அத்தியாயம் 20
அழகான மாலை பொழுதில், தவநேசன் தம்பதியரும் சிவகுமார் தம்பதியினரும் நிரஞ்சன் வீட்டுத்தோட்டத்தில் அவனோடு அமர்ந்திருந்தனர். எல்லோர் முகத்திலும் மலர்ச்சியும் சந்தோசமும்! இவர்களை எல்லாம் விழுந்து விழுந்து கவனித்துக்கொண்டிருந்த வேலையாட்களின் முகத்திலும் அத்தனை ஆனந்தம்.
பின்னே, அவர்களின் எஜமானனுக்கு திருமணம் ஆகப் போகிறதே!
ஆமாம்! தங்கள் மகளை நிரஞ்சனுக்கே கொடுத்துவிட சம்மதித்திருந்தனர் தவநேசன் தம்பதியர். இன்னும் மூன்று மாதங்களில் திருமணம். அந்த சந்தோசத்தில் மிதந்த ஜீவனிதாவை அடக்குவோர் யாருமில்லை. ரதனை அந்தத் தோட்டம் முழுவதும் உண்டு இல்லை என்றாக்கிக்கொண்டிருந்தாள்.
புஸ்பராணியின் கண்கள் மகள் பின்னாலேயே இருந்தது. அப்போதும் எதற்கோ ரதனின் மண்டையில் குட்டிவிட்டு ஓடியவளை கவலையோடு பார்த்தார்.
கல்யாணம் நிச்சயமாகியிருக்கிறது. ஆனாலும், இன்னும் சின்னப்பிள்ளையாக இருக்கிறாளே என்று உள்ளூரக் கவலைப்பட்டவர், நிரஞ்சனிடம் திரும்பி, “தம்பி, எங்களுக்கு அவள் ஒருத்திதான். செல்லமாவே வளத்துட்டோம். இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கிறா. அன்பா சொல்லிக்குடுத்தா கேட்டு செய்வா.. நீங்கதான் கொஞ்சம்..” என்று அவர் சொல்லும்போதே, “நீங்க ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் மாமி!” என்று சொல்லிப் புன்னகைத்தான் நிரஞ்சன்.
திருமணத்துக்கு சம்மதம் சொன்னாலும், அவர் முகத்தில் மட்டும் அவ்வப்போது சின்னக் கலக்கம், மெல்லிய யோசனை எட்டிப்பார்ப்பதை கவனித்துக்கொண்டுதான் இருந்தான் நிரஞ்சன்.
“அவளுக்கும் சேர்த்து பொறுப்பா நான் நடந்துகொள்ளுவன். அவள் விளையாட்டு பிள்ளையாவே இருக்கட்டும் மாமி. இந்த பொறுப்பு கடமை எல்லாம் அவளுக்கு வேண்டாம். இவ்வளவு தூரத்துல அவளை கட்டி குடுக்கிறோமே எண்டு நீங்க கவலைப்படாதீங்கோ. அங்க இரவு ட்ரைன் பிடிச்சா விடிய இங்க வந்திடலாம். மூன்று மாதத்துக்கு ஒருக்கா வாங்கோ, எல்லாருமா எங்கயாவது ஊர் சுத்திப் பாக்கலாம். சந்தோசமா இருக்கலாம். லீவு கிடைக்கேக்க அவளை நான் அங்க கூட்டிக்கொண்டு வாறன். அதால எந்தக் கவலையும் உங்களுக்கு வேண்டாம். ” என்று அவர் கண்களை பார்த்துச் சொன்னான்.
அவனின் ரசிகன் ரதன் மூலம் அவர்களின் கலக்கங்களை அறிந்திருந்தவன் அதை போக்கினான். புஷ்பராணிக்கு தன் மனதை உணர்ந்து உண்மையாக பேசியவனை மிகவுமே பிடித்துப் போயிற்று.
வீட்டுக்கு வந்ததும் மகளை கூப்பிட்டுக் கண்டித்தார்.
“சும்மா எப்ப பாத்தாலும் ரதனுக்கு அடிக்கிறதும் ஓடுறதும் ஆடுறதுமா இருக்காத! கல்யாணம் ஆகப்போகுது, இன்னும் நீ என்ன சின்னக் குழந்தையா? நிரஞ்சனுக்கு நல்லது கெட்டது சொல்லிக்குடுக்க ஒருத்தரும் இல்ல. ஆனாலும் எவ்வளவு பொறுப்பா நடக்கிறார் எண்டு பார். அவருக்கு ஏற்ற மாதிரி பொறுப்பா பக்குவமா இருக்கப் பழகு ஜீவி. இனியும் விளையாடிக்கொண்டு திரியாதே!” என்று புத்தி சொன்னார்.
