மயங்கினேன் மழைச்சிலையே – 8

அத்தியாயம் – 8

அன்றைய வார இறுதியில் அசைவ உணவு சமைக்க விரும்பிய சக்தி, அன்புவிடம் ஒவ்வொன்றாக கேட்டுக் கேட்டு செய்து கொண்டிருந்தாள்.

சிறு பிள்ளைக்கு சொல்வது போல அவள் ஒரே விசயத்தை திரும்பத் திரும்பக் கேட்டாலும் பொறுமையாக பதிலளித்துக் கொண்டிருந்தான்.

அவள், ஆளும் செய்கையும் பார்க்கத் தான் சுட்டித்தனமும் கோணாங்கித்தனமும் சேர்ந்தாற் போல இருக்கும். ஆனால் ஒரு வேலையை தொடங்கி விட்டால் அதை சரியாக முடிக்க வேண்டும் என்ற அவளது பிடிவாதகுணம் அன்புமதியை கவர்ந்த ஒன்று.

‘இதுகூட தெரியாதா உனக்கு?!’ யாராவது கேலியாகக் கேட்டு விடுவார்களோ என்ற தயக்கமோ, கூச்சமோ இன்றி தனக்கு தெரியாததை நன்றாக விளங்கும் வரை மீண்டும் மீண்டும் கேட்டு அறிந்து கொள்வாள் அவள்.

‘இதிலெல்லாம் ஆள் படுகெட்டி தான்! ஆனா சுத்தமா வச்சுக்க மட்டும் இவளுக்கு உடம்பு வணங்க மாட்டீங்குது!’ அவளை பாராட்டாக எண்ணும் வேளையில் மனதிற்குள் சலித்தும் கொள்வான் அன்புமதி.

அன்றும் சிக்கன் பிரியாணியை செய்ய ஆசை கொண்ட அம்மணி, ஆன்லைனில் சிக்கனையும், பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் என்னென்ன என்று அன்புவிடம் கேட்டு அதையும் ஆர்டர் போட தயாரானாள்.

“இந்த.. வெளியே கடையில நல்லதா பார்த்து, தேடி எடுத்து, வாங்கற பழக்கம் எல்லாம் உனக்கு கிடையாதா?! எல்லாத்தையும் இப்படி உட்கார்ந்த இடத்துல இருந்தே ஆர்டர் போடுவியா?!” வினவிய பிறகு,

அவள் வளர்ந்த விதம் பற்றி ஏற்கனவே சொன்னதை நினைவு கூர்ந்த அன்பு பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு, “சரி எங்கூட வா! இன்னிக்கு கடைக்கு போய் எல்லா பொருளும் வாங்கப் பழக்கி விடுறேன். அப்றம் நீயே போய் வாங்குவியாம்.” என்றான்.

அலைபேசியை கையில் வைத்துக் கொண்டு அவன் சொல்லும் லிஸ்ட் டைப் செய்ய தயாராக இருந்த சக்தியின் முகம், அன்பு வெளியே அழைத்ததும் சற்று கலவரமானது.

“நாம இருக்க இடத்துக்கே பொருள் வரும்போது, வெயில்ல வெட்டி அலைச்சல் எதுக்கு ஆபிஃஸர்? நான் ஆன்லைன்லயே ஆர்டர் போடுறேனே, எங்கிட்ட ஆஃபர் எல்லாம் கூட இருக்கு.” கண்களை விரித்து சமாளிப்பு சிரிப்புடன் கேட்டவளை முறைத்தான் அன்பு.

“இன்னிக்கு வெளியே போய் பொருள் எல்லாம் வாங்கிட்டு வந்தா தான் பிரயாணி செய்ற ரெசிபி சொல்லுவேன். இல்லனா நோ!” புருவங்கள் உயர்த்தி கறாராகக் கூறினான் அவன்.

அவனுக்கு உதட்டைச் சுழித்து காட்டியவள்,”சொல்லாட்டி போங்க. நான் யூ டியூப் பார்த்து செய்துக்கறேன்.” மிதப்பாக சொன்னவளை நமட்டுச் சிரிப்புடன் பார்த்தான்.

“எப்படி! அன்னிக்கு வெயிட் சாஸ் பாஸ்தா பண்றேன்னு மைதா மாவுக்கு பதிலா கார்ன் மாவு போட்டு கட்டி கட்டியா செய்து வைச்சியே அதுபோல எதாவது வியர்ட்ஆ பிரியாணி பண்ணப் போறியா? ஓகே! யுவர் விஷ்!” தோள்களை குலுக்கியவன் வெளியே செல்ல விழைந்தான்.

