மாதொரு பாகம் கொண்டான் – 14

MPK 14

அடுத்தநாளில் இருந்து சாதனாவுடன் நித்திலனும் டொக்டர் வீட்டுக்குச் சென்று வர ஆரம்பித்தான்.

முதல் நாள் சின்னவர்கள் இருவருடனும் பேச இவன் தயக்கம் காட்ட, அவர்களோ அதுபோல் இல்லாமல்,

“அன்ட்ரியோட நீங்கள் வருவீங்கள் எண்டு அப்பா சொன்னவர். அதோட உங்களுக்கு எங்களை அடையாளம் கண்டு பிடிக்கக் கஷ்டம் எண்டும் சொன்னவர். நான் தான் மயூரகி.” என்று மயூ ஆரம்பித்து வைக்க, “நான் மகிழினி.” என்று தொடர்ந்து மகி தன்னை அறிமுகப்படுத்த என்று இருவரும் சகஜமாக அவனைப் பேச்சுக்கள் இழுத்துக் கொண்டனர்.

அதோடு அவன் நடக்கும் போதும் எழும்பும் போதும் “கவனம் நிலன் அண்ணா! கை தாக்குப் பட்டிடும்.” என்று அக்கறையைக் காட்டத் தாய், மகன் இருவருமே நெகிழ்ந்து போயினர்.

பரமேஸ்வரியும் பேத்திகளிடம், “அந்த அண்ணாக்குக் கை சரியாகும் மட்டும் ஓடிப் பிடிச்சு விளையாடாம இருந்த இடத்தில ஏதேன் விளையாடப் பாருங்கோ, என்னம்மாடியள்?” என்று கேட்டுக் கொள்ள, சரியென்று கேட்டுக் கொண்டவர்கள் பஷில், பில்டிங் பொக்ஸ் என்று தம் விளையாட்டை மாற்றிக் கொண்டனர்.

யாருக்கு எப்படியோ நாளாக நாளாக நித்திலனுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது. இனி சாவகச்சேரி போவோம் என்று கனவிலும் தாயிடம் கேட்கமாட்டான் அவன்.

அங்கே சாவகச்சேரியில்
இவனோடு விளையாட
எந்த சின்னவர்களையும் அவர்கள்
தாய் தகப்பன் அனுமதிப்பதே இல்லை. இவனுடைய மாமாவின் மகனைக் கூட அவர்கள் விடுவதில்லை.

அவர்களை சொல்லியும் பிழையில்லை. இவனுடைய லட்சணமும் அப்படித்தான். உடன் விளையாடும் போது அவர்கள் தன் கருத்துக்கு உடன்படவில்லை என்றால் மூர்க்கமாகி விடுவான்.

அடிப்பது, கிள்ளுவது, மண்ணில் தள்ளி மிதிப்பது, மண்ணை அள்ளித் தலையில் கொட்டுவது என்று அவர்களிடம் அவன் சாகசப் பட்டியல்கள் இன்னும் நீளும்.

அதனால் தான் மயூ, மகியுடன் அவனை வைத்துப் பார்த்துக் கொள்ளச் சொல்ல சாதனா அவ்வளவு தயங்கினாள்.

ஆனால் அவள் பயந்ததற்கு மாறாக இருவரோடும் அப்படி ஒத்துப்போனான் நித்திலன். இது எல்லாம் எப்படி சாத்தியம் என்றால் சாத்தியமாக்கி இருந்தனர் அந்த சுட்டித் தேவதைகள்.

ஒவ்வொருநாள் முன்பள்ளி முடிந்து வரும்போதும் இவனிடம் சொல்ல என்று அவர்களிடம் ஆயிரம் கதை இருக்கும்.

“நிவன் அண்ணா! இஞ்ச பாருங்கோவன், இண்டைக்கி நேர்சரில சொல்வதெழுதல் வச்சவை. எங்கள் ரெண்டு பேருக்கும் ஒரு பிழையும் வரேல்ல. ரெண்டு பேருக்கும் பத்துக்குப் பத்து. மிஸ் எங்களைனக் கூப்பிட்டு வெரி குட் சொன்னவா.” என்று மகி கொப்பியைத் தூக்கி வந்து காட்டுவாள் என்றால்,

மயூராகியோ, “இண்டைக்கி நேர்சரில ஒரு பிள்ளையின்ர பிறந்தநாள். நாங்கள் எல்லாரும் அவாக்கு ஹப்பி பேர்த்டே பாடினாங்கள். அவா எங்களுக்குச் சொக்லேட்டும் பென்சிலும் தந்தவா. நாங்கள் ரெண்டு பேரும் ஒண்ட அங்க சாப்பிட்டுட்டு, உங்களோட சாப்பிடுவம் எண்டு ஒண்டு கொண்டு வந்தனாங்கள். பென்சிலிலயும் ஒண்டு உங்களுக்குத் தாரன். மகிக்கும் எனக்கும் ஒண்டு காணும்.” என்று அன்பைக் கொட்டுவாள்.

