திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 21

அத்தியாயம் 21

கையெட்டித் தொட்டுவிடும் தூரத்தில் நீல வானம். அதை தொட்டபடி நின்ற அவள் நேசிக்கும் கடல். அதன் மீது கப்பல். அதற்குள் அவனும் அவளும்! சொர்க்கமாய் தெரிந்தது பூமி! பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை ஜீவனிக்கு. இப்படியே இருந்துவிட்டால் என்ன?

அவளுக்கு பிறந்தநாள் என்பதால் கோவிலுக்கு போய்விட்டு, கடலுக்கு வந்திருந்தனர். கடற்கரைக்குத்தான் கார் போகிறது என்று அவள் எண்ணியிருக்க கடலில் நின்ற கப்பலுக்கே கூட்டி வந்திருந்தான் நிரஞ்சன். கரையில் ஒரு வினாடி கூட ஓயாமல் வீசும் அலைகளுக்கும், சொல்பேச்சு கேட்டு அடங்கி நிற்கும் சிறு குழந்தையாய் தெரியும் நடுக்கடலுக்கும் தான் எத்தனை வித்தியாசம்?

அப்போது பின்னிருந்து அவள் கண்களை பொத்தினான் நிரஞ்சன்.

“ஐயோ நிரஞ்சன்! கடல் எவ்வளவு வடிவா இருக்கு. அத பாக்க விடாம என்ன செய்றீங்க?” அவனது கரங்களை அகற்ற முயன்றபடி சொன்னாள்.

“கடலை பிறகு ரசிக்கலாம். இப்ப என்னோட வா.” அவளை அப்படியே திருப்பி கப்பலுக்குள் அழைத்துச் சென்றான் நிரஞ்சன்.

“எங்க கூட்டிக்கொண்டு போறீங்க?”

“நீயே வந்து பார்!” என்றவன் ஒரு அறைக்குள் சென்று தன் கரங்களை மெல்ல அகற்றினான்.

கண்களை திறந்தவளுக்கு முதலில் தெரிந்தது மெல்லிய இருள் தான். இமைகளை இரண்டு மூன்று தரம் கொட்டி அந்த இருட்டுக்கு பழகியவள் பிறகு இமைக்கவும் மறந்தாள். பூலோகத்திலே சொர்க்கத்தை சிருஸ்டித்திருந்தான் அவன். வெளியே பார்த்தது ஓரழகு எனில் உள்ளே விரவிக்கிடந்தது பேரழகு!

அது ஒரு அறை. மின் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்க, மெழுகுவர்த்திகள் அதுவும் காதலை சொல்லும் சிவப்பு ரோஜா மெழுகுவர்த்திகள் நான்கு சுவர்களிலும் ஒளியை பாய்ச்சிக்கொண்டிருக்க, ஆங்காங்கே அவளுக்கு பிடித்த ரோஜாக்கள் பூங்கொத்துக்களாக தொங்கிக் கொண்டிருந்தது. இதமான நறுமணம் நாசியை தழுவ, மனதை மயக்கும் மெல்லிசை எங்கிருந்தோ மெலிதாக வந்துகொண்டிருந்தது.

அது போதாது என்று வண்ண வண்ண பலூன்கள் அந்த அறை முழுவதிலும் அந்தரத்தில் தொங்கின.

அதில்,

என் இதய ராணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

என்னவளுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

தேவதைப் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! என்று தமிழில் எழுதிய வாசகங்கள் நியான் எழுத்துக்களில் பளிச் பளிச்சென்று மின்னின.

“வா…வ்வ்வ்…!” கைகள் இரண்டையும் கன்னத்தில் பதித்து வியந்தாள்.

எதைப் பார்ப்பது எதை விடுவது என்று தெரியாமல் சுழன்ற விழிகள் அந்த அறையின் மையத்தில் வீற்றிருந்த மேசையில் மையம் கொண்டு விரிந்தன.

காலம் காலமாய் காதலை பறைசாற்றும் தாஜ்மகால் கேக்காக வீற்றிருக்க அதற்குள்ளும் ஒரு மெழுகுவர்த்தி ஒளிர்ந்துகொண்டிருக்க, அதை பார்த்த ஜீவனி அவள் வசமே இல்லை. மனமெல்லாம் பரவசம்.

“பிடிச்சிருக்கா?” அவள் பின்னால் வந்துநின்று, கரங்கள் இரண்டையும் பற்றி காதோரமாய் கேட்டான் நிரஞ்சன்.

கழுத்தோர முடிகள் எல்லாம் சிலிர்க்க, “ம்ம்…” என்றபடி திரும்பி அவனை பார்த்தாள்.

