திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு 19 – 1

அத்தியாயம் 19

ஜீவனிதா வீட்டின் உள்ளே செல்லும்போது, “கதைக்கப்பேச நல்ல பிள்ளையாத்தான் தெரியுது. எதுக்கும் கொஞ்சம் நல்லா விசாரிச்சு பாருங்க சிவா. அவசரப்பட்டு முடிவு செய்திட்டு பிறகு காலம் முழுக்க கவலைப்பட ஏலாது தானே.” என்று சொல்லிக்கொண்டிருந்தார் தவநேசன்.

“நீங்க இவ்வளவு யோசிக்கிற அளவுக்கு ஒண்டுமே இல்ல. நிரஞ்சன் தங்கமான பிள்ளை. மரியாதையான செல்வாக்கான குடும்பம். ஜீவிக்கும் அவனைத்தான் பிடிச்சிருக்கு.. சந்தோசமா கட்டிவைங்கோ!” என்று அடித்துச் சொன்னார் சிவகுமார்.

சட்டென புதிர்கள் எல்லாம் விடுபட்டு போயிற்று ஜீவனிக்கு. ‘அடப்பாவி! காதல என்னட்ட சொல்லுடா எண்டா.. என்ன தவிர மிச்ச எல்லாரிட்டையும் சொல்லி இருக்கிறான். இவன..’ என்று நினைக்கையிலேயே மனதில் அவன் மீதான நேசம் பல்கிப் பெருகிற்று.

அவன் இப்படி நடக்கவில்லையானால் தான் ஆச்சரியம். எதையும் நேராகவும் முறையாகவும் செய்ய நினைக்கின்ற, அனைவரையும் மதித்து நடக்கின்ற ஒருவனின் செயல் இப்படித்தானே இருக்கும்!

‘அப்போ.. அம்மா அப்பா இதுக்குத்தான் வந்திருக்கினம்’ என்று நினைத்துக்கொண்டே அவள் அங்கேயே நிற்க,

“பணக்கார இடம். எங்கட சக்திக்கு மீறினது. வசதிய பாத்து குடுத்திட்டு பிறகு கண்ணீர் வடிக்கிற மாதிரி ஆயிட்டுது எண்டா?” பயத்தோடு கேட்டார் புஷ்பராணி.

“அப்படித்தான் நானும் நினைச்சனான் புஷ்பா. ஆனா, பெடியன் நல்லபிள்ள. பணச்செருக்கு கொஞ்சமும் இல்ல, மரியாதையா கதைக்கிறார்.” என்றார் தவநேசன்.

“என்றாலும் எனக்கு என்னவோ மனதுக்கு ஒருமாதிரியாவே இருக்கு. அவள இங்க குடுத்திட்டு நானும் நீங்களும் அங்க என்ன செய்றது? எங்களுக்கு இருக்கிறதும் அவள் ஒருத்திதான். பக்கத்தில எண்டா காலம் முழுக்க எங்களோடையே இருப்பாளே. அவசரம் அந்தரம் எண்டாலும் ஓடிப்போகலாம்.” என்றார் அவர் அன்னையாக.

தவநேசனுக்கும் அந்தக் கருத்தில் உடன்பாடு இருந்ததில், அவரும் யோசனையோடு இருக்க, அருமையான சம்மந்தம் விடுபட்டுப் போய்விடுமோ என்று தவித்துப்போனார் செல்வராணி.

“என்னத்தான் இது? அக்காதான் யோசிக்காம கதைக்கிறா எண்டா நீங்களும் பேசாம இருக்கிறீங்க? வெளிநாட்டுக்கே மகளை சந்தோசமா அனுப்பி வைக்கிற இந்தக் காலத்தில யாழ்ப்பாணத்தில இருந்து காலி எல்லாம் ஒரு தூரமா?” என்று கேட்டார்.

“இல்லையடி செல்வா. பணக்கார இடம். உள்ளுக்கு என்னென்ன பிக்கள் பிடுங்கல் இருக்கோ யாருக்கு தெரியும் சொல்லு? காசு எல்லாத்தையும் மூடி மறைக்கும்.” என்றார் தமக்கை.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டு நின்றவளுக்கோ ஆத்திரம் சுறு சுறு என்று ஏறத்தொடங்கி இருந்தது.

என்ர நிரஞ்சன பற்றி என்ன தெரியும் எண்டு ஆளாளுக்கு இப்படியெல்லாம் கதைக்கிறாங்க? மனம் சண்டையிட்டது.

அவள் மனதை அறிந்தவர் போல் சொன்னார் சிவகுமார். “பக்கத்திலேயே இருக்கிற எங்களுக்கு தெரியாம அப்படி என்ன பூசல் இருக்கப்போகுது? எவ்வளவு மறச்சாலும் வெளில வரும். வந்திருந்தா கட்டாயம் என்ர காதுக்கு எட்டியிருக்கும். சும்மா ஒன்றும் இல்லாததை எல்லாம் நினச்சு அருமையான சம்மந்தத்தை கைவிட்டுடாதிங்கோ. அதவிட ஜீவி எனக்கும் மகள்தான். அப்படியிருக்க சும்மா சொல்லுவனா நான்? அவளுக்கு ஒண்டு எண்டா நாங்க ஓடி போகமாட்டமா? அவளுக்கு நிரஞ்சன்தான் நல்ல பொருத்தம்.” என்று அழுத்திச் சொன்னார் சிவகுமார்.

