மயங்கினேன் மழைச்சிலையே – 10

அத்தியாயம் – 10

சுருக்கங்கள் ஏதுமின்றி சுத்தமாக விரிக்கப்பட்டு இருந்த படுக்கையை அடுத்திருந்த டேபிளில் தனது மடிக்கணினியை வைத்து அன்று வீட்டிலிருந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தான் அன்புமதி.

அன்பு வெகு மும்முரமாக திரையைப் பார்த்து வேகமாக தட்டச்சு செய்து கொண்டிருக்க, ஒரு காணொளி அழைப்பு வரவும் முகம் பிரகாசமாக உற்சாகத்துடன் அதை ஏற்றான்.

“ஹேய் ரேயான்!! என்னடா எப்படி இருக்க? அங்க அம்மாப்பா எப்படி இருக்காங்க? நியூயார்க் போனதும் படுபிஸியா? ஒரு கால் கூட பண்ணல.” அன்பு உற்சாகமாக கேள்விகளை அடுக்க, புன்னகைத்தான் ரேயான்.

“கொஞ்சம் பொறுமையா தான் கேளேன்டா. நான் நல்லா இருக்கேன். எல்லோரும் நலம். அப்றம் இங்க வந்ததுல இருந்து மூச்சுவிடக்கூட நேரமில்லாம கம்பெனி வேலை பின்னி எடுக்குது. ”

” நீ எப்படி இருக்கே? இன்னிக்கு என்ன வொர்க் ஃப்ரம் ஹோம் போட்டுட்..” அன்புவின் கேள்விகளுக்கு பதிலளித்த ரேயான் அடுத்து பேச வருவதற்குள் சற்று சத்தமாகக் கேட்ட இசையில் பேச்சை நிறுத்திக் கவனித்தான்.

“என்னடா எதாவது கான்சர்ட்ல இருக்கியா!? இல்லயே, வீட்டுல தானே இருக்க! அப்றம் எப்படி மியூஸிக் கேட்குது?!” அன்புவிடம் குழப்பமாகக் கேட்க, இசையை கவனித்த அன்பு “ஓ! அதுவா” என புன்னகைத்தான்.

“சக்தி தான் கிடார் வாசிக்கிறா. தினமும் இந்த நேரத்துல இசைக் கச்சேரி தான் போ. சும்மா சொல்லக்கூடாது செமையா வாசிப்பா!” அன்பு மிகப் பெருமையுடன் கூற, ரேயான் நண்பனைத் தான் பார்த்திருந்தான்.

“ஓ! அந்த பையனுக்கு அதெல்லாம் தெரியுமா?!” அவன் பேசிய விதத்தில் பெண் என்று தெரிந்தாலும் வேண்டுமென்றே தெரியாத மாதிரி ரேயான் கேட்க,” டேய்! சக்தி பொண்ணுடா. முழுப்பேர் யுவசக்தி!” சிரிப்புடன் கூறியவன் நடந்த குளறுபடிகளை நண்பனிடம் விளக்கினான்.

” என்ன சொன்ன பொண்ணா!!? உனக்குதான் பிடிக்காதே. அப்போ பிடிக்கலைன்னா அக்ரிமெண்ட்டை அப்பவே கேன்சல் பண்ணிட வேண்டியதுதானே” எனக் கேட்டான் ரேயான்.

“அதெல்லாம் முதல்லேயே சொன்னேன் ‘நான் ஃபுல் அட்வான்ஸ் கொடுத்துட்டேன் அப்படி எல்லாம் போக முடியாது’ அப்படினு அவள்தான் பிடிவாதமா இங்கேயே இருக்காள்.” அன்பு விளக்க,

“அப்படின்னாலும் இப்ப 3 மந்த்ஸ் மேல ஆகியிருக்குமே. அக்ரிமெண்ட் கேன்சல் பண்ணிட்டு அனுப்பிட வேண்டியதுதானே ” ரேயான் வழி சொல்ல,”ம்ப்ச்! இங்க இருக்கறதுல அவளுக்கே எந்த பிரச்சனையும் இல்ல, உனக்கு என்னடா வந்துச்சு?” சலிப்புடன் கேட்டான் அன்பு.

