மயங்கினேன் மழைச்சிலையே – 6

அத்தியாயம் – 6

தன் குடும்பத்தை விட்டு வெளியூரில் வந்து பணியின் காரணமாக தனித்து வாழ்பவர்களுக்கு உடல் நோவென்று வந்து விட்டால் மனம் அந்த அன்பை எண்ணி ஏங்கித் தவிப்பதை பணியில் சேர்ந்த இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ முறை உணர்ந்திருக்கிறான் அன்புமதி.

தலைவலியின் வேதனையில் சக்தி கண்கள் கலங்க கூறிவிட்டு சென்றதில் மனம் இளகிய அன்பு, அவளுக்காக ஒரு கோப்பை காஃபி கலக்குவதில் என்ன வந்துவிடப் போகிறது என்ற மனிதாபிமானத்தில் செய்தான்.

ஏற்கனவே பெற்றவளை எண்ணி உள்ளுக்குள் தவித்த சக்திக்கு அவனது அந்த சிறு செயல், அனலாக தகிக்கும் வெயிலில் சிறிய அளவிலான கருமேகம் சில நொடிகள் சூரியனை மறைத்து ஆசுவாசம் தருவதைப் போல மனதில் இதம் கூட்டியது என்னவோ உண்மை!

அதன்பிறகான நாட்களில் அவள் தனது அறைக்குள் அடைந்து இருக்காமல், இருவருக்கும் பொதுவான இடங்களையும் உபயோகிக்க தொடங்கியவள் அன்புவின் கட்டளைப்படி வெகு கவனமாக இருந்தாள்.

ஆனால் அவரவர் இயல்பென்று என்ற உண்டே! அவள் அதைப்போல அவ்வப்போது எதாவது கிறுக்குத்தனம் செய்து அவனிடம் வாங்கிக் கட்டிக் கொண்டே, இருவருக்கும் நாட்கள் நகர்ந்தன.

அப்படித்தான் ஒருமுறை அன்பு படிப்பதற்காக சில புத்தகங்களை வாங்கி ஹாலிலிருந்த அலமாரியில் அடுக்கி வைத்திருந்ததை வேலையிடையே பொழுதுபோகாமல் இருந்த சக்தி மாற்றி அமைத்தாள்.

பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அன்பு அதைக்கண்டு “உன்னை யாரு இதெல்லாம் செய்யச் சொன்னா? ஏன் இப்படி கலைச்சு வைச்சிருக்க?” தாம்தூமென்று குதிக்கத் தொடங்க, பாவமாக முகத்தைத் தொங்கப் போட்டு அமைதியாக நின்றாள் அவள்.

அவன் பேசவில்லை என்றாலும் வீட்டில் இருவரும் இருக்கும்போது கலகலவென வாயாடிக் கொண்டிருப்பவளின் வாடிய முகத்தைக் கண்டு “ம்ப்ச்! உன்னோட பெரிய ரோதனை.” என சலித்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டான்.

அடுத்த இரு நாட்களும் அவள் வெளியில் வராமல் தனது அறைக்குள்ளேயே அமைதியாகவே இருக்க, அன்புவிற்கு தான் ஒருமாதிரி இருந்தது. அவள் அப்படி ஒன்றும் புத்தகங்களை கலைத்துவிடவில்லை.

ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி இருந்த புத்தகங்களை கதைகள், வாழ்க்கைத் தத்துவங்கள், பொருளாதாரம் என தனித்தனியாக பிரிவுவாரியாக எடுப்பதற்கு வசதியாக நிறுத்தி அடுக்கி இருந்தாள்.

அதை சற்று நிதானமாக அவன் கவனித்தபோது ‘இதுவும் நல்லா தானேடா இருக்கு! அப்றம் எதுக்கு அவளை கடிச்சு குதறுன?’ உள்ளுக்குள் ஒருமனம் கேள்வி எழுப்ப, இருதினங்களாக தொடரும் அவளது மௌனம் அவனை ஏதோ செய்தது.

மறுநாள் காலையில் காஃபி கப்புடன் சென்று அவளது அறைக்கதவை தட்ட, கலைந்த தலைமுடியுடன் கண்களைக் கசக்கிக் கொட்டாவி விட்டபடி அரைத்தூக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறந்தவள் விழிவிரித்து நின்றாள்.

“ஸாரி! நீ எழுந்திருப்பனு நினைச்சு, நான்..”அவளது தூக்கத்தைக் கலைத்ததற்காக மன்னிப்புக் கேட்டு தன் கையிலிருந்த கோப்பையில் பார்வையை பதித்தவன், “இட்ஸ் ஓகே” என திரும்பினான்.

“ஒரு நிமிஷம்” அவனை நிறுத்தியவளுக்கு, காஃபியின் வாசனை நாசியை நிறைத்து ‘ச்சீ! ஓடிப் போ!’ என தூக்கத்தை விரட்டியதில் பட்டென அதை வாங்கிக் கொண்டு “தேங்க்ஸ் ஆபிஃஸர்!” புன்னகையுடன் கூறினாள்.