அன்பு சொல்லச் சொல்ல தர்ம சங்கடமாக நெளிந்தவள்,”ச..ரி.. வர்றேன். கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.” காலை உதைத்து சிணுங்கிக் கொண்டு அறைக்குள் சென்று திரும்பி வந்தவளைக் கண்டு திகைத்தான் அவன்.

தொளதொளவென ஒரு டீசர்ட், ஜீன்ஸ் போட்டு, தலைமுடியை ஒரு கொண்டையிட்டு கேப்பிற்குள் அடைத்து முகத்தில் மாஸ்க் போட்டு கண்கள் மட்டும் தெரியும் வண்ணம் வந்து நின்றாள்.

அன்பு அவளது கோலத்தைக் கண்டு திகைப்புடன், “என்னமா இது?! பக்கத்துல இருக்கற டிபார்ட்மெண்ட் ஸ்டோர் தானே போறோம். அதுக்கு என்னமோ பைக்ல இந்தியாவை சுத்திப் பார்க்க போற மாதிரி வர்ற?” புரியாமல் கேட்டான்.

“பொல்யூஷன்! வெளிய இருக்க டஸ்ட் எனக்கு ஒத்துக்காது அதான்.. ஒரு பாதுகாப்புக்கு.. இப்ப உங்ககூட நான் வரட்டுமா?! வேணாமா?!” தடுமாறியபடி சமாளித்தவள் கடைசியில் முறுக்கிக் கொண்டாள்.

புருவங்கள் உயர்த்தி கண்கள் மூடி சலித்துக் கொண்டவன்,”வந்து தொலை! உன்னை மாதிரி ஒரு சோம்பேறியை நான் பார்த்ததே இல்ல. உன்னை வெளியே இழுத்துட்டு போக இவ்வளவு பாடு?!” முன்னால் சென்றான்.

அபார்ட்மெண்ட் விட்டு வெளியே வந்தது முதல் சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி ஒருவித எச்சரிக்கையுடன் வந்த சக்தியை முன்னால் சென்ற அன்பு கவனிக்கவில்லை. ஒருவழியாக பொருட்களை வாங்கி முடித்து வீடு திரும்பி விட்டனர்.

அன்பு வழக்கமாக தனியாக சமைத்துக் கொள்ள முயல, “ஆபிஃஸர் இன்னிக்கு உங்களுக்கும் சேர்த்தே நான் செய்றேன். பிரியாணி எல்லாம் கொஞ்சமா செய்தா நல்லா இருக்காதுனு ரீல்ஸ்ல பார்த்திருக்கேன். அதனால இன்னிக்கு ஒருநாள் என் ட்ரீட்னு வைச்சுங்கோங்க.”

அவள் சொன்னதும் உள்ளுக்குள் சற்று பீதியடைந்தவன் அரைமனதாக சரியென தலையசைத்து விட்டு தள்ளி நின்றுவிட, சக்தி தனது பிரியாணி மிஷனை தொடங்கினாள்.

அன்புவின் மேற்பார்வையில் ஒவ்வொன்றையும் எப்படி நறுக்குவது, தாளிப்பது, மசாலாவின் அளவுகள் என அவனிடம் கவனமாகக் கேட்டு செய்தவள் அவ்வப்போது அவனிடம் திட்டும் வாங்கிக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக ரணகளமாக நடந்த பிரியாணி பிரப்பரேஷன் அனைத்தும் முடித்து “ஊஃப்!!” பெரிதாக மூச்சுவிட்டுக் கொண்டு குக்கரின் மூடியை போட்டு மூடினாள்.

“அவ்வளவு தான்! இனி ஒரு விசில் வந்ததும் ஆஃப் பண்ணிட்டு ப்ரஷர் இறங்குனதும் மல்லித்தழை தூவி லெமன் பிழிஞ்சுவிட்டு கிண்டி விடனும்.” நெற்றியில் வியர்வையை துடைத்தபடி முடித்தான் அன்பு.

பிரியாணி செய்தவளை விட சொல்லிக் கொடுத்தவன் தொண்டை தண்ணீர் வற்றி சோர்ந்து போனான். “அதுக்குள்ள ‘ரைத்தா’க்கு வெங்காயம் கட் செய்து தயிருல கலந்து பண்ணிடு சக்தி” என்றவன்,

ஹாலில் வந்து அப்பாடா என அமர சட்டென நினைவு வந்தவனாக,”மல்லித்தழை, வெங்காயம் எல்லா நல்லா வாஷ் பண்ணிட்டு தான் கட் பண்ணனும்.”

