திருடிய இதயத்தைத் திருப்பிக்கொடு – 23 ( இறுதி அத்தியாயம் )

அத்தியாயம் 23

சோபாவிலேயே காலை தூக்கிப் போட்டுக்கொண்டு கைகளை தலைக்குக் கொடுத்தபடி இனிமையான நினைவுகளுடன் இலகுவாக சாய்ந்திருந்த நிரஞ்சன் தன் முன்னால் வந்து நின்றவளை இமைக்கவும் மறந்து பார்த்தான்.

செருப்பில்லாத தந்தக் கால்கள். திருமணச் சேலைக்கு பொறுத்தமாக கால் நகங்களில் பூசியிருந்த சிவப்பு நிற நகச்சாயம். அவன் பரிசளித்த கால் சலங்கை. புதிதாக இன்று ஏறியிருந்த மெட்டி. முழங்கால் வரையான கறுப்பு லெகிங்ஸ் அவளின் கால்களை வாளைத் தண்டுகளாக வெட்டிக் காட்டியது. அணிந்திருந்த மேல் சட்டை அவளின் சின்ன இடையை துல்லியமாய் காட்ட, மேலே பூத்திருந்த பெண்மை அழகு சேர்க்க, கழுத்தில் தாலிக்கொடி வெளியே தொங்கியது. புத்தம் புதுக் கொடி என்பதால் தொய்ந்து தொங்காமல் வட்ட வடிவமாக அவள் கழுத்தை சுற்றிக்கொண்டு கிடக்க, நெற்றியிலும் வகிட்டிலும் குடியிருந்த குங்குமம் சற்றே கலைந்தும் கலையாமல் கிடந்து, அவன் வாலிபத்தை சோதனை செய்ய, அவளையே கண்களால் விழுங்கினான்.

அவனது விழிவீச்சை உணர்ந்துகொண்டே அவன் முன்னால் நிற்பது பெரும் அவஸ்தையாக இருக்க, “நிரஞ்சன் வாங்கோ.. போவம்.” என்று அவன் கையை பற்றி இழுத்தாள் ஜீவனி. அவனோ ஒரே சுண்டலில் அவளை தன்மேல் விழ வைத்தான்.

விழுந்தவளை விலக முடியாதபடி அணைத்து, “கட்டாயம் போகோணுமா?” என்று காதோரமாய் கிசுகிசுத்தான்.

“நீங்கதானே போவம் எண்டு சொன்னீங்க.” அவன்மீது சாய்ந்துகொண்டு அவள் சொல்ல,

“சொன்னேன்தான்.. ஆனா இப்ப..” என்று இழுத்தவனுக்கு இதற்குமேலும் இங்கிருந்தால் போகவே முடியாது என்று விளங்க, அவளையும் கூட்டிக்கொண்டு நடந்தான்.

நேரே சென்று நின்றது அம்மம்மாவிடம். அவரின் முன்னால் அவளை நிறுத்தி ‘இவளை என்னட்ட கொண்டுவந்து சேர்த்ததுக்கு தேங்க்ஸ் அம்மம்மா. மனதுக்கு பிடிச்சவளே எனக்கு மனைவியா வந்திருக்கா. இப்ப உங்களுக்கு சந்தோசம் தானே. காலம் முழுக்க அவளை சந்தோசமா வச்சிருப்பன்.’ மனதால் அவரிடம் வாக்களித்தான்.

அவரையே பார்த்தபடி நின்றவனையே ஜீவனி பார்த்திருந்தாள். இன்று அவன் முகத்திலிருக்கும் மலர்ச்சிக்கும் அன்று முதன் முதலாக அவள் பார்த்தபோது அநாதரவாக நிலத்தில் கிடந்தவனின் வெறித்த முகத்துக்கும் இடையிலான வித்தியாசம் அவளுக்குள் தானாக வந்து போக, ஆதரவாக அவன் தோளைத் தொட்டு, “என்னப்பா?” என்று இதமாகக் கேட்டாள்.

அந்தக் கரத்தையே பற்றி கன்னத்தில் வைத்து அழுத்தியபடி, சொன்னான். “என்ர மனதில நீ இருக்கிறாய் எண்டு எனக்கு தெரிஞ்சதுமே அம்மம்மாட்ட தான் சொன்னனான். அதேமாதிரி உன்ன எப்படியாவது இங்க வர வைக்கிற பொறுப்பையும் அவாட்டத்தான்(அவரிடம்தான்..) குடுத்தனான். நீ கேட்டியே ஏன் அங்க வந்து உன்னட்ட காதலை சொல்லேல எண்டு.. அதுக்கு பதில் இதுல இருக்கு.” என்று ஒரு கடிதத்தை மிக மிக பக்குவமாக எடுத்துக் கொடுத்தான்.

