MPK 13
“அம்மா! வாறிங்களோ, அந்தப் பெரிய மனுஷரைப் போய்ப் பார்த்திட்டு வருவம்?”
“ஓம் தம்பி போவோம். ஒரு ரெண்டு நிமிஷம். இந்தா வாறன்.” என்றவர் கையில் ஒரு உண்டியலை எடுத்துக் கொண்டு வந்தார்.
“இது என்னத்துக்கம்மா?”
“அண்டைக்குப் பிள்ளை உண்டியல் இல்லை எண்டு சொன்னது. நான் குடுக்கோணுமெண்டு எடுத்து வச்சிட்டு மறந்து போனேன்.” பேசிக்கொண்டே இருவருமாக நடந்தனர்.
சாதனா கிச்சனில் இருந்தவள், யன்னல் வழி அவர்களைக் கண்டுவிட்டு வாசல் வரை வந்து வரவேற்று அவர்கள் அமரக் கதிரை எடுத்துப் போட்டாள்.
இவனைக் கண்டதும் நித்திலன் தன்னையறியாமல் உற்சாகமாகி விட்டான்.
“நீங்க ஆஸ்பத்திரிக்குப் போகேல்லயோ? அப்ப அங்க ஆர் பார்ப்பினம்? அந்தச் சின்ன டொக்டர்மாரோ?”
“அப்பிடி சொல்லக் கூடாது நிலன். அவை சின்ன டொக்டர் இல்லை. அவையும் என்னை மாதிரி டொக்டர்தான். என்ன என்னை விட வயசு குறைவு. என்ர வயசில அவை என்னை விடவும் பெரிய டொக்டரா இருப்பினம்.”
அவன் சொல்வது முழுதாகப் புரியாவிட்டாலும் இனி அவர்களை சின்ன டொக்டர் என்று சொல்லக் கூடாது என்றளவில் புரிந்துகொண்டு தலையாட்டினான்.
சாதனாதான் மகனை விசித்திரமாகப் பார்த்து நின்றாள்.
‘நீங்க தானே உங்களைப் பெரிய டொக்டர் எண்டு சொல்லிக் கொண்டு திரியுறியள். அப்ப உங்களுக்குக் கீழ இருக்கிற அவை சின்ன டொக்டர்தானே?’
இப்படி இடக்காகக் கேட்டிருந்தால், இது என் மகன்தான் என்று நம்பியிருப்பாள். இல்லாமல் உடனே தலையாட்டினால் அவளுக்கு சந்தேகம் வரத்தானே செய்யும்!
பிறந்தபோது வைத்தியசாலையில் இருந்து கவனமாகத் தன் பிள்ளையை எடுத்து வந்துவிட்டு, இப்போது ஏழு வயதில் ட்ரீட்மெண்டிற்கு என்று போன இடத்தில் பிள்ளையை மாற்றிக் கொண்டு வந்து விட்டேனா என்று குழம்பிக் கொண்டிருந்தாள் அவள்.
“சரி நிலன், எனக்கு நேரமில்லையப்பா. நீங்க என்னைக் கேட்டனீங்களாம் எண்டு அம்மா சொல்லவும் தான் ஒருக்கா பார்த்திட்டு வருவம் எண்டு வந்தனான். கையைக் கவனமா பார்க்கோணும் என்ன? வீட்ட விட்டுட்டினம் தானேயெண்டு எங்கேயேன் ஏறிக் குதிக்குறேல பிறகு! அப்பிடியேதேன் செஞ்சு போட்டு திருப்பி ஹொஸ்பிட்டல் வந்தா…”
“என்ன பெரிய ஊசி போடுவிங்களோ? எனக்குப் பயமில்லை.” அவனை முந்தி முடித்தவனைப் பார்த்த ஆதித்யன் உள்ளூரப் புன்னகைத்துக் கொண்டான்.
ஊசிக்கெல்லாம் பயப்படும் ஆள் அவன் இல்லை என்று அவனும் தெரிந்து கொண்டிருந்தானே. ஊசிக்கு மட்டுமா? வலிக்கும் கூடப் பழக்கப்பட்டவன் மாதிரி எலும்பு முறிந்த அந்த நிலையிலும் அவ்வளவு பெரிதாய் அழுது காணவில்லையே…
இவன் வயதுப் பிள்ளைகள் எத்தனை பேரைப் பார்த்திருக்கிறான் அவன்? விளையாடும் போது வரும் சிறு தசை நெரிவையே தாங்கமுடியாது அப்படிக் கத்துவார்கள். அப்படியிருக்க இவன் என்ன இப்படி இருக்கிறானே என்று மருத்துவனாக அவனுக்குமே நித்திலனை எண்ணி வியப்பாகத் தானிருந்தது.
