ஆழியின் மெளனம் ஏனோ – 13

மௌனம் -13

அடுத்து வந்த நாட்கள், ஆழினிக்கும் வியன் செழியனுக்கும் இடையே மௌனம்தான் ஆட்சி செய்தது.

ஏதாவது பேசி அவளது மனதை மீண்டும் வருத்திவிடுமோ என்று தயங்கி வியன் செழியன் அமைதியாக இருக்க.

ஆழினியோ, ‘அவருக்கு என்னை பிடிக்கவே இல்லையா. அதான் ஒதுங்கிப் போகிறார் போல .’ என்று எண்ணி மனம் வருந்திக் கொண்டிருந்தாள்.

அதுமட்டுமல்லாமல், சிந்துஜாவும், அந்த சண்டைக்குப் பிறகு ஆழியினிடம்,”இன்னும் பத்து நாள்ல பங்க்ஷன் இருக்கு. இந்த நேரத்தில் ஏன் செழியன் கூட சண்டை போடுற? கொஞ்சம் விட்டுக் குடுத்துட்டு போ ஆழி. உனக்கு அவன் கூட வேலை செய்யப் பிடிக்கவில்லைன்னா அதை பொறுமையா சொல்லு. இல்லைன்னா உனக்காக நான் அவன் கிட்ட பேசுறேன்.” என்றாள்.

தனக்கென்று யாருமே இல்லையே என்று கலங்கிக் கொண்டிருந்த ஆழினிக்கு அது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

ஒருபுறம் விசேஷத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்துகொண்டிருக்க, மறுபுறம் உமா புதிதாக ஒரு பிரச்சினையை கிளப்பினார்.

“அம்மா, நம்ம தனுவை எவ்வளவு நாள் இப்படியே வீட்டில் வச்சிருக்கிறது?” என்று உமா கேட்டார்.

“கொஞ்ச நாள் பொறு உமா. நல்ல மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணிடலாம்,” என்றார் லட்சுமி.

“அது சரி. அதுவரைக்கும் தனு வீட்டிலேயே இருக்கணுமா? வேலைக்குப் போகட்டுமே மா.”

“ஆமாம்… நானும் அதைத்தான் நினைத்தேன். ஏதாவது நல்ல கம்பெனியில் சேர்த்துடலாம்.” என்றார் லட்சுமி.

“நம்ம ஷாப்பே இந்த திருப்பூர் முழுக்க இருக்கும்போது அவளை எதுக்கு வேற இடத்துக்கு அனுப்பணும்?” என்று உமா படபடக்க.

“அவள் படிச்ச படிப்பு வேற தானே? அப்பவே நான் பேஷன் டெக்னாலஜி படிக்கச் சொன்னேன். நீயும் உன் பொண்ணும் கேட்கலை. அப்புறம் இப்ப என்ன பண்றது?” என்றார் லட்சுமி.

“அவ என்ன படிச்சா என்ன? கடை கணக்கு வழக்கைப் பார்க்கச் சொல்லலாம். கொஞ்சம் கற்றுக் கொடுத்தால் தனு நல்லா புரிஞ்சுப்பா. இல்லைன்னா அவ மேனேஜ்மெண்ட் வேலையைப் பார்க்கட்டும். நம்ம கடைக்கே அவளை போகச் சொல்றேன். செழியன் கூட இருந்து சொல்லிக் கொடுத்தால் அவ கத்துக்க போறா?” என்று உமா கூற.

லட்சுமி யோசித்தார்.

இந்த பேச்சுவார்த்தை முழுவதும் காலையில் உணவு மேஜையில்தான் நடந்துகொண்டிருந்தது.

அதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆழினி மனதிற்குள்,

‘என்ன இது? அதிசயமா இவ்வளவு காலையிலேயே வந்திருக்காங்கனு பார்த்தேன். என்னைக் கம்பெனிக்கு இவர் கூப்பிட்டது தெரிஞ்சிருக்கும் போல… அதனால்தான் போட்டிக்கு வந்துட்டாங்க. நானே ஒதுங்கிப் போயிடணும்னு நினைக்கிறேன்… இவங்க வேற ஏதாவது பண்ணிட்டே இருக்காங்க. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகுதோ?’
என்று எண்ணியபடி தலையைத் திருப்பிக் கொண்டாள்.

அவளது ஒவ்வொரு முகபாவனையையும் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் வியன் செழியன்.

