அத்தியாயம் 14
அவள் கோபத்தோடு நிற்கிறாள் என்று தெரியும். சமாதானப்படுத்த வேண்டும் என்றாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை. தள்ளி நின்றெல்லாம் அவனால் இனி எதுவுமே முடியாது! அங்கிருக்கிற அனைவருக்குமே அவனைத் தெரியும். இப்படி மறைவில் அவளருகில் அவன் நிற்பதைக் கண்டாலே ஆர்வத்தை தூண்டக்கூடும். அதிகநேரம் அவன் எங்கே என்று தெரியாமல் மற்றவர்களை விடுவதும் நல்லதல்ல. ஆயினும் அவளை நீங்க முடியாமல் நின்றான்.
எதையாவது கதைத்தாவது அவளை சமாதானப்படுத்துவோம் என்று எண்ணித் திரும்பியவன், பழக்கமில்லாததில் இடுப்புச் சேலையையும் மார்புச் சேலையையும் அவள் அடிக்கடி இழுத்து இழுத்து விடுவதைக் கண்டதும், சின்னச் சிரிப்போடு பார்வையை திருப்பிக்கொண்டான். உல்லாசம் மனதில் உற்சாகமாய் பொங்கிற்று!
இப்படி தள்ளி நிண்டெல்லாம் கதைக்க முடியாது போல இருக்கே.. இதழ்களில் பூத்துவிட்ட புன்சிரிப்போடு கேசத்தை கோதிக்கொடுத்தான்!
முகத்தை திருப்பிக்கொண்டு நின்றாலும் அவளின் கடைக்கண் பார்வை முழுவதுமே அவனிடம் தானே! கேசம் கோதிய அழகில் மனம் மயங்க, அவன் சொல்லப்போகும் காதலுக்காய், ஆசையாக பேசப்போகும் வார்த்தைகளுக்காக இதயம் படபடக்கக் காத்திருந்தாள்.
அந்த நிமிடமே காதலைச் சொல்வான்.. தன் சம்மதம் கேட்பான்.. அவன் கண்களைப் பார்த்து பதில் சொல்ல என்னால் முடியுமா? என்று ஆவலும் ஆசையுமாக அவள் நிற்க, “ரதன்!” என்று கூப்பிட்டான் நிரஞ்சன்.
‘அவனை இப்ப எதுக்கு கூப்பிடுறான்.’ தங்களின் தனிமை குலையப்போகிறதே என்று பரிதவிப்போடு அவள் பார்க்க, அவளின் நிலை உணர்ந்தவனுக்கு தன்னிலை இன்னும் மோசமாக்கிக்கொண்டு போவதை உணரமுடிந்தது.
‘இது சரி வராது! இப்பவே வேலைய முடிக்கோணும்!’ அவளின் சித்தி சித்தப்பா எங்கே என்று கண்ணால் தேடினான்.
நினைத்தகணம் நினைத்ததை செய்து பழகி, பொறுமை என்பது மருந்துக்கும் இல்லாதவளுக்கு காதலை பரிமாறிக் கொள்வதிலும் அவசரம். அவன் தன்னிடம் மனதை திறக்காமல் தம்பியை அழைத்ததில் சினம் பொங்கிற்று!
அவனோ, “என்னண்ணா?” என்று கேட்டுக்கொண்டே வந்து சற்று தூரத்திலேயே நின்றுகொண்டான். கையில் பஞ்சாமிர்தம்.
“இங்க வா!”
“வந்தா இத பறிச்சு அவள் சாப்பிட்டுடுவாள்.” என்று ஜீவியை காட்டிச் சொன்னான் அவன். வாயோ வேக வேகமாக பஞ்சாமிர்தத்தை அமுக்கியது.
நிரஞ்சனில் இருந்த எரிச்சலில் ரதனை முறைத்தாள் ஜீவனிதா.
கோபத்தில் சிவந்துவிட்டவளைக் கண்டு இதழ்களில் மலர்ந்துவிட்ட சிரிப்போடு, “நீயும் போய் வாங்கிச் சாப்பிடு!” என்றான் நிரஞ்சன்.
“ஐயோ அண்ணா நீங்க வேற. என்ர அக்கா இன்றைக்கு எங்கயும் நடக்க மாட்டாள். நடந்தா கட்டியிருக்கிற சாரி கழண்டு விழுந்திடுமே.” என்று சொல்லிச் சிரிக்க, மானத்தை வாங்குகிறானே என்றிருந்தது அவளுக்கு!
“வீட்ட வா உனக்கு இருக்கு இண்டைக்கு!” என்றாள் ஆத்திரத்தோடு.