ஊரார் ஒதுக்கி வைத்த ஓவியமாக
தூசுபட்டுக் கிடந்த நித்திலனும் தன்னைப் பெரிதாக,
பெரியவனாக மதித்து நடாத்தும் இருவரின் பாசத்தில் நெகிழ்ந்து போனவனாக கொடுப்பதற்கு யாருமின்றித் தன்னுள் உறைந்திருந்த அன்பை எல்லாம் அவர்களுக்கு உருக்கிக் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.

அழைக்கும் போது இருவரையும் பெயரை சொல்லி அழைத்தாலும் இருவரையும் ஒருசேரக் குறிப்பிட வேண்டிய இடத்தில் தாயைப் போலவே மான்குட்டிகள் என்றுதான் குறிப்பிடுவான்.

இப்போதெல்லாம் தாய் மகன் இருவருக்கும் நடக்கும் பெரிய வாக்குவாதம் எதுவென்றால், சாதனா அவனுக்கு என்று எதுவும் பலகாரம் செய்தால், “மான் குட்டியளுக்கும் சேர்த்துச் செய்யுங்கோ அம்மா!” என்று அவன் கேட்பதும் அதற்கு அவள் “இது எல்லாம் அவர்கள் சாப்பிடுவது இல்லை.” என்று மறுப்பதும் இவன் இல்லை அவர்களுக்கும் செய்யுங்கள் என்று அடம் பிடிப்பதும்தான்.

மொத்தம் மூன்றே கிழமைகள் தான் ஆகிறது, நித்திலன் இவளோடு அங்கு செல்ல ஆரம்பித்து. இந்த மூன்று கிழமைகளில் ஒரு முறை கூட நித்திலன் சாதனாவிடம் அடி வாங்கியிருக்கவில்லை.

தொடர்ந்து இருபத்தொரு நாட்கள் அவன் சாதனாவைக் கோபப்படுத்தும் எந்த செயலையும் செய்யாமல் இருப்பதெல்லாம் வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று.

நாரோடு சேர்ந்து பூ அதன் குணத்தை இழந்திடுமோ என்று சாதனா பயந்ததற்கு மாறாக, எங்களுடன் சேர்ந்ததால் எங்களின் வாசத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக நாருக்குப் பழக்கித் தருகிறோம்” என்று அந்த இரு மலர்களும் நித்திலனிடம் குறிப்பிட்ட அளவு மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தனர்.

அவர்களிருவரும் தன்னை விடப் பெரியவன் என்ற முறையில் அவனுக்குக் கொடுத்த மரியாதை அவனை எந்த விதமான சின்னச் செயல்களையும் அவர்கள் முன் செய்யவிடவில்லை.

நித்திலன், மான்குட்டிகளுக்குப் பிடித்த விளையாட்டுத் தோழனானது போல்,
அவன் சிறை வாழ்வுக்கு விலக்கழித்ததில் முக்கிய பங்கு வகித்த ஆதித்யனுக்கு இன்னுமே அபிமானியாகிப் போனான்.

அவனைக் காணக் கிடைக்கும் சொற்ப நேரங்களில் அவனை நன்றாக ஊடுருவத் தொடங்கினான்.

அவன் மேனரிசங்களில் சிலதை கொப்பியடித்து வீட்டில் செய்து பார்ப்பது அவன் வழக்கம்.

அன்று இரவும் அதுபோல் பின் கழுத்தை நெரித்து விட்டுக் கொண்டிருந்தவனைக் கண்ட சாதனா,

“என்ன நிலன் கழுத்து நோகுதே?” என்று கேட்டுத் தடவி விட்டாள். கையைக் கட்டித் தொங்க விட்டிருக்கின்றனரே என்று கேட்டாள்.

அவனோ, “இல்லை அம்மா. டொக்டர் இப்பிடிச் செய்யேக்க வடிவா இருக்கிறதல்லோ? அதான் நானும் செய்து பார்க்கிறன்.” என்ற, அவனை விசித்திரமாகப் பார்த்தவள்,

“உதுகளை மட்டும் அவரை மாதிரிச் செய்து ஒண்டும் ஆகப் போறதில்லை. உன்னால அவரை மாதிரிப் படிச்சு டொக்டர் ஆக ஏலுமெண்டா அதில இருக்குப் பெருமையும் உன்ர திறமையும்.” என்றாள்.

அவள் அப்படி சொன்னதும் இவன் உடனே துவாயை எடுத்து கழுத்தில் இருபக்கமும் சரி சமமாகப் போட்டுக் கொண்டு,

“இப்பிடித்தான அந்தக் காதுக்குள்ள கொழுவுற மிஷினைப் போட்டுக் கொண்டு ஆதி டொக்டர் வார்ட் பார்க்க வாறவர்? நானும் டொக்டரானா எனக்கும் மிஷின் தருவினமோ, நானும் இப்பிடிப் போட்டுக் கொண்டு நடக்க?” என்றவன் கேட்க, கற்பனையில் காட்சியைக் கண்ட சாதனா சிலிர்த்துப் போனாள்.