லட்சுமி, தன்ஷிகாவைப் பார்த்து,
“உன்னோட விருப்பம் என்னன்னு சொல்லு, தனு,” என்று கேட்டார்.

“நம்ம கடைக்கே போறேன் பாட்டி. மச்சான் கிட்ட நான் எல்லாத்தையும் கத்துக்குறேன்.” என்றப் பேத்தியை கூர்ந்துப் பார்த்த லட்சுமியோ, “பாப்பா உன்னை விட்டுட்டு இருப்பாளா?” என்று வினவினார்‌.

“அவளையும் கூட்டிட்டு போறேன் பாட்டி. “

“அங்க உன்னால அவளை சமாளிக்க முடியுமா?”

“அதான் மச்சான் இருக்காங்க இல்ல. அவர் இருந்தா குழந்தை என்னைத் தேடக் கூட மாட்டா.” என்றவள் செழியனைப் பார்க்க.

அவனோ தன் மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆழினியோ கடுகடுவென்று தன்ஷிகாவைப் பார்த்தவள், இவன் பார்ப்பதை உணர்ந்ததும் அமைதியாகத் திரும்பிக் கொண்டாள்.

‘இவ எதுக்கு இப்படி டென்ஷனாகுற? நான் தான் இவளை கடைக்கு வரச் சொன்னேன். வரமாட்டேன்டா. இப்போ அடுத்தவங்களும் வரக்கூடாதுன்னா என்ன அர்த்தம்?

நீ எதுவரைக்கும் போறியோ போ. எல்லாம் பங்க்ஷன் முடியற வரைக்கும் தான். அப்புறம் எப்படி கடைக்கு எப்படி வராம நீ இருக்கேன்னு பார்த்துக்கறேன்,’ என்று மனதிற்குள் பேசிக்கொண்டான்.

எப்படியோ உமாவின் ஆசைப்படி தன்ஷிகா அவர்களின் தொழிலுக்குள் நுழைந்தாள்.

செழியன் கடைக்குச் செல்லும் போது அவனுடனே உரிமையுடன் தன்ஷிகாவும் சென்றாள்.

முதலில் கோபமாக இருந்த செழியனாலும், அவளை முற்றிலும் புறக்கணிக்க முடியவில்லை.

முதல் நாள் ஷோரூமுக்குச் செல்லும் வழியில்,

“சாரி மச்சான்…” என்று தன்ஷிகா மெதுவாகக் கூறினாள்.

அவனோ எந்தப் பதிலும் சொல்லவில்லை.

“என் மேல உங்களுக்கு கோபம் இருக்குன்னு புரியுது. ஆனா என்னோட நிலைமையையும் புரிஞ்சுக்கோங்க.” என்றாள்.

“உன்னோட நிலைமையை முதல்ல எங்களுக்குப் புரிய வச்சியா நீ?” சின்ன வயசுல இருந்து உன் விருப்பம் என்னவோ அதெல்லாம் நிறைவேத்துன அத்தை, மாமாவை கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தியா?

அன்னைக்கு உன் கால்ல விழாத குறையா ரெண்டு பேரும் கதறி அழுதாங்கனு அப்பா சொன்னார். அதைக் கேட்டு எனக்கு அவ்வளவு வலிச்சது. ஆனால் அவங்களைப் பார்த்து உன் மனசு துடிக்க வேணாமா?” என்று அவன் வேதனையுடன் வினவ.

அவளோ தலைகுனிந்து,
“நான் செஞ்சது தப்புதான். அசோக்கை நான் உண்மையாவே லவ் பண்ணேன். ஆனா அவன் பணத்துக்காகத்தான் என்னை லவ் பண்ணியிருக்கான். நம்ம வீட்ல எங்களை சேர்த்துக்கலைன்னதும் தான் அவனோட சுயரூபம் தெரிய வந்துச்சு. நான் அவசரப்பட்டு எடுத்த முடிவால தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கேன். நீங்களும் என்னோட பேசாம என்னைக் கஷ்டப்படுத்தாதீங்க மச்சான்…” என்று கண்கலங்கினாள்.

அதற்கு மேல் செழியனாலும் அவளிடம் பேசாமல் இருக்க முடியவில்லை.

சிறு வயதில் இருந்து கூடவே வளர்ந்தவளை முழுவதுமாக வெறுத்து ஒதுக்குவது அவனுக்கும் எளிதல்ல.

“சரி விடு தனு. நீயும் உன்னோட கடந்தக் காலத்திலிருந்து வெளியே வர முயற்சி பண்ணு,” என்று அவளை சமாதானப்படுத்தினான்.