“நான் வரமாட்டேனே. அண்ணா வீட்டுக்கு போவேனே. இப்ப என்ன செய்வ? இப்ப என்ன செய்வ?” என்று அவன் வெறுப்பேற்றினான்.
சொல்வதறியாமல் அவள் பல்லைக் கடிக்க, தன்னவளை சிரிப்போடு பார்த்துவிட்டு, “அவளோட நில்லுடா.” என்றுவிட்டு நடந்தான் நிரஞ்சன்.
“ஐயோ நான் மாட்டன். இருக்கிற விசர்ல என்ன கடிச்சாலும் கடிச்சிடுவாள்.” என்றுவிட்டு ஓடியேவிட்டான் ரதன்.
ஜீவனியோ கொதிப்பின் உச்சியில் இருந்தாள்.
சற்று நேரத்தில் யாரோ ஒருவர் கொண்டுவந்து பஞ்சாமிர்தம் அவளுக்கு கொடுத்தார். “நிரஞ்சன் தம்பி தந்தவர்.” என்று சொல்லி.
‘ரொம்ம்ம்ப முக்கியம்!’ காதலைச் சொல்வான் என்று எதிர்பார்த்து ஏமாந்த மனம் சினத்தில் பொங்கியது. ஆனாலும் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக்கொண்டாள். உண்ணவில்லை.
மனம் கிடந்து அலைபாய்ந்தது. கண்களால் அவனைத் தேடினாள்.
யார் யாரோ எல்லாம் வந்து அவனோடு கதைத்தபடி இருந்தனர். கைகொடுத்து எதற்கோ வாழ்த்தினர். தனியாக விடவேயில்லை. ‘ம்க்கும்! இவுகதான் பெரிய பருப்பாச்சே இந்த ஊர்ல!’ நொடித்தாள்.
சித்தி சித்தப்பாவை பார்த்தாள். நண்பர்களோடு கதைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் இவளைத் தங்களிடம் வரும்படி கூப்பிட்டும் அவள் போகவில்லை. அவன் காதலை சொல்வதற்கு வசதியாக தன்னைத் தனியாகவே வைத்துக்கொண்டு காத்திருந்தாள்.
நிரஞ்சனோ கடைசி வரையிலும் வரவேயில்லை.
ரதன் தான் வந்தான். “அண்ணா உன்னோட நிக்கட்டாம்.“ என்றபடி.
“அவன் யாரு உன்ன என்னோட நிக்கச் சொல்ல?” இருந்த ஆத்திரத்தில் பாய்ந்தாள்.
“அதத்தான் நானும் கேட்டனான். என்னையேன் அந்த விசருட்ட போகச் சொல்றீங்க எண்டு..” என்று சொல்லி அவளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டான். ஆனாலும் அந்த இடத்தைவிட்டு அசையவில்லை.
அதுவும் நிரஞ்சனின் வேலைதான் என்று விளங்க, ‘இப்ப என்னத்த வெட்டிக் கிழிக்கிறான்’ என்று எண்ணியபடி விழிகளை சுழற்றினாள்.
சித்தி சித்தப்பாவிடம் மும்முரமாக என்னவோ கதைத்துக் கொண்டிருந்தான். சித்தியின் முகத்தில் பதட்டத்தோடு கலந்த மகிழ்ச்சி. சித்தப்பா முகத்திலோ அவன் சொல்வதை உன்னிப்பாகக் கேட்கும் தீவிரம்.
“டேய்! என்னடா கதைக்கிறாங்க மூண்டுபேருமா சேர்ந்து?”
“யாருக்கு தெரியும்? நானும் ஒட்டுக்கேப்பம் எண்டுதான் பாத்தனான். அண்ணா இங்க துரத்தி விட்டுட்டார்.” என்றான் அவன் சோகமாக.
“உருப்படியான காரியம் செய்ற பழக்கம் உனக்கு எண்டைக்கு இருந்திருக்கு?” என்று வழக்கடித்தபடி அவர்கள் இருக்க, அங்கோ நிரஞ்சன் தன் மனதை அவர்களிடம் தெரியப் படுத்திக்கொண்டிருந்தான்.
நிரஞ்சன் அவர்களை நாடி வரவும், அவனைக் கண்டுவிட்டு வேகமாக வந்து, அவனது கையை பற்றி, “வாழ்த்துக்கள் நிரஞ்சன். உங்கட சேவை இன்னுமின்னும் எளிய வறிய மக்களுக்கு கிடைக்கவேணும். நீங்களும் இன்னுமின்னும் முன்னுக்கு வரோணும்.” என்று வாழ்த்தினார் சிவகுமார்.
