MPK 12
ஆதித்யன் வந்து தன் படுக்கையில் விழுந்த பின்தான் தாயிடம் அப்படி சட்டெனப் பேச்சை நிறுத்தி விட்டு வந்திருக்கக் கூடாதென்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தான்.
சாதனாவின் புண்ணியத்தில் வெகுநாளைக்குப் பிறகு இன்றுதான் தாய் மகனாக நெடுநேரம் கதைத்திருந்தார்கள்.
மகன் மருத்துவன் என்றான பின் பிறர் முன் அவன் மரியாதை காக்கப் பன்மையில் அழைத்துப் பழகிக் கொண்ட பரமேஸ்வரி, இப்படியேதேனும் தனியாக சந்தர்ப்பம் வாய்க்கும் போதுதான் அவனை வா போ என்று அழைத்துக் கேலிகளில் இறங்குவார். மீண்டும் பால்ய வயதுக்கு சென்றதுபோல் உணரும் அந்தப் பொழுதுகளை அவனுமே மிகவும் விரும்புவான்.
இன்றும் அதை ரசித்துக் கொண்டே பள்ளியில் நிகழும் ஒவ்வொன்றையும் தாயிடம் ஒப்பிக்கும் பாலகனாக நித்திலனின் சேட்டைகளை சொல்லிக் கொண்டிருந்தவனுக்குத் தாய் இரண்டாம் திருமணம் என்று பேச ஆரம்பித்ததும் மனம் இறுகிப் போக எழுந்து வந்துவிட்டிருந்தான்.
இரண்டாம் திருமணம்… அதற்கான தேவை அவன் வாழ்வில் வந்திருக்க வேண்டிய தேவையே இல்லை. அவன் மனைவியின் அஜாக்கிரதையும் அலட்சியமும் ஒன்று சேர்ந்து அவனோடு அவன் பிள்ளைகளையும் சபித்துவிட்டிருந்தது.
மருத்துவர் என்றால் இன்னொரு மருத்துவரைத்தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற கொள்கையில் எல்லாம் ஆதித்யனுக்கு விருப்பமே இருந்ததில்லை.
இருவரும் நேரமே இல்லாமல் முழுநாளும் ஓடிக் கொண்டே இருந்தால் குடும்பம் என்ற அமைப்பைக் கட்டி இழுக்க முடியாது என்று வேறு வேலையில் இருக்கும் பெண்ணைத் திருமணத்துக்குப் பார்க்கக் கூறியிருந்தான்.
அப்படி வந்தவள் தான் வைஷ்ணவி. கிளிநொச்சி கச்சேரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்குத் தாய் இல்லை. தந்தை மட்டும் தான். ஒரு அண்ணன் இருந்தான். அவனுக்கு முன்னரே திருமணமாகி இருந்தது. குறிப்பும் குடும்பங்களும் ஒத்துப் போனதில் ஆதித்யனின் முப்பது வயதில் குடும்பஸ்தன் ஆனான் அவன்.
வைஷ்ணவியைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் மிகவும் போல்டான காரக்டர். குடும்பத்தை, கணவனின் வேலையைப் பொறுப்பாகப் புரிந்து குடும்பம் நடத்தி வந்தாள். ஆதித்யனுக்கும் அவளிடம் நன்றாகவே ஒத்துப் போனது.
ஆதித்யன் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பான் என்றால் வைஷ்ணவி தன் தோற்றத்துக்கு முதல் உரிமை கொடுப்பாள்.
வேலைக்கு செல்லும் போது சாரி கட்டினால் வளைவு நெளிவுகளோடு பெண் என்ற இலக்கண வரிவடிவத்திற்குப் பொருந்திப் போகவேண்டும் என்று நினைப்பாள்.
கொஞ்சம் சதை கூடி எங்கும் தொங்கினால் அதைக் குறைத்து பழைய நிலைக்குத் திரும்பும் வரை அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் கூடக் குடிக்கமாட்டாள்.
அப்படி சிக்கென்று தயாராகி தினம் ஒரு ஃபோட்டோவை தன் சமூக வலைத்தளங்களில் பதிவிடாமல் போனால் அவள் நாளே முழுமை ஆகாது. இது ஒன்றுதான் அவளிடம் இருந்த குறை.
இதைப் போய்க் குறை என்று சொல்லலாமா? இன்று எல்லோரும் இதுபோல் தானே இருக்கிறார்கள் என்றுதான் ஆதித்யன் நினைத்திருந்தான். அவள் மரணித்த நாளுக்கு முன்தினம் வரை!
புரிதலான இல்லறத்தின் பலனாய் ஆதித்யன் தன் முப்பத்திரண்டாம் வயதில் இரட்டைப் பெண் குழந்தைகளுக்குத் தந்தையாகி விட்டிருந்தான்.
