காதல் நெய்த வர்ணம் – 1

காதல் நெய்த வர்ணம் 1

சென்னையின் புகழ்பெற்ற தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் பிரம்மாண்டமான விழா அரங்கம் விழாக்காலம் பூண்டிருந்தது. வண்ண மயமான மின் விளக்குகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஆடை அலங்காரங்கள், பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்த மெல்லிய இசை என அந்த இடமே ஒரு கலைக்கூடமாகத் திகழ்ந்தது.

அன்று ஆண்டின் மிக முக்கியமான நாள் — பட்டமளிப்பு விழா.

கருப்பு நிறப் பட்டமளிப்புச் சட்டையை அணிந்து, தலையில் சதுர தொப்பியுடன் வரிசையாக அமர்ந்திருந்த மாணவர்களின் முகங்களில் சாதனையின் புன்னகையும், எதிர்காலத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் மின்னின.

அவர்களில் முன்வரிசையில் அமர்ந்திருந்தாள் ராஷி.

அவளது கண்கள் அடிக்கடி அரங்கத்தின் நுழைவாயிலையே பார்த்துக்கொண்டிருந்தன. “எல்லாரோட பெற்றோரும் வந்துட்டாங்க… இன்னும் அப்பா, அம்மாவைக் காணோமே?” என்று அவளது கைக்கடிகாரத்தைப் பார்க்கும்போதெல்லாம் படபடப்பு கூடிக்கொண்டே இருந்தது.

திடீரென, அரங்கத்தின் நுழைவாயிலில் ஒரு சிறிய அசைவு.

சென்னையின் முன்னணித் தொழிலதிபர் புகழ் மற்றும் அவரது மனைவி குமாரி இருவரும் கம்பீரமாக உள்ளே நுழைந்தார்கள். கோடிகளில் புரளும் மிகப்பெரிய பிசினஸ் சாம்ராஜ்யத்தின் அதிபதி புகழ். எத்தனையோ சர்வதேசக் கூட்டங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். ஆனால், இன்று அவரது முகத்தில் இருந்த கம்பீரத்தை விட, ஒரு தந்தையின் பெருமிதமே மேலோங்கியிருந்தது.

அவரது தொழில் உலகத்தில் எத்தனை கோடி லாபம் சம்பாதித்திருந்தாலும், தன் ஒரே மகள் ராஷி படிப்பில் முதல் ஆளாக வந்து இன்று பட்டம் பெறுவதுதான் அவருக்கு வாழ்வின் மிகப்பெரிய பெருமையாக இருந்தது.

இருவரும் தனக்கென ஒதுக்கப்பட்ட சிறப்பு வரிசையில் வந்து அமர்ந்தனர். ராஷி திரும்பிப் பார்த்து மெலிதாகப் புன்னகைக்க, புகழ் கட்டைவிரலை உயர்த்திக் காட்டி, “வாழ்த்துக்கள்” என்பது போலத் தலையசைத்தார். தாய் குமாரியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் அரும்பியது.

அரங்கத்தின் மேடையில் சிறப்பு விருந்தினர்கள் அமர, விழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. ஒவ்வொரு துறையிலும் சாதனை படைத்த மாணவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக, அந்த ஆண்டின் மிக உயரிய விருதான ‘சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தங்கப்பதக்கம்’ அறிவிக்கப்படும் தருணம் வந்தது.

அரங்கத்தில் அமைதி நிலவியது. மைக்கின் முன் நின்ற முதல்வர் புன்னகையோடு பேசினார்:
“இந்தப் பிரிவில், நமது கலாச்சாரத்தையும் நவீனத்தையும் இணைத்து புதிய ஆடை வடிவமைப்புப் பாதையை உருவாக்கிய மாணவி… ராஷி புகழ்!”

அரங்கமே அதிரும் வண்ணம் பலத்த கரகோஷம் எழுந்தது.

ராஷி மேடைக்கு கம்பீரமாக நடந்து சென்றாள். சிறப்பு விருந்தினரின் கரங்களால் அந்தப் பளபளக்கும் தங்கப்பதக்கத்தையும், சான்றிதழையும் பெற்றுக் கொண்டு மேடையில் நின்றபடியே தன் பெற்றோரைப் பார்த்தாள். புகழ் எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்.

விழா முடிந்ததும், மாணவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர்.

ராஷி நேராகத் தன் தந்தையை நோக்கி ஓடி வந்தாள்.

