அத்தியாயம் 16
அவன் பயந்தது போலவே, அவள் வீடியோவையே பார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டதும் கதவடியிலேயே நின்றுவிட்டான். கால்கள் அதற்குமேல் நகர மறுத்தன.
காதலைச் சொல் காதலைச் சொல் என்று கேட்டவளோ அவன் காதலில் உருகிப்போய் நின்றிருந்தாள்!
இவனை கண்டதும் கண்களில் கோர்த்திருந்த நீரோடு பார்த்தாள். திரும்பி திரையை பார்த்தாள். அவன் நேசத்தின் ஆழம், அவளின் கற்பனைக்கும் கனவுகளுக்கும் எட்டாத ஆழத்தில் இருந்தது. பிரமித்துப்போய் நின்றவளுக்கு தான் என்ன உணர்கிறோம் என்ன செய்கிறோம் எதுவும் உரைக்க மறந்தது. மீண்டும் அவனை பார்த்தாள். பார்த்த நொடியில் நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து முழு வேகத்துடன் வெடித்துக் கிளம்பிய கேவலுடன் பாய்ந்தோடி வந்து அவனைக் கட்டிக்கொண்டு விம்மினாள்.
ஒருகணம் ஆனந்தமாய் அதிர்ந்துதான் போனான் நிரஞ்சன்!
“டேய் தங்கம்! இதென்ன அழுகை?” என்று அவன் உருக, ஆவேசமாக அவன் கழுத்தை வளைத்து முகத்தை தன்னருகே இழுத்து புயலென முகமெங்கும் முத்தமிடவும், திக்குமுக்காடிப் போனான் நிரஞ்சன்.
முகமெங்கும் படிந்த உதட்டின் ஈரமும் கண்ணீரின் தடமும் அவனது உணர்வுகள் அத்தனையையும் உசுப்பித்தான் போட்டது! தன்னை மறந்து அவளைக் காற்றும் புகாதபடிக்கு இறுக்கமாய் அணைத்துக்கொண்டான். அதுவும் ஒரு கணம்தான்!
அடுத்த கணமே, தன்னவளுக்கு குறையாத வேகத்தில் பதிலடி கொடுத்துவிட உடம்பின் ஒவ்வோர் அணுவும் துடித்தாலும் தன்னை அடக்கிக்கொண்டான். உணர்ச்சிவசப்பட்டு நிற்பவளை ஒருகையால் அணைத்து மறுகையால் இதமாக முதுகை தடவிக்கொடுத்தான். அவனுக்குள்ளே நடந்துகொண்டிருந்த உணர்வுகளின் போராட்டத்தில் அவன் கரங்களிலும் சின்னதாக ஒரு நடுக்கம்!
சற்று நேரத்தில் கட்டுக்குள் வந்தவளோ அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவன் மார்பில் சாய்ந்துகொண்டாள். அதுவே வேண்டும் என்று அவனுக்கு காட்டி! அதுவே போதுமென்று சொல்லாமல் சொல்லி!
அதுநாள் வரை துள்ளித்திரியும் புள்ளிமானாய், தொடமுதல் வெடிக்கும் பட்டாசாய் பார்த்தவளின் இன்றைய இந்த அழுகையும் உணர்ச்சிப் போராட்டமும் அவனுக்காக எனும்போது, நிரஞ்சனுக்கும் அதற்குமேல் வேறெதுவும் தேவை இருக்கவில்லை. தானும் அணைத்தபடி அவளின் உச்சியில் கண்மூடிச் சாய்ந்துகொண்டான்.
சுகமான நொடிகள் சில அப்படியே கடக்க, அவளின் பூமுகத்தை கைகளில் ஏந்தி, தன் விழிகளை அவள் விழிகளோடு கலந்து, “என்ன திடீரென்று என்மேல இவ்வளவு பாசம்? ம்?” என்று கேட்டான் நிரஞ்சன்.
இத்தனை அற்புத காதலை தனக்குள் ஒழித்து வைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியதவன்போல் அவன் கேட்கவும், அழுகையோடு சிரிப்பும் சேர, “நடிக்காதடா!” என்றபடி அவன் மார்பில் குத்தினாள் ஜீவனி.
சந்தோசமாய் வாங்கிக்கொண்டு, “சொல்லேன்டா..” என்று ஆசையோடு கேட்டான் அவன்.
“அதுவா… ஒரு லூசன் கண்ணாலையே பாத்துப் பாத்து காதல சொன்னானா.. அதான் அவன ஒருவழி பண்ணுவம் எண்டு வந்தனான்.” அவளுக்குள்ளிருந்த குறும்புப்பெண் வெளிவந்திருந்தாள்.
