அத்தியாயம் – 9
சக்தியின் கேள்வியில் சிவநாதன் விழித்து நிற்க, தாயும் மகனும் அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று ஆர்வமாக எதிர்பார்த்திருந்த நேரம் மீண்டும் பேசியது என்னமோ சக்தி தான்.
அவரது அதிர்ச்சியை கண்டு கொள்ளாமல், “ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்!” என்றிட, இந்த நன்றி எதற்கென தெரியாமல் அவளது முதல் கேள்வியை டீலில் விட்டவர் தற்போது குழப்பமான பார்வையை வீசினார்.
“நான் ஒரு பொண்ணுனு கண்டுபிடிச்சு சொன்னதுக்கு, ஏன்னா இத்தனை நாளா இங்க வர்றேன் இதுவரை ஆபிஃஸர் கண்ணுக்கு நான் ஒரு பொண்ணாவே தெரிஞ்சது இல்ல. நீங்க வந்த ஒரே நிமிசத்துல கண்டுபிடிச்சுட்டீங்களே!” விழிகள் விரித்து ஆச்சரியம் காட்டினாள்.
ஏதோ பெரிய ரகசியம் போல அவள் தந்த விளக்கத்தில் அவளிடம் சிக்கி விழி பிதுங்கிய தந்தையை பாவம் பார்த்து காப்பாற்ற வந்த மகன், “வாயடிச்சது போதும் சக்தி! நீ போய் அந்த ரூமை க்ளீன் பண்ணு!” அவளது அறைக்கு நைஸாக அனுப்பி விட்டான்.
லீலாவதிக்கு அவளது துடுக்குத்தனம் சுவாரஸ்யமாக இருக்க, தன் கணவனையே வாயடைக்கச் செய்தவளின் பேச்சைக் கேட்க ஆர்வம் கொண்டார். அதற்குள் மகன் அவளை அனுப்பி விட்டதில் வருத்தம்.
அவள் அங்கிருந்து அகன்ற பிறகு,”என்னடா இந்த பொண்ணு ஓவரா பேசுது! அந்தளவு இடம் கொடுத்து வைச்சிருக்க!?” மகனிடம் கண்டிப்புடன் கேட்டவர்,
மீண்டும் அவளை பெண்ணென்று குறித்ததில் எங்கே மறுபடியும் அவள் வந்து விடுவாளோ என்ற எச்சரிக்கையில் மெதுவாகப் பேசினார்.
மகன் பதிலளிக்கும் முன்பே, “என்ன ஓவரா பேசுதுனு சொல்றீங்க?! உங்க முன்னாடி யாருமே கலகலப்பா பேசிடக்கூடாதே, உடனே குறை சொல்ல ஆரம்பிச்சுடுவீங்க.” லீலாவதி அவளுக்கு வக்காலத்து வாங்க, அன்பு தாயை ஆச்சரியமாகப் பாரத்தான்.
‘பேசியே அம்மாவையும் மயக்கிட்டா போல!’ மனதிற்குள் புன்னகையுடன் எண்ணியவன், ‘அம்மாவையும்’னா அப்ப ஏற்கனவே நீ அவள்ட்ட மயங்கிட்டியா!?’ மனசாட்சி எழுப்பிய கேள்வியில் திகைத்து, அதை புறந்தள்ளி விட்டு பெற்றோரிடம் உரையாடத் தொடங்கினான்.
சிவநாதனின் பால்ய சிநேகிதரின் மகள் திருமணத்திற்காக சென்னை வந்ததாக கூறிய லீலாவதி, “சாயந்தரம் தான் ட்ரெயின் அன்பு. அதான் அதுக்குள்ள உன்னை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்.” அவர்களது வருகைக்கு காரணம் விளக்கினார்.
லீலாவதி மகனிடம் பேசிக் கொண்டிருக்க, சிவநாதனின் பார்வை என்னமோ அவள் சென்ற அறை மீதே இருந்தது. அதை உணர்ந்த அன்பு, “நான் போய் க்ளீனிங் முடிஞ்சதா’னு பார்த்துட்டு வர்றேன்ம்மா.” அந்த அறைக்குள் கதவைத் தட்டி விட்டு சென்றான்.