நண்பனை கூர்மையாக கவனித்த ரேயான் அதன் பிறகு அவளைப் பற்றிய பேச்சை நிறுத்தி விட்டு, நியூயார்க் சென்றது முதல் நடந்த கதைகளை பேசத் தொடங்கி விட்டான்.

இருவரும் இத்தனை நாட்களாக நடந்த விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்க நேரம் போனதே தெரியவில்லை. எதைப்பற்றி பேசினாலும் அன்புவின் பேச்சில் அடிக்கடி வந்து விழும் சக்தியின் பெயரில் சிந்தனையுடன் நண்பனைப் பார்த்திருந்தான் ரேயான்.

“அன்னிக்கு அப்படித்தான் ஒருநாள் அம்மாவும் அப்பாவும் திடீர்னு வீட்டுக்கு வந்துட்டாங்க. கரெக்ட்டா அப்பத்தான் இந்த வாயாடி கிட்சன்ல இருந்து எட்டிப் பார்த்து பேசுறாள். எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.” புன்சிரிப்புடன் கூறிய அன்பு,

“எதையோ சொல்லி சமாளிக்க, அப்பா அவள்ட்ட கேள்வி மேல கேள்வி கேட்க, அவள் கேட்ட கேள்வியில அப்பாவோட முகத்தை அப்ப பார்க்கனுமே! அப்படியே ஸ்டன்ட் ஆகி நின்னுட்டாரு.” வாய்விட்டே புன்னகைத்தவன்,

“அம்மாக்கு அவள் யாருன்னு தெரிஞ்சுக்க அத்தனை ஆர்வம். எப்படியோ சமாளிச்சு அனுப்பிட்டேன்.” அன்று சிவநாதனிடம் அவள் வாயாடியதில் அவர் விழித்துக் கொண்டு நின்றதோடு அடுத்து நடந்த அனைத்தையும் மலர்ந்த சிரிப்புடன் சொன்னான்.

“அவகிட்ட என்னமோ இருக்கு! சரியான வாயாடி! கொஞ்ச நேரம் பேசாம இருக்க முடியாது. பேசியே எல்லாரையும் மயக்கிடுறா.” அன்பு சக்தியை எண்ணி சிலாகித்துப் பேசிய நண்பனை அதிசயமாகப் பார்த்தான்.

கல்லூரியில் படிக்கும் போதும், பணியில் சேர்ந்த பிறகும் தன்னுடன் பணிபுரியும் பெண்களைப் பற்றி ரேயான் எதையாவது சொன்னாலும், அன்பு இதுவரை யாரைப் பற்றியும் இத்தனை ஆர்வத்துடன் சிலாகித்து பேசியதை பார்த்ததில்லை.

அவனுக்கு அதை உணர்த்த, “நான் உங்கூட இருந்ததை விட இப்ப சக்தி உங்கூட இருக்கறது உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல,” கேலியாகக் கேட்க, “அப்படி எல்லாம் இல்லடா.” என்றான் அன்பு.

“அமைதியா இருக்கற இடத்துல சலசலத்து ஓடுற நதி மாதிரி, நான் பேசவே இல்லைனாலும் அவள் பாட்டுக்கு பேசிட்டே இருக்கறது ஒருமாதிரி நல்லா இருக்கு. நான் சத்தம் போட்டுட்டேன்னு ஒருநாள் அவள் கோவிச்சுட்டு இருந்தாள், எதையோ மிஸ் பண்ற மாதிரி இருந்துச்சு.”

“ஆனா பாரு, சரியான காஃபி பைத்தியம்! எத்தனை கோபமா இருந்தாலும் காஃபியை கொண்டு போய் நீட்டுனா, எல்லா கோபமும் பறந்து போகும். சிலி கேர்ள்!” முகத்தில் ரசனையுடன் புன்னகைத்தான் அன்புமதி.

அன்புமதியை அவனறிந்ததில் இருந்து இதுவரை இத்தனை மகிழ்வுடன் பார்த்ததில்லை ரேயான். அவனிடம் பேசிய இத்தனை நேர உரையாடலில் சக்தியைப் பற்றி மட்டும் அதிகம் பேசிய நண்பனின் மனம் அவளிடம் சரிந்து விட்டதை ரேயான் உணர்ந்து கொண்டான்.