முதல்முறை மகன் பேச ஆரம்பித்திருப்பது போல் உணர்ச்சிவசப்பட்டுப் போனவள், அவனை அள்ளி எடுத்து முத்தமிட இப்போது அவளை விசித்திரமாகப் பார்ப்பது நித்திலனின் முறையானது.

தாய்க்கு அடிக்க மட்டும் தான் தெரியும் என்று நினைத்திருப்பான் போல!

அவள் அவன் பார்வையில் சிரித்துக் கொண்டே, அவன் தலைமுடியை வருடித் தந்தவள்,

“அதைக் காதுக்குள்ள கொழுவுற மிஷின் எண்டு சொல்லுற இல்லை நிலன். அது ஸ்டெதஸ்கோப். அதைக் காதில கொழுவிக் கொண்டு கீழ மூடி மாதிரி இருக்குமெல்லோ அதை நெஞ்சில வச்சா இதயம் துடிக்கிறது கேட்கும்.” என்றாள் விளக்கமாக.

அவளுக்கு மகன் மருத்துவன் ஆகவேண்டும் என்ற பேராசை எல்லாம் இப்போது இல்லை. குறைந்தபட்சம் நான் டொக்டராகினால் என்று பிரயோசனமாக ஒன்றை சிந்திக்க ஆரம்பித்திருக்கிறானே! இந்த மாற்றமே போதும் என்றுதான் எண்ணத் தோன்றியது.

“உங்களுக்கு என்னண்டு அது எப்பிடி வேலை செய்யும் எண்டு தெரியும்? நீங்களும் டொக்டருக்குப் படிச்சனீங்களோ?” என்று கேட்க, தான் தவற விட்ட தருணங்களை எண்ணி அவள் முகம் கூம்பிப் போனது.

உயிரியல் துறையைத் தேர்ந்தெடுக்கும் போது எல்லோரைப் போலவும் அவளும் மருத்துவராவதைக் கனவாகக் கொண்டுதான் படிக்க ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் பௌதிகவியல் தவிர்ந்த மற்ற இரண்டு பாடங்களிலும் நல்ல மதிப்பெண்கள் எடுக்கவும் செய்தாள். பௌதிகவியலிலும் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று இன்னொரு ஆசிரியரிடம் குரூப் கிளாஸ் சென்ற போதுதான் தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்தவனின் கண்ணில் பட்டு பருவத்தின் போதையில் அவன் விரித்த காதல் வலையில் விழுந்து இன்று எல்லாம் நாசமாகிக் கிடக்கிறது என்று மகனிடம் சொல்லவா முடியும்?

தன் குறிக்கோளிலே நின்று அன்று கல்வியில் மட்டும் கவனத்தை செலுத்தியிருந்தால் வினோதன் போன்ற தரங்கெட்டவனையா கணவனாக்கிக் கொண்டிருப்பாள்?

‘என் தகுதிக்கு ஏற்றவனைக் கட்டிக் கொண்டு மகிழ்வான குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருப்பேன்.
நீ எனக்கே மட்டும் தான் மகனாகப் பிறக்கும் பாக்கியம் இருந்து பிறந்திருந்தால் உனக்கு ஒரு உயர்தரத்திலான வாழ்க்கை முறையைக் கொடுத்திருப்பேன். என்னோடு சேர்த்து உன் வாழ்க்கையையும் கெடுத்த என்னை மன்னித்துக் கொள் மகனே!’ என்று மகனிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டவள்,

“எனக்குப் பெரிய வகுப்புப் படிக்கேக்க சொல்லித் தந்தவை நிலன். வளர்ந்தா போல உங்களுக்கும் சொல்லித் தருவினம். இப்ப வாங்கோ சாப்பிட்டு படுப்பம்.” என்று அழைத்துக் கொண்டு போனாள்.

சாப்பிடும் போதும் “அம்மா! நாளைக்கு மயூ கலரடிக்கிற புத்தகம் எடுத்து வைக்கிறன் எண்டவா. நீங்கள் என்ர கலர் பென்சிலும் கலர் பெட்டியும் எடுத்து வையுங்கோ. கொண்டு போவம்.” என்ற அவளும் மகிழ்வுடன் சரி என்றாள்.

இதற்கு முதல் இதையெல்லாம் இவன் தொட்டுப் பார்த்த மாதிரி சாதனாவுக்கு ஞாபகமே இல்லை. இப்படியாவது அவனும் மாணவன் தான் என்ற எண்ணம் அவனுக்கு வரட்டும். அதன் பிறகு அவனுக்காய் படிப்பில் ஆர்வம் வரும். அந்த நேரம் நல்ல டியூஷனில் சேர்த்துவிட்டு அவன் படிப்பில் தானும் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவள் மனக்கோட்டை கட்டினாள்.

மயூவை அடித்து அடுத்தநாளே அதை அணுகுண்டு வைத்துத் தகர்த்தெறிந்திருந்தான் அவள் மகன்.

தன் உயிரான மகளை அடித்தவன் மேல் ஆதித்யனுக்குப் பழைய கரிசனம் இருக்குமா? பார்க்கலாம்!

தொடரும்…

error: Alert: Content selection is disabled!!