என்னதான் அவனது பேச்சு மனதுக்கு ஆறுதலாக இருந்தாலும், வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து வந்த அவருக்கு மகளின் விளையாட்டுத்தனம் அவள் வாழ்க்கையை பாதித்து விடுமோ என்கிற பயம். எனவே புத்தி சொன்னார்.
ஆனால், எதற்கும் கலங்காத ஜீவியோ, ‘நான் அவனுக்கு ஏற்றவள் இல்லையா?’ என்கிற ஒற்றைக் கேள்வியிலேயே கலங்கிப்போனாள்.
விளையாட்டுப் பெண்தான். ஆனால், அவள் கொண்ட காதல் மிக மிக ஆழமானது. அந்தக் காதலுக்கு ஏதாவது பங்கம் வருமானால்? அதற்குமேல் நினைக்க முடியாமல் திகைத்து நின்றாள் ஜீவனி.
‘அப்படி ஏதாவது எண்டா செத்தே போயிடுவன்.’ மனம் அழுத்தி சொல்ல, தன்னை மாற்றிக்கொள்ள முனைந்தாள்.
‘இனி நான் அவனுக்கு ஏற்ற மாதிரி நடக்கோணும்.’ வெகு இலகுவாக முடிவு செய்துகொண்டவளால் நடைமுறையில் அதை செயல் படுத்தவே முடியவில்லை.
தரையில் கால் படாமல் துள்ளித் திரிகிறவள் நிதானமாக நடக்க முயன்றாள். கால்கள் தடுமாறின.
சட்டென எதற்கும் சத்தம் போடுகிறவள் அமைதியாக இருக்க முயன்றாள். முடியாமல் எரிச்சலும் ஆத்திரமும் தான் வந்தது.
காலை தேநீர் முதற்கொண்டு சாப்பாடு வரை அன்னை அல்லது சித்திதான் தரவேண்டும். தானாக எடுத்துச் செய்ய நினைத்தாள். அருந்திய கப்பை கிச்சனில் கொண்டுபோய் வைப்பதே மலையை புரட்டுவது போலிருக்க, தன் சுயத்தை ஒரே நாளிலேயே இழந்துபோனதுபோல் தவித்துப்போனாள்.
ரதனோடு அக்கா என்கிற இடத்திலிருந்து பொறுப்பாக கதைப்போம் என்றால்.. முடியவே இல்லை. அவனும் அதற்கு ஒத்துழைக்க மறுத்தான்.
அடுத்தநாள் காலை விடிந்ததுமே நிரஞ்சனிடம் ஓடிவிட மனமும் உடலும் தவியாய் தவித்தது.
‘இல்லை! என்னை நான் அடக்க வேண்டும். அவனுக்கு இணையாக மாற வேண்டும்’ என்று அடக்கினாள். முடியவேயில்லை. கால்கள் அவன் காலடிக்கு ஓடிவிடத்தான் துடித்தன! அழுகையையும் யார் மீது என்றில்லாமல் வெடித்துக்கொண்டு வந்த எரிச்சலையும் அடக்கிக்கொண்டு இருந்தவளுக்கு மூச்சு முட்டிப் போயிற்று!
அதுநாள் வரை துன்பத்தின் சாயலே படாமல் வளர்ந்தவளுக்கு, நினைத்ததை நினைத்த நொடி செய்து பழகியவளுக்கு நடப்பவை பெரும் துன்பமாகப் போயிற்று! நெஞ்சு வெடித்துவிடுமோ என்று பயமாக கூட போயிற்று. அந்தளவுக்கு பாரிய விசயங்களாகத் தெரிந்தன அவை அவளுக்கு. சுயத்தை இழக்கிறோமே என்று விளங்கினாலும் அதற்காகத் தன்னும் அவனை இழக்க அவள் தயாராயில்லை! அப்படியே கட்டிலில் விழுந்து எப்போதும்போல தலையணையால் தலையை மூடிக்கொண்டு கிடந்தவளின் செல் அழைத்தது.
யாரிடமும் பேச மனமற்று அப்படியே கிடக்க, அதுவோ விடாமல் அடித்தது.
‘நிம்மதியா இருக்க கூட விடமாட்டாங்களா?’ எரிச்சலோடு எழுந்தாள்.
உடனேயே, ‘பொறுமையா இரு ஜீவி. இது உனக்கு நடக்கும் சோதனை..’ என்று தன்னை நிதானப்படுத்த முனைந்தாள்.
தொடர்ந்து கத்திய செல்லை யார் என்றும் பாராமல், ‘நிதானமா கதை’ என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு சுரத்தே இல்லாத குரலில் “ஹலோ” என்றாள்.