சம்பந்தப்பட்டவன் எதுவும் அறியாமல் இருக்க, ஒருவேளை அவளுக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லாமல் இவன் மட்டும் ஆசையை வளர்த்துக் கொண்டு தவிக்கக் கூடாதே என்ற சிந்தனை வந்ததும்,

“ஆமா, லெவன் மந்த்ஸ் தானே அக்ரிமெண்ட் போட்டு இருக்க, இன்கேஸ் அதுக்கப்புறம் சக்தி வேற வீட்டுக்கு போயிட்டா, என்ன செய்வ அன்பு?!” அவனுக்கு அன்புவின் பதிலை அறிய வேண்டியிருந்தது.

அதைப்பற்றியே யோசிக்காத அன்பு நண்பனின் கேள்வியில் உள்ளுக்குள் திணற, ‘அவள் போனா என்ன, வேற யாரையாவது அரேன்ஜ் பண்ணலாம்.’ சட்டென அப்படிச் சொல்ல மனம் வரவில்லை.

தன் மனம் அவளை இத்தனையா தேடுகிறது!! தன்னை எண்ணி அவனுக்கே குழப்பம். அதில் அவன் மௌனமாகி விட, அவனது மௌனம் ரேயானுக்கு புரிந்தது.

இனிமேல் அவனே சிந்தித்து தெளியட்டும் என்றெண்ணிய ரேயான் பேச்சை மாற்றி வேறு விசயங்களை இயல்பாக பேசிவிட்டு அழைப்பை வைத்துவிட, அன்பு தான் குழம்பிப் போயிருந்தான்.

அந்த நேரம் அவனது அறைக்கதவை தட்டிய சக்தி,”மாஸ்டர்! உங்களுக்கு பன்னீர் புலாவ் செய்யத் தெரியுமா?! தெரியும்னா சொல்லித் தர்றீங்களா? எனக்கு சாப்பிடனும்போல இருக்கு.” கண்களில் ஆசையை தேக்கிக் கேட்டாள் அவள்.

அவளையே இமைக்காமல் சிலநொடிகள் பார்த்தவன் சட்டென தெளிந்து, தன் பார்வையைத் திருப்பிக் கொண்டு, “எனக்கு தெரியாது. நீயே எதுலேயாவது ரெசிபி பார்த்து செய்துக்கோ.” மறுத்தான் அவன்.

“ஹும்!”உதட்டைச் சுழித்து முகத்தைச் சுருக்கி சொன்னவள், “ஏதோ செஃப் மாதிரி எல்லாம் சமைக்கத் தெரியுதே, இதுவும் செய்வீங்களோனு கேட்டேன். அதுக்கு, ரொம்பத்தான்.. ம்க்கும்!” சென்று விட்டாள்.

அவளது பேச்சையும் செய்கையும் ரசிக்கும் அன்புவிற்கு உள்ளுக்குள் உதறலெடுக்க, தன்னைக் குறித்தே ஆராய வேண்டி இருந்ததால் அன்றைய தினம் முழுவதும் அவளைப் பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்த்தான்.

அதன்பிறகு வந்த நாட்களிலும் அவளாக வந்து பேசினாலும் அவளைத் தவிர்க்க முயன்ற அன்புவிற்கு அது மிகவும் கடினமாகத் தெரிய, சற்று அரண்டு தான் போனான். தனக்குள்ளேயே போராடிக் கொண்டிருந்தான்.

சக்திக்கு திடீரென அவனது மாற்றம் ஏனென்று புரியாமல் குழம்ப, வேலையில் ஏதோ பிரச்சனை போல டார்கெட், ப்ராஜெக்ட் என்று எதாவது இருக்கும் என தானாகவே எண்ணிக் கொண்டாள்.

அவள் சமைக்க எதையாவது கேட்டால் ‘முடியாது’ என நிர்தாட்சண்யமாக மறுத்தவன், வீட்டைச் சுத்தம் செய்யும் விடுமுறை நாளில் கூட அவளுக்கு முன்பே அனைத்தும் முடித்து விட்டு தனது அறைக்குள் அடைந்து கொண்டான்.

அவன் அவளைத் தவிர்க்க விரும்புவது சக்திக்கு தெளிவாக புரிய, அதன் காரணம்தான் விளங்கவில்லை. அவனிடம் நேரடியாக கேட்பதற்கு அவன்தான் அறையை விட்டு வர வேண்டுமே! அதற்கும் வழியில்லாமல் அறைக்குள் அடைகாக்கிறான்.