“அவன் எப்பவோ இவமேல பித்தாகிட்டானாம். இது தெரியாதா இந்த ஜீவனிக்கு.” கன்னங்களை மெல்ல வருடிக்கொண்டே சொன்னான்.
“ம்க்கும்! எங்க இருந்து தெரிய? இந்த நிமிஷம் வரைக்கும் வாய திறந்து ஒரு வார்த்தை சொல்லேல்ல நீங்க.” என்றாள் குறையோடு.
“சொன்னாத்தான் தெரியுமா?” முகத்தோடு முகம் நெருங்க, மனதுக்கு நெருக்கமான குரலில் அவன் கேட்க, சிலிர்த்தது அவள் தேகம்.
கன்னங்களைத் தாங்கியிருந்த கரங்கள் தந்த கதகதப்பு, மிக நெருக்கத்தில் தெரிந்த களையான முகம், எப்போதும் அவளை வசீகரிக்கும் வசியமிகு விழிகள் எல்லாமே அவளை வேறோர் உலகுக்கு அழைத்துச் செல்ல, “சொல்லாமையே தெரியப்போய்த்தானே இங்க வந்தனான்.” நெகிழ்ச்சியில் தழுதழுத்து வந்தன வார்த்தைகள்.
தன் வீடியோவை திரும்பி ஒருமுறை பார்த்துவிட்டு, “என் மேல ஏன் இவ்வளவு லவ் நிரஞ்சன்? அதுவும் அந்தக் கண்கள்..” சொல்லும்போதே அந்தக் கண்களில் கண்ணீர் கொட்டியது. “என்னை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்று காதலில் கரைந்த குரலில் கேட்டாள்.
“எவ்வளவு பிடிக்கும் என்று எனக்கு சொல்லத் தெரியாது செல்லம். அதுக்கு அளவும் இல்ல கணக்கும் இல்ல. என்ர இதயம் துடிக்கிற ஒவ்வொரு முறையும் உன்ர பெயர சொல்லித்தான் துடிக்குது. உன்ர மூச்சு கலந்திருக்கிறதாலதான் என்ர உயிர் இந்த காத்த சுவாசிக்குது. நீ இருக்கிற காலம் மட்டும்தான் இந்த உலகத்துல நானும் வாழ ஆசைப்படுறன். என்ர கடைசி மூச்சு உன்ர மடியில தான் போகவேணும். உன்னோட வாழுறதுக்காக மட்டும்தான் இந்த உலகத்துல நான் ஆம்பிளையா பிறந்ததே..” என்றான் நெஞ்சை உருக்கும் குரலில்.
ஆழமான அவன் காதலில் நனைந்தவளின் கண்களில் நீர் திரண்டது. திரண்ட கண்ணீர்த் துளிகள் கன்னத்தில் உருண்டு மார்பை நனைக்க, எம்பி அவன் கன்னத்தில் தன் ஈர இதழ்களை அழுத்தமாக ஒற்றி எடுத்தாள். அவன் அணைப்பு மெல்ல இறுகியது.
“நீங்க இந்தளவு அன்ப என்னில வைக்கிற அளவுக்கு நான் அப்படி என்னதான் செய்தனான் நிரஞ்சன்? பாக்கிற நேரமெல்லாம் சண்ட பிடிச்சதும் கல்லால எறிஞ்சதும் கோபமா பேசினதும் தானே. பிறகும் எப்படி?” அவன் அன்பில் மலைத்துப்போய் கேட்டாள்.
விரல்கள் கொண்டு அவள் கண்ணீரை துடைத்துவிட்டான். “நீ ஏதாவது செய்தாத்தான் எனக்கு உன்மேல அன்பு வரோணும் எண்டா அது காதல் இல்ல ஜீவனி. எந்தக் காரணமும் இல்லாம இனி இவள்தான் உனக்கு எண்டு மனம் சொல்லோனும். அவளுக்காக என்ன வேணுமெண்டாலும் செய்யலாம் என்ற வேகம் வரோணும். அவள் இல்லாட்டி நான் வாழமாட்டன் எண்டு உயிர் துடிக்கோணும்.” என்று அவன் சொல்லும்போதே,
“அப்ப உங்கட உயிர் துடிச்சதா இந்த ஜீவிதான் வேணும் எண்டு..” என்று தலையை சரித்து வேண்டுமென்றே கேட்டாள் அந்த குறும்புக்காரி.
“இல்லையே..” என்றான் அவனும் அவளைப்போலவே!
அவள் பயங்கரமாய் முறைக்க, “உடன மூக்குக்கு மேல கோபம் வந்துடும் உனக்கு!” என்று மூக்கோடு மூக்கை உரசிவிட்டு வசீகரமாக சிரித்தான்.