அவனுக்கு எங்கே தெரியும், சாதனா அடித்து அடித்தே வலி என்ற உணர்வின் வலிமையைக் குறைத்து விட்டாள் என்று!
இப்போதும் தான் லேசாய் பய.ம் காட்டி வைப்போம் என்று பேச வர, அதை சாதாரணமாக முறியடிக்கும் சின்னவனிடம் அவனுக்கு சுவாரஸ்யமே தோன்றியது.
“இனி உமக்கு ஊசியெல்லாம் இல்ல. இனிக் குழப்படி விட்டா உடைஞ்ச கையைக் கழட்டிக் காகத்துக்குப் போட்டுருவன். அதுவும்
வடையைத் தூக்கிக் கொண்டு போன மாதிரி உம்மட கையைத் தூக்கிக் கொண்டு பறந்து போகும்.” என்றான் கண்ணை உருட்டி.
அவன் அதற்கும் பயப்படவெல்லாம் இல்லை.
“அப்ப நான் போய் நரி மாதிரி காகத்திட்டப் போய்ப் பாட்டுப் பாடச் சொல்லிக் கேப்பன். அது கையைக் கீழ போடும். அதை எடுத்தந்து வேற பெரிய டொக்டரிட்ட குடுத்து ஒட்டித்தரச் சொல்லுவன்.” சொன்னவனைப் பார்த்து இம்முறை முடியாமல் சிரித்து விட்டான் ஆதித்யன்.
சாதனா மற்றும் பரமேஸ்வரி கூட அவன் பேச்சில் சிரித்து விட்டிருந்தனர்.
“இப்ப என்ன சொல்ல வாரீர்? நான் பெரிய டொக்டர் இல்லையெண்டோ?” சிரிப்புடனே கேட்டான்.
“நீங்க தானே சொன்னனீங்கள், அங்க ஆஸ்பத்திரில நிக்கிற டொக்டர் ஆக்களுக்கு வயசு குறைய. உங்களுக்கு வயசு கூட அதால நீங்க பெரிய டொக்டர் எண்டு. அதேமாதிரி உங்களை விட வயசு கூடின டொக்டர் இருப்பினம் தானே? தலையெல்லாம் நரைச்சு, எங்கட மனோ டொக்டர் மாதிரி. அவை உங்களை விடப் பெரிய டொக்டர் தானே? அவேட்ட போவன் எண்டு சொன்னான்.”
அவனின் பேச்சை ஒரு மெச்சும் புருவத் தூக்கலுடன் கேட்டிருந்த ஆதித்யன், “பிரில்லியன்ட் போய் (boy)” என்று பாராட்ட அவனுக்கு அர்த்தம் விளங்கவில்லை.
“போய் எண்டா பெடியன். பிரில்லியன்ட் எண்டா என்ன? குழப்படியோ?”
இதுவரை அவனை யார்தான் நல்லது சொல்லி பாராட்டியிருக்கிறார்கள்? அதனால் இப்படித்தான் கேட்க வந்தது அவனுக்கு.
“அப்பிடியில்ல. பிரில்லியன்ட் எண்டா நல்ல அறிவான, திறமையான, புத்திசாலிப் பிள்ளை எண்டு சொன்னான்.” என்று அவன் அப்போதும் சாதாரணமாக சொல்ல, நித்திலன் விழிகளில் பளிச்சென்ற மின்னலும் நம்ப முடியாத பாவனையும்.
சாதனாவின் மனமும் அவன் வார்த்தைகளில் ஒருமுறை சிலிர்த்தடங்கியது. இப்படியான சொற்களுக்கு சொந்தக்காரனாக மகனை வளர்க்க வேண்டும் என்றுதானே அவள் தவம் காக்கிறாள்!
உணர்ச்சிவசப்பட்டவளின் கண்ணிலிருந்து ஒருதுளி நீர் உருண்டோட, அதைப் பார்த்த பரமேஸ்வரி பதறி விட்டார்.