அதன்பிறகு இருவரும் தினமும் பேசிச் சிரித்தபடி வேலைக்குச் செல்வதைப் பார்த்து உமாவிற்கு அளவில்லாத சந்தோஷமாக இருந்தது.

“ப்ச்! இந்த அண்ணனும், அண்ணியும் மட்டும் கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம். அவசரப்பட்டு அந்த அனாதைப்பொண்ணை என் பொண்ணு இருக்க வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. கொஞ்சமாச்சும் என் அண்ணன் மகனோட சிரிச்சு பேசி சந்தோஷமா அவ இருந்திருக்காளா?. இப்படி இருந்தா எப்படி புள்ள பொறக்கும்.

இப்ப பாரு இவங்க ரெண்டு பேரையும் பார்த்து என் கண்ணே பட்டுடும் போல இருக்கு அவ்வளவு ஜோடி பொருத்தம் அருமையா இருக்கு.” என்று
ஆழினியின் காதுபட முணுமுணுத்தார்.

அதைக் கேட்டதும் ஆழினியின் முகம் வாடிப் போனது.

ஒரு வாரம் கடந்திருந்தது.

நித்ய மயூரி இந்தியா வரப் போகிறாள் என்ற செய்தி தெரிந்ததும், வீடே தடபுடலாக மாறியது.

ஒரு புறம் விழா ஏற்பாடுகள் நடைப்பெற. மறுபுறம், “மய்யூக்கு இது பிடிக்கும்… அது பிடிக்கும்…” என்று பார்த்துப் பார்த்து பொருட்கள் வாங்கி வைத்தனர்.

வீடு முழுவதும் விழா கோலத்தில் காட்சியளித்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சியின் நடுவே, ஆழினியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தை யாரும் கவனிக்கவில்லை. கவனித்த ஒருவனும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
**************
ஐந்து வருடங்களுக்கு பிறகு நித்யமயூரி அந்த வீட்டினுள் காலை வைத்தாள்.

அவளைப் பார்த்ததும் கவிதாவும் சுமதியும் கண்கள் கலங்கி அவளை அணைத்துக்கொண்டனர். அவர்களை அணைத்த நித்யாவின் கண்களும் கண்ணீரால் நிரம்பியது.

“எங்க மேல உள்ள கோபம் போக உனக்கு இத்தனை வருஷமாச்சா?” என்று சுமதி வினவ.

அதற்குள் லட்சுமி,
“அவளுக்கு என்ன கோபமாம்? நாம என்ன அவளுக்கு கெடுதலா செஞ்சோம்?”என்று பேச ஆரம்பிக்க.

பாட்டியை முறைத்தாள் நித்தியா.

அவளது பார்வையைப் பார்த்த சுமதி,
“எதுக்கு அத்தை இப்போ அந்த பேச்சு? மய்யூ எவ்வளவு நாள் கழிச்சு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா.” என்று லட்சுமியிடம் கூறியவர், நித்யமயூரியிடம் திரும்பி, “ மய்யூ! நீயும், மாப்பிள்ளையும் பாட்டிக் கிட்ட ஆசிர்வாதம் வாங்குங்க. மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்.” என்று கூற.

பெரியம்மாவின் பேச்சை மறுக்க முடியாமல் பாட்டியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாள்.

“ரெண்டு பேரும் எப்போதும் சந்தோஷமா இருங்க. மய்யூ உன் சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். உன் மேல எனக்கு கோபம் வந்தது உண்மைதான். அந்தக் கோபத்தில்தான் கல்யாண ஏற்பாடுகளை செஞ்சேன். ஆனா உனக்கு ஏத்த மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கணும்னு தான் ஒரு மாசமா காத்திருந்தேன். அதே போல நவீனோட ஆஃபிஸ்ல வெளிநாட்டுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணாங்க. உடனே உன் விருப்பத்தைப் பத்தி நவீன் கிட்ட சொல்லிட்டேன்.

நவீனும் சம்மதம் சொன்ன பிறகுதான் மத்த ஏற்பாடுகளை எல்லாம் செய்தேன்.”

அதைக் கேட்ட நித்யா அதிர்ச்சியுடன் தன் கணவரை பார்த்தாள்.

நவீனோ சுற்றிலும் யாராவது கவனிக்கிறார்களா என்று பார்த்துவிட்டு, அவளது காதருகில் குனிந்து, “சாரி மய்யூ! இந்தப் பாட்டி போட்டு கொடுத்துட்டாங்க!”என்று மன்னிப்புக் கேட்டான்.