“வாழ்த்துகள்டா என் செல்லக் குட்டி! ஐ ஆம் சோ ப்ரவுட் ஆஃப் யூ!” என்று உணர்ச்சிவசப்பட்டு மகளைக் கட்டியணைத்துக் கொண்டார் புகழ்.

ராஷி சற்றும் யோசிக்காமல், தன் கழுத்தில் இருந்த அந்தப் பளபளக்கும் தங்கப் பதக்கத்தைக் கழற்றி, தன் தந்தையின் கழுத்தில் போட்டாள்.

புகழ் ஒரு கணம் திகைத்துப் போய்ப் பார்த்தார்.

“அப்பா… இந்த மெடல் நான் ஜெயிச்சதுக்கு இல்லை. ‘உனக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்’னு எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து, என்னைப் படிச்சு இந்த இடத்துக்குக் கொண்டு வந்த உங்களோட வளர்ப்புக்குக் கிடைச்ச மெடல். இது உங்களுக்குத்தான் சொந்தம்!” என்றாள் நெகிழ்ச்சியோடு.

புகழின் கண்கள் கலங்கின. மகளின் தோளைத் தொட்டு, “பணத்தையோ, சொத்தையோ சம்பாதிக்கிறது பெரிய விஷயமில்லை ராஷி… ஆனா, உன்னை மாதிரி ஒரு மகளைப் பெத்ததுதான் நான் பண்ணியிருக்கற மிகப்பெரிய சாதனை,” என்றார் நெஞ்சார.

தாயார் குமாரி ராஷியின் திருஷ்டியைக் கழிப்பது போலக் கன்னத்தில் கைவைத்து முத்தமிட்டாள்.

அப்போது புகழ் சிரித்துக்கொண்டே கேட்டார், “சரி மேடம்! கோல்ட் மெடல் எல்லாம் வாங்கிட்டீங்க… அடுத்து நம்ம கம்பெனியில எந்தப் பொறுப்பை எடுத்துக்கப் போறீங்க? கார்ப்பரேட் ஆடை உலகத்துல ராஷி புகழ் ராஜ்ஜியம் எப்போ தொடங்கப்போகுது?”

ராஷியின் புன்னகை லேசாக மாறியது. அவளது கண்களில் ஒரு புதிய தேடலும் உறுதியும் தெரிந்தன.

“அப்பா… நான் உங்க கம்பெனியில சேர்றதுக்கு முன்னாடி, எனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணும். இந்த மெஷின் துணிகளையும், ஆடம்பர ஃபேன்ஸி உடைகளையும் தாண்டி… நமது நாட்டின் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களோட வாழ்க்கையை, அவங்களோட கலையை உலகம் முழுக்கக் கொண்டு போகணும். அதுக்காக நான் ஒரு ரிசர்ச் டிராவல் போகப்போறேன்,” என்றாள் அழுத்தமாக.

புகழும் குமாரியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

தங்கத் தட்டில் வைத்துத் தரப்படும் கார்ப்பரேட் வாழ்க்கையை விட்டுவிட்டு, வேர்களைத் தேடிப் போகத் துடிக்கும் மகளின் லட்சியப் பார்வையைக் கண்டு புகழ் மெளனமானார்.

விழா முடிந்து, மூவரும் தங்களது ஆடம்பரப் மெர்சிடீஸ் காரில் ஏறி அமர்ந்தனர்.

காரின் பின்பக்க இருக்கையில் ராஷியும் தாய் குமாரியும் அமர்ந்திருக்க, முன் இருக்கையில் புகழ் அமர்ந்திருந்தார். கார் சென்னையின் பரபரப்பான சாந்தோம் சாலையைக் கடந்து அடையாறு நோக்கி விரைந்து கொண்டிருந்தது. காரின் குளிர்சாதன அமைதியிலும், ராஷி சொன்ன வார்த்தைகள் புகழ் மற்றும் குமாரியின் மனதிற்குள் பெரிய அலையை ஏற்படுத்தியிருந்தன.

‘அப்பா… நான் உங்க கம்பெனியில சேர்றதுக்கு முன்னாடி, எனக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணும். நமது நாட்டின் பாரம்பரிய கைத்தறி நெசவாளர்களோட வாழ்க்கையை, அவங்களோட கலையை உலகம் முழுக்கக் கொண்டு போகணும்…’ — ராஷி சொன்ன இந்த வார்த்தைகள் புகழின் யோசனையைக் கூட்டியிருந்தன.