“அப்படியே செய்து வைக்காதே! வேலை முடிச்சதும் நீட்டா அந்த இடமும் யூஸ் செய்த பாத்திரங்களும் கழுவிடனும்.” கடைசி கட்டளை வேறு.

“ஓகே மாஸ்டர்!” கிட்சனிலிருந்து எட்டிப் பார்த்து விரைப்புடன் சல்யூட் வைத்தவள் உள்ளே சென்றுவிட்டாள். அவளது பாவனையில் அன்புவின் இதழ்களில் லேசான இளநகை பிறந்தது. அதன்பிறகு சில நிமிடங்களில் வீட்டின் அழைப்பு மணியோசை கேட்டது.

எழுந்து சென்ற அன்பு கனிந்த முகத்துடன் கதவைத் திறந்தவன் திகைப்புடன் நிற்கவும், கிட்சனிலிருந்து ” நீங்க சொன்ன மாதிரி மல்லித்தழை அன்ட் லெமன் ஜூஸ் போட்டு கிளறி விட்டுட்டேன் மாஸ்டர்!” என்றபடி வெளியே வந்தாள் யுவசக்தி.

வாயிலில் நின்றிருந்த சிவநாதன், ஏதோ ஒரு பெண்ணின் குரல் கேட்டு அழுத்தமான பார்வையுடன் மகனை மானாவாரியாக முறைக்க, அருகிலிருந்த லீலாவதி குரல் வந்த திசையில் திகைப்பும் ஆர்வமுமாக உள்ளே எட்டிப் பார்த்தார்.

“வீட்டுக்கு வர்றவங்கள வாங்கனு கூட சொல்ல மாட்டியா?! என்ன பழக்கம் பழகி இருக்க?” மிரட்டலான குரலில் சிவநாதன் கேட்க, “வ்வா..வாங்கப்பா!.. வாங்கம்மா!” தடுமாற்றத்துடன் இருவரையும் உள்ளே அழைத்தான்.

சமையலறை வாசலில் நின்றிருந்த சக்தி, அவன் வரவேற்ற விதத்திலேயே வந்தவர்கள் அன்புவின் பெற்றோர் என்று உணர்ந்து இப்போது என்ன எதிர்வினை புரிவது எனத் தெரியாமல் விழித்து நின்றாள்.

அன்புமதி அவ்வளவு எளிதில் அவனது பெற்றோர்களைப் பற்றி அவளிடம் விவரித்து விடவில்லை. ஒவ்வொரு வாரமும் வீட்டைச் சுத்தம் செய்யும் முறை வரும் போதெல்லாம் இவள் ஹாலை சுத்தம் செய்யும் போது அவன் கிட்சனை சுத்தம் செய்வான்.

அவ்வாறு இருவரும் சேர்ந்து செய்ய நேர்ந்த சமயத்தில் “வேலை செய்யும் போது அமைதியா இருந்தா எனக்கு தூக்கம் வரும் ஆபிஃஸர்!” என்றவள் லொடலொடவென பேசியபடி செய்தாள்.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் மிகவும் இலகுவான மனநிலையில் இருந்த அன்பு “உங்கள எப்படித்தான் வீட்ல வைச்சு சமாளிச்சாங்களோ?! உங்கம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட்ஆ?!” அவள் லேசாக ஒருவார்த்தை கேட்டதற்கு அவனாகவே மனம்விட்டுப் பேசினான்.

அதிலிருந்து அன்புவின் தந்தை மிகவு‌ம் கண்டிப்பானவர், அவரது கண்டிப்பால் தான் அவனுக்கு எதையும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் பராமரிக்கும் வழக்கம் வந்திருப்பதை அவனது பேச்சில் உணர்ந்திருந்தாள் சக்தி.

தந்தையை பற்றி கூறி முடித்தவன், தாயுடன் அவனுக்கு இருக்கும் பிணைப்பைப் பற்றி உதட்டில் புன்சிரிப்புடன் பேசிக்கொண்டிருக்க, எதேச்சையாக திரும்பிய அன்பு அவளைப் பார்க்க, தாய்மீதான ஏக்கம் அவள் முகத்தில் தெரியவும் பட்டென நிறுத்தி விட்டான்.

“உனக்கு பொழுதுபோக்குக்கு நாந்தான் கிடைச்சேனா?! இப்ப நான் வந்து பார்க்கும்போது ஹால்ல ஒரு தூசி இருக்கக்கூடாது. ஒழுங்கா மாப் போட்டு முடி.” அதட்டி அத்துடன் பேச்சை மாற்றி விட்டான். அன்றுதான் அவர்களைப் பற்றி அவளுக்கு தெரியும்.

