மையல் 24
குடியிருப்பின் முன்பு வாகனத்தை நிறுத்தினான் சத்தி. ஆடவனின் முதுகினில் வலது கன்னத்தைப் பதித்தபடி கண்மூடி இருந்தாள் மேகவி.
இடக்கரத்தை தோள்பட்டை வழியாய் பின்பக்கமாய் கொண்டு சென்று அவளின் தலையில் வருடிக் கொடுத்தவன், “பொண்டாட்டி!”
இமைகளைப் பிரிக்காதவள், “ம்ம்..”
“வீட்டுக்கு வந்தாச்சு. எழுந்திரிக்கிறியா.?”
“ஓ.. ஸாரி.” என்றவள் சுற்றிலும் ஒருமுறைப் பார்த்து விட்டு, இறங்கினாள்.
“என்ன நல்ல தூக்கமா.?”
“ஆமா.. அந்தத் தண்ணிக்கும் அடிச்ச காத்துக்கும் உடம்பு என்னமோ பயங்கரமா வலிக்குது. அதான் டயர்டுல தூங்கிட்டேன்.”
“நாளைக்கு லீவ் தான? ஃபுல்லா ரெஸ்ட் எடு. ஒரு டூ மினிட்ஸ். வண்டியைப் பார்க் பண்ணீட்டு வந்திடுறேன்!” என்றவன் அங்கிருந்து நகர, கைப்பேசியை எடுத்து நேரத்தை பார்த்தாள் மேகவி.
மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஒன்பது மணிக்கே கிளம்பி விட்டனர். வழியில் கடும் போக்குவரத்து நெரிசல். ஒவ்வொரு சமிக்ஞை விளக்கிலும் நின்று நின்று நத்தையாய் ஊர்ந்து சென்றன வாகனங்கள்.
சோர்வினால் அவள் கொட்டாவியை வெளிவிட்டபடி சலிப்புடன் அமர்ந்திருக்க, “தூக்கம் வந்தா, என்மேல சாய்ஞ்சு படுத்துக்கோ!” என்று சத்தி தான் உரைத்தான்.
எனினும் அது அசௌகர்யமாய் தோன்றிட, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தாள். அதைக் கவனித்த ஆடவன், அவளின் இரு கைகளையும் இடைப்பக்க வழியாய் இழுத்து தனது வயிற்றில் வைத்துக் கொண்டு, “சாய்ஞ்சுக்கோ!” எனத் தலையை பிடித்து அழுத்திட,வேறு வழியின்றி விழிகளை மூடினாள்.
அவள் பின்னால் படுத்து இருந்ததால் மிதமான வேகத்திலேயே வாகனத்தை இயக்கி வந்திருந்தான் சத்தி. அதனால் தான் இவ்வளவு கால தாமதம். அவன் சொல்லவில்லை என்றாலும் உணர்ந்து கொண்டாள் மேகவி.
இருவரும் அடுத்த பத்து நிமிடங்களில் பளுதூக்கியின் வழியாய் தங்களது தளத்தை அடைய, தம்பதியரை வரவேற்பதற்காகவே காத்திருந்தாள் தாரிகா.
“என்ன, நல்லா ஊரை சுத்துனீங்களா.?”
அவன் புன்னகைத்திட, “ஆமா சுத்துறாங்க. கோயிலுக்குப் போயிட்டு அப்படியே பீச்சுல கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்தோம்.” என்றாள் மேகவி.
“எங்க போறோம்கிறது விஷயம் இல்ல. யார்கூட போறோம்? அந்த டைமை நாம என்ஜாய் பண்ணுறோமாங்கிறது தான் முக்கியம்! சொல்லு, ஹவ் டூ யூ ஃபீல்.?”
சத்தி தோழிகளுக்கு இடையேயான உரையாடலிற்கு தனிமை கொடுத்து, “நீ பேசிட்டு வா. நான் போயி டோரை ஓபன் பண்ணுறேன்! என்றுவிட்டு முன்னால் சென்றான்.
அவன் நகர்ந்ததும் தோழியின் இரு கைகளையும் பற்றிக் கொண்ட தாரிகா, “என்ன கிளவுட், ஓகேவா.?”
“என்ன ஓகேவானு கேட்கிற.?”
“தெரியாத மாதிரி பேசாதடி! நடந்த மேரேஜ் இல்லனு ஆகிடாதே? ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு லைஃபை ஸ்டார்ட் பண்ணலாம்ல? ப்ரோக்கு இண்ட்ரெஸ்ட் இருக்கு. உனக்கு எப்படி.?”