“ஏன் பிள்ளை அழுகிற? என்ன பிழையா கதைச்சனாங்கள்?”
“ஐயோ! நீங்க என்ன பிழையா கதைச்சனீங்கள்? இது வேற யோசினை.” என்று கண்ணைத் துடைத்தபடி சங்கடமாய் புன்னகைத்தாள், வெளிப்படையாக உணர்வுகளைக் கொட்டிவிட்டதில்…
இருவரின் இருவேறு விதமான உணர்ச்சிகரமான நிலையைக் கண்ட ஆதித்யனின் புருவங்கள் சுருங்கினாலும் அதைப் பற்றி பெரிதாக ஆராயவில்லை.
“ஓகே நிலன். நான் போயிட்டு வாறன் என்ன? கவனமா இருக்கோணும்.” என்று அவன் எழும்பப் போக,
“எங்க ஆஸ்பத்திரிக்கோ போறீங்கள்?” என்று குறுக்கு விசாரணை செய்தான்.
சாதனாவுக்கு மகனை நினைத்து சங்கடமானது. அவர்கள் முன்னால் ஒன்றும் சொல்ல முடியாமல் நின்றாள்.
“ஓம்.. ஆஸ்பத்திரிக்கும் போகோணும். அதுக்கு முதல் பிள்ளையளை நேர்சரில இருந்து கூட்டி வரோணும்.”
“அதுக்கு ஏன் நீங்க போகோணும்? என்னை அம்மா ஏத்தி இறக்குற மாதிரி அவைய அவேன்ர அம்மா கூட்டியர மாட்டாவோ?”
அவன் கேள்வியில் அங்கே சட்டென ஒரு அமைதி சூழ்ந்தது. அதிகப் பிரசங்கித்தனமான கேள்வி. ஆனால் அதைக் கேட்டது இப்படியெல்லாம் கேட்கக்கூடாது என்று தெரியாத பாலகன் என்பதால் ஆதித்யனாலும் பரமேஸ்வரியாலும் ஒன்றும் சொல்ல இயலாமல் போயிற்று!
ஆனால் சாதனாவால் அப்படி விட முடியவில்லை.
“நிலன்! அடிச்சுப் பல்லைக் கொட்டப் போறன் உனக்கு. வயசுக்கு ஏற்ற மாதிரிக் கதைச்சுப் பழகு. சொறி சொல்லு அவையிட்ட.”
அவள் கத்தவும் நித்திலனின் ஒரிஜினல் குணம் வெளியே வந்து விட்டது. நீ சொல்வதைக் கேட்டுவிட்டால் பாரென்று விறைத்துக் கொண்டு நின்றான்.
“இப்ப சொறி சொல்லப் போறியோ இல்லையோ?”
“நான் என்னத்துக்கு சொறி சொல்லோணும்? நான் என்ன அவருக்கு அடிச்சனானே? கதை தானே கேட்டனான்!” என்று திமிராகப் பேச, சாதனா யார் இருக்கிறார்கள், நிற்கிறார்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை… அவன் கட்டில்லாத கையில் சுள்ளென ஒன்று போட்டாள்.
தாய் மகனைத் திருத்துகிறாள் என்ற ரீதியில் அவர்களைக் குறுக்கிடாமல் நின்ற ஆதித்யன், அவள் அடிக்கவும் சட்டென நித்திலனைத் தன்னோடு இழுத்துக் கொண்டவன், சாதனாவை வார்த்தைகளின்றிக் கடுமையாக முறைத்தான்.
“என்ன பிள்ளை நீ? சின்னப் பெடியன் தெரியாம கதைச்சிட்டான். அதுக்கு வருத்தத்தில இருக்கிற பிள்ளையை அடிக்கிறதோ?” என்று பரமேஸ்வரியும் குறைபட்டார்.
ஆதித்யன், “அவர் என்னட்டத்தானே கதை கேட்டவர்? எனக்குப் பதில் சொல்லத் தெரியாதோ? வர வர உங்கட கிரைம் லிஸ்ட் கூடிக்கொண்டே போகுது. என்ர சந்தேகமும் ஸ்ட்ரோங்காகிக் கொண்டே போகுது. கவனமா இருந்து கொள்ளுங்க.” எச்சரிக்கைத் தொனியில் சொன்னவன் நித்திலனின் முகத்தைப் பார்த்தான், அழுகிறானோ என்று.