அவளது செய்கையில் ஒருநொடி திகைத்தவன் மனம் அவளது அந்தப் புன்னகையில் இதமாக உணர்ந்ததில் அவனும் இதழ்பிரியாமல் புன்னகைத்தான்.

“அடடா! என்ன ஒரு அற்புதமான விடியல்! சுடச்சுட காஃபி வித் லவ்!” காஃபியை நுகர்ந்தவள் ரசித்துச் சொல்ல, அதில் அவன் மனம் தடம் புரள ஒருநொடி திகைத்து நின்றான்.

மறுநொடியே, அவள் அப்படியே அதைக் குடிக்க முனைவதில் அவனது ஓசிடி வந்து மண்டையில் ஓங்கித் தட்டியதில் , “என்ன பண்ற நீ?! போய் ப்ரெஷ் பண்ணிட்டு ஃப்ரெஷ்அப் ஆகிட்டு வந்து குடி.” அதட்டலுடன் கூறியவனைப் பார்த்து உதட்டைப் பிதுக்கி பாவமாகப் பார்த்தாள்.

“இந்த பப்பி ஃபேஸ் எல்லாம் வேலைக்காகாது. போய் சொன்னதைச் செய்.” கறாரான வாத்தியாராக அவன் கட்டளையிட, “அதுக்குள்ள காஃபி ஆறிடுமே!” முகம் சுருக்கிச் சிணுங்கினாள் அவள்.

“மறுபடியும் சூடு பண்ணிக்கலாம். நீ போய் ஃப்ரெஷ் ஆகிட்டு நீட்டா வா!” அவளது கரத்திலிருந்த கோப்பையை வாங்கிக் கொண்டு அவன் சென்று விட்டதில், காலை உதைத்து சிணுங்கியவள் பாத்ரூமிற்குள் சென்றாள்.

நொடிகளில் தயாராகி அவள் வெளியே வந்ததில், புருவம் உயர்த்தியவன், “அடேயப்பா! என்னா ஒரு வேகம்!?” இதழ் வளைத்துக் கூற,”காஃபி ஆறிடும்ல, அதான்” சிறுபிள்ளை போல மிடுக்குடன் விளக்கம் சொன்னவளை சிரிப்புடன் கண்டிருந்தான் அன்பு.

அவள் அதை ரசித்துக் குடித்துக் கொண்டிருக்க, “பரவால்ல! நல்லா தான் அடுக்கி இருக்க. அன்னிக்கு கவனிக்காம சத்தம் போட்டுட்டேன். ஸாரி” வெள்ளைக் கொடியை பறக்க விட்டான்.

காஃபியை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்போதுதான் அவன்மீது கோபமாக இருந்தது நினைவில்வர, ‘ஆமால, நான் இவன்மேலே கோபமா தானே இருந்தேன்!’ முகம் சுருங்கினாள்.

அதுவரை ரசனையுடன் பிரகாசமாக இருந்த முகம் சுருங்கியதில் அவள் மனதைப் படித்தவன் போல,” நான் அதுக்கு ஸாரி கேட்டுட்டேன். நீயும் நான் கொடுத்த காஃபியை குடிச்சுட்ட, அதனால சமாதானம் ஆகியாச்சு.” உதட்டோரப் புன்னகையில் கூறினான் அவன்.

‘இவன் காஃபிக்கு அடிமையாகி இப்படி அசிங்கப்பட்டுட்டியே சக்தி!’ மானசீகமாக பேசி அவள் வெளிப்படையாக தன் நெற்றியில் குட்டிக் கொண்டதைப் பார்த்து அன்பு மனம்விட்டு சத்தமாகச் சிரிக்க, அசடு வழிந்தாள் அவள்.

சில நொடிகள் அவனது புன்னகையின் வசீகரத்தில் ஈர்க்கப்பட்டு ரசனையுடன் அவள் பார்த்த பார்வையில் தடுமாறிய அன்பு சிரிப்பு நின்றுவிட தொண்டையைச் செருமினான். அதில் சுயம் திரும்பியவள் சட்டென தன் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

சிறிதுநேரம் நீடித்த அந்த மௌனத்தை “ஆமா, உனக்கு சமைக்கவே தெரியாதா? எப்போ பாரு கடையில வாங்கியே சாப்பிடுற?!” அவள் எப்போதும் உணவை ஆர்டர் செய்தே சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு அவன் கேட்க, அவள் தெரியாதென உதட்டைப் பிதுக்கினாள்.

“எல்லா அம்மாவும் பொதுவா சிம்பிளான சமையலாவது சொல்லிக் கொடுப்பாங்களே! உங்கம்மா எப்படி உன்னை இப்படி எதுவும் தெரியாம விட்டாங்க?!” ஆச்சர்யமாக அவன் வினவ, அதுவரை இயல்பாக இருந்த அவள் முகம் சோகத்தைக் காட்டியது.

error: Alert: Content selection is disabled!!