உணவுவேளையில் கூட தனக்கான உணவை சமைத்து எடுத்துக் கொண்டு அவன் அறைக்குள் அடைந்து கொள்ள, “முட்டை எதாவது போட்டுட்டீங்களா? எப்போ பாரு ரூம்க்குள்ளேயே அடைகாத்துட்டு இருக்கீங்க!” கேலி செய்தவளுக்கு அவனிடமிருந்து பதில் வெறும் முறைப்பு மட்டுமே.

நத்தைக் கூட்டிற்குள் ஒளிந்து கொள்வது போல இம்மாதிரியான அவனது நடவடிக்கைகளுக்கு காரணம் புரியாமலும் அவனது விலகலில் மனதில் ஏதோ ஒன்று பாரமாய் கனக்க, அவனை எப்படி கூட்டை விட்டு வெளியே கொண்டு வருவது எனத் தெரியாமல் விழித்து நின்றாள் சக்தி.

அவனை இயல்பாக பேச வைக்க பிரயத்தனப்பட்டவள், வீட்டில் ஆங்காங்கு அழுக்காக வைத்தால் கூட, அதைக்கண்ட அன்புவிற்கு கோபம் தலைக்கேறினாலும் அவளிடம் வார்த்தைகளில் அதைக் காட்டாமல் அவனே சுத்தம் செய்து முடித்தவன்,

“இந்த வீட்ல இருக்கனும்னா நான் ஏற்கனவே சொன்ன ரூல்ஸ்படி தான் இருக்கனும். ஒழுங்கா இருக்கறதுனா இரு. இல்லனா இடத்தை காலிபண்ணு.” கோபமாக இரைந்தவனின் பேச்சில் அதிர்ந்து நின்றாள் அவள்.

இத்தனை மாதங்களாக வண்ணமயமாக இருந்த நாட்கள் எல்லாம் யாரோ சலவை செய்தது போல ஒன்றுமில்லை என்றாகிவிட, சக்தியின் விழிகள் கலங்கி நின்ற தோற்றம் அன்புவை அசைத்தது. அதற்கு மேல் அவளது கலங்கிய முகத்தை காண முடியாமல் அறைக்குள் சென்று விட்டான்.

அவளும் அதன்பிறகு அவனை பேச வைக்க முயலவில்லை. சக்தி அமைதியாகி விட, இருவரும் தேவைக்குக் கூட பேசிக் கொள்வதில்லை. தான் கோபமாக இருந்தாலும் எதாவது சீண்டிக் கொண்டே இருந்தவள் தற்போது மௌனமாகி விட அது அவனை இன்னமும் வதைத்தது.

அவன் அவளைத் தவிர்த்தபோது கோபமான அன்னையிடம் வந்திழையும் பிள்ளையைப் போல தொடர்ந்து படையெடுத்த அவளது கேள்விகள், கேலிகள் இல்லாமல் அன்புமதிக்கு வீடே வெறுமையானது.

நாட்கள் இப்படியே சென்றுக் கொண்டிருக்க, அன்று அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய அன்புமதிக்கு சமீபத்திய வெறுமை மனதை ஆட் கொள்ள, வழக்கம் போல அரைக்கண்ணால் அவளது அறையை கவனித்தான்.

அவளது அறை பூட்டியிருக்க ஒரு பெருமூச்சுடன் தன் அறைக்குள் சென்றான். சிறிது நேரத்தில் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வந்தவன் அப்போதும் அறை பூட்டியே இருக்க யோசனையானான்.

மனதில் ஏதோ ஒன்று உறுத்த சட்டென வாசலருகில் இருந்த செருப்பு வைக்கும் இடத்தைப் பார்க்க, அவளது காலணிகள் எதுவுமே அங்கு இல்லாததில் அதிர்ந்தவன், ஓடிச்சென்று அவளது அறையை திறக்க முயன்றான்.

அறையின் கதவு திறந்து கொள்ள உள்ளே பளிச்சென துடைத்து வைக்கப்பட்டது போல இருப்பதைக் கண்டு, ஒருவேளை தான் அன்று சொன்னதை மனதில் வைத்து வீட்டை விட்டு சென்று விட்டாளோ என்றெண்ணி உள்ளுக்குள் உடைந்து போனான்.

error: Alert: Content selection is disabled!!