” வாங்க முதலாளி! இந்த வேலைக்காரிக்கு அடுத்து என்ன வேலை சொல்ல வந்திருக்கீங்க?!” சக்தி நக்கலாகக் கேட்க, “ஸாரி சக்தி! அவங்க முன்னாடி டக்குன்னு எதுவும் தோணலை. அதான், அப்படி சொல்லிட்டேன்.” முதலில் அதற்கு மன்னிப்பு கேட்டவன்,
“சரி, ரொம்ப நேரம் நான் இங்க இருக்க முடியாது. வந்த விசயத்தை சொல்லிடறேன். அவங்கள்ட்ட நீதான் எங்கூட தங்கி இருக்கற ஆளுனு நான் சொல்லலை. சொன்னா, எப்படி எடுத்துப்பாங்கனு தெரியல.”
“இன்னமும் ஒரு ரெண்டு மணிநேரம் தான் அவங்க இங்க இருப்பாங்க. அதனால நீ கொஞ்ச நேரம் வெளியே போயிட்டு வர்றியா? ப்ளீஸ்! எனக்காக!” கண்களை சுருக்கி கெஞ்சலாகக் கேட்டான்.
ஒரு பெருமூச்சுடன்,”ஓகே! ஆனா எனக்கு பசிக்குமே! ஏற்கனவே பிரியாணி செய்றப்பவே வாசனை மூக்கை ட்ரில் போட்டுச்சு.” பாவமாக முகத்தைச் சுருக்கி வயிற்றைத் தடவி அவள் சொல்ல, அந்த பாவனையை சில நொடிகள் ரசனையுடன் பார்த்தான்.
சட்டென பார்வையை திருப்பிக் கொண்டு, “அதுக்கு நான் ஒரு வழி பண்றேன்டா. ப்ளீஸ்! எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. அவங்க கிளம்புனதும் நானே கால் பண்றேன்.”அவனையும் மீறி கனிந்த குரலில் கூறியவன் அவளது எண்ணை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான்.
அறையிலிருந்து வெளியே வந்தவன், “ஏதாவது சாப்பிடுறீங்களாம்மா?” எனக் கேட்டுக் கொண்டே சமையலறைக்கு சென்று பிரியாணியை டப்பாவில் பார்சல் செய்து கொண்டிருந்தான்.
“ஒன்னும் வேணாம் கண்ணா! கல்யாண வீட்ல சாப்பிட்டதே வயிறு நிறைஞ்சிருக்கு.”லீலாவதி பதிலளிக்க, சிவநாதன் சக்தி சென்ற அறையை இன்னமும் கவனித்துக் கொண்டிருக்க, சரியாக வெளியே வந்தாள் அவள்.
அதேப்போல மாஸ்க், கேப் சகிதம் வெளியே வந்தவளை அவர் யோசனையுடன் பார்க்க, “நான் கிளம்பறேன் ஆபிஃஸர்!” என்ற குரலில் உள்ளிருந்து வெளியே வந்த அன்பு “கொஞ்சம் பொறு சக்தி!” என்று அவளைத் தேக்கினான்.
இப்போது என்ன என்பதைப் போல தலை சரித்து திரும்பியவளிடம் பிரியாணி பார்சலை கொடுத்து, “இன்னிக்கு சிக்கன் பிரியாணி செய்தேன். சாப்பிட்டு பாரு.” எனக் கொடுக்க, கண்கள் ஒளிர வாங்கிக் கொண்டு வெளியேறினாள் அவள்.
“வேலைக்காரப் பொண்ணுக்கு எல்லாம் சமைச்சு கொடுக்க ஆரம்பிச்சுட்டியா?!” மகனை கூர்மையாக பார்த்தபடி கேட்டார் சிவநாதன்.
“ச்சே! என்ன நீங்க!? கஞ்சத்தனம் பிடிச்ச மாதிரி கேட்கறீங்க?! ஒரு சாப்பாடு கொடுத்தது குத்தமா?! அந்த பொண்ணு எவ்ளோ ஆசையா வாங்கிட்டு போகுது.”