“இண்டைக்கு நேற்று இல்ல.. நாலஞ்சு வருசமா நீ வேணுமெண்டு என்ர உயிர் துடிக்குது.”
“அப்ப ஏன்டா என்னைத்தேடி வரேல்ல? வந்து காதலை ஏன் சொல்லேல? எனக்கு நீதான் வேணும் எண்டு என் பின்னால ஏன் அலையேல்ல? நீயும் காதலிக்கிறியா எண்டு ஏன் கேக்கேல்ல?” அவன் மார்பில் குத்திக் குத்தி சண்டைக்கு போனாள் அவள்.
“என்ர கண்ணை வரையத் தெரியுது, அதுல அவ்வளவு காதலை கொண்டுவரத் தெரியுது, ஆனா என்னட்ட மட்டும் சொல்லமாட்டாராம்! எப்படி சொல்ல வச்சன்!” சொல்லிச் சொல்லி அடிகொடுத்தாள்.
அவனோ அத்தனையையும் ஆசையோடு வாங்கிக்கொண்டான். “அதுதான் இப்ப சொல்லிட்டேனே. உன்ர நிரஞ்சன பாவம் பாத்து விட்டுடேன்.” என்றவனின் கழுத்துக்கு தன் கைகளை மாலையாக்கினாள் அவள்.
“உங்க அளவுக்கெல்லாம் நான் உங்கள விரும்புறனா எண்டு எனக்கு தெரியாது நிரஞ்சன். ஆனா, கோயில்ல வச்சு உங்கள பாத்த அந்த நேரம்.. அந்த நிமிஷம்.. உங்கட கண் என்னட்ட என்ன சொன்னதோ தெரியாது.. அந்த நிமிஷத்துல இருந்து என்ர இதயம் என்னட்ட இல்ல. உங்களிட்ட வந்திட்டுது. நான் நானா இல்ல நிரஞ்சன். நீங்களும் எனக்கு புதுசா தெரியேல்ல. என்னவோ காலம் காலமா உங்களோட வாழ்ந்த மாதிரி.. உங்கள விட்டு ஒரு நிமிஷம் கூட பிரிஞ்சு இருக்க முடியேல்ல. பக்கத்துல தான் உன்ர உயிர் இருக்கு, அங்க ஓடு அங்க ஓடு எண்டுதான் மனம் சொன்னது. அதுதான் ஓடி வந்துட்டன்.” கண்ணோரங்கள் காதலில் கசியச் சொன்னவளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு இறுக்கமாக கட்டிக்கொண்டான் நிரஞ்சன்.
உயிர்கள் கசிய உணர்வுகள் உறைய இதயங்கள் காதல் மொழி பேசிக் களித்தன!
தன்னவளை, தன் எதிர்காலத்தை, தன் சந்தோசத்தை யாருக்கும் தரமாட்டேன் என்று சொல்லாமல் சொல்வதுபோல் அவளை தன் கைசிறைக்குள்ளேயே பொத்தி வைத்துக்கொண்டான் அவன்!
திடீரென அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் ஜீவனிதா.
“என்ன?” அந்த விலகளை தாங்கமுடியாமல் தவிப்பாக கேட்டான்.
“இன்னும் நீங்க என்னட்ட கேக்கேல்ல?” என்றாள் முறைப்போடு.
“என்னத்த?”
“நான் உன்ன காதலிக்கிறன். நீ என்ன காதலிக்கிறியா எண்டு!”
சட்டெனச் சிரித்துவிட்டான் நிரஞ்சன். “போக்கிரி!” என்று மூக்கைப் பிடித்துத் திருகவும், அவன் கையை பிடித்து தட்டிவிட்டாள்.
“கோயில்ல எவ்வளவு ஆசையா எதிர்பாத்துக்கொண்டு இருந்தனான் தெரியுமா? நீங்க சொல்லவே இல்ல.” என்றாள் மனதாங்களோடு.
“அச்சச்சோ.. என்ர சில்வண்டு எதிர்பாத்து ஏமாந்தாளா?” என்று அவன் கொஞ்ச,
“அதுசரி.. அதென்ன நாலஞ்சு வருஷக் கணக்கு? இப்பதானே என்ன பாத்தீங்க?” என்று நினைவு வரக் கேட்டாள் அவள்.
“அதுவா..” என்று ஆரம்பித்து தனக்குள் அவள் வந்த கதையை சொல்லவும் மீண்டும் நெகிழ்ச்சியில் கண்கள் கலங்கினாள் ஜீவனிதா.