அவர் ஒன்றும் மேலோட்டமாக கதைக்கும் நபர் அல்ல. ஜீவி மீதான அவரின் மெய்யான பாசத்தையும் அவர்கள் அறிவார்கள். தவநேசனை போலவே மனிதர்களை எடை போடுவதிலும் வல்லவர்.

அவரின் பேச்சு தவறாயிருக்க சந்தர்ப்பமே இல்லை!

மனம் சற்றே சமாதானமாக, “எதுக்கும் முதல் நான் அந்தப் பெடியன பாக்கோணும். எனக்கும் பிடிச்சா பிறகு விசாரிப்பம்.” என்றார் புஷ்பராணி.

“ஏன் உங்களுக்கா கல்யாணம்?” ஆத்திரமாக கேட்டாள் ஜீவனிதா. அதுவரை அவனைப் பற்றி நம்பிக்கையில்லாமல் அவ்வளவு கதைத்துவிட்டு எதற்காக பார்க்கவேண்டும் என்கிற கோபம் அவளுக்கு.

திருமண பேச்சில் மும்முரமாக இருந்தவர்கள் இவள் வந்ததை கவனிக்கவில்லை. குரல் கேட்டதும் அவளை திரும்பிப் பார்த்த புஸ்பராணி முறைத்தார்.

“சித்திவீட்ட போகப்போறன். காலிய சுத்திப்பாக்க போறன் எண்டு சொல்லி வந்தவள் என்ன வேலை செய்து வச்சிருக்கிறாய்? இதுக்குத்தான் இங்க வந்தியா? ஒரு குழப்படியும் செய்யாம இருப்பன் அம்மா எண்டு சொல்லிப்போட்டு இதென்ன காதல் கத்தரிக்காய் எல்லாம்?” என்று அதட்டினார் அவர்.

கணவரிடம் திரும்பி, “பாருங்கப்பா அவளின்ர கதைய? அம்மா எண்டு ஒரு பயமில்ல, மரியாதை இல்ல. அதுக்குமுதல், தனியா இருக்கிற அந்த பெடியன் வீட்டுல இவளுக்கு என்ன அலுவல்? பாக்கிறவே என்ன நினைப்பீனம்? பொம்புள பிள்ளைய வளத்து வச்சிருக்கிற லட்சணத்தைப்பார் எண்டு என்னத்தான் சொல்லுவீனம். எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம், நான் என்ன சொன்னாலும் கேக்காம நீங்க குடுத்த செல்லம் எங்க வந்து நிக்குது எண்டு பாருங்கோ. ” என்று அவரையும் ஒரு வாங்கு வாங்கினார்.

தகப்பனிடமும் தாய் கோபப்பட அழுகை வந்துவிடும் போலாயிற்று அவளுக்கு.

“சொல்லடி! ஒரு ஆம்பிளை இருக்கிற வீட்டுல உனக்கு என்ன அலுவல்?” கோபத்தோடு கேட்டார் புஷ்பராணி.

அவள் தகப்பனை பார்க்க, “அம்மா கேட்டதுக்கு பாதில சொல்லு ஜீவி. எதுவா இருந்தாலும் நீ எங்களோட தானே முதல் கதைக்கோணும். அத விட்டுட்டு சித்தி சித்தப்பாட்ட ஒரு வார்த்த கூட சொல்லாம அங்க போறது எல்லாம் என்ன பழக்கம்?” என்று என்றுமில்லாதவகையில் கண்டிப்பான குரலில் தந்தையும் கேட்க, கலங்கிப்போனாள் ஜீவனிதா.

அதோடு, என்னவோ நிரஞ்சன் கெட்டவன் போன்றும் அவனால் அவளுக்கு ஏதாவது நடந்துவிடுமோ என்கிற மாதிரியான பேச்சில் ரோஷமும் பொத்துக்கொண்டு வந்தது.

“போனா என்னப்பா? நிரஞ்சன் நல்லவர். எனக்கு அவர பிடிச்சு இருந்தது. அதுதான் கதைக்க போனேன்.” என்றவளின் பேச்சில் பெற்றவர்கள்தான் பேச்சற்றுப்போயினர்.

அவளுக்கோ, தன்னவனை நல்லவன் என்று நிரூபித்துவிடும் வேகம்!

“இண்டைக்கு நாங்க ரெண்டுபேருமா வெளில போவமா எண்டு நான் கேட்டதுக்கு, உன்ர அம்மா அப்பா உன்ன நம்பித்தான் இங்க அனுப்பிவச்சவே. அந்த நம்பிக்கைய உடைக்கிற எந்த விசயத்தையும் நாங்க செய்யக் கூடாது எண்டு சொன்னவர் அவர். அவரைப்பற்றி பிழையா கதைக்கவேண்டாம். அவரோட இருந்தா எனக்கு பாதுகப்பா இருக்குமே தவிர வேற எதுவும் நடக்காது!” என்றாள் தைரியமாக.