ராஷியும் ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடியே யோசித்துக்கொண்டிருந்தாள்:
‘அப்பா கோடிக்கணக்கில் பிசினஸ் பண்றவர். என்னையும் உடனே கார்ப்பரேட் சேரில் உட்கார வைக்கத்தான் ஆசைப்படுவார். ஆனா, என் தேடல் வேற. அவங்களை எப்படிச் சம்மதிக்க வைக்கப்போறேன்?’

அடையாறில் உள்ள அவர்களின் பிரம்மாண்டமான பங்களாவின் இரும்பு வாயில் கதவுகள் திறக்க, கார் மெதுவாக உள்ளே சென்று நின்றது.

மூவரும் வீட்டிற்குள் நுழைந்தனர். பிரம்மாண்டமான வரவேற்பறை. புகழ் தன் கோட்டைக் கழற்றி சோபாவில் போட்டபடி, ஆழமான சிந்தனையோடு சாய்ந்து அமர்ந்தார்.

குமாரி வேகமாக சமையலறைக்குச் சென்று, வேலைக்காரர்களை ஒதுக்கிவிட்டு, தானே கைகளால் சுடச்சுட மூலிகைத் தேநீரையும், தின்பண்டங்களையும் தட்டில் ஏந்தி வேகமாக வரவேற்பறைக்குக் கொண்டு வந்தார்.

“இந்தாங்க… சூடா டீ குடிங்க,” என்று புகழுக்கும் ராஷிக்கும் கொடுத்துவிட்டுத் தானும் அமர்ந்தார்.

புகழ் தேநீர் டம்ளரைக் கையில் பிடித்தபடியே மகளைப் பார்த்தார். அவளது கண்களில் லேசான தயக்கமும், அதே சமயம் அசைக்க முடியாத உறுதியும் தெரிந்தது.

ராஷி மெதுவாகத் தன் தந்தையின் அருகே சென்று சோபாவில் அமர்ந்தாள். அவளது கையைத் தன் கைகளில் எடுத்துக்கொண்டு, மென்மையான ஆனால் அழுத்தமான குரலில் பேசத் தொடங்கினாள்:

“அப்பா… நான் அப்படிச் சொன்னது உங்களுக்குக் கஷ்டமா இருந்ததா?”

புகழ் தேநீரை ஒரு மடக்கு அருந்திவிட்டு நிதானமாகக் கூறினார், “கஷ்டம்னு இல்லை ராஷி… ஆனா, யோசனையா இருக்கு. நான் கட்டியெழுப்பிய இந்த ஆடைச் சாம்ராஜ்யம் நாளைக்கு உன்னுது. என்ஐஎப்டி-ல தங்கப் பதக்கம் வாங்கியிருக்க… நீ உடனே நம்ம கம்பெனியோட தலைமை பொறுப்பை ஏத்துக்கிட்டா, நம்ம பிராண்ட் அடுத்த லெவலுக்குப் போகும். அதை விட்டுட்டு, கிராமம், கைத்தறி, ஆராய்ச்சி டிராவல்னு சொல்றியே… அது எனக்குக் கொஞ்சம் புரியலடா.”

ராஷி தந்தையின் கண்களை நேராகப் பார்த்தாள்.

“அப்பா… நம்ம கம்பெனியில ஆயிரக்கணக்கான தையல் மெஷின்கள் இருக்கு. நிமிஷத்துக்கு நூறு துணிகள் தயாராகுது. ஆனா, அதுல வெறும் வியாபாரம் மட்டும்தான் இருக்குப்பா… கலை இல்லை! நம்ம நாட்டின் உண்மையான ஆடைக்கலைங்கிறது அந்த கிராமத்து நெசவாளர்களின் விரல்கள்லதான் இருக்கு. அவங்களோட உழைப்பும், பரம்பரை அறிவும் இன்னைக்கு மிஷின் யுகத்துல அழியற நிலைமையில இருக்கு.

நான் வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு படிச்ச டிசைனரா இருக்க விரும்பலப்பா. அந்த எளிய மனிதர்களோட வாழ்க்கையை, அவங்க நெய்யுற ஒவ்வொரு நூலுக்குப் பின்னாலும் இருக்கிற ஆன்மாவை நான் நேர்ல அனுபவிச்சுப் பார்க்கணும். அவங்களோட பாரம்பரியக் கலையையும், என்னோட நவீன டிசைன்களையும் இணைச்சு உலக மேடையில கொண்டு வந்து நிறுத்தணும்! அதுதான்ப்பா ராஷி புகழின் உண்மையான வெற்றியாவே இருக்கும்.”