ஆனால் அவர்களிடம் அன்புடன் அவள் தங்கி இருப்பதைப் பற்றி கூறியிருக்கிறானா என்பது தெரியவில்லை என்பதால் வந்தவர்கள் முன்பு என்ன எதிர்வினை புரிவது எனத் தெரியாமல் விழித்து நின்றாள்.

அதனால் வந்த தடுமாற்றத்தில் அவள் விழித்து நிற்க,” என்னடா இது?! யார் அந்த பொண்ணு?! என்ன நடக்குது இங்க?!” கண்களை உருட்டி சிவநாதன் கோபமாகக் கேட்க, லீலாவதி அவளை கண்களால் அளவிட்டுக் கொண்டிருந்தார்.

“அது.. ஹான்!.குக்கிங் பண்ண வந்த மெய்டுப்பா.” சட்டென யோசனை வந்தவனாக சொன்னவன் சக்தியை திரும்பிப் பார்க்க, அவனை அசையாது பார்த்திருந்தாள் அவள், அதாவது மறைமுகமாக முறைக்கிறாள்.

“மெய்டா!!? ஓஓ! ஸாருக்கு சோம்பேறித்தனம் வந்துடுச்சோ!? உன் மவனுக்கு நாம கூட இல்லாதது வசதியா போச்சு போல லீலா, பழக்கவழக்கம் எல்லா ரொம்ப மாறி போச்சு.” மனைவியிடம் ஒருமாதிரி நக்கலாக கூறினார் சிவநாதன்.

அவரது பேச்சைக் கேட்டு அன்பு தர்மசங்கடமான நிலையில் நிற்க, எப்போதும் மிடுக்குடன், கம்பீரமான குரலில் தன்னை அதட்டிக் கொண்டிருந்தவன் பம்மி நிற்பதில் நியாயப்படி சக்திக்கு சந்தோஷம் பீறிட வேண்டும் ஆனால் அவளால் மகிழ முடியவில்லை.

தந்தை தவறாக பேசுவதில் தர்மசங்கடம் அடைந்த அன்பு வாயை திறக்காமல் இறுகிப் போக, “இவ்வளவு தூரம் வந்தது அவனை போட்டு வறுத்தெடுக்கவா? நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.” கணவனை அடக்கிய லீலாவதி,

“அவனுக்கு கம்பெனியில வேலை அதிகமா இருக்கும் அதனால சமைக்க முடிஞ்சிருக்காது. நல்லா இருக்கியா கண்ணா?! என்னப்பா மெலிஞ்சு போயிட்ட.” மகனுக்கு பரிந்து பேசியவர், அவனிடம் நலம் விசாரித்தார்.

தாய் மகன் உரையாடத் தொடங்க, சிவநாதனின் பார்வை மேலும்கீழுமாக சக்தியின் மீது விழுந்து அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.

“ஏம்மா வேலைக்கு வர்றவங்க போட்ற ட்ரெஸா இது?! ஒரு வயசு பையன் இருக்கற இடத்துல பொண்ணு நீ, இப்படித்தான் ட்ரெஸ் பண்ணி வருவியா?!” வீட்டிலிருப்பதால் இலகுவான பனியனும், பேன்ட்டும் அணிந்திருந்த சக்தியிடம் கண்டிப்புடன் கேட்டார்.

“உங்களுக்கு பேரனும் இருக்கா அங்கிள்? நான் இங்க வந்ததுல இருந்து எந்த ஒருவயசு பையனையும் பார்க்கலையே!” அவள் யோசிக்கும் பாவனையுடன் ஆச்சரியமாக வினவ, அன்பு மானசீகமாக தலையில் கைவைத்தான்.

அவளது கேள்வியில் திகைத்த சிவநாதன் விழித்துக் கொண்டிருக்க, தனது கணவனையே மடக்கி கேலி பேசி விழிக்க வைத்த சக்தியை சுவாரஸ்யமாக பார்த்தார் லீலாவதி.

அத்தோடு மட்டுமின்றி, “யார்ரா இந்தப் பொண்ணு?! உங்கப்பாவையே பேந்தப் பேந்த முழிக்க வைக்கறா? டேய் அன்பு! உண்மையை சொல்லு.” ஆர்வமும் குறுகுறுப்புமாக மகனிடம் கேட்க, அன்புவிற்கும் தன் தந்தையின் நிலை லேசாக சிரிப்பை வரவழைத்தது.

error: Alert: Content selection is disabled!!