தன்மேல் மிக ஆழமான நேசம் கொண்டிருந்தாலும், அதைத் தன்னிடம் சொல்லாமல் அவர்களிடம் முறையாகப் பெண் கேட்டவனை குறையாகக் கதைப்பதா என்று மனம் கொதித்தது அவளுக்கு!

“உனக்கு பிடிச்சிருந்தா எங்களிட்ட தானே நீ சொல்லவேணும். அதவிட்டுட்டு எனக்கு அவர பிடிச்சிருக்கு, பாக்க போனேன் எண்டு சொல்றது என்ன கத? இதுல அந்தப் பெடியன வெளில போக வேற கூப்பிட்டு இருக்கிறாய்?” என்றார் அன்னை மிகவும் கண்டிப்பான குரலில்.

மளுக்கென்று கண்களில் நீர் நிறைந்தது அவளுக்கு. “நீங்க இங்க வராட்டியும் நான் உங்களிட்ட இண்டைக்கே சொல்லித்தான் இருப்பன். எனக்கொண்டும் பயமில்ல. அதோட அவர் ஒண்டும் யாரோ இல்ல. என்ர நிரஞ்சன்! எனக்கு அவரைத்தான் பிடிச்சிருக்கு. கட்டினா அவரைத்தான் கட்டுவன். இல்லாட்டி எனக்கு கல்யாணமே வேண்டாம்! சாகும் வரைக்கும் உங்கட மகளாவே இருந்து சாகிறன்!” என்று கத்திவிட்டு தன்னறைக்கு ஓடிச்சென்று கதவை படார் என்று அடித்துச் சாத்திக்கொண்டாள்.

எல்லோருக்கும் திகைப்பு! பலத்த மௌனம் நிரம்பியது அங்கே. சற்று நேரம் யாருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒன்றுமட்டும் நன்றாகப் புரிந்து போயிற்று! தங்கள் மகளின் வாழ்க்கையும் சந்தோசமும் அவன்தான் என்று!

புஷ்பராணிக்கு கண்ணில் கண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. அவரும் மகளும் சண்டையிட்டுக் கொள்வது என்பது புதிதில்லைதான். என்றாலும் அவள் அவன்தான் வேண்டும் என்று அடித்துச் சொன்னவிதம் அவரை பாதித்திருந்தது.

தவநேசன் தான் சமாளித்தார். “புஷ்பா, இதுல நீ இவ்வளவு கவலைப்பட ஒண்டும் இல்ல. அந்தப் பெடியன் நல்ல பிள்ளைதான். எனக்கு அவரோட கதைச்ச கொஞ்ச நேரத்திலையே அது விளங்கிட்டுது. நான் ஏதாவது சொல்லிப்போடுவன் எண்டு அவளை கிச்சனுக்கு அனுப்புறார். எனக்கு சட்டென்று என்னையே பாத்தமாதிரி இருந்தது. நீ ஏதும் திட்டப்போறாய் எண்டு தெரிஞ்சதும் நான் ஏதாவது சொல்லி அவளை எங்கயாவது அனுப்புற மாதிரியே செய்தார்.” என்றவருக்கு தன் இடத்திலிருந்தும் அவன் அவளை பாதுகாப்பான் என்கிற நினைவே மனதில் பெருத்த அமைதியை கொடுத்தது.

எந்தத் தாயும் தேடுவது மகளுக்கு இணையான கண்ணுக்கு நிறைவான துணையைத்தான். ஆனால், எந்தத் தகப்பனும் தேடுவது தன்னைப் போலவே அவளைக் கட்டிக்காக்கும் கணவன் வடிவில் இன்னோர் தந்தையை அல்லவா! அவன் உருவில் அவர் தன்னைத்தான் கண்டார்.

“அதவிட, நிரஞ்சனிட்டையும் களவு பொய் இல்ல. எங்கட பிள்ளைட்டையும் இல்ல. அதாலதான் ரெண்டுபேரும் நேரா எங்களிட்ட அவர்களின் விருப்பத்த சொல்லி இருக்குறாங்க. அத நினச்சு நாங்க சந்தோசம்தான் படவேணும். நாங்க விசாரிப்பம். பிடிச்சிருந்தா குறிப்பு பாத்து கட்டிவைப்பம்.” என்றார்.

“எல்லாம் சரியப்பா. அவளுக்கு பிடிக்காத ஒருத்தன நாங்க கட்டிவைக்க போறேல்ல. அவளின்ர சந்தோசம் தானே எங்கட சந்தோசமும். அது தெரியாம எப்படி கதைச்சிட்டு போறாள் எண்டு பாருங்கோவன். என்னவோ நாங்க அவளின்ர வில்லன் வில்லி மாதிரி.” மனம் ஆறாமல் சொன்னார் அவளை பெற்றவர்.

error: Alert: Content selection is disabled!!