சிறகு 02

அத்தியாயம் 02 

காயத்ரிக்கு அப்போது பதினைந்து வயது. 

மெரூன் நிறத்தில் பாவாடை ஜாக்கெட் அணிந்து, அதற்கு தங்க நிற தாவணியை பாந்தமாய் உடுத்தி, தன் இடுப்பு வரை இருந்த பட்டு கூந்தலில் மல்லிகை சரம் சூட்டி, வட்ட முகத்தில் கூர் வேல் பொட்டு வைத்து, காந்த கண்களுக்கு கறுநிற அஞ்சனம் தீட்டி, செவ்வளரி இதழ்களுக்கு இளஞ் சிவப்பு உதட்டு சாயம் பூசி, மஞ்சள் நிற கன்னங்கள் இரண்டிலும் ரூஜ் தடவி மின்ன விட்டு, 

கழுத்தில் இருந்து நெஞ்சு வரை தங்க சங்கிலி தொங்க, அதில் அன்ன பறவை வடிவில் விரிந்த பெண்டன். கழுத்தை ஒட்டியது போல் சிகப்பு கல் பதித்த கொடி போன்ற அட்டியல், கைகள் நிறைய சிகப்பு கண்ணாடி வளையல்களும் இரண்டு இரண்டு தங்க வளையல்களும். 

விரல்களுக்கு மூன்று மோதிரமும், அதனோடு காலில் முத்து வைத்த பட்டையான வெள்ளி கொலுசு. இத்தனையும் அவள் அழகை கூட்டி காட்டினாலும் எல்லாவற்றிற்கும் மகுடமாக அவள் தலையை சாய்த்து சிரிக்கும் அந்த மயக்கும் புன்னகை ஒன்று போதும், அவள் காலடியில் காளையர்கள் விழுந்து விட. 

ஆனால் அவள் பார்வையோ சுற்றிலும் மக்கள் கூட்டம் குழுமி நிற்க, நடுவில் முப்பது அடி உயரத்தில் வானத்தைத் தொடும் போல நிமிர்ந்து நின்றிருந்தது அந்த வழுக்கு மரம். 

ஒரு கிளை கூட இல்லாத அதன் உடல் முழுவதும் நல்லெண்ணெய் கலந்த கிரீஸ் தடவப்பட்டு பளபளவென மின்னியது. 

உச்சியில் சிவப்பு துணியில் கட்டப்பட்டிருந்த பரிசு, அதை அடைய வருபவர்களை கேலி செய்வதுபோல் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. 

அதன் திமிரை அடக்கி விடும் நோக்கோடு காளையர் கூட்டம் ஒவ்வொருத்தராக வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டும், முக்கால் ரவுசர் அணிந்து கொண்டும், தங்கள் பலத்தை கொண்டு போராடிக் கொண்டிருக்க, 

24 வயதான ஸ்ரீதரைத்தான் குதுகலமாக பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி.

கருப்பு நிற ஹாஃப் டிரவுசர், கை இல்லாத பனியன் அணிந்திருந்தான். அகன்ற தோள்களும், உடற்பயிற்சியில் செதுக்கப்பட்ட புஜங்களும், வியர்வையில் மின்னிய கோதுமை நிறத் தேகமும் அவனது கம்பீரத்தை இன்னும் கூட்டின. 

இரு கரங்களிலும் சிறிதளவு மண்ணைத் தேய்த்துக்கொண்டு, வழுக்கு மரத்தை அண்ணாந்து பார்த்தவன், உறுதியான அடிகளுடன் அதன் முன் வந்து நின்றான். போட்டிக்காகக் காத்திருந்த மற்ற இளைஞர்களின் பார்வை கூட ஒரு கணம் அவன் மீதே நிலைத்தது.

ஒருமுறை வழுக்கு மரத்தை நிமிர்ந்து பார்த்தவன், ஆழமாக மூச்சை இழுத்தான். அடுத்த நொடி இரு கரங்களாலும் மரத்தை இறுகப் பற்றிக்கொண்டு, கால்களால் அழுத்தம் கொடுத்து மேலேறத் தொடங்கினான்.