“நன்றி அங்கிள்” என்று அவன் புன்னகையோடு ஏற்றுக்கொள்ள,
“இந்த சிங்கள ஊர்ல எங்கட தமிழ் பிள்ள, அதுவும் இந்தச் சின்ன வயதில் பேரும் புகழுமா வாழுறத பாக்க பெருமையா இருக்கு!” என்றார் மனதிலிருந்து.
கடல் கரையோரத்து மக்களுக்கு, எப்போதும் இயற்கை அழிவில் அவர்கள் அதிகமாக பாதிப்படைவதால் தன் சொந்தச் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்க முடிவெடுத்திருந்தான் நிரஞ்சன். அது நல்லபடியாக முடியவேண்டும் என்றுதான் இன்றைய விசேச பூஜையும் நடந்தது.
கோவிலுக்கு வந்த இடத்தில்தான் பக்கத்து வீட்டிலிருக்கும் அவர்களுக்கே அது தெரிய வந்திருந்தது. எந்தப் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படாது எளியவர்களுக்கு உதவும் அவன் நல்ல மனதை அவர்கள் பாராட்ட, “இதுல என்ன இருக்கு அங்கிள். என்னால முடிஞ்சத செய்றன், அவ்வளவுதான். மற்றும்படி பெரிதாக ஒன்றுமில்லை.” என்றான் அவன்.
தன்னிடம் வேலை செய்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்தபோதும், இப்படித்தான் செய்வதை செய்துவிட்டு சத்தமே இல்லாமல் இருந்துவிட்டான்.
அவனது பெரிய மனதை எண்ணி அவர் உள்ளூர வியக்க, “உங்களிட்ட ஒரு முக்கியமான விஷயம் கதைக்கோணும் அங்கிள். வீட்ட வருவம் எண்டுதான் நினைச்சனான், ஆனா, கோவில்ல வச்சு கதைக்கிறது இன்னும் பொருத்தமா இருக்கும் எண்டு நினைக்கிறன்.” என்றான் நிரஞ்சன்.
“சொல்லுங்க தம்பி! என்ன விஷயம்? என்னால முடிஞ்ச உதவிய கட்டாயம் நான் செய்வன்” என்று அவன் சொல்ல முதலே உதவ முன்வந்தார் அவர்.
அப்போதும் உடனேயே பேச்சை ஆரம்பிக்காது, “எனக்காக உங்களிட்ட வந்து கதைக்க என்ர வீட்டுல பெரியாக்கள் யாரும் இல்ல. அதாலதான் நானே கேக்கிறன்.” என்றான்.
அவர்கள் குழப்பத்தோடு பார்க்க, ஒருமுறை ஜீவனிதாவை திரும்பிப் பார்த்துவிட்டு, “உங்கட மகள் ஜீவனிதாவை எனக்கு பிடித்திருக்கு அங்கிள். எனக்காக அவளை நானே பெண் கேட்டு வந்திருக்கிறன். அவளை எனக்கு தாங்கோ. நல்லபடியா சந்தோசமா கடைசிவரைக்கும் வச்சுக் காப்பாத்துவன்.” என்று அவர்களது கண்களை நேராக நோக்கி அவன் கேட்டபோது, இருவரும் ஆனந்தமாக அதிர்ந்து போயினர்.
“உண்மையாத்தான் கேக்குறீங்களா தம்பி. என்னால நம்பவே முடியேல்ல.” சந்தோஷ மிகுதியில் தன்னை மீறிக் கேட்டார் செல்வராணி.
ஒரு உத்தமமான ஆண்பிள்ளை, ஊருக்குள் செல்வாக்கு மிகுந்த செல்வந்தன், கனவிலும் அவர்கள் எதிர்பாராத சம்மந்தம்.. அப்படியானவன் கேட்டபோது, மெய்யாகவே அவர்கள் பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும்! என்று செல்வராணி நினைக்கையிலே சிவகுமாரும் அதையே அவனிடம் சொன்னார்.
“நாங்க இத எதிர்பார்க்கவே இல்ல நிரஞ்சன். மனதுக்கு சந்தோசமா இருக்கு. எங்கட மகளுக்கு நீங்க கிடைக்க அவள் குடுத்து வச்சிருக்கோணும்.”
“இல்லை அங்கிள். அவளைப்போல ஒருத்தி கிடைக்க நிச்சயமா நான்தான் குடுத்து வச்சிருக்கோணும்.” என்று முறுவலித்தான் அவன்.