“அடப்பாவி! அவ்வளவும் நடிப்பா? எனக்காக வெளிநாட்டுக்கு வந்த மாதிரி எப்படி பில்டப் பண்ண? நானும் அதை நம்பி ஏமாந்துட்டேன்.”என்று அவனைப் பார்த்து முறைத்தாள்.

“சாரி மய்யூ! எங்க ஆஃபிஸ்ல வெளிநாட்டுக்கு போற ஆஃபர் கொடுத்தாங்க. ஆனால் எனக்கு அதுல விருப்பம் இல்லை. உனக்காகத்தான் அதை ஏத்துக்கிட்டேன்‌.” என்று அவன் கூற.

அவனை காதலாகப் பார்த்தாள் நித்யமயூரி‌‌. இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருக்க.

“வாங்க அண்ணி! வாங்க அண்ணா.”என்று ஆழினி அழைத்தாள்.

அந்த அழைப்பைக் கேட்டதும் நித்யா அதிர்ச்சியுடன் தோழியைப் பார்த்தாள்.

” ஆழி! நான் உன் ஃப்ரெண்டுடி.” என்று நித்யமயூரி கூற.

“அதெல்லாம் முடிந்த கதை. இப்போ நீங்க என் அண்ணிதான்.” என்று புன்னகையுடன் கூறிய ஆழினி, நவீனிடம் சரளமாகப் பேச ஆரம்பித்தாள்.

நவீன் அவ்வப்போது இந்தியாவிற்கு வரும் போது இருவருக்குள்ளும் நல்ல பந்தம் உருவானது.

“அண்ணா…”என்று அவள் உரிமையோடு அழைக்க,

நவீனும் தன் மச்சான் மனைவியை, தங்கை என்று அழைத்து இயல்பாகப் பேசினான்.

அதைப் பார்த்த நித்யமயூரிக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆழினி தன்னை ஒதுக்குவதை எண்ணி வருந்தினாள்.

அவளை எப்படியாவது சமாதானம் படுத்தணும். ஆனால் இத்தனை பேர் முன்னால் அவளை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தவித்தாள்.

அப்போது கவிதா,
“மய்யூ! மாப்பிள்ளையை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க சொல்லு ரூமுக்கு கூட்டிட்டு போ.”என்றார்.

நித்யமயூரிக்கு அங்கிருந்து கிளம்ப மனமில்லை.

“பரவாயில்லை அத்தை. நம்ம வீடு தானே. நானே போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன்.” என்று கூறியவன், நித்யமயூரியின் அறைக்குச் சென்றான்

சற்று நேரத்தில் செழியனும் வீட்டிற்கு வர,

அண்ணனின் காரைப் பார்த்ததும் நித்யா துள்ளிக் குதித்து,
“அண்ணா!” என்று ஓடினாள்.

ஆனால், அவனருகில் நின்றிருந்த தன்ஷிகாவைப் பார்த்ததும் அவளது கால்கள் அப்படியே நின்றுவிட்டன.

செழியன் தங்கையை அணைத்துக்கொண்டு,

“என்னம்மா. கோபம் எல்லாம் போயிடுச்சா?” என்று கேட்டான்.

“அண்ணா…” என்று மட்டுமே கூறியவள், தன்ஷிகாவை நோக்கிப் பார்த்தாள்.

தன்ஷிகாவோ நித்யமயூரியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளோ தன்ஷிகாவை ஒரு ஆளாகக் கூடப் பார்க்கவில்லை.

“சரி வா உள்ளே போகலாம்?” என்றான் செழியன்.

“மச்சான், நீங்க போங்க. நான் மய்யூவிடம் கொஞ்சம் பேசணும்.” என்றுக் கூறி நித்யமயூரியின் கையைப் பிடித்தாள்.

அவளோ உதற முயன்றாள்.

“ப்ளீஸ் மய்யூ.” என்று கண்களால் கெஞ்சினாள் தன்ஷிகா.

இருவரையும் ஒரு முறை ஆழமாகப் பார்த்த செழியன், வீட்டிற்குள் செல்வது போல் நடித்து, மீண்டும் அமைதியாக தோட்டத்திற்குத் திரும்பினான்.

‘ இவங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை?’என்று மனதிற்குள் யோசித்தபடி, அவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்காக அமைதியாக நின்றான்.