எண்ணெய் காரணமாக உடல் சற்றுச் சறுக்கியது. பற்களைக் கடித்தபடி மீண்டும் பிடியை இறுக்கினான். முன்கைகளில் நரம்புகள் புடைத்து எழ, தோள்தசைகள் முறுக்கேறின. ஒவ்வொரு அங்குலத்திற்கும் போராடிக் கொண்டிருந்தான்.

கீழே நின்றிருந்த மக்கள், “வா..வா..இன்னும் கொஞ்சம்!” என்று உற்சாகமாகக் கத்தினர். அந்த ஆரவாரம் கூட அவன் காதில் விழவில்லை. அவனது பார்வை முழுவதும் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசின் மீதே நிலைத்திருந்தது.

வழுக்கி வழுக்கி விழச் செய்த அந்த மரத்தையே தனது விடாமுயற்சியால் அடக்கி ஆள்பவனைப் போல, மீண்டும் மீண்டும் பிடியை மாற்றி, கால்களைப் பதித்து, இறுதியில் உச்சியை நோக்கி சென்று வெற்றிகொடியை கைப் பற்றினான்.

அத்தனை நேரமும் அவனை மட்டுமே கரும்பை கடித்துக் கொண்டு படபடப்பாக பார்த்திருந்த காயத்ரி “ஹேய்! ஐயா.. மாமா ஜெயிச்சிருச்சு!…” என்று துள்ளி குதித்து அவனை நோக்கி ஓடினாள். 

அவளின் முடியை பிடித்து இழுத்து “எங்க ஓடுற?.. அங்க பாரு ஆம்பளைங்க எல்லாரும் சேந்து உன் மாமன தோளுல தூக்கி வச்சு ஆடுறாங்க.. அந்த கூட்டத்துல போயிட்டு நசுங்க போறியா?.. உன் மாமா தான் சொல்லிட்டு போனாரு இல்ல வார வரைக்கும் இங்கவே இருக்க சொல்லி…” என்று காயத்ரியின் தோழி அமுதினி சொல்ல 

நாக்கை கடித்துக் கொண்டவள் “ஆமால…” என்று தலை சரித்து சொல்ல 

“இந்த மாதிரி பண்ணியே எல்லாரையும் கவுத்திடு…” என்று அமுதினி சொல்லிக்கொள்ள 

இங்கு தன்னை தூக்கி கொண்டாடிக் கொண்டிருந்த நண்பர்களிடம் இருந்து எப்படியோ தப்பித்து, ஐங்கரனை மட்டும் கையோடு இழுத்துக் கொண்டு அக்கா மகளை தேடி வந்திருந்தான் ஸ்ரீதர்.

கையில் கொண்டு வந்திருந்த ஐயாயிரம் ரூபாய் பரிசுத்தொகை அடங்கிய பொதியை காயத்ரியின் கையில் வைக்க, 

மகிழ்ச்சியாக அதை பெற்றுக் கொண்டவள் “அப்பாடா! இந்த வருஷம் கொலுசு வாங்க காசு கிடைச்சிடுச்சு…” என்று சொல்லி சந்தோஷப்பட 

அவள் தலையில் தட்டிய ஸ்ரீதர் “உனக்கு கொலுசு வாங்கித்தரனும்னா வாங்கி தரப் போறேன்.. அதுக்கு இந்த பரிசு தொகை தான் வேணுமா?…” என்று கேட்க 

“அது அப்படி இல்ல மாமா.. சாதாரணமா நீங்க வாங்கி தர்றது உங்க உழைப்பால வாங்கி தாரது.. இது உங்க வீரத்துக்கு கிடைச்ச பரிசு, அப்போ இதுல வாங்கி குடுக்குற கொலுசு ஸ்பெஷல்ல…” என்று சொல்ல 

அருகில் இருந்த ஐங்கரன் “எது இந்த மரத்த கட்டிப்பிடிச்சு மேல போயிட்டு கீழ வந்தது வீரமா?…” என்று கேட்க 

“அதச் செய்ய முடியாம தானே 15 பேரும் திணறிக்கிட்டு இருந்தீங்க.. என் மாமா தானே ஜெயிச்சாரு…” என்று சொல்லி எட்டி ஸ்ரீதரின் தோளில் முழங்கையை குற்றி சாய்ந்து நிற்க 