தனக்கும் விருப்பம் தான் என்பது போல் தலை அசைத்தவள், “பட், கொஞ்சம் பயமாவும் இருக்கு ஸ்டார்.”
“எதுக்கு பயம்?”
“இப்ப ஓகே. ஒருவேளை கீர்த்தி பின்னாடி மாறிட்டான்னா? என்மேல இருக்கிற இண்ட்ரெஸ்ட் குறைஞ்சிட்டா.?”
“இப்படி எல்லாம் யோசிச்சா வாழவே முடியாது. இந்த நிமிஷ சந்தோஷத்தை அனுபவிக்கப் பழகு. பின்னாடி நடக்கிறதை பின்னாடி பார்த்துக்கலாம். அப்புறம் ஒரு விஷயம், ப்ரோ மாறிட்டாலும் லைஃப் அப்படியே ஒன்னும் நின்னுடாது. உனக்குனு ஃபேமிலி, வீடு, ஜாப், நான் எல்லாம் இருக்கோம்.”
“எல்லாமே இருக்கும் தான். ஆனா சந்தோஷம்? நிம்மதி..? என்னோட மனசும், உடம்பும் பழைய மாதிரி மாறுமா?”
“கிளவுட் ஒன்னு சொல்லுறேன். நீ ஒன்னும் வீக்கான பர்சன் கிடையாது. டிகிரி படிக்கிறதுக்காகனு வீட்டுல இருந்து வெளிய வந்த. கிட்டத்தட்ட பதினோரு வருஷம் தனியா தான் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணி இருக்க. யாரையும் எதிர்பார்க்கவும் இல்ல. கம்பிளைண்டும் பண்ணது இல்ல. ஃபேமிலி உனக்கு ஃபினான்ஷியலா சப்போர்ட் செஞ்சாங்க தான். பட், மத்தது எல்லாம்.?
யூஜி இந்த கோர்ஸ் வேணும். இந்த காலேஜ்ல படிக்கணும். அடுத்து பிஜிக்கு காலேஜ் மாறணும். ஹாஸ்டல் வேணாம், இனி வெளிய தனியா தங்கி பார்க்கலாம். கேம்பஸ்ல இந்த கம்பெனியில செலக்ட் ஆனா நம்ம ஃபியூச்சர் நல்லா இருக்கும். சோ அதுக்கு பிரிபர் பண்ணுவோம்னு ஒவ்வொன்னையும் யோசிச்சு நீதான் முடிவு எடுத்த.
அதுனால, இனி நடக்கப் போறதையும் ஃபேஸ் பண்ணுறதுக்கு உன்னோட மைண்ட் ஆட்டோமெட்டிக்கா டியூன் ஆகிடும். எதிர்பாராம நடக்கிற மேரேஜ், தப்பா தான் போகும்னு இல்ல. சில நேரங்கள்ல, சில விஷயங்கள் ரொம்ப சரியாவும் நடக்கும். உன் ஹஸ்பண்ட், அந்த சரியா ஏன் இருக்கக் கூடாது? திங்க் பாஸிட்டிவ், ஓகே?”
தோழியை சற்றே வியப்புடன் நோக்கியவள், “கீர்த்திக்கிட்ட கிளாஸ் எதுவும் போறியா என்ன.?”
புரியாமல் பார்த்த தாரிகா, “ஏன்டி?”
“பின்ன, பிரைன் வாஷ் பண்ணுற அளவுக்குப் பேசுறியே? அவன், இதுல மாஸ்டர் தெரியுமா? பேசிப் பேசியே ஆளைக் கவுத்துடுவான்.”
“அப்படிப்பட்ட ஆளுக்கிட்டயே கவுந்துடாம ஸ்டெடியா இருக்கியே? அப்ப, எவ்வளவு பெரிய விடா கண்டனா இருப்ப?”
அதைக் கேட்டு மேகவி சிரித்திட, “பட் நீ சொன்ன ஒரு விஷயத்தை ஒத்துக்கத்தான் வேணும். ப்ரோக்கிட்ட பேசும் போது, நாமளும் அவரை மாதிரியே யோசிக்க ஆரம்பிச்சிடுறோம். பார்த்த அரை மணி நேரத்துலயே, என்னால ஈஸியா பழக முடிஞ்சிச்சு.”
திருமணமான தினத்தின் இரவில் பேசத் துவங்கிய பத்தே நிமிடங்களில் அவளின் உணர்வுகளை வெளியிட வைத்து, உடனடியாய் அதற்கான பதில்களையும் அவனது விருப்பத்தையும் உரைத்தது நினைவிற்கு வந்தது. தேவை என்று வரும் பொழுது, அதற்காக சத்தி எதைச் செய்திடவும் தயங்க மாட்டான் எனப் புரிந்து கொண்டிருந்தாள்.