“வீட்டுக்குள்ள வந்ததுல இருந்து என் மகன் செய்த பிரியாணியோட வாசனை மூக்கைத் துளைக்குது, சின்னப் பொண்ணு தானே அதுக்கும் அந்த வாசனை மனசுல பசியை தூண்டும்ல, இதை எல்லாம் ஒரு விசாரணை பண்ணிட்டு இருக்கீங்க.” மகனுக்கு முன்பு தாயிடமிருந்து கண்டனமாக பதில் வந்தது.
மனைவி பேசியதில் அவரை முறைத்துவிட்டு அதன்பிறகு சிவநாதன் அமைதியாகி விட்டார். ஊரில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் மகனிடம் லீலாவதி கதைத்துக் கொண்டிருக்க, தந்தையின் பார்வை மகனை ஆராய்ந்து கொண்டிருந்தது.
‘இந்தப் பைய எதையோ மறைக்கறான்!’ அவரது உள்ளுணர்வு பிராண்டியதில் அவனையே அவர் பார்த்திருக்க, அவரது பார்வையை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் படுதீவிரமாக தாய் சொல்லும் கதைகளை கவனித்தான் மகன்.
லீலாவதி பேசியபடியே மகனுக்கு பரிமாறி உண்ண வைத்து பாசப் பொங்கல் பொங்கிக் கொண்டிருக்க, ஏதோ பரீட்சையில் கண்காணிப்பாளர் முன்பு இருப்பதைப் போல உள்ளுக்குள் பீதியில் இருந்தான் அவன்.
ஒருவழியாக நேரத்தை நெட்டி தள்ளி,”உன் மகனோட கதை பேசனும்’னா உனக்கு மட்டும் எப்படித்தான் விசயம் கிடைக்குதோ! ட்ரெயினுக்கு டைம் ஆகுது லீலா.” என்றவர் கிளம்ப ஆயத்தமானார்.
அன்புவிற்கு ‘அப்பாடா!!’ என்றிருக்க அவனது மனதைப் படித்தவர் போல, “என்னமோ பண்ற!! ஆனா, என்னனு தான் தெரியல. எதாவது ஏடாகூடமா இருந்துச்சு, தோலை உரிச்சுடு போடுவேன். ஜாக்கிரதை!” என்ற மிரட்டலுடன் சென்றார் அவர்.
“அவர் கெடக்கறாரு, நீ ஒன்னும் கவலைப்படாத கண்ணா! உன் உடம்பைப் பார்த்துக்க.” மகனுக்கு அறிவுரை கூறியவர், “எங்கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுடா. அந்த பொண்ணு உண்மையிலேயே யாரு ராஜா?!” சக்தியைப் பற்றி ஆர்வமாக வினவினார்.
“யம்மா!!” என்றவனின் சிரிப்புடன் கூடிய சிணுங்கலான பாவனையில் அவனது கன்னம் வழித்து முத்தம் வைத்தவருக்கு மனம் ஏனோ நிறைந்து இருந்தது.
தன்னிடமே ஒவ்வொன்றாக குறை கண்டு சுத்தமாக வைக்கச் சொல்லி படுத்தி எடுக்கும் மகனின் எதிர்காலத்தை எண்ணி அந்த தாய்க்கு உள்ளூர எப்போதும் கவலை உண்டு.
தாயாக தான் வேண்டுமென்றால் பெற்ற கடமைக்காக பொறுத்துப் போகலாம். அவனுக்கென வருபவள் இந்த குணத்தை ஏற்க முடியாமல் போனால் அவனது வாழ்க்கை என்னவாகுமோ என்ற வருத்தம்.
அத்தோடு இத்தனை ஆண்டுகளாக இறுக்கமாக மட்டுமே கண்ட மகனது முகத்தில் புதிதாக தெரியும் கள்ளத்தனமும் உற்சாகமும் அந்த தாயின் கற்பனைக் குதிரையை கட்டுப்பாடின்றி ஓட விட்டது.

