அலறியடித்து எச்சரித்தது.
“பாலா வாங்க! உங்களோட ஒரு முக்கியமான விஷயம் கதைக்கோணும்.” என்று அவனிடம் சொல்லிவிட்டு, “நீ நந்துவோட இரு. நான் இப்ப வாறன். வந்ததும் வீட்ட போகலாம்.” என்றுவிட்டு பாலாவை கையோடு கூட்டிக்கொண்டு வெளியே நடந்தான் நிரஞ்சன்.
ஜீவனியின் முகத்தில் குழப்பம். அங்கிருந்து என்ன செய்வது என்றும் தெரியவில்லை. நந்தினியை பழக்கமில்லையே! குழந்தையின் அருகில் சென்று அமர்ந்துகொண்டு அழகாய் துயில் கொண்டிருதவளை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
‘இவன் ஏன் அந்த அண்ணா கதைக்கக் கதைக்க இடையில வெட்டுறான். இதுல ஜீவிதா என்று பெயர் வேற..’ என்று யோசனை ஓட, அவளின் கை தன் பாட்டுக்கு குழந்தையின் பட்டு கன்னத்தை தடவிக்கொடுத்தது.
அதுவரை அவளையே பார்த்திருந்த நந்தினி, “இந்தக் குட்டி பிறந்திருக்கிறாள் எண்டு சொல்லியும் எங்கட வீட்டில இருந்து எங்கள பாக்க ஒருத்தரும் வரேல்ல..” என்றாள் கண்ணீரோடு.
தன் சிந்தனைச்சங்கிலி அறுபட்டதில், நிமிர்ந்து அவளைப் பார்த்தவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இதெல்லாம் அவள் அறியாத சூழ்நிலைகள். இப்படியான சிக்கல்களைக் கையாண்டதில்லை. ஆனாலும் அவள் சொன்னதை உள்வாங்கி, “அழாதிங்க அக்கா. எல்லாம் சரியாகும்” என்று பொதுவாகச் சொன்னாள்.
“இவள் வயித்தில இருந்த இவ்வளவு நாளும் அப்படித்தான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். பிள்ளை பிறந்ததும் எல்லாரும் வருவீனம். ஒற்றுமை ஆகலாம் என்று.. ஆனா, அவே வரவே இல்ல. எங்களை பாக்க எண்டு வந்தது நிரஞ்சன் அண்ணாவும் நீயும் மட்டும்தான். என்றைக்கும் நீயும் அண்ணாவும் சந்தோசமா வாழோணும்.” என்றாள் நந்தினி நெகிழ்ந்த குரலில்.
மனப்பாரத்தைக் கொட்டிவிடும் வேகத்தில் அவள் தன்னை மீறிச் சொல்லிவிட குழம்பிப்போய் விழித்தாள் ஜீவனிதா.
அவள் விழிக்கவும்தான் நந்தினி நிதானத்துக்கு வந்தாள். “அண்ணா உன்னோட இன்னும் ஒன்றும் கதைக்கேல்ல போல. கட்டாயம் கதைப்பார். நல்ல பதிலாச் சொல்லு. இத அவருக்காக சொல்லேல்ல, உனக்காகத்தான் சொல்றன். அவரைப்போல நல்ல மனுஷன் தேடினாலும் கிடைக்காது.” என்றாள் நந்தினி உள்ளன்போடு.
ஒன்றுமே விளங்காது முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் ஜீவனிதா.