‘என்ன இது?’ யோசனையோடு வாங்கிப் பிரித்தாள்.

சின்னக் கண்ணப்பா..

பாசத்தை மட்டுமே பறைசாற்றிய அந்த ஒற்றைச் சொல்லே ஜீவனியின் தொண்டையை அடைத்தது. அவனை திரும்பி பார்த்துவிட்டு மேலே படித்தாள்.

படிக்கப் படிக்க கன்னங்களில் கண்ணீர் தானாக வழிந்தோடியது.

உன்ர கல்யாணம் உனக்கு பிடிச்சவளோட நீ விரும்பி நடக்கோணும். உன்ர தாத்தா என்ன விரும்பித்தான் கட்டினவர். உன்ர அப்பா உன்ர அம்மாவ விரும்பித்தான் கட்டினவன். அதே மாதிரி நீயும் உன்ர மனதுக்கு பிடிச்சவள கட்டி சந்தோசமா வாழோணும்! உன்ர மனம் ஒருத்திய காட்டி சொல்லும் இவள்தான் எனக்கு வேணும் எண்டு. அவளும் உன்னை தேடி வருவாள். உன்ர வாழ்க்கை சந்தோசமா அமையும். அவரின் இந்த வரிகளில் அடக்கவே முடியாமல் விம்மிவிட்டாள்

காதல் என்கிற ஒற்றைச் சொல்லைக் கேட்டாலே அதன் மீதான எந்தப் பரிசீலணைகளும் இல்லாமல் மறுக்கும் பெரியவர்களின் மத்தியில், போன தலைமுறையும் அல்ல அதற்கு முந்திய தலைமுறையில் இருக்கும் ஒருவர், தன் பேரனின் விருப்பத்தை மதித்து, நான்கு வரிகளில் வாழ்க்கை பாடத்தையே உணர்த்தி இருக்கிறாரே.

அவள் கண்ணீரை துடைத்துவிட்டான் நிரஞ்சன். “அழாத. அம்மம்மாக்கு பிடிக்காது. எனக்கு பிடிச்சவள் என்ன தேடி வருவாள் எண்டு அவதான் சொன்னவா.. அது எனக்கு தெய்வ வாக்கு! தெய்வமா இருந்து என்னை வழி நடத்துவா என்ற நம்பிக்கைலதான் காத்திருந்தனான். அதோட, பெண்களை கண்ணியமாவும் மரியாதையாவும் ஒவ்வொரு ஆண்பிள்ளையும் நடத்தோணும். எங்களை உலகத்துக்கு தந்த பெண்களை நாங்களே மதிக்காட்டி எப்படி என்று அடிக்கடி சொல்லுவா. அதைக்கேட்டு வளர்ந்த என்னால உனக்கு பின்னால வர முடியேல்ல ஜீவனி. அப்படி ஒரு சங்கடமான நிலையில உன்ன நிப்பாட்டி, உன்ர காதலை பெறவும் விருப்பம் இல்ல. மகளுக்கு பின்னால இப்படி ஒருத்தன் திரியுறானே எந்த ஆபத்தும் இல்லாம அவள எப்படி காப்பாத்த போகிறோம் என்ற பயத்த உன்ர அம்மா அப்பாக்கு குடுக்கவும் விருப்பம் இல்ல. உன்ர ஊருக்கே வந்து உன்ன தூக்கிட்டு வாறது எனக்கு ஒரு நிமிஷ வேல. ஆனா, பிடிச்ச பெண்ணோட மனச தூக்கோணும். அவன்தான் ஆம்பிள! அதே நேரம் நான் உன் மேல வச்ச நேசத்திலையும் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்தது. நீ கேட்டியே ‘தப்பித்தவறி நான் யாரையாவது விரும்பி இருந்தா, இல்ல கல்யாணம் முடிச்சிருந்தா என்ன செய்வீங்க நிரஞ்சன்’ என்று.. நான் என்றைக்குமே அப்படி யோசிச்சதே இல்ல. காலம் காலமா உண்மையான அன்பு தோற்காது எண்டுதான் நான் அறிஞ்சு வந்திருக்கிறன். உன் மேல எனக்கு இருக்கிறது ஆழமான காதல். அந்த காதல் உன்ன என்னட்ட கொண்டுவந்து சேக்கும் எண்டு எனக்கு நல்லா தெரியும். அது எப்ப? அது மட்டும் தான் என் தவிப்பா இருந்தது.” என்று அவன் தன் ஆழ்ந்த குரலில் அவளின் கையை பற்றியபடி சொன்னபோது ஸ்தம்பித்துப்போனாள் ஜீவனி.