“ஏன்டி, என்கிட்ட பேச மாட்டேங்கிற? நீயாவது என்ன புரிஞ்சுப்பேன்னு நினைச்சேன்.” என்று தன்ஷிகா கூற.

“நீ பண்ண வேலை அப்படி.”

“லவ் பண்றது அப்படி என்ன தப்பா மய்யூ?”

“லவ் பண்றது தப்பு இல்ல. ஆனா எங்க அண்ணனை இப்படி மணமேடையில நிக்கவச்சுட்டு போனது தப்பு? அவர் எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு எனக்குத்தானே தெரியும்.”

” நான் எடுத்த முடிவு மச்சானுக்குக்கும் நல்லது தானே. பிடிக்காத கல்யாணத்துல இருந்து விடுதலை. மச்சானுக்கு இதுல என்ன கஷ்டம். இன்பாக்ட் என்னோட முடிவால மச்சானோட காதலும் நிறைவேறிருக்கு.”

“என்ன சொல்ற?” என்று புரியாமல் நித்தியமயூரி அவளைப் பார்த்தாள்.

“மச்சானுக்கு ஆழினியை ரொம்ப பிடிக்கும். எங்க கல்யாணப் பேச்சு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அண்ணிக்கிட்ட வந்து ஆழினியை லவ் பண்றதா சொல்லியிருந்தாங்க.”

“என்ன சொல்ற?”

“ஆமா… நான் சொல்றதெல்லாம் உண்மைதான். ஆனா இதை யாரும் நம்ப மாட்டாங்கன்னு தெரிஞ்சதாலதான் யார்கிட்டயும் சொல்லல. சிந்து அண்ணி எனக்கு நல்லது செய்றதா நினைச்சு, ஆழினிக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு சொல்லிட்டாங்க. நான் எவ்வளவோ சொன்னேன்… விருப்பமில்லாதவங்களைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு. ஆனா அவங்க கேட்கல. என்னை கார்னர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அம்மா, அப்பா செத்துடுவாங்க… குடும்ப மானம் போயிடும்னு சொல்லி என்னை ரொம்ப கண்காணிச்சாங்க.

அந்த நேரத்துலதான் அசோக் வந்து நான் உன்னை லவ் பண்றேன்னு வந்தான். வேற வழி தெரியாம அவனை நம்பிப் போயிட்டேன்…” என்று கூறியவளின் குரல் தழுதழுக்க, கண்கள் கண்ணீரால் நிரம்பின.

“தனு! நீ சொல்றது உண்மையா? சிந்து அக்காவா அப்படி சொன்னாங்க?” என்றவளுக்கு உடம்பெல்லாம் பதறியது.

“ஹேய்! மய்யூ! அதுக்கு ஏன் இவ்வளவு டென்ஷனாகுற? எப்படியோ மச்சான் ஆசைப்பட்ட மாதிரி ஆழினியையே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கள்ல.அதுவே எனக்கு சந்தோஷம் தான்டி.” என்றுக் கூற.

“அது வந்து தனு… அண்ணனுக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்னு அக்கா சொல்லியிருக்காங்க.” என்று மரமரத்த குரலில் கூறினாள் நித்யமயூரி.

“எதுக்கு அப்படி அண்ணி சொல்லணும்?” என்று தன்ஷிகா வினவ.

அதே கேள்வி தான் வியன்செழியனின் மனதிற்குள்ளும் உதித்தது.

நித்யமயூரியின் பதிலுக்காக இதயம் துடிக்க காத்திருந்தான்.

“ஆழினி அண்ணனை விரும்புனா. நான் அக்கா கிட்ட சொல்லி அண்ணன்கிட்ட கேட்கச் சொன்னேன்.” என்றதும், வியன்செழியனுக்கோ மயக்கம் வராதக் குறை தான்.

“என்னடி சொல்ற?” என்று நம்பாமல் வினவினாள் தன்ஷிகா.

“ஆமாம்!” என்றவளோ கடந்தக்காலத்தை தன்ஷிகாவிடம் கூற ஆரம்பித்தாள்‌

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கடந்த காலத்தின் காயங்களை மீண்டும் கீறியது.

அதே நேரத்தில் செழியனுக்கு ஆழினியின் மனநிலை இப்போது புரிந்தது. அவளை வெறுத்து வாழ்ந்த இந்த வருடங்கள் முழுவதும், அவள் சுமந்த வலி எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என்று நினைத்தவனின் கண்களும் கலங்கின.

error: Alert: Content selection is disabled!!