அதன் பின் வைஷ்ணவிக்கு உண்டான போஸ்ட் பார்ட்டம் டிப்பிரஷன் இவர்கள் வாழ்வில் சிறு சிறு சலசலப்பைக் கொண்டு வந்தாலும் இரட்டைக் குழந்தைகளைப் பெற்று சமாளிப்பவளின் சிரமம் உணர்ந்து ஆதித்யனும் பரமேஸ்வரியும் அவளை நன்றாகவே கவனித்துக் கொண்டனர்.
குழந்தை பிறந்த மூன்றாம் மாதமே உடல் எடை கூடி விட்டது ஜிம் போகிறேன் என்றவளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி எந்தப் பிரச்சனையும் இல்லை என்றதும் அனுப்பி வைத்தான். அவளுடையது சுகப் பிரசவம் ஆகையால் பெரிதான சிக்கல்களும் இல்லை.
குழந்தை பிறந்து மூன்றுமாதம் முடிவிலேயே வேலைக்கும் செல்லத் தொடங்கி விட்டிருந்தாள்.
அதனால் ஆறாம் மாதமே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துகிறேன் என்றபோது சிறு மன சிணுக்கம் வந்தபோதும் அவளால் முடியவில்லை என்றால் கட்டாயப்படுத்தக் கூடாது என்று விட்டுவிட்டான் ஆதித்யன்.
தமக்குள் எத்தனை முரண்பாடுகள் வந்தாலும் ஆதித்யனும் சரி, வைஷ்ணவியும் சரி இரண்டு குழந்தைகளையும் தம் மறு உயிரெனவே கண்டனர். அவர்கள் வாழத் தம் உயிர் வேண்டும் என்ற நிலை வந்தால் சந்தோஷமாகத் துறக்கவும் சம்மதிக்கும் நிலையில் இருந்தனர்.
இப்படி சென்று கொண்டிருக்கையில்தான் மயூ, மகி இருவரும் தாயின் கருவறையில் இருந்து நீங்கி பத்தாம் மாதத்தைக் கடந்த நிலையில் தன் அலுவலகத்தில் வேலை செய்பவர்களோடு அனுராதபுரம் வரை மூன்று நாள் சுற்றுலா செல்லப்போவதாக வந்து நின்றாள் வைஷ்ணவி.
பரமேஸ்வரி பேத்திகளை நினைத்து வெகுவாகத் தயங்கியவர், மகனைப் பார்க்க அவனும் மகள்களை யோசித்தான். அதேபோல் மனைவியையும் யோசித்தான்.
இப்போது கொஞ்சநாளாகத்தான் அவள் முழுதாகத் தெளிந்து மனச்சோர்வில் இருந்து வெளிவந்திருக்கிறாள். இப்போது அவளை மறுத்தால் மறுபடியும் மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்வாளோ என்று யோசித்தவன், மூன்று நாட்கள்தானே? தாயோடு தானும் கொஞ்சம் வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகரித்துக் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வோம். அவளை அனுப்பி வைத்தால் இன்னும் நன்றாகத் தெளிந்து வருவாள் என்று அனுப்பி வைத்தான்.
அவர்கள் எல்லோரும் அவளை யோசித்தளவு அவள் இவர்களை யோசிக்கவில்லையா? இல்லை அவள் விதி யோசிக்க விடாமல் செய்ததா தெரியவில்லை. .
“இன்னும் ஒரு மணி நேரத்தில் அம்மா வந்து பிள்ளையளைப் பார்ப்பேன்.” என்று பாதி தூரத்தில் மாமியாரின் ஃபோனில் மகள்களிடம் கொஞ்சி விட்டு வைத்தவள், பிணமாக வீடு வந்து சேர்வாள் என்று யார்தான் நினைத்திருப்பார்கள்?
ட்ரெயினின் வாசலில் நின்று தான் வெளியே பார்ப்பது போல் போஸ் கொடுப்பதாகவும் தனக்குப் பின்புறம் நின்று ஃபோட்டோ மற்றும் வீடியோ எடுத்துத் தருமாறும் அலுவலகத் தோழி ஒருவரிடம் சொல்லிவிட்டு நின்றிருக்கிறாள்.
போஸிற்காக ஒரு கையால் முடியை ஒதுக்கிக் கொண்டிருந்த நேரம் ட்ரெயின் ட்ராக் மாறி மெலிதாய் ஒரு குலுக்கத்தைக் கொடுக்க அதில் கம்பியைப் பிடித்திருந்த கை வழுக்கி சமநிலை தவறி முன்னே சாய்ந்திருந்தவள், அலறிக் கொண்டே ட்ரெயினில் இருந்து விழுந்திருந்தாள்.
அவள் விழுந்த பகுதி அக்கம் பக்கம் ரோட்டுகள் எதுவும் இல்லாத பற்றைகள் சூழ்ந்த பகுதி. அதனால் இவள் விழுந்ததை பார்த்து உடனே மருத்துவமனை கொண்டு சேர்க்கக் கூடிய நிலை இல்லை.
நடந்ததை உணர்ந்து அவளோடு வந்தவர்கள் அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வந்து இவளைத் தூக்கும் வரை யாரும் அவளைக் கண்டிருக்கவில்லை.