அவன் காதலின் ஆழத்தை உணரும் ஒவ்வொரு தருணத்திலும் அவள் இப்படித்தான் வாயடைத்துப் போகிறாள்!

“இப்ப எனக்கு எந்த தவிப்பும் இல்ல. என்ர செல்லம் என்னட்டையே வந்திட்டாள்.” என்றவன் பற்றியிருந்த அவள் கரத்தில் மென்மையாய் இதழ் ஒற்றினான்.

கவிந்திருந்த இருளில், கடல்காற்று வீச, அம்மம்மாவின் காலடியில் தன் மனதை அவன் பகிர்ந்துகொண்ட அந்த நொடிகள் மிக அற்புதமானதாய் தோன்றிற்று ஜீவனிக்கு. சுகமாக அவன் தோளில் சாய்ந்துகொண்டாள்.

அவளிடம் காதலை மட்டுமே காட்டும் அவளின் காதலனுக்குள் ஒரு இரும்பு மனிதன் இருக்கிறான். ஒழுக்கம் நிறைந்த உன்னதமானவன் இருக்கிறான். அவனை செதுக்கியது அவனின் அம்மம்மா. அவரின் வழி நடத்தல் எவ்வளவு சிறந்ததாக இருந்தால் இப்படி ஒரு சிறப்பான மனிதன் இந்த சமுதாயத்துக்கு கிடைத்திருப்பான். இப்படியானவனின் சந்ததியும் இவனைப் போன்றவர்களாகவே உருவாக வேண்டும். அது அவளின் கடமை! தன்னால் அது முடியுமா என்று மலைத்துப் போனவள் அம்மம்மாவை பாசத்துடன் நோக்கினாள்.

‘எனக்கும் நீங்க அம்மம்மாதான். எப்பவும் எங்க ரெண்டு பேரோடையும் கூட இருந்து நீங்கதான் எங்களை வழி நடத்தோணும்.’ மனதார அவரிடம் வேண்டிக் கொண்டாள்.

நினைவு வந்தவனாகச் சொன்னான் நிரஞ்சன். “உனக்கு தெரியுமா, எனக்கு மாதிரியே அம்மம்மாவுக்கும் உன்ன மிகவுமே பிடிக்கும்.”

“உண்மையாவா?” ஆச்சரியமாகக் கேட்டாள்.

“ம்! அப்போதெல்லாம் உன்ர கலாட்டாக்களை அன்னம்மா.. அவவின் பேத்தி எல்லாரிட்டையும் கேட்டுக் கேட்டு சிரிப்பா. இந்தக் காயம் நீ தந்ததுதான் எண்டும் அம்மம்மாக்கு தெரியும். அன்றைக்கு இத நான் சொன்னதும் அவா என்னட்ட கேட்ட முதல் கேள்வியே, ‘அவளுக்கு நீ என்ன செய்தாய்? சும்மா உன்ர மண்டைய உடைச்சிருக்க மாட்டாள்’ எண்டுதான்.” என்றான் அன்றைய நாட்களை எண்ணிச் சிரித்தபடி.

அதைக் கேட்டவளுக்கு நெகிழ்ச்சியில் கண்களில் நீர் பூத்தது. அன்றே அவளை நன்றாக புரிந்து வைத்திருந்திருக்கிறார். திரும்பி அவரைப் பார்த்து சொன்னாள், “அம்மம்மா, உங்கட பேரன நான் நல்லா வச்சிருப்பன். நீங்க ஒண்டுக்கும் கவலைப் படாதீங்க.” என்று!

நிரஞ்சன் சிரிக்க அவளோ அவனை முறைத்தாள்.

அவனுக்கோ அவள் கோபத்தை ரசிக்கும் சிரிப்புத்தான் வந்தது எப்போதும்போல. என்ன என்று கேட்க,

“அண்டைக்கு ஏன் என்ன பிடிச்சு தள்ளி விட்டீங்க? இங்க பாருங்க இன்னும் தழும்பு இருக்கு.” என்றவள் தன் முழங்கையை திருப்பிக் காட்டினாள்.

“சாரிடா செல்லம். உனக்கு இந்தளவு அடிபடும் எண்டு நானும் நினைக்கேல்ல. நாங்க குளிக்கேக்க நீ பாத்தியே ஒருத்தன… அவன் அங்க மாடில நிண்டு உனக்கு கல்லால அடிக்க குறி பாத்துக்கொண்டு இருந்தவன். அதுவும் கூரான கல்லு. அவ்வளவு தூரத்துல இருந்து வேகமா வர்ற கல்லு பட்டா நீ தாங்க மாட்டாய் எண்டுதான் ஓடிவந்து தள்ளி விட்டனான். பாத்தா, அதுவே உனக்கு பெரிய காயமா வந்திட்டுது.” என்றவன் அன்று பட்ட காயத்துக்கு இன்று தடவிவிட்டான். அவளும் கையை அதற்கு வாகாக அவனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்தாள்.

