அவனா அழுவான்? விறைத்த கம்பியாக நின்று கொண்டிருந்தான். இவர்கள் முன்னிலையில் தாய் அடித்து விட்டதை அவமானமாக நினைத்தவனின் முகமும் இறுகிப் போய் இருந்தது.
‘இது என்ன இந்த வயதில் இப்படியான ஒரு எதிர்வினை?’ என்று அவனைப் பார்த்துக் குழம்பிய ஆதித்யன், தன்னியல்பாக அவனை மடியில் தூக்கி அமர்த்தியிருந்தான்.
அவனை சமாதானம் செய்யும் முகமாக, பேச்சுக் கொடுத்தான்.
“நிலனுக்கு மயூவையும் மகியையும் தெரியாது தானே? இருங்கோ ஃபோட்டோ காட்டுறன்.” என்று கொண்டே, தன் ஐபோனை எடுத்தவன், காலரியை நிறைத்திருந்த மகள்களின் புகைப்படத்தைக் காட்ட, முதலில் உம்மென்று தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு பார்க்காமல் இருந்தான்.
பின் ஒருகட்டத்தில் தாய் வாய்மொழியில் சொன்ன அந்த அச்சாப் பிள்ளைகள் யாரென்று பார்க்கும் ஆர்வம் மேலிட, தன் கெத்தை விடாது யாருக்கும் தெரியாமல் கண்ணை மட்டும் அசைத்து புகைப்படத்தைக் கண்டவன் விழிகள் விரிந்து போயின.
தான் கோபமாக இருக்கிறோம் என்பதையே மறந்தவனாக,
“என்ன ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கினம்? சட்டையும் ஒரே மாதிரி. செருப்பும் ஒரே மாதிரி.” வியப்பில் விழிகளை விரிக்க பரமேஸ்வரி, ஆதித்யன் முகத்தில் அப்படியொரு சிரிப்பு.
“அவை ரெண்டு பேரும் ட்வின்ஸ். அப்பிடித்தான் இருப்பினம்.”
“ஓஓ… அப்ப என்னண்டு ரெண்டு பேரையும் ஆர் ஆர் எண்டு கண்டு பிடிப்பீங்கள்? ரெண்டு பேரும் ஒண்டு மாதிரித்தானே கிடக்கு.”
“அதெல்லாம் கஷ்டம் இல்லை. அவையோட பழகினா வடிவா கண்டு பிடிக்கலாம். நீங்க இண்டைக்குத்தான் பார்க்கிறதால தெரியேல்ல.”
“நானும் அம்மாட்ட கேக்கிறனான், இங்க தனிய நிக்க வேண்டாம். அவையோட வந்து விளையாடட்டோ எண்டு? அம்மா வேண்டாமெண்டு விட்டுட்டு வாறவா.” என்றவன் தொடர்ந்து தன் விசேஷமான விகுதியையும் சேர்த்துக் கொண்டான்,
“அதான் நான் விழுந்தனான்.” என்று!
“எங்கயடா இன்னும் காணேல்ல எண்டு பார்த்தனான். இந்தா வந்திட்டுது.” என்று ஆதித்யன் சிரிக்க, பரமேஸ்வரி என்னவென்று கேட்டார்.
அதற்கு அவன் அன்று தான் விழுந்ததற்குத் தன்னைக் காரணமாக்கி அவன் புனைந்த கதையைத் தாயிடம் சொல்ல அவரும் சிரித்துக் கொண்டவர்,
“அப்பிடி எல்லாம் இல்லை. நீங்க நல்ல பிள்ளை. அதுதான் அம்மம்மா உங்களுக்கு உண்டியல் கொண்டு வந்தனான். நான் நல்ல பிள்ளையளுக்கு மட்டும் தான் உண்டியல் குடுக்குறனான். இனி அம்மா காசு தந்தா இதுல போட்டு சேர்க்கோணும். நல்ல பிள்ளையள் அப்பிடித்தான் செய்வினம் சூப்புத்தடிதடி எல்லாம் வேண்டாயினம்.” என்று சொல்ல கண்கள் மின்ன மனம் விம்ம அதை வாங்கிக் கொண்டவன்,
“அம்மம்மா அண்டைக்குத் தந்த காசு அம்மாட்டதான் கிடக்கு. ஆசிர்வாதம் செய்து தந்த காசை சும்மா செலவழிக்கக் கூடாதாம் எண்டு வேண்டிப் போட்டு எனக்கு வேற காசு தந்தவா அம்மா. அதை நான் இதுக்க போடுறேன் என்ன? அம்மா போட்டு விடுங்கோ.” என்ற,
ஆதித்யன் பேசியதில் சிறுத்துப் போன முகத்துடன் நின்ற சாதனாவும் பரமேஸ்வரியின் சொற்களில் மகிழ்ந்து மகனின் கட்டளையை அந் நொடியிலேயே நிறைவேற்றினாள்.
“அம்மா! இப்ப நிலன் நல்ல பிள்ளையாகிட்டார், அப்பிடித்தானே? அப்ப இனி அவர் எங்கட வீட்டுக்கு வரலாம், மயூ, மகியோடலாம் என்ன?”