“சரிதான்.. இப்போத்துல இருந்து கட்டி பிடிக்க பயிற்சி எடுக்கிறேன்.. அடுத்த வருஷம் பரிசு வாங்குறேன்…” என்று ஐங்கரன் சபதம் போல் சொல்ல 

ஸ்ரீதர் அவனது தலையில் தட்டியவன் “சின்ன பொண்ணுங்க இருக்கும்போது என்ன பேச்சு பேசுற…” என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி பற்களுக்குள் திட்ட 

“ஹிஹிஹி..” என்று இளித்தவன் “சாரிடா…” என்று அசடுவலிய 

“போ! போய் வண்டிய எடு.. வீட்ட போய் குளிச்சிட்டு வரணும்…” என்று சொல்ல 

“மாமா குளிச்சிட்டு உடனே வாங்க கடை சுத்தணும்…” என்று காயத்ரி சொல்ல 

“அதுவரைக்கும் ரெண்டு பேரும் தனியாவா இருப்பிங்க.. திருவிழா, நாலு ஊர்ல இருந்தும் ஆட்கள் வந்திருக்காங்க.. உங்க ரெண்டு பேரையும் தனியா விட முடியாது.. வாங்க வீட்டுக்கு போயிட்டு சாயந்திரம் வந்து கட சுத்தலாம்…” என்று சொல்ல 

“மாமா!…” என்று சிணுங்கிய காயத்ரி “இன்னையோட திருவிழா முடிஞ்சிடும்.. நான் நிறைய வாங்கணும்.. காப்பு, கிளிப்பு, பொட்டு, ஜிமிக்கி, லிப்ஸ்டிக், அப்புறம் பவுண்டேஷன்…” என்று அடுக்கிக் கொண்டே போக 

“ஏய் சிங்காரி போதும் நிறுத்து…” என்று ஸ்ரீதர் சொல்ல 

“என்னது!…” என்று இடுப்பில் கையை வைத்து மாமன்காரனை அவள் முறைக்க 

“என்ன?.. சின்ன வயசுல நான் தான் இதெல்லாம் உனக்கு போட்டு அழகு பாத்தேன்.. ஆனா இப்போ நீ பண்றது எல்லாம் பாக்கும்போது சிங்காரி என்ற பேர்தான் உனக்கு கரெக்ட்டா இருக்கு…” என்று சொல்ல 

“வேணாம் மாமா!.. சிங்காரினு திரும்பவும் சொல்லாதீங்க…” 

“அப்படி தான்டி சொல்லுவேன் சிணுக்கு சிங்காரி…” என்று சொல்லி விட்டு ஸ்ரீதர் தன் பைக்கை நோக்கி ஓட 

அவனை விரட்டிக்கொண்டே காயத்ரியும் ஓட, இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அமுதினிடம் 

“என்ன தனியா போயிடுவியா? இல்ல துணைக்கு வரவா?…” என்று ஐங்கரன் கேட்க 

அவனைப் பார்த்து முறைத்தவள் “அடுத்த தெருவுல இருக்கிற வீட்டுக்கு ஆளும் படையுமா கொண்டு வந்து விடுவீங்க போல.. போங்க நீங்க முதல்ல பத்திரமா வீடு போய் சேருங்க…” என்று விட்டு அமுதினி விறு விறுவென்று சென்றுவிட 

“என்னங்கடா என்ன தனியா விட்டுட்டு போயிட்டீங்க…” என்று திருவிழா கூட்டத்தில் தனியாக நின்று புலம்பினான் ஐங்கரன் .