பார்த்தவள் அவள் வசமேயில்லை. இருள் நிறைந்த ஏகாந்தம். மிக மிக நெருக்கத்தில் அவன். அவளை எப்போதும் வசீகரிக்கும் விழிகளில், கரைகாண முடியாத நேசம். அந்த நேசத்தில் அவளது உயிர் உருகி அவனுக்குள் கரைந்து கொண்டிருந்தது. அவனது சுவாசக்காற்றை அவள் சுவாசித்தாள். அவனது ஸ்பரிசம் மனதை மயக்க.. அவனது அருகாமை.. அது தந்த அவஸ்தை.. அப்படியே அவன் கைகளுக்குள் கரைந்து அவனுக்குள் தொலைந்துவிட வேண்டும்போல் தோன்றியதில் அவளுக்குள் ஒரு நடுக்கம் ஓடியது. அதை உணர்ந்தவன் பற்றியிருந்த அவளின் ஒரு கரத்தை மெல்ல உயர்த்தி மென்மையாய் தன் உதடுகளை அதில் பதித்தான். விரலில் பற்றிக்கொண்ட தீ தேகமெல்லாம் வேகமாய் பரவிற்று!

சின்னதாய் ஒரு முத்தம்! அதில் இத்தனை தாக்கமா..?

கால்கள் இரண்டும் பலமிழக்க அவன்மீதே சாய்ந்துகொண்டாள் ஜீவனி. அவன் தந்த முத்தத்தின் சத்தம் இன்னும் அவளுக்குள் அடங்காததில் கண்களை மூடிக்கொண்டாள்.

அவளாக எத்தனையோ தடவைகள் அவனை கட்டியணைத்திருக்கிறாள், கன்னத்தில் முத்தமும் பதித்திருக்கிறாள். அப்போதெல்லாம் இப்படியொரு உணர்வை அவள் உணர்ந்ததே இல்லை.

மெல்ல இடையை வளைத்தது அவன் கரங்கள். பட்டென விழிகளை திறந்து அவனை பார்த்தாள். பதட்டமும் தவிப்பும் பற்றிக்கொண்டது. அவனும் அவளையே பார்த்தபடி, இடையை வளைத்திருந்த கரங்களின் இறுக்கத்தை இன்னும் அதிகரிக்க, இவளுக்குள் ரயில் தடதடக்கத் தொடங்கிற்று!

மெல்ல அவள் புறம் குனிந்து, “கேக்க வெட்டுவமா?” என்று, மெல்லக் கேட்டான்.

“ம்ம்..” எதற்கு அந்த ம்ம் என்று தெரியாமலேயே சொன்னாள்.

அவனே அவளை நடத்திச் சென்றான். அவளால் நடக்க முடியும் போல் தோன்றவில்லை. அவள் நிலையை பூரணமாக உணர்ந்துகொண்டான் நிரஞ்சன்.

சின்னதாய் சிரித்தான். லைட்டரை எடுத்துக் கொடுத்து அவளது கரத்தோடு கரம் பொருத்தி மெழுகுவர்த்தியை இருவருமாக ஏற்றினர்.

இனி?

என்ன செய்யவேண்டும் என்பதே மறந்து போயிற்று. சிந்தை முழுவதும் அவனிடமே மயங்கிக் கிடந்தது. இடையிலேயே தங்கிக்கொண்ட அவனது கை வேறு அவளை என்னென்னவோ செய்தது. தன் தவிப்பையெல்லாம் ரசித்தபடி நின்றவனை திரும்பிப் பார்த்தாள்.

“ஊது.” என்றான் அவன் காதோரமாய்.

அவளும் குனிந்து ஊத முயல, ‘வெறும் காத்துத்தான் வருது’ என்று கூட சொல்ல முடியாமல் அந்தக் காற்றுக்கூட வர மறுக்கவும், மீண்டும் திரும்பி அவனைத்தான் பார்த்தாள், பரிதாபமாக. சின்னச் சிரிப்புடன் அவளோடு சேர்ந்து தானும் ஊதினான் நிரஞ்சன்.

அவள் கன்னங்களை தீண்டி, தேகத்தில் தீயை மூட்டிக்கொண்டு சென்று எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தது அவன் மூச்சுக் காற்று!

அப்படியே அவள் கரத்தைப் பற்றி கத்தியை எடுத்து அந்த கேக்கை வெட்ட உதவி செய்தான் நிரஞ்சன்.

இணைந்திருந்த கரங்களாலேயே வெட்டிய கேக் துண்டை எடுத்து, நின்ற நிலை மாறாது அவளது இதழ் அருகே கொண்டு சென்றான்.

அவளின் செம்பவள இதழ்கள் திறந்துகொள்ளவும், கேக் துண்டின் ஒரு பகுதி அவளின் இதழ்களுக்குள் சென்றடைய, கவ்விக் கிடந்த விழிகள் விலகவே இல்லை.