அந்தச் செயல் நேர்மையானதாய் இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் காதல் என்று வரும் பொழுது, அங்கு கள்ளம் இல்லாமலா? ஆடவனுள்ளும் ஒரு கள்வன் இருந்தான். அவன் சில கள்ளத் தனங்களும் செய்து இருந்தான், மனைவி உறங்கிய பின்னர் அணைப்பதைப் போன்று.
இது போலான சிறிய எல்லை மீறல்களைத் தவிர்த்து, மங்கையின் மனம் காயமாகும் படியான எதையும் செய்தது இல்லை. அதற்காகவே அவனது மீறல்களை மிகைப்படுத்தாமல் கடந்து வந்து கொண்டிருந்தாள் மேகவி.
“ஓகே கிளவுட். ரொம்ப டைம் ஆகிடுச்சு. போயி, ரெஸ்ட் எடு!” என தாரிகா விடை கொடுக்க, தலை அசைத்து விட்டு நகர்ந்தாள்.
வீட்டிற்கு உள்ளே நுழைந்தவள் கதவைத் தாழிட்டு விட்டு திரும்ப, “பொண்டாட்டி, எதுவும் வேணுமா?” என்றான் ஆடவன்.
“கொஞ்சம் ஹாட் வாட்டர் மட்டும். இப்ப வேணாம், கொஞ்ச நேரம் கழிச்சு.”
“ஓகே!” எனத் தலை அசைத்தவன், பணி சம்பந்தமாய் கைப்பேசியில் பேசத் துவங்கிட, ஓய்வறைக்குள் சென்றாள் மேகவி.
உப்பு நீரில் நீண்ட நேரம் இருந்ததும், பயணத்தின் போது உற்பத்தியாகி இருந்த வியர்வையும் உடலை கனக்கச் செய்திட, ஆடைகளைக் களைந்து நீராடுவதற்காக தண்ணீரை திறந்து விட்டு அதன் அடியினில் நின்றாள்.
இமைகளை மூடியபடியே துவாலையை எடுப்பதற்காக கையை நீட்டிட, அது விரல்களில் சிக்குவேனா என்றது.
விழி திறந்து நோக்கியவள், அவ்விடம் காலியாய் இருப்பதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள். அத்தோடு கணவனின் மீது சினமும் துளிர்த்தது.
மேகவிக்குத் துவாலையை எடுத்துச் செல்லும் பழக்கம் இல்லை. எப்பொழுதும் அது ஓய்வறையிலேயே தான் இருக்கும். நீராடிய பின், உபயோகித்து விட்டு மீண்டும் அங்கேயே உலரப் போட்டு விடுவாள்.
நான்கு தினங்களிற்கு ஒருமுறை துணிகளைத் துவைக்கும் பொழுது அதனையும் சேர்த்துத் துவைத்து விட்டு, உடனேயே வேறொன்றை அவ்விடத்தில் மாற்றி விடுவாள்.
அதேபோல் குளியல் அறைக்குள் உடை மாற்றும் பழக்கமும் அற்றவள். துவாலையுடன் அறைக்கு வந்து, பின்புதான் உடையை எடுத்து உடுத்துவாள். இவ்வளவு காலமும் தனியாகவே இருந்ததால், இவை எல்லாம் பெரிதாய் தோன்றவில்லை. உடலும் உணர்வும் கூட அதற்குப் பழகிவிட்டது.
திருமண உறவினால் சத்தி இங்கு வந்த பின்பும் கூட இருவரும் தனித்தனி அறையினில் தங்கி இருந்ததால், எவ்வித அசௌகர்யமும் உண்டாகவில்லை. ஆனால் இன்றைய தினம் அனைத்தும் மாற்றமாகி விட்டது.
முந்தைய நாளின் இரவில், இருவரும் ஒரே அறையில் படுக்கையைப் பகிர்ந்து இருந்தனர்.
காலையில் ஆடவன் முன்னரே எழுந்து வெளியே சென்றுவிட்டதால் வழக்கம் போல் அறைக்கதவை தாழ் போட்டுவிட்டுத் தயாரானாள் மேகவி. துவாலையையும் உள்ளேயே தான் உலர வைத்தாள்.
வாய்ப்பு அமையும் பொழுது அதை தவற விடுபவனை மதியற்ற கூட்டத்தில் தான் சேர்க்க வேண்டும். சத்யகீர்த்தி நிச்சயம் அக்கூட்டத்தில் ஒருவன் இல்லை. பகல் நேர வேலையின் பொழுதே, தனது உடமைகளை அறை மாற்றி விட்டான் ஆடவன்.