அந்தப்பக்கம் இருந்த நிரஞ்சனோ, பேசுவது ஜீவனிதானா என்று குழம்பிப் போனான்.
“ஜீவனி..? என்னம்மா.. ஏன் ஒருமாதிரி கதைக்கிறாய்? உடம்புக்கு ஏதுமா?” தன்னருகில் நிற்பவரிடம் கூட உற்சாக அலைகளை பரப்பவல்ல உயிர் துடிப்பான குரலும் பேச்சும் அவளுக்குச் சொந்தமானது. அந்த உயிர்த்துடிப்பு இல்லாமல் போனதில் அக்கறையோடு கேட்டான்.
அந்தப் பாசம் சூடான இரு கண்ணீர் துளிகளை கன்னத்தில் மளுக் என்று இறக்க, “நா..நான் உங்களுக்கு பொருத்தம் இல்லையா?” என்று கேட்டாள் ஜீவனி.
முதலில் என்ன கேட்கிறாள் என்று ஒன்றுமே விளங்கவில்லை அவனுக்கு. ஏதும் காய்ச்சலோ என்றுதான் நினைத்தான். காலையில் அவள் வரவில்லை என்பதே மனதுக்கு சரியில்லை. சரி.. தான் சொன்னதைக் கேட்டு அம்மா அப்பாவோடு இருக்கிறாள் போல என்றுதான் அவளுக்கு அழைத்தான்.
அவளோ இப்படி ஒன்றைக் கேட்கிறாள்.
அந்தக் கேள்விக்கான காரணம் விளங்காத போதிலும், “இதென்ன பேச்சு? எனக்கு நீதான். நீ மட்டும் தான் வேணும். உன்ன விட வேற யாரும் பொருத்தமும் இல்ல! எனக்கும் வேணாம். சும்மா கண்டதையும் நினச்சு கலங்கக் கூடாது.” என்றான் மெல்லிய அதட்டலாக.
அவன் சொன்னது நெஞ்சுக்கு பெரும் ஆறுதலை கொடுத்தாலும், அவ்வளவு இலகுவில் அந்த வேதனை சுழலுக்குள் இருந்து வெளியே வரமுடியவில்லை அவளால். நிரஞ்சனை இழந்து விடுவோமோ.. அவனுக்கு நான் பொறுத்தம் இல்லையோ என்கிற நினைவுகள் அத்தனை ஆழத்துக்கு அவளை ஆட்டி வைத்திருந்தது.
அவள் ஒன்றுமே சொல்லாமல் இருக்க, எதையோ தப்பா விளங்கி தன்னையே போட்டு குழப்பிக்கொண்டு இருக்கிறாள் என்று புரிந்து போயிற்று அவனுக்கு.
“தயாராகி நில்லு. நான் இப்ப வாறன்!” என்றவன் அடுத்த நிமிடமே அங்கு வந்து நின்றான்.
“வாங்க..! வாங்க தம்பி.” என்று தவநேசன் வரவேற்க, “அங்கிள், நான் கொஞ்சம் ஜீவனிய வெளிய கூட்டிக்கொண்டு போகட்டா? சின்னதா ஒரு ஷாப்பிங்.” என்று எந்த சுற்றி வளைத்தலும் இல்லாமல் கேட்டான்.
அவன் குரல் வீட்டுக்குள் கேட்டதுமே, வில்லிலிருந்து புறப்பட்ட அம்பென அறைக்குள்ளிருந்து வேகமாக ஓடிவந்தவள், அங்கே தகப்பனைக் கண்டதும் பிரேக் அடித்ததுபோல் அப்படியே நின்றாள். உடலின் ஒவ்வொரு அணுவும் அவனது கைச்சிறைக்குள் புகுந்துவிடத்தான் துடித்தது.
தந்தையை எண்ணி அவள் நிற்க, அவளின் தவிப்பை உணர்ந்தவனின் நிலையும் அதுதான். ‘ஏன் இந்தப்பாடு படுறா?’
அங்கே கெடுதலான எண்ணம் கொண்டவர் யாருமில்லையே அவள் மனதை கெடுக்கவோ குழப்பவோ. ஒன்றும் விளங்காமல் அவளைப் பார்த்தான்.
தவநேசனும் மகளை பார்த்தார். என்னவோ சரியில்லை என்று விளங்கிற்று. எனவே, சம்மதித்தார்.
அதற்காகவே காத்திருந்தவள் அவனிடம் ஓட, அவளது கரத்தை பற்றி அழுத்தி பார்வையால் ஆறுதல் படுத்தியவன் பற்றிய கரத்தை விடாது காருக்கு அழைத்துச் சென்றான்.