மிகுதி கேக் துண்டு ஜீவனியின் இதழ்களில் இருந்து நிரஞ்சனின் இதழ்களுக்கு நகர்ந்தது. அவன் உதடுகள் திறந்து மிகுதித் துண்டை உள் வாங்கின. அப்படியே அவளது வெண்டை பிஞ்சு விரல்களையும்!

தவித்துப்போனாள் ஜீவனி. அவசரமே இன்றி மெல்ல விரல்களை விடுவித்தான் அவன். முகம் சூடேறிச் சிவக்க, அவள் தலையை கவிழவும், ஆசையோடு அணைத்துக்கொண்டான் நிரஞ்சன். அந்த அணைப்புக்குள் கண்கள் மூடி அவள் அடங்க,

அப்போது,

என்னவளே.. அடி என்னவளே…

என்ற வரிகள் அவளின் உயிரை உரசியபடி சென்றன!

‘அவனா பாடுறான்?’ சட்டென நிமிர்ந்து பார்த்தாள். அவனேதான்!

அன்றைய நாளின் அடுத்த ஆனந்த அதிர்ச்சியாக நம்ப முடியாத அதிசயமாக பார்த்தாள்.

எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்.. பாடலை தொடர்ந்தான்.

உன்னிடம்தான் என்றன அவனது காந்தக் கண்கள்!

அவனது குரலின் வசீகரத்தில் மனம் மயங்கியது! மொத்தமாய் நெகிழ்ந்துபோனாள் ஜீவனி. வார்த்தைகள் எல்லாம் ஊமையாகிவிட,

எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் – என்று பாடியவன் அவள் முன்னே வந்து ஒரு முழங்காலை நிலத்தில் ஊன்றி மற்றக் காலை மடித்து அவள் முன்னே மண்டியிட்டான்.

நடப்பவை கனவா நனவா என்று பிரித்தறிய முடியாமல் அவள் தள்ளாட, அவளின் பாதத்தைப் பற்றி தூக்கி தன் முழங்காலில் அவன் வைக்க,
“ஐயோ நிரஞ்சன்..” என்று பதறினாள் ஜீவனிதா.

அவன் அழைத்துச் சென்ற கனவுலகத்தில் சஞ்சரித்த அந்த நேரத்திலும் அவள் பதற, கண்களை மூடித்திறந்து அவளை அமைதிப் படுத்தியவன், ஜீன்ஸ் பாக்கெட்டில் கையை விட்டு ஒரு சோடி சலங்கைகளை வெளியே எடுத்தான்.

உந்தன் கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்.. என்றவனின் விரல்கள் அவள் பாதங்களில் அந்தச் சலங்கைகளை மாட்டிவிட்டன. அங்கிருந்து விலக மனமே இல்லாதவனாக அவள் பாதத்தை வருடிக் கொடுத்தான்.

புகழ் பெற்ற தொழில் அதிபன்!

இன்றைய இளைய சமுதாயத்தின் உதாரண புருஷன் அவள் பாதம் பற்றி நிற்கிறான்!

தேகமெல்லாம் சிலிர்க்க “நி..ர..ஞ்சன் ப்ளீஸ்..” என்றன அவளின் இதழ்கள் தவிப்போடு. உணர்ச்சிகளின் பிடியில் மாட்டிக்கொண்டவளின் கண்ணோரங்கள் கலங்கின.

அவனோ,
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று
உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்… பாடிக்கொண்டே எழுந்து அவள் நெற்றியில் நேச முத்தமொன்றை ஆசையாய் பதித்தான்.

அதற்குமேலும் முடியாமல் அவன் மார்பிலேயே சாய்ந்து விம்மிவிட்டாள் ஜீவனிதா. இத்தனை அற்புதமான நேசத்தைப் பெற என்ன தவம் செய்தாள் அவள்?

“என்னால முடியேல்ல நிரஞ்சன். இப்படியே உங்களுக்குள்ளேயே கரஞ்சிடலாம் போல இருக்கு..” என்றபடி அவன் மார்பிலேயே தஞ்சமானாள்.

அவன் நிலையும் அதேதான். அவளை அணைத்தபடி வெளியே அழைத்துவந்தான். அங்கே போடப்பட்டிருந்த பெஞ்சில் அவளை அமர்த்தி, தானும் அமர்ந்துகொண்டான். அவன் வயிற்றை இறுக்கமாக கட்டிக்கொண்டு மார்பில் சாய்ந்துகொண்டாள் ஜீவனிதா. கடல் வீசிய சாமரத்தை தவிர வேறு சத்தம் எதுவுமே இல்லை அவர்களுக்குள்.

ஜீவனிக்கு அன்றைய நாள் ஒரு பொக்கிஷம். புதையலாய் நெஞ்சில் பக்குவப் படுத்திக்கொண்டாள். எப்போதும் வாயாடும் அவளைக்கூட வாயடைக்கச் செய்திருந்தது அவனது நேசம்!