பெரியவர்களின் மனம் குளிர்ந்துபோயிற்று. ஆனாலும் அவசரப்படவில்லை. “எதுக்கும் நாங்க எல்லோரடையும் கலந்து கதைச்சிட்டு சொல்லுறம். எடுத்தோம் கவுத்தோம் எண்டு முடிவெடுக்கிற விசயமில்லத்தானே இது.” என்றார் அவர் நயமாகவே.
“நிச்சயமா அங்கிள். என்னைப்பற்றி நல்லா விசாரிங்கோ. யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்கோ. அதோட, என்னவோ நேற்று பாத்து இண்டைக்கு பிடிச்சுப்போய் கேக்கிறன் எண்டெல்லாம் நினைக்கவேண்டாம். என்ர இந்த விருப்பம் இண்டைக்கு நேற்று வந்ததில்ல. நாலு வருசத்துக்கு முதலே வந்தது. இன்னும் அவளிட்ட இதைப்பற்றி நான் கதைக்கவே இல்லை. நீங்க எல்லோரும் சந்தோசமா முழு மனதோட என்னட்ட அவளை தரோணும். அவளும் எந்த மனச்சிணுக்கமும் இல்லாம வரோணும். அதாலதான் அவளிட்ட சொல்லாம உங்களிட்ட சொல்றன். நீங்க மறுத்தாலும் சம்மதிச்சாலும் எனக்கு கல்யாணம் எண்டு ஒண்டு நடந்தா அது அவளோடதான். இல்லாட்டி இல்ல!” என்றான் உறுதியான குரலில்.
இருவருமே மலைத்துப் போயினர். என்னவோ அவளைப் பிடித்துவிட்டது, அதனால் பெண் கேட்கிறான் என்று அவர்கள் நினைக்க, அவனோ அவளின்றி தனக்கு வேறு வாழ்க்கை இல்லை என்று சொல்லிவிட்டானே! அப்போதே அவளைத் தூக்கி அவனிடம் கொடுத்துவிடும் வேகம் அவர்களுக்கு வந்துவிட்டது. அவள் மகள்தான் என்றாலும் பெற்றவர்கள் அவர்கள் இல்லையே.
“நிரஞ்சன், நீங்க பிறந்ததுல இருந்து உங்கள எனக்குத் தெரியும். தங்கத்த உரசிப்பாக்க வேண்டிய அவசியம் இல்ல. ஆனா நாங்க மட்டுமே இதுல முடிவ சொல்லேலாது. அவளை பெற்றவர்களிடம் கதைச்சிட்டு நல்ல முடிவா சொல்லுறம்.” என்று சிவகுமார் சொல்ல,
“கட்டாயம் நல்ல முடிவுதான் தம்பி சொல்லுவம்.” என்று தானும் சொன்னார் செல்வராணி.
மகளுக்கு அமையப்போகும் நல்ல வாழ்க்கையை இழந்துவிடக் கூடாது என்கிற பரிதவிப்பு அவரிடம்.
“நன்றி ஆன்ட்டி. முழு நம்பிக்கையோட உங்கட பதில எதிர்பாத்திருப்பன்.” என்று பதிலிறுத்தான் நிரஞ்சன்.
இவர்களையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு புகைந்தது. ‘என்னட்ட வந்து கதைக்காம அங்க அலட்டிக்கொண்டு நிக்கிறான் விசரன்!’
“சரி தம்பி. அப்ப நாங்க வெளிக்கிடப்போறம்.” என்று அவனிடம் நல்லபடியாகவே விடைபெற்றனர்.
சின்னவர்களை சிவகுமார் அழைக்க, ரதன் ஓடிவந்தான். ஜீவியோ பார்த்துப் பார்த்து ஒவ்வொரு பாதமாக எடுத்துவைத்து வந்தாள்.
அவளிடமிருந்து விழிகளை அகற்ற முடியாது நின்றான் நிரஞ்சன். வாடிவிட்ட அந்தப் பூ முகம் கோபத்தில் சிவந்திருப்பதைக் கண்டு தவித்துப்போனான். தன்னைப் பார்த்தாலாவது கண்களால் ஆறுதல் சொல்லலாம் என்றால் அவளோ அவன் பக்கமும் திரும்பினாளில்லை!
நடக்கமுடியாமல் சாரி ஒருபக்கம் தடுக்க, அவன் தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்பது தடுமாற்றத்தை கொடுக்க சினம்தான் வந்தது அவளுக்கு.
அவள் அவர்களின் அருகே வந்ததும், அவளருகில் சென்று நின்றுகொண்டான். சிவகுமார் அதனைக் கவனித்துக்கொண்டார். விடைபெறும் முகமாக அவனைப் பார்த்து அவர் தலையசைக்க, “கார்ல போங்க அங்கிள்.” என்றுவிட்டு கதிரவனை பார்த்தான்.