தூய்மை செய்யும் பணியை முடித்த பின்னர் தாமதமாக நீராடியவன், உள்ளிருந்த மனைவியின் உடைகளை வெளியே எடுத்து போட்டுவிட்டு, அவ்வறையை பயன்படுத்தி இருந்தான். அதனால் துவாலை வெளியே பால்கனியில் காய்ந்து கொண்டிருந்தது.
தற்போது உள்ளே வரும் பொழுது அவன் அறையில் இருந்ததால், தாங்கள் இருக்கும் அறைக் கதவையும் தாழிட மறந்து போனாள் மங்கை.
“இப்ப என்ன செய்யிறது? இப்படியே வெளிய போக முடியாது. அழுக்குத் துணியைத் தான் திரும்பவும் போட்டுக்கணுமா? ஐயோ, அது வேற மண்ணா இருக்குமே? அப்புறம், திரும்பவும் குளிக்க வேண்டியது வரும்!” எனத் தனக்குத்தானே புலம்பியவள், கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.
படுக்கையில் அமர்ந்து கைப்பேசியில் உரையாடிக் கொண்டிருந்தான் சத்தி.
“பாவி! இன்னும் பேசி முடிக்கலயா? இவன் எப்ப எழுந்து வெளிய போறது? நான் எப்ப டிரஸ் சேஞ்ச் பண்ணுறது? உனக்கு அறிவே இல்லடி! வீட்டுல நீ மட்டும் இருந்தப்ப, இஷ்டத்துக்கு இருந்த சரி. இப்ப அவன் இருக்கும் போது, கொஞ்சம் கவனமா இருக்க வேண்டாமா? இனி, இந்த பழக்கத்தை எல்லாம் மாத்தணும்! ப்ச்ச்…” என்று வாய்விட்டுப் புலம்பியவள் ஓய்வறையின் கதவை மீண்டும் மூடி அதில் தலையை முட்டிக் கொள்ள, ஒலி கேட்டுத் திரும்பினான் சத்தி.
“ஓகே, நாளைக்குக் கண்டின்யூ பண்ணலாம்!” எனப் பேச்சை முடித்தவன், “பொண்டாட்டி, என்ன சத்தம்.?” என்று எழுந்து வந்தான்.
அவனிடம் நிலையைச் சொல்லத் தயங்கியவள், “ப்ச்ச்.. ஒன்னும் இல்ல.”
“சரி, எவ்வளவு நேரம் தான் குளிப்ப? ஏற்கனவே கடல் தண்ணியில வேற நின்னு இருக்க. உடம்புக்குச் சேராம போயிட போகுது, சீக்கிரம் வா.”
“வர்றேன் வர்றேன். எங்கடா என்னோட டவல்?”
“ஹோ.. ஸாரி பொண்டாட்டி. வெளிய காயப்போட்டு இருந்தேன். திரும்ப, உள்ள எடுத்து போட மறந்துட்டேன்.”
“நல்லா மறந்த!”
சின்னதாய் சிரித்து, “சரி சரி, டென்ஷன் ஆகாத. இதோ வர்றேன்!” என்றவன் அவளது துவாலையை எடுத்துக் கொடுத்து விட்டு, சில நொடிகளின் இடைவெளியில் மீண்டும் கதவைத் தட்டினான்.
“என்ன.?”
“டிரஸ் வேணாமா? டவலோடவா வருவ? உனக்கு பிரச்சனை இல்லேனா, எனக்கு ஓகே தான். உண்மையைச் சொல்லணும்னா, ஐம் வெயிட்டிங் ஃபார் தட்.”
அவனது சீண்டலான சொற்களில் மெலிதாய் சினம் துளிர்க்க, “உன்னைக் கொல்லப் போறேன், பாரு.”
“ஓகே ஓகே.. டிரஸ்ஸை பெட்ல வச்சிட்டு நான் வெளிய போறேன். நீ வந்து சேஞ்ச் பண்ணிக்கோ.”
“ம்ம்..”
“பொண்டாட்டி.”
“இன்னும் போகலயா நீ?”
“டவல் விஷயத்துல, என்மேல கோபமா இருக்கியா என்ன?”
“என்னடா உன் பிரச்சனை? எதுக்கு இப்படிப் படுத்துற என்னை?”
“சரி சரி, இனி உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்!” என்று விட்டு வெளியேற, ஓய்வறையில் இருந்து ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு வெளியே வந்தாள் மேகவி.