“இப்ப எண்டில்லத் தம்பி. அவர் முதலே நல்ல பிள்ளைதான். இப்ப இன்னும் நல்ல பிள்ளையாகிட்டார். அதால வரட்டும்.” என்ற, இருவரையும் புரியாது பார்த்திருந்தாள் சாதனா.
“என்னம்மா பார்க்கிறாய்? சாவச்சேரிக்கு மூட்டை கட்டலாம் எண்டு பிளான் போட்டுட்டாய் போல? மன்னிச்சுக் கொள்ளம்மா. உன்ர கஷ்டத்தை எல்லாம் விளங்கிக் கொள்ளேலாம மகன் கதைச்சிட்டார்.”
“அப்பிடி இல்லை அம்மா. நான் கதைச்சதில பிழை இல்லை.”
“தம்பி!” சும்மா இரேன்டாப்பா என்பது போல் இறைஞ்சியது அவர் அழைப்பு.
தாய்க்காகப் போனால் போகட்டும் என்பது போல் அவன் அமைதியாக, பரமேஸ்வரி நொடியில் முகம் மாறி நின்ற சாதனாவிடம்,
“அவருக்கு நீ பிள்ளைக்கு மருந்து குடுத்த கோபம்தான். டொக்டரல்லோ? அதான் ஏற்றுக் கொள்ளேலாமக் கிடக்கு அவருக்கு. மற்றம்படி உன்னை வேலைக்கு வரச் சொல்லிட்டார். இனி பிள்ளையை இஞ்ச தனியா விட்டுட்டு வரவேண்டாம், உன்னோட அங்கயே வச்சிரு. அப்ப எல்லாம் சரியா இருக்கும். இதை முதலே கேட்டிருக்கோணும் நாங்கள். அங்க நீ வேலைக்குப் போகேக்க பிள்ளைக்குத் தனியா இருந்து பழக்கமாக்கும் எண்டு விட்டுட்டம்… மன்னிச்சுக் கொள்ளம்மாச்சி”
“உங்களில பிழையில்லா விஷயத்துக்கு இப்பிடியெல்லாம் கதைக்காதேங்கோ அம்மா. கஷ்டமாக் கிடக்கு.” என்றவளுக்கும் வேலைக்குத் திரும்ப வர சொன்னதில் சந்தோஷம்தான்.
வீம்பாக வேண்டாம் என்று மறுக்கும் நிலையில் அவள் இல்லை.
அதோடு தப்பும் அவளுடையதுதானே? அவனின் கோபம் நியாயம் என்பதால் ரோஷம் பாராட்ட முடியவில்லை.
நித்திலனை அங்கே அழைத்து செல்வது மட்டும்தான் அவளுக்கு இடித்தது.
“வேலைக்குத் திரும்ப வாறதெல்லாம் பிரச்சனை இல்லை அம்மா. இவனைக் கூட்டிக் கொண்டு வாறதுதான் பிரச்சனை. இவன் ஆள் கொஞ்சம் குழப்படி…” என்று அவள் இழுக்க,
“அப்பிடியெண்டா வேலைக்கு
வரேக்க பிள்ளையை என்ன செய்யப்
போறீங்கள்? பிரிட்டோன் சிரப் பத்து லீற்றர் கானா வாங்கப் போறீங்களோ?” ஆதித்யன் சுள்ளெனக் கேட்க, சாதனா முகம் கறுத்தாள்.
அதைப் பார்த்த பரமேஸ்வரி,
“தம்பி! சும்மா இருங்கோ.” என அமைதி காக்கும்படி கேட்டுக்கொண்டார்.
அவனோ, “பிள்ளையைக் கூட்டிக் கொண்டு வந்து மயூ, மகியோடு
சேர்த்துப் பார்க்கச் சொல்லுங்கோ. இல்லை வேற ஏதேன் வில்லங்கமான வேலை செய்யிற ஐடியா இருந்தா வேற வேலை பார்க்கச் சொல்லுங்கோ.” என்று தாயிடமே சொன்னவன், பிள்ளைகளைக் கூப்பிட செல்ல நேரமாவதை நித்திலனிடம் சொல்லிவிட்டு அவனை மடியில் இருந்து இறக்கி விட்டான்.
அப்போதே இவ்வளவு நேரமும் தான் அவன் மடிமீது இருந்ததை உணர்ந்தான் நித்திலன்.
தீரவே கூடாது இந்தப் பொழுதுகள் என முதல் சாரலை வரவேற்கும் சிறு செடியின் மனநிலையில் இருந்தான் அவன்.
ஏனோ இறங்கவே மனம் வரவில்லை அவனுக்கு. அதே நேரம் இன்னும் கொஞ்சநேரம் என்று கேட்கவும் பிடிக்கவில்லை.
உரிமையுள்ள தந்தையின் மடியில் ஒரு நொடி இருக்கக் கொடுத்து வைக்காத பிள்ளைக்கு உரிமையில்லாதவன் ஆறுதலுக்காகக் கொடுத்த மடியை உரிமையாக்கும் எண்ணம் வந்ததற்கு யார் மேல் பிழை சொல்ல?
ஆதித்யன் சென்ற பின்னும் அவன் மடியில் தான் இருந்ததைப் பெருமையாக எண்ணி அவன் மனதோடு சிலாகித்துக் கொண்டிருக்க, பரமேஸ்வரியோ பேசிப் பேசியே சாதனாவை சம்மதிக்க வைத்திருந்தார்.