தடவிக்கொடுத்தவன் அந்த இடத்தில் ஒரு முத்தத்தை பதிக்க அவளுக்கு தேகமெல்லாம் சிலிர்ப்போடியது.

“உனக்கு குளிருது. வா உள்ளுக்கு போவம்.” என்று அவளை அழைத்துவந்தான்.

வீட்டுக்குள் காலடி பட்டதுமே அவளுக்குள் படபடக்கத் தொடங்கிவிட்டது. சமாளித்துக்கொண்டு மெல்ல மாடி ஏறினாள். அவர்களின் அறையின் கதவருகில் சென்றதும் திரும்பி அவளைப் பார்த்தான் நிரஞ்சன்.

தயங்கித் தயங்கி மெல்ல வந்துகொண்டிருந்தாள் அவள்.

இவன் பார்க்க, அவள் பார்வையை திருப்பிக்கொள்ள, இதென்ன திடீர் வெட்கம் என்று புருவங்களை உயர்த்தியவன் விஷயம் பிடிபட்டதுமே சத்தமாகச் சிரிக்கத்தொடங்கினான்.

“நிர..ஞ்ச..ன்!” முறைக்க முயன்றவளும் சிணுங்கிச் சிரிக்க,

“யாரோ வெக்கமெல்லாம் வராது எண்டு சொன்னாங்களே..” என்றபடி அவளை அப்படியே அள்ளிக்கொண்டான்.

“ஐயோ நிரஞ்சன் விடுங்க..” கூச்சத்தில் அவள் நெளிய, அப்படியே அவளை அறைக்குள் கொணர்ந்து கதவை சாத்திவிட்டு அவளை கதவோடு சாத்தி கரங்களால் சிறையிட்டான்.

அடுத்து என்ன செய்யப் போகிறானோ.. வெட்கமும் கூச்சமும் ஒருபக்கம் வதைத்தால் ஆர்வமும் ஆசையும் மறுபக்கம் வந்து நின்று அவளை பாடாய் படுத்த அவன் முன்னால் நிற்க முடியாமல் தடுமாறினாள்.

அவனோ அவளின் திணறலை ரசித்தபடி, இதழோரம் பூத்த புன்னகையோடு அவளையே பார்த்திருக்க, இதற்கு அவன் தொட்டுவிட்டாலே பரவாயில்லை என்றாகிப் போனது அவளுக்கு.

அந்தளவுக்கு அவன் விழிகள் அவளை பாடாய் படுத்தின.

ஒரு அளவுக்கு மேல் முடியாமல் போக, சட்டென நிமிர்ந்து, “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?” திமிராக காட்டிக் கேட்டாள்.

“என்னட்ட திருடினத திருப்பித் தா?” அவளின் காதருகில் குனிந்து கிசுகிசுத்தான்.

அவனது மூச்சுக்காற்றின் தீண்டலில் தேகமெல்லாம் தீப்பற்ற, “திருட்டா? எதை திருடினான்? முதல்ல நான் திருடுற அளவுக்கு உங்கள்ட்ட என்ன இருக்கு?” தெனாவெட்டாக கேட்டவளை அவன் கண்கள் சிறை செய்தது.

அவனுடைய கண்கள்.. அவை மாயக் கண்ணனுக்கு சொந்தமானவை. அவையே போதும் அவளை வசியம் செய்ய, வசியமிக்க அந்த விழிகளில் தோற்றுக்கொண்டே அவள் கேட்க, “என் இதயத்தை..” என்றான் அவன்.

“அது என்னட்டயா இருக்கு? இல்லையே.. நீங்க நேற்று போன பார்ல போய்தேடிப்பாருங்க.. மப்புல விட்டுட்டு வந்திருப்பீங்க..” என்றாள் அப்போதும்.

“மப்புத்தான்.. ஆனா, இது வேற மப்பு..” என்றவனின் விழிகள் இப்போது தேனூறும் அவள் இதழ்களை மொய்த்தது.

கடவுளே..! இவனுக்கு இந்தக் கண்ணே போதும்! அடிவயிற்றில் என்னவோ செய்ய, அதற்குமேலும் முடியாமல் அவன் மார்பில் ஒளிந்துகொண்டாள் அவனின் இதயத்தை திருடியவள்!

தன் ஜீவனாகவே ஆகிப்போனவளை அப்படியே பூவாக அள்ளிக்கொண்டு மஞ்சத்தை நோக்கி நடந்தான் நிரஞ்சன்.

முற்றும்!

error: Alert: Content selection is disabled!!