**********

இங்கோ தன்னை அடிக்க விரட்டி வந்த காயத்ரியை பார்த்து, இரு கைகளையும் தூக்கி சரண்டர் ஆனது போல் நின்றவன் “டேய் போதும்டா.. நான் இப்போ இருக்கிற கோலத்துக்கு என்ன அடிச்சேன்னா நீயும் குளிக்கணும்.. அதனால மாமா குளிச்சதுக்கு பிறகு அடிச்சுக்க…” என்று சொல்ல 

“அப்ப கூட சிங்காரின்னு கூப்பிட மாட்டேன்னு சொல்ல மாட்டீங்கல்ல.. போங்க மாமா!…” என்று அவள் முகத்தை திருப்பிக் கொள்ள 

“அடியே! அது செல்லமா சொல்றது.. நீ எப்பவும் இதே மாதிரி கண்ணுக்கு லட்சணமா அலங்கரிச்சிக்கிட்டு இருக்கணும் என்றது தான் மாமனோட ஆச…” என்று இலகுவான குரலில் சொல்ல 

“சரி, இருந்தாலும் இனி அப்படி சொல்ல வேணாம்…” என்று தான் மூக்கை சுருக்கி சொன்னாள். 

“சரி பாக்கலாம்.. வா! வந்து வண்டிய எடு.. நான் இப்படியே ஓட்ட முடியாது…” என்று ஸ்ரீதர் சொல்ல 

“என்னது நானா!…” என்று விழி விரித்து காயத்திரி கேட்க 

“நீதான்.. ஏன் வண்டி ஓட்ட கத்து கொடுத்திருக்கேன் தானே…” என்று அவன் சொல்ல 

“ஹா! ஆனா லைசன்ஸ் இல்லாம ஓட்ட கூடாதுன்னு சொன்னீங்க…” என்று அவளும் நொடித்துக் கொள்ள 

“இப்பவும் அதத்தான் சொல்றேன்.. லைசன்ஸ் எடுக்காம நீ வண்டி ஓட்டக்கூடாது.. ஆனா இப்போ வேற வழி இல்ல.. அதனால வா வந்து வண்டிய எடு…” என்று சொல்ல 

முகம் பிரகாசிக்க “ஹா, ஓகே.. ஓகே…” என்று உற்சாகமானவள் மாமனின் வண்டியில் ஏறி, ஸ்டார்ட் செய்ய, அவனும் அக்கா மகளின் பின்னே அமர்ந்து கொண்டான். 

ஸ்ரீதர் எப்போதுமே தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் காயத்ரிக்கும் சொல்லி குடுத்து விடுவான். ஏன் தனக்கு தெரியவில்லை என்றாலும் அவளுக்கு ஒன்றை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால் முதலில் அவன் கற்றுக்கொண்டு அவளுக்காக அதை சொல்லிக் கொடுப்பான். 

அப்படி தான் சமையலும் கற்றுக் கொண்டான். காயத்ரியின் அம்மாவும், பாட்டியும் அவளுக்கு கொட்டி கொட்டி சொல்லிக் கொடுத்த சமையலை கற்றுக் கொள்ள விரும்பாமல், மாமனிடம் போய் புகார் வாசிக்க 

அவனோ அவன் அக்கா மகளுக்காக தானும் சமையலை கற்றுக் கொண்டு, அன்பாக சொல்லிக் கொடுத்து, இப்போது தன் தாய் பாட்டியை விட காயத்ரி நன்றாகவே சமைப்பாள்.

தன் மாமன் பின்னுக்கு அமர்ந்திருக்க சந்தோஷமாகவும், கர்வமாகவும் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த காயத்ரி கண்ணாடி வழியாக அவன் முகத்தை பார்த்துவிட்டு, 

கிண்டல் சிரிப்போடு “மாமா நீங்க என்ன விட கொஞ்சம் கலர் அதிகமாக இருக்கீங்கனு கடுப்பா இருக்கும்.. ஆனா இப்போ என்ன விட மோசமான கலர்ல இருக்கீங்க.. அதனால குளிக்காதீங்க இப்படியே இருங்க…” என்று சொல்ல 

அவனும் எட்டி கண்ணாடியை பார்த்தவன் “என்ன ஒரு வயித்தெரிச்சல் உனக்கு.. மாமன விட கலர் குறைய இருந்தா என்ன.. அழகுதான் கூட இருக்கே.. என் காயூ குட்டி எப்படி இருந்தாலும் பேரழகி தான்…” என்று சொல்ல 

மாமன் தன்னை அழகி என்றதில் மேலும் முகம் ஜொலிக்க “அப்போ ஓகே.. வாங்க சுடு தண்ணீ வச்சு தாரேன்.. நல்லா குளிங்க…” என்று சொன்னவாறு வண்டியை லாபகமாக ஓட்டி வந்து வீட்டில் நிறுத்தினாள்.