மகளின் பேச்சைக் கேட்டு குமாரி வியப்புடன் பார்த்துவிட்டு”ராஷி… ஆனா கிராமத்துல போயி தங்குறது சாதாரண விஷயமில்லைடி. அங்கே கரண்ட் இருக்காது, கொசு இருக்கும்… உனக்கு அந்த கஷ்டமெல்லாம் செட் ஆகுமா?”வேணா நம்ம கம்பெனி ஆட்களை அனுப்பி ரிசர்ச் பண்ணி வரச் சொல்றேன்,” என்று தாயாகக் கவலைப்பட்டாள்.

“அம்மா! கலையைக் கத்துக்க போறப்போ கஷ்டத்தைப் பார்க்கக் கூடாது. அதுவும் இல்லாம, என் பிரண்ட் சாருவும் என்னோட வர்றா. நாங்க ரெண்டு பேரும் பத்திரமா இருப்போம்,” என்றாள் ராஷி நம்பிக்கையுடன்.

புகழ் அமைதியாக மகளை உற்று நோக்கினார். அவளது பார்வையில் தெரிந்த அந்த லட்சியத் தாகமும், சுயமரியாதையும் அவருக்குத் தன் இளம் வயது போராட்டங்களை நினைவூட்டின. பிறர் வழியில் செல்லாமல், தனக்கென ஒரு புதிய பாதையை அமைக்கத் துடிக்கும் மகளின் பிடிவாதம் அவருக்குள்ளே ஒரு புதிய மரியாதையை உருவாக்கியது.

ஒரு நீண்ட பெருமூச்சுடன் புன்னகைத்த புகழ், ராஷியின் தலையை ஆதரவாகக் கோதினார்.

“சரிடா என் செல்லக் குட்டி! உன் கனவு எனக்குப் புரியுது. ‘புகழின் மகள்’ங்கிற அடையாளத்தை விட, உனக்கான அடையாளத்தை நீயே தேடிக்க போறதை நினைச்சு எனக்குப் பெருமையாத்தான் இருக்கு”

“ஆனா ஒரு கண்டிஷன்! தினமும் எனக்கு போன் பண்ணிப் பேசணும். ஏதாச்சும் கஷ்டம்னா உடனே சென்னைக்குத் திரும்பி வரணும்,” என்று அனுமதி அளித்தார்.

ராஷி பேரானந்தத்துடன் தந்தையைக் கட்டியணைத்துக் கொண்டாள். “தேங்க்ஸ் அப்பா! கண்டிப்பா என் நம்பிக்கை வீண் போகாது!”

ஒரு வாரம் கடந்திருந்தது…
அன்று இரவு 10:00 மணி. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

ராஷியும் அவளது நெருங்கிய தோழி சாருவும் பெரிய கேன்வாஸ் பைகள், கேமரா மற்றும் வரைபட புத்தகங்களுடன் பேருந்தில் ஏறினார்கள். சாரு ராஷியின் கல்லூரித் தோழி; அமைதியானவள், ஆனால் ராஷியின் கனவுகளுக்கு எப்போதும் பக்கபலமாக இருக்கும் நல்ல தோழி.

“ராஷி… உண்மையாவே நம்ம பஸ்ஸிலதான் போகணுமா? உங்க அப்பா கார் அனுப்பறேன்னு சொன்னாரே?” என்று சாரு சிரித்துக் கொண்டே வம்புக் இழுத்தாள்.

“ஏய் சாரு! நாம போறது ஒரு எளிய மனிதர்களின் வாழ்க்கையைக் கத்துக்க. அங்கே ஆடம்பரமா போனா அவங்களுக்கும் நமக்கும் இடையே ஒரு சுவர் உருவாகிடும். இந்த சாதாரண பயணம்தான் நம்ம தேடலுக்கான முதல் அடி!” என்றாள் ராஷி ஜன்னலோரம் அமர்ந்தபடி.

பேருந்து சென்னையின் எல்லைகளைத் தாண்டி, இருண்ட நெடுஞ்சாலையில் விரையத் தொடங்கியது. சாளரத்தின் வழியே வந்த குளிர்ந்த காற்று ராஷியின் முகத்தில் மோதியது. அவளது மனதுக்குள் சிரசாமலை கிராமம் எப்படி இருக்கும், அங்குள்ள நெசவாளர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அலைமோதியது.

வர்ணம் மிளிரும்

error: Alert: Content selection is disabled!!