மதிய உணவையும் முடித்துக்கொண்டு மனமே இல்லாமல் அவளை வீட்டில் இறக்கிவிட்டான் நிரஞ்சன்.

போக மனமில்லாமல் காரிலேயே அவள் இருக்க, “உன்ர அம்மா அப்பா சம்மதிச்ச அண்டைக்கே தாலிய கட்டி இருக்கோணும். பிழை விட்டுடன்.” என்றான் ஏக்கமாய்.

அவளும் அதையேதான் உணர்ந்து கொண்டிருந்தாள். பக்கத்து பக்கத்து வீடுதான். ஆனாலும் அவன் கை வளைவுக்குள்ளேயே காலம் முழுக்க இருக்கக் கிடைத்துவிட்டால் போதும் என்றிருந்தது.

“சரி விடு! இதுவும் நல்லாத்தான் இருக்கு. வாழாம வாழுறது. கல்யாணத்துக்கு பிறகு இந்த பீலிங்க்ஸ அனுபவிக்க முடியாதே. உனக்குத்தான் பீலிங்க்ஸ் பிடிக்குமே.” என்றான் கண்ணடித்து.

“நிரஞ்சன்..” சிணுங்கி அவனுக்கு ஒரு அடியை போட்டாள் ஜீவனி.

“இவ்வளவு நாளும் நல்லவன் மாதிரி வேஷம் போட்டுட்டு. இன்றைக்கு பாத்தா..” என்றவள் வெட்கம் வந்து தாக்க, அதற்குமேல் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.

“ம்.. சொல்லு, இன்றைக்கு?” என்று கேட்டு வசீகரமாகச் சிரித்தான் அவன்.

அந்தச் சிரிப்பே அவளை வெட்கத்தோடு அங்கிருந்து விரட்ட, “ஐயோ சாமி! ஆள விடுங்க!” என்றபடி இறங்கி ஓடிவிட்டாள்.

மனதில் நிறைவோடு வேலைகளை பார்க்கச் சென்றான் நிரஞ்சன்.

மாலை வீடு திரும்பியபோது, ரதன் அவனுக்காகக் காத்திருந்தான்.

அவன் குளித்துவிட்டு வரவும், மாலை நேரத்துக்கு இதமாக சிற்றுண்டியோடு தேநீரை இருவருக்கும் கொடுத்தார் அன்னம்மா. அதை வாங்கிக்கொண்டு இலகுவாக ஃசோபாவில் அவன் அமர, “அத்தான், ஆர்டர் குடுத்த ட்ரெஸ் எல்லாம் வந்திட்டுதாம். நீங்க ஒருக்கா போட்டுப் பாத்து எது பிடிச்சிருக்கு எண்டு சொல்லோனும். எப்ப கொண்டுவர சொல்லட்டும்?” என்று கேட்டான் ரதன்.

“இன்றைக்கே கொண்டுவர சொல்லு. இனி நான் ப்ரீதான்.”

தன் சம்மந்தமான திருமண வேலைகளை ரதனிடம் ஒப்படைத்திருந்தான். அவனுக்கும் தன் அத்தானுக்கு செய்வதில் அத்தனை ஆனந்தம். ஓடி ஓடி செய்தான்.

“சரியத்தான். அப்ப இப்பவே போன் பண்றன்..” என்று செல்லை எடுக்க,

“அப்ப இண்டைக்கு ஒரு பார்ட்டியும் இல்லையாடா? உன்ர அக்கா சும்மா விட மாட்டாளே?” என்று சிரிப்போடு கேட்டான் நிரஞ்சன்.

“என்ன பார்ட்டி? என்னத்துக்கு?” செல்லில் நம்பரை அழுத்திக் கொண்டிருந்தவன் நிமிர்ந்து கேட்டான்.

“டேய்! இன்றைக்கு அவளுக்கு பிறந்தநாள். உனக்கும் தெரியாதா? சண்டைக்கு வரப்போறாளேடா.” என்றான் அவசரமாக.

“என்னத்தான் சொல்றீங்க? அவளின்ர பிறந்தநாளை எங்கள மறக்க விடுவாளா? ஒரு மாதத்துக்கு முதலே எனக்கு பர்த்டே வருது எனக்கு பர்த்டே வருது எண்டு சொல்லிச் சொல்லியே எங்கட உயிரை வாங்குவாள். அது ரெண்டு மாதத்துக்கு முதலே முடிஞ்சுபோச்சு!” என்றான் அவன்.

நிரஞ்சன் திகைத்தே போனான். அவன் நிலை அவனுக்கே பரிதாபமாய் இருந்தது!

error: Alert: Content selection is disabled!!