அந்த ஒற்றைப் பார்வையில் காரை கொண்டுவந்து அவர்களின் முன் நிறுத்திவிட்டார் அவர்.
“நடந்து போவம் சித்தி.” பிடிவாதக் குரலில் சொன்னாள் ஜீவனிதா.
“வீடு கிட்டத்தானே நிரஞ்சன். நடந்தே போறம்.” என்கிறார் சிவகுமாரும்.
“இருட்டிட்டுது அங்கிள். உங்கட மகள் நடக்கிற வேகத்து நடுச்சாமம் தான் வீட்ட போய் சேருவீங்க. அதுக்கு கார்லயே போகலாம்.” என்றவன் கதிரவனை பார்க்க, அவர் சிவகுமாருக்கு கார் கதவை திறந்துவிட்டார்.
அதற்குமேலும் மறுக்கமுடியாமல் ஏறி அமர்ந்தவருக்கு ஒன்றுமட்டும் விளங்கியது. என்னதான் இலகுவான தொனியில் கதைத்தாலும் தன் விருப்பத்தை உறுதியாக நின்று நிறைவேற்றிக் கொள்கிறவன் அவன் என்று. தங்கள் பெண்ணையும் மணந்தே தீருவான் என்பதும்! நீங்க முழு மனதோட அவள என்னட்ட ‘தரோணும்’ என்று முடிவா சொன்னானே.
கணவரே ஏறிவிட்டதில் புஸ்பராணியும் ஏறிக்கொண்டார்.
ரதனுக்கு சொல்லவேண்டிய அவசியமே இருக்கவில்லை. போர்ஷேயில் ஏறக் கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் எப்போதோ அதற்குள் புகுந்திருந்தான்.
அப்போதும் ஏறாமல் முகத்தை திருப்பிக்கொண்டு நின்ற ஜீவனியிடம், “போய் ஏறு!” என்றான் காதலோடு.
அசையாமல் அவள் நிற்க, “நீ ஆசைப்படுற எல்லாத்தையும் நிறைவேற்றுவன். இப்ப நல்லபிள்ளையா கார்ல ஏறிப் போ.” என்றான் நேசம் பொங்க.
அந்தக் குரல், அவன் சொன்ன விதம் உயிரின் ஆழத்தை வருடிச்செல்ல, அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அதற்காகவே காத்துக் கிடந்தவன் அவள் விழிகளோடு தன் விழிகளைக் கலந்தான். உதடுகள் உதிர்க்காத நேசத்தை உயிருக்குள் நிரப்புவது போலிருந்தது அவளுக்கு.
சுற்றுப்புறத்தை உணர்ந்து, “கோபத்துல திரும்பவும் கண்ணாடிய உடச்சிடாதம்மா. உன்ர நிரஞ்சனுக்கு திரும்பவும் புதுக்கண்ணாடி போடுற அளவுக்கு வசதியில்ல.” என்றான் நகைக்கும் குரலில்.
மோனநிலை முற்றுப்பெற, சிரிக்கும் விழிகளை முறைத்தாள் இவள்.
அவள் எதிர்பார்த்ததுபோல் தன் மனதைச் சொல்லாமல் இருந்துவிட்டு இப்போ மட்டும் என்ன பேச்சு?
ஏமாற்றம் மனதைத் தாக்க, விருட்டென்று திரும்பி காரை நோக்கி நடந்தாள். அவளுக்கு முன்னால் சென்று கதவைத் திறந்துவிட்டான் நிரஞ்சன். ஏறி அமர்ந்தவளின் சாரி முந்தானை வெளியே தொங்கவும், கோபத்திலிருந்தவள் கவனிக்கவில்லை. அதனை எடுத்து அவளின் மடியில் அவன் வைக்க, அதிர்வோடு அவள் திரும்பிப் பார்க்க, அந்தக் கண்களிடமே தன் காதலைச் சொல்லியபடி கதவை மெல்லச் சாத்தினான் அவன்.
அவளே அதனை எதிர்பார்க்கவில்லை எனும்போது, இதனைக் கண்டவர்கள் நிலை? வியந்துதான் போயினர்.
அவர்கள் ஆச்சரியமாக அவனைப் பார்க்க அவனோ போகும் காரையே பார்த்துக்கொண்டு நின்றான். நல்ல பதில் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தாலும், ‘கிடைக்காவிட்டாலும் அவளை விட்டெல்லாம் குடுக்க முடியாது!!’ அவள் மனதிலும் தான் இருப்பதை அறிந்துகொண்ட இதயம் உறுதியாக சொல்லிற்று!