“என்ன நிரஞ்சன் இது? தப்பித்தவறி நான் வேற யாரையாவது விரும்பி இருந்தா? உங்கட நிலை என்ன?” துடித்துப்போனாள் அவள். இத்தனை ஆழமான அன்பைக் கொண்டவன் தன் ஜோடிப்புறா இன்றி என்ன ஆகியிருப்பான்? நினைத்துப்பார்க்கக் கூட முடியவில்லை.
தாங்கமுடியாமல் விம்மல் வெடிக்க அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள்.
“செல்லம்மா! என்னடா இது? தொட்டத்துக்கும் அழுதுகொண்டு. அதுதான் என் செல்லம் என்னட்ட வந்திட்டாளே! பிறகென்ன?” அவன் தேற்றினான்.
“அது தானா வருது. அதுக்கு நான் என்ன செய்ய?” என்று சொன்னவள், அந்த நொடியில் தன் மனதிலும் அவனை கொண்டுவந்ததற்காய் அந்த ஆண்டவனுக்கு மனதால் நன்றி சொன்னாள்.
“எனக்கென்று ஒரு கல்யாணம் நடந்தா அது உன்னோட மட்டும்தான். ஆனால், உனக்கென்று ஒரு திருமணம் இன்னொருவனோடு நடந்தா, அவன் உன் மனதுக்கு பிடிச்சவனா தான் நிச்சயம் இருப்பான். உனக்கு பிடிச்ச எதையும் தடுக்கிற தைரியம் என்னட்ட இல்லடா. உன் நினைவுகளோடையே என் வாழ்க்கை போயிருக்கும்.” என்றபோது திரும்பவும் அழுதே விட்டாள் ஜீவனி.
“எப்பவும் நீங்க என்ன அழ வைக்கிறீங்க.” என்றபடி அவன் மார்பில் முகம் புதைத்து அவள் கண்ணீர் வடிக்க,
கைகளால் அவள் கண்ணீரை துடைத்துவிட்டு, “சும்மா சும்மா அழக்கூடாது! என்ர ஜீவனி இது இல்லையே.” என்று கேட்டு அவளை சமாதானப்படுத்தினான்.
அழுது பழக்கம் இல்லாதவளும் சமாதானமாக, அவன் வீட்டுக் கடிகாரக் குயில் பதினோரு முறை கூவி அடங்கியது.
“பதினொண்டாச்சு ஜீவனி. இனியும் நீ இங்க நிக்கிறது சரியில்ல. வா கொண்டே விட்டுட்டு வாறன்..” என்று கைப்பிடித்து அழைத்தான்.
அவளோ, “மாட்டன்! நான் இங்கதான் இருப்பன்!” என்றாள் அடமாக.
“பகல் எண்டாலும் பரவால்ல. இப்ப கூடாது. வா..” என்று திரும்பவும் அழைக்க, மறுத்துத் தலையசைத்தாள் பிடிவாதப் பெண்ணாக மாறி.
அவனுக்கும்தான் அவளை அனுப்ப மனமேயில்லை. ஆனாலும், “என்ர செல்லம் தானே.. வாங்கடி..” என்று கெஞ்சிக் கொஞ்சினான்.
“அப்ப நாளைக்கு பகல் வரட்டா..?” ஆர்வமாக அவள் கேட்க,
இப்ப இவளை அனுப்புவதே குறியாக இருந்தவன் தெரியாத்தனமாக சரி என்று தலையாட்டினான். அதன் பிறகே அவனோடு கூட நடந்தாள்.
ரதனின் வீட்டு கேட் அருகில் வந்ததும், “இனி போவாய் தானே.. இல்ல உள்ளுக்கு கொண்டுவந்து விடவா..” என்று அவன் நின்று கேட்க,
“ம்ம் போவன்.. சரி தாரத கெதியா தாங்க..” என்றாள் அவள்.
“என்ன தர?”
“சரியான சாமியார்டா நீ!” என்று அவனை வைதுவிட்டு, சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தாள். இவள் ஏன் பார்க்கிறாள் என்று எண்ணியபடி அவனும் பார்க்க, அவன் தோள்களைப் பற்றி எம்பி கன்னத்தில் தன் இதழ்களை பதித்து மீட்டாள் ஜீவனிதா.
மின்னல் வேகத்தில் அனைத்தும் நடந்திருக்க, யாரும் பார்த்தா என்கிற திகிலோடு இப்போது அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். அவனின் கட்டழகியோ, “நாளைக்கு நீங்க தரோணும்!” என்கிற கட்டளையுடன் வீட்டுக்குள் ஓடியிருந்தாள்.
சற்று நேரம் பிடித்தது நிரஞ்சனுக்கு, அந்த செப்பிதழ்கள் கொடுத்த தித்திப்பிலிருந்து மீள!