ஸ்ரீதருக்கு முன் புள்ளி மானாக துள்ளி குதித்து ஓடியவள், பாட்டி தாயிடம் மாமன்காரன் வழக்கு மரம் ஏறி, பரிசுத்தொகையை அவளிடம் கொண்டு வந்து கொடுத்தை குதூகலமாக கூறி முடித்து, இந்த வருடம் புது கொலுசு வாங்கப் போவதாக சொல்ல, 

பத்மினியோ “அதெல்லாம் எதுவும் வேணாம்.. இது என்ன புது பழக்கம் இங்க வந்ததுல இருந்து வருஷா வருஷம் அவன் கிட்ட கொலுசு வாங்கி போட்டுக்குற.. ஏற்கனவே இருக்கிற அஞ்சு கொலுசு போதும்…” என்று பத்மினி கண்டிப்புடன் சொல்ல 

“ம்ஹீம்! ம்மா.. அதெல்லாம் பழைய கொலுசு.. இதோ இப்ப போட்டு இருக்கிறது வாங்கி ஒரு வருஷம் ஆச்சு…” 

“என்னடி விளையாடுறியா.. ஒரு கொலுச நானெல்லாம் 15 வருஷம் பாவிச்சிருக்கேன்.. நீ என்னடான்னா வருஷத்துக்கு ஒரு கொலுசு மாத்த சொல்ற.. எல்லாம் அவன் கொடுக்குற செல்லம்…” என்று சொல்லும் போது 

உள்ளே வந்த ஸ்ரீதர் “அக்கா காயூகுட்டி என்ன கேட்கிறாளோ அத வாங்கி குடுப்போம்.. இது போட்டியில ஜெயிச்ச காசு தானே.. உன் கணக்குல துண்டு விழாது ஓகேவா…” என்று சொல்ல 

“நீயும் புரியாம பேசாத தம்பி.. நீ இப்படியே பழகிவிடு.. நாளைக்கு கல்யாணம் கட்டி போற இடத்துலயும் இதே மாதிரி கேட்டுட்டு அடம்பிடிக்க போறா.. உன்ன மாதிரியே இவளுக்குன்னு பாக்குற மாப்பிள்ளயும் இருக்க போறாரா என்ன… என்று கேட்க 

“மாப்ள வாங்கி கொடுக்காட்டி என்ன.. என் காயூ குட்டிக்கு வருஷா வருஷம் நானே வாங்கி கொடுக்கிறேன்…” என்று சொல்ல 

“உங்க ரெண்டு பேரையும் சொல்லி திருத்த முடியாது.. என்னமோ பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு பத்மினி சமையலறைக்குள் சென்றுவிட 

ஹாலில் இருந்து கீரை ஆய்ந்து கொண்டிருந்த கமலம் “அவளும் காயத்ரியோட நல்லதுக்கு தானே சொல்றா.. நம்ம கிட்ட இருக்கிற வரைக்கும் சரி.. நாள பின்ன உனக்கு கல்யாணமாகி ஒருத்தி வந்ததுக்கு பிறகு நீ எப்படி இவளுக்கு ஒவ்வொரு வருஷமும் அது இதுன்னு செய்ய முடியும்…” என்று கேட்க 

“அது நடக்கிறப்போ பாத்துக்கலாமா…” என்று தாய்க்கும் பதில் சொன்னவன் மேலும் நின்று பேச்சு கொடுக்காமல் குளிக்க சென்று விட்டான். 

குளித்து முடித்து மதிய உணவை சாப்பிட்டு விட்டு, சிறிது ஓய்வு எடுத்த பின்னர், அவன் அக்கா மகள் கேட்டது போல அவளை கூட்டிக்கொண்டு திருவிழாவிற்காக போடப்பட்டிருந்த கடைகளுக்கு சென்றான். அவளும் பட்டியல் போட்ட அனைத்தையும் வாங்கிக் கொண்டு மகிழ்ச்சியாக வீடு வந்தாள்.

error: Alert: Content selection is disabled!!