அவர்கள் வந்து பார்க்கும் போது முகம் கைகால்கள் எல்லாம் ரத்தம் சிதறி மூச்சுக்குத் திணறியபடி இருந்தவளை சிரமப்பட்டு மருத்துவமனை கொண்டு சேர்த்துவிட்டு ஆதித்யனுக்குத் தகவல் கொடுத்தனர்.
ஆனால் அவன் அங்கே வருவதற்குள் அவள் உயிர் மண்ணுலகை விட்டுப் பிரிந்திருந்தது.
அநியாயச் சாவு. ஃபோட்டோ மோகத்தில் ஆபத்தை உணராமல் அவள் செய்த வேலையால் வாழ வேண்டிய வயதில் கண்ணுக்கு நிறைவான கணவனையும் இரண்டு தேவதைகளையும் விட்டு செல்லவேண்டிய நிலை.
சென்றவள் சென்று விட்டிருந்தாள். அந்த இழப்பில் இருந்து மீள அவளைச் சார்ந்தோர்கள் பட்ட வேதனைகள்… அதுவும் தாயைத் தேடி அழுத அந்த இரண்டு குழந்தைகள் நிலையைக் கண் கொண்டு பார்க்க முடியவில்லை யாராலும்.
துக்கம் விசாரிக்க வந்த அனைவரும் சொன்ன ஒரே விஷயம். தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய மரணம் என்பதுதான்.
உண்மைதானே? நோயில் வாடி மீள முடியாமல் போன உயிரல்லவே! ஒரு ஃபோட்டோ… அதைக் கண்டிப்பாக ஃபுட் போர்டில் நின்றுதான் எடுத்திருக்க வேண்டுமா என்ன?
அதை நினைத்தே பாதி நாள் அவள் மேல் கோபத்தில் குமுறுவான் ஆதித்யன். இறந்தவள் மேல் கோபம் கொள்வது முறையான காரியம் இல்லை என்று அறிவுக்குப் புரிந்தாலும் மனம் ஏற்பதில்லை.
மருத்துவன் என்றாலும் அவனும் ரத்தமும் சதையும் உணர்வுகளும் பின்னப்பட்ட மானுட உடலுக்குச் சொந்தக்காரன் தானே? எதிர்பாராத இழப்பினால் அவனும் வெகுவாகத் துவளவே செய்தான்.
பின் காலமும் அவன் கற்ற கல்வியும் அவனைச் செம்மைப்படுத்தி இன்று தன்னோடு இருப்பவற்றைக் கொண்டு தன்னைச் சுற்றி அனைத்தையும் தகவமைத்துக் கொள்ள வைத்தது.
அவன் குழந்தைகளுக்கு அன்னை என்ற இடத்தில் அவன் இருக்கிறான். ஆனால் அவன் வாழ்வில் மனைவி என்ற இடம்? அது வெற்றிடமாகத்தானே இருக்கிறது.
அந்த இடத்தை நிரப்ப இன்னொருவரைக் கொண்டு வருவதா, இல்லையா என்று அவனுக்கு முடிவெடுக்கத் தெரியவில்லை.
வைஷ்ணவியோடு வாழ்ந்த வாழ்க்கை மட்டும் இந்த ஜென்மத்திற்குப் போதுமா என்று கேட்டால்… அதுவும் அவனுக்குத் தெரியவில்லை.
சில நேரங்களில் எமர்ஜென்ஸி என்றால் நள்ளிரவு தாண்டிக்கூட வீடு வருவான். அப்படி அவன் வரத் தாமதமாகும் நேரங்களில் பிள்ளைகள் இருவரும் பரமேஸ்வரியுடன் தான் உறங்குவர் ஆதலால், இவன் அவர்களைத் தொல்லை செய்யாமல் தானே தன் வேலைகளைப் பார்த்து விட்டுத் தன் அறைக்கு வந்துவிடுவான்.
அந்நேரங்களில் வெறுமையோடு வரவேற்கும் படுக்கையறை அவனை இன்னுமே சோர்ந்து போகச் செய்யும்.
அவனுக்கிருக்கும் மனப்பக்குவத்தால் அதையெல்லாம் சமாளித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டிருந்தான். சமாளிக்கமுடியாத கட்டமும் ஒருநாள் வரும். அதற்குள் இதற்கு ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் என்று எண்ணி எண்ணியே நாட்களைப் பிற்போட்டுக் கொண்டு வந்ததுதான் மிச்சம். இன்னும் தெளிவாகவில்லை.
தானே தெளிவாகாமல் ஆமோ, இல்லையோ என்ற பதிலைத் தாய்க்கு எப்படிக் கொடுப்பது?
கொடுத்தால் அந்தப் பதிலிலேயே கடைசி வரை நிலைத்து நிற்க வேண்டும். அதனால் தான் இடையில் நிறுத்தி விட்டு வந்தான்.